இன்னொரு ஊரடங்கு அவசியமா..?
க.மோகன், நங்கநல்லூர்.
நிச்சயமாக அவசியம்.. கடந்த சில நாட்களாகவே சொந்தங்கள், நண்பர்கள் வட்டாரத்தில் எவ்வளவு கொரோனா மரணங்கள்?! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டே நாளில் இறந்து போகும் கொடுமையை பார்க்கிறோம். பயமாக இருக்கிறது. முழு ஊரடங்கு அமல் செய்ய வேண்டும்.
த. முருகேசன் - கட்டிட தொழிலாளி, வண்டலூர்.
கையில பணமும், சொத்துகளும் வச்சிருக்கவங்களுக்கு கவலை இல்ல... எங்கள மாதிரி அன்னாடங்காச்சிக்கு, ஊரடங்கு போட்டா எப்படீங்க சோறு திங்க முடியும்..? பட்டினியா.. இல்ல கொரோனாவாங்கிற நிலையில நாங்க இருக்கோம்.
என்ன வித்தியாசம்ன்னா பட்டினியால சட்டுன்னு உசுரு போகாது.. அவ்வளவு தான்..
ந. சிவகுமார், மடிப்பாக்கம்.
ஊரடங்கு போட்டு என்ன செய்வது? மாச செலவுக்கு கஷ்டப்படுகிற எங்களுக்கு வாழ்க்கையில் தினம் தினம் போராடுகிற இந்த கொரோனா பெருசா எங்களுக்கு தெரியலை.
க. ராஜன், திருச்சி.
என்ன தான் இதற்கு தீர்வு? தயவு செய்து மனித உயிர்கள் விலை மதிப்பில்லாதவை.. காப்பாற்றுங்கள்..வெறும் ஊரடங்கு மட்டுமே போதுமா? தடுப்பூசி, ஆக்சிஜன் வசதிகளை அதிகப்படுத்துங்க. வேற என்ன சொல்றது??!!
க. மணிகண்டன், கடலூர்.
ஊரடங்கு போட்டா கொரோனா போய்டுமா? போன வருஷம் முக்கால் வாசி ஊரடங்குல தான்யா போச்சு. அப்புறம் இரண்டாவது அலையா இப்ப திரும்பி வந்து நம்ம கழுத்தை கொரோனா பிடிக்கலையா??
ஊரடங்கு தற்காலிக தீர்வுன்னு சொன்னாலும்... கொரோனா வந்தா குணமாகுற மருந்தை சீக்கிரம் கண்டுப்பிடிங்க. வெறும் தடுப்பூசி தடுப்பூசின்னு சொல்லி அதிலேயே உட்கார்ந்திருக்காதீங்க..
வ. நாகராஜன், திருச்சி.
குழந்தைங்க படிப்பு போச்சு. கூலித் தொழிலாளர்கள் முதற்கொண்டு பள்ளிவாகன ஓட்டுநர்கள், தனியார் கடை, கம்பெனி ஊழியர்கள் வரை எல்லாருக்கு வேலை போச்சு. நிறைய பேர் கொரோனாவால சாகுறதை பாக்கும் போது ரொம்ப அச்சமா வேற இருக்கு. ஊரடங்கு போட வேண்டியது தான். வேற என்ன தான் பண்ண முடியும்??
Leave a comment
Upload