தொடர்கள்
கதை
தாயுண(ர்)வு… – பா.அய்யாசாமி

20210407160300592.jpeg

என்ன ராசம்மா, உம் மகன் மாடசாமி ஊருக்கு வந்திருக்கானாமே, கேள்விப்பட்டேன் என்று காலையில் பால்கறக்க வந்தவர் முதற்கொண்டு, மதியம் வந்த தபால்காரர் வரை ராசம்மாளிடம் விசாரித்தபடி இருந்தனர்.

ஆமாம்... நேற்று மதியம் வந்தான். வந்ததிலிருந்து தூங்குறான் என்று எல்லோரிடமும் சொல்லி வந்த ராசம்மா, கணவனை தன் இளமையிலே இழந்து, பிள்ளையை திருமயத்தில் ஒரு அரசாங்க பள்ளி மற்றும் விடுதியில் தங்கி, படிக்க வைத்தவர்தான், கல்லூர் கிராமத்திற்கே பாசமான ராசம்மா.

கல்லூர்... பெயருகேற்றபடி இல்லாமல், கிராமத்தில் கல்லாதவர்களே அதிகம். ஒரே ஒரு நடுநிலைப்பள்ளி தான். இப்போதுதான், அதுவும் தரம் உயர்த்தப்பட்டு மேல்நிலைப் பள்ளியாக மாறியுள்ளது.

விவசாய கூலி வேலைதான் இங்கு பிரதானதொழில். அதுவும் குறைந்துப்போக... எல்லாத்துக்கும் அரசாங்கத்தை நம்பியே வாழவேண்டிய சூழலில் உள்ள பல ஊர்களில் இதுவும் ஒன்று.

சுமார் இருநூறு குடும்பங்கள், ஐந்நூறுக்கும் மேற்பட்ட மக்களில், படித்தவர்கள் எண்ணிக்கை ஐம்பதைக் கூடத்தாண்டாது. அதிலும் அதிகம் படித்தவன் இந்த மாடசாமியாகத்தான் இருந்தான்.

எட்டாம் வகுப்பு முடிந்ததும், சொந்த ஊரைவிட்டு, பெற்றத் தாயைவிட்டு, அரசு விடுதியில் தங்கி படித்து, உயர் நிலைக்கல்வி முடித்து, அரசின் கல்வியுதவிப்பெற்று... பொறியியல் படிப்பில் சேர்ந்து, தானாகவே வேலையையும் தேடிக்கொண்டு, அந்தக் கம்பெனி மூலமாகவே அமெரிக்கா வரை பணிக்காக சென்றவன், நான்கு வருடம் கழித்து இன்றுதான் ஊருக்கு முதல் முறையாக வந்திருக்கிறான்.

காபிதண்ணீ போட்டு எழுப்பினாள் ராசம்மா.

அம்மா, எதுவும் வேண்டாம். நான் தூங்கணும்... எழ கொஞ்ச நேரமாகும் என்னை தொல்லை செய்யாதே என்றான்.

வாராது வந்த ராசா இப்படி தூங்குதே, மேலுக்கேதும் முடியலையா என்ற கவலை அவளுக்கு.

என்ன ராசம்மா? “மகன் மாடசாமி வந்திருக்கான் போல.?” என கேட்டு பள்ளித்தலைமை ஆசிரியரும் வந்தார்.

ஆமாங்க ஐயா... தூங்குறான்.

ஓ.. ஜெட்லாக்கா இருக்கும், தூங்கட்டும் என்றார்.

ஆங்.. “அது என்ன வியாதியோ? அதேதான் அவனும் சொன்னான்” என்றாள்.

சிரித்தபடி, வியாதி இல்லை ராசம்மா. “பயணஅலுப்பு. தூங்கட்டும்... எழுந்ததும் நான் வந்ததாகச்சொல்லுங்கள்” என்று கூறி சென்றார்.

மாலை நேரத்தில் தலைமை ஆசிரியரை காணச்சென்றான் மாடசாமி.

“ஐயா, நல்லா இருக்கீங்களா? வீட்டிற்கு வந்தீங்களாம்... அம்மா சொன்னாங்க.

சும்மாத்தான் தம்பி பார்க்க வந்தேன். “நம்ம பள்ளியிலே நடக்க இருக்கிற சுதந்திரதின விழாவில் நீ அவசியம் கலந்துக்க வேணும்” என்றார்.

அவசியம் கலந்துக் கொள்கிறேன் என்றவன்...

“நம்ம ஊர்... எட்டு வருடம் முன் எப்படி பார்த்தேனோ அப்படியே இருக்கே ஏன் சார்?”

“நீயாவது அக்கறையாக கேட்டியே.. அதுவே சந்தோசம் மாடசாமி.
ஊராட்சி தேர்தல் நடக்கலை, அதனால் அரசும் நம்மை கண்டுக்கிடலை.. நல்ல சாலைகள், குடிநீர் எதுவும் இல்லை.”

“ஏதோ.. உங்க அம்மா செய்கிற உதவியினாலே, இந்த பள்ளி மட்டும் சிறப்பா ஓடிக்கிட்டு இருக்கு” என்றார் ஆசிரியர் விரக்தியாக..

அம்மாவா? “என்ன செஞ்சாங்க? என்று ஆச்சரியமாக கேட்டான்.”

விழாவிற்கு அவசியம் வா மாடசாமி! என்று கூறி அவனை அனுப்பி வைத்தார்.

விழா மேடையில் துணை ஆட்சியர், தலைமையாசிரியர், மாடசாமி உள்ளிட்ட கிராம பெரியவர்கள் அமர்ந்திருக்க... தேசியக்கொடி ஏற்றப்பட்டு விழா தொடங்க, தலைமையாசிரியர் பேச ஆரம்பித்தார்.

கடந்த நான்கு வருடமாக பள்ளிக்கு மாதாமாதம் ரூபாய் பத்தாயிரம், அளித்து அதன் மூலம் ஒரு ஸ்மார்ட்கிளாஸ் வகுப்பறை ஒன்றை நம் பள்ளிக்கு அமைத்துக் கொடுத்துள்ளார். படிக்கும் காலத்தில், தன் பிள்ளைக்கு தன் கையால் சமைத்து கொடுக்க வாய்ப்பு கிட்டவில்லை என்பதால்... ஓய்வு பெற்ற பிறகும், இங்குள்ள மாணவர்களுக்கு பள்ளியிலே உணவு சமைத்துக் கொடுப்பதை, தனது கடமையாகக் கருதி இதுநாள் வரை செய்து கொண்டு இருக்கிறார் இந்த ராசாம்மா.

சிறு வயதிலே, தாயைப் பிரிந்து யாரும் படிப்பிற்காக வெளியே செல்லக்கூடாது என இந்த நடுநிலைப் பள்ளியை மேல் நிலைப் பள்ளியாக மேம்படுத்தியதில் அவரின் பங்கும் உள்ளது...

இந்த நல்ல நேரத்திலே அவரை மேடைக்கு அழைத்து, அவரது விருப்பப்படி துணை ஆட்சியர் திருக்கரங்களால் ‘ஸ்மார்ட்கிளாஸ்’ வசதிகள் உடைய ‘கலாம் அரங்கத்தை’ திறந்து வைத்து சிறப்புரையாற்றும்படி துணைஆட்சியர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

மாதா மாதம் செலவுக்கு அனுப்பியதை, பள்ளிக்கு கொடுத்துவிட்டு பள்ளியிலே சத்துணவு சாப்பாட்டையே தினம் சாப்பிட்டுகிட்டு வந்திருக்கு என தனது தாயை நினைத்ததும், மாடசாமிக்கு அழுகை பீரிட்டது.

சீதோஷ்ண நிலைக்கேற்ப பறவைகள், இயற்கையாக புலம் பெயர்வது போல மனிதர்கள் தங்கள் பொருளாதார மேம்பாட்டிற்காக புலம் பெயர்ந்தாலும், தாயைக் காப்பது போல் தாய்த் திருநாட்டையும் தன்னாலான உதவிகள் மூலம் தரம் உயர்த்த பாடுபடுவதே புலம் பெயர்பவர்களின் நோக்கமாக இருக்க வேண்டும். அதற்கு நம் கண்முன்னே வாழும் காமராஜராக, அம்மாவும்,, மாடசாமியும் திகழ்கிறார்கள்.

தனது பிள்ளைக்கு, இளம் வயதினிலே தன் கையால் உணவளிக்க இயலாததால், பள்ளியை தரம் உயர்த்த உதவியதோடு, இன்றும் பிள்ளைகளுக்கு மதிய உணவினை தயாரித்தளித்து வருகிறார் இந்தம்மா.

“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்” என்று பேசி முடித்தார் துணையாட்சியர்.

கைத்தட்டலில் அரங்கம் அதிர...

ராசம்மாவும், மாடசாமியும் கண்களில் நீர் கோர்த்தபடி ஒருவரை ஒருவர் பாசத்துடன் பார்த்துக்கொண்டனர்.