தொடர்கள்
கதை
‘காமப்பிழை’... - வெ.சுப்பிரமணியன்

20210407160152764.jpeg

“ஏம்பா, நாங்களே சென்னையிலே இருக்கிற இந்த ஏரியாவுக்கு, குடிவந்து ஒரு மாசந்தான் ஆகுது. ஊர்லே இருந்து, நீங்க வந்து ரெண்டு நாள்தானே ஆச்சு? இந்தக் காலனியிலே குடியிருக்கிறவங்க, நல்லவங்களா? கெட்டவங்களான்னு தெரிஞ்சுக்காம, யாராவது கூப்பிட்டா, அவங்ககூட கார்ல ஏறி வந்துடுவீங்களா?” என்று எரிந்து விழுந்தாள் என் மகள் ரேவதி.

“என்னமோ தெரியல்லேம்மா, தலை கிறுகிறுன்னு சுத்தி, ஏ.டி.எம் ரூமுக்குள்ளேயே, கீழே உட்கார்ந்துட்டேன். பின்னாடி கியூவில நின்னுகிட்டிருந்த, அந்த பெண்தான், என்னை கைத்தாங்கலா பிடிச்சு, அவளோட கார்லேயே ஏத்திகிட்டு, நம்ம வீட்டில கொண்டுவந்து விட்டுட்டுப் போனா. அவபேரு சந்திராவாம். ரொம்ப தங்கமான பெண்ணா இருக்கா” என்றேன்.

“ஐயோ… அப்பா! அவ தங்கமுமில்லே, வைரமுமில்லே. அவ ஒரு மாதிரியாம். “ஏதோ, இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கம்னு… வாழறவளாம். எனக்கே, போனவாரந்தான், பக்கத்து வீட்டில் குடியிருக்கும், என் ஃபிரண்டு சொன்னா” என்றாள் ரேவதி.

அன்று மாலை, மெயின்ரோட்டருகே இருக்கும் அஷ்டலக்ஷ்மி கோவிலுக்கு கிளம்பினேன். கோவிலில், இரவு ஏழு மணிக்கு மேல், கூட்டம் குறைந்ததும், ‘சந்திரா’ கோவிலுக்கு வந்தாள்.

பிரஹாரத்தை வலம் வரும் போது, சன்னதிக்கு முன்னால் இருந்த தூண் அருகே அமர்ந்திருந்த என்னைப் பார்த்ததும், அருகே வந்தாள். “அப்பா… உடம்பு பரவாயில்லையா? இன்னிக்குதான் இந்த கோவிலுக்கு வரீங்களா” என்றாள்.

“ஆமாம்மா… அது சரி, உன்னிடம் ஒரு சந்தேகம் கேட்கணும். ஏன் என் மகள் உன்னை வெறுப்போட பார்க்கிறா? உனக்கும் அவளுக்கும் எதாவது சண்டையா?” என்றேன்.

சந்திராவோ, புன்னகைத்தபடியே, கிளம்பிப் போய்விட்டாள்.
அவள் வந்து சென்றதும், சுவாமி நடையை அடைத்துவிட்டு, கிளம்பத் தயாரானார் கோவில் குருக்கள். “இப்போ வந்துட்டு போனாங்களே அந்தப்பெண் யாரு?’ என்று குருக்களிடம் கேட்டேன்.

குருக்களோ, “நீங்க இந்த ஊருக்கு புதுசு போல. அதான், அவாளை யாருன்னு கேட்கிறேள். அவா செய்யற தொழில் மூலமா, அவாளுக்கு இன்ஃப்ளூயன்ஸ் இல்லாத டிப்பார்ட்மென்டே கிடையாது.
கோடீஸ்வரியா இருந்தாலும் இந்த பக்தி, பூஜை, புனஸ்காரம் எல்லாத்திலேயும் சிரத்தையா இருப்பா. தினம் சாய்ங்காலம் ஏழுமணியான இந்தக் கோவிலுக்கு வந்துடுவா”, என்றார்.

“அதுசரி… அப்படி என்ன தொழில் பண்ணறாங்க?” என்ற என்னை...

“போங்கோ சார்… அவாளோட தொழிலைப்பத்தி, எங்கிட்டேபோய் கேட்கிறேளே?, என்னத்தைன்னு சொல்லுவேன்” என்று ஏகத்திற்கு கூச்சப்பட்டார்.

அடுத்தநாள் மாலையில், ரேவதியிடம் சொல்லிவிட்டு, வாக்கிங் கிளம்பினேன். நான்கு தெருக்கள் தள்ளியிருந்த பிரம்மாண்டமான வீட்டை கடந்து செல்லும்போது உள்ளேயிருந்து, “அப்பா” என்ற சத்தம் கேட்டது. நின்று, திரும்பிப் பார்த்தேன்.

வீட்டு வாசலுக்கு வந்த சந்திராவோ, “அப்பா நீங்க எங்கே இந்தபக்கம், வாக்கிங் வந்தீங்களா?” என்றாள்.

“ஆமாம்மா, இதுதான் உன் வீடா?” என்றேன். “ஐஞ்சு நிமிஷம், உள்ளே வந்து, ஒரு வாய் காஃப்பி குடிசுட்டுப் போங்கப்பா” என்றாள். நானும், மறுக்க மனமில்லாமல் வீட்டுக்குள் போனேன்.

அவள் வீடு அழகாகவும், நேர்த்தியாகவும் இருந்தது. “அப்பா… உங்களுக்கு ஷுகர் நார்மல்தானே?” எனக் கேட்டுக்கொண்டாள். “இந்தாங்கப்பா… இது என்னுடைய பர்சனெல் ஃபோட்டோ ஆல்பம். சும்மா ஒரு கிளான்ஸ் பாருங்களேன்” என்றாள்.

அந்த ஆல்பம் முழுவதும், சந்திராவின் படங்களே நிரம்பி வழிந்தது. கையில் காஃபியோடு வந்தவளிடம் “என்னம்மா… எல்லாமே உன்னோட படங்கள் மட்டுமே இருக்கு” என்றேன்.

“கடைசி பக்கத்திலிருக்கும் ஃபோட்டோவில் இருப்பவர்கள்தான், என் அம்மாவும் அப்பாவும். அவர்களின் கல்யாணத்தின் போது எடுத்துக்கொண்ட ஃபோட்டோ. நான் பிறக்கும் முன்னரே, என் அப்பா இறந்துவிட்டதாக அம்மா சொன்னாங்க. இப்போ… அம்மாவும் இல்லை” என்றாள்.

கடைசி பக்கத்திலிருந்த அந்த ஃபோட்டோவை பார்த்ததும், அப்படியே அதிர்ச்சியில் என் மூச்சு நின்று போனது. காரணம்… அந்தப்பெண் “புஷ்பாவேதான்”. மாலையும் கழுத்துமாக அவளருகே நிற்பது, என் நெருங்கிய பால்ய சினேகிதனான, “அறிவழகன்”. அவன், திருச்சியில்தான் இன்னமும் உயிரோடு இருக்கிறான்.

அப்போது, என் மகள் ரேவதி, அலைபேசியில் அழைக்கவும், “வந்துட்டேம்மா” என்று சொல்லிவிட்டு, சந்திராவிடம் அவசரமாய் விடை பெற்றுக்கொண்டு, என் மகளின் வீட்டுக்குப் போனேன். அன்றிரவு தூக்கமின்றி தவித்தேன்.

அடுத்தநாள் காலையில், “ரேவதி… எனக்கு அர்ஜென்டா ஒரு வேலை வந்துடுச்சும்மா. போயிட்டு, ரெண்டே நாளில் திரும்ப வரேன்” என்று சொல்லிவிட்டு திருச்சியிலிருக்கும் அறிவழகனின் வீட்டுக்குப் போனேன்.

வீட்டில் அவன் தனியாகத்தானிருந்தான். சென்னையில் வாழும் ‘சந்திராவை’ பற்றிச் சொன்னேன். அவளது ஆல்பத்தில், கடைசி பக்கத்தில் அவனும், புஷ்பாவும் மணக்கோலத்தில் எடுத்துக் கொண்ட ஃபோட்டோ இருந்ததையும், சொன்னேன்.

அசையாமல் கல்லாய் இருந்த அவன், “உனக்கு ‘பாப்பாவை’ ஞாபகம் இருக்கா?” என்று கேட்டுவிட்டு, எனக்கு குடிக்க வெந்நீர் போட்டு எடுத்துவர அடுப்படிக்குப் போனான்.

அப்படியே என் எண்ணங்கள் நாற்பது வருடங்கள் பின்னோக்கி சென்றது.
ஒரு நாள்… என் வீட்டுக்கு வந்த அறிவழகன், என் கைகளை பிடித்துக்கொண்டு, விம்மினான்.

“ஏண்டா… என்ன ஆச்சு? என்றேன். “அப்பாவுக்கு வேலை போனதுதான் உனக்குத் தெரியுமே! அதனால குடும்பம் நடத்த கஷ்டமா இருக்குன்னு, எங்க வீட்டு கீழ்-போர்ஷன் முழுவதையும் யாரோ “பாப்பான்னு” ஒரு அம்மாவுக்கு, இரண்டு லட்சம் ரூபாய்க்கு ஒத்திக்கு விட்டிருக்கார்.
இப்போ, அந்த ‘பாப்பா’ குடிவந்துட்டா. அவ இளம் பெண்களை மூலதனமாக்கி, தொழில் நடத்தறா. ராத்திரி எட்டு மணியானா ஏகப்பட்ட ஆட்டோ, டூ-வீலரெல்லாம் வீட்டுக்கு வருது. ராத்திரியானா, வீடே அமர்க்களப்படுது. உள்பக்கமா இருக்கிற படிக்கட்டு வழியாத்தான், மாடிக்குப் போகணும். வீட்டுக்கு போறதுக்கே மனசு கஷ்டமாயிருக்கு” என்றான்.

அந்த பாப்பாவோ போலீஸ், அரசியல்வாதின்னு எல்லார்கிட்டேயும், செல்வாக்கோட இருக்கா. நீ ஒருதடவை என் அப்பாகிட்டே வந்து பேசணும்” என்றான்.

“நீ கவலைப்படாதே. சமயம் பார்த்து உன் அப்பாகிட்டே பேசறேன்” என்றேன் நான். நான்கு நாட்கள் கழித்து, காலையில் மணி பத்திருக்கும். நான் அறிவழகன் வீட்டில் நுழைந்தேன்.

கீழ் போர்ஷனில் யாருமே இல்லை. உள்பக்கமாக இருந்த படிகளில் ஏறி, நேராக, மாடிக்குப் போனேன். ‘டேய் அறிவழகா…’ என்று கத்திக்கொண்டே… மாடியில் அவனைத் தேடினேன். யாருமே இல்லாததால், கீழே போகலாமென்று திரும்பினேன்....

அழகு சொரூபமாக ‘அவள்’ என் முன்னால் நின்றாள். “தன்னோட ஆஃபீஸ் ஒர்க்கர்ஸையும், இங்கே மாடியிலே இருக்கிற ஹவுஸ் ஓனரோட குடும்பத்தையும் கூட்டிகிட்டு, மலைக்கோட்டைக்கு சாமி கும்பிட காலையிலேயே அம்மா போயிட்டாங்க. மதியம் சாப்பிட்டுட்டுதான் வருவாங்க. நீங்க யாரு?” என்றாள்.

அழகியான அவளின் குரலில் தேன் கசிந்தது. “நீங்க யாரு?” எனக் கேட்டேன்.

“நான் ‘பாப்பாவோட’ ஒரே மகள். என் பேரு ‘புஷ்பா’. மதுரையிலே, லேடீஸ் காலேஜிலே பி.ஏ. படிக்கிறேன். ஹாஸ்டலில் இருந்து, நேற்று மாலையில்தான் அம்மாவை பார்க்கலாம்னு, இந்த வீட்டுக்கு வந்தேன். வீட்டு ஓனர்கிட்டே எதாவது சொல்லணுமா?” என்றாள்.

“வேண்டாம்” என்று சொல்லிவிட்டு கிளம்பப்போனேன். அவளின் ‘தனிமையும்’, என்னுள் எழுந்த ‘காமமும்’ என்னை தடம் புரளச் செய்தது. என் ஸ்பரிசத்தால் அவள் சீறாமல், சிணுங்கினாள். இருவரும், ஒருவருக்குள் ஒருவர் கரைந்து போனோம்”.

எங்களுக்குள் நடந்த, அந்தக் காமப்பிழைக்கு பிறகு, அறிவழகனின் வீட்டுப்பக்கமே நான் போகவில்லை. அந்த புஷ்பாவையும் பார்க்கவில்லை.

எனக்குள் ஓடிக்கொண்டிருந்த, ஃப்ளாஷ்பாக்கை, எனக்கு குடிக்க வெந்நீர் கொண்டுவந்த அறிவழகன்தான் கலைத்தான்.

“நாற்பது வருஷத்திற்கு முன்னாடி, என் அப்பா இரண்டு லட்சம் ரூபாய் வாங்கிகிட்டு ‘பாப்பான்னு ஒரு அம்மாவுக்கு, எங்க வீட்டை ஒத்திக்கு விட்டார்னு, உனக்குதான் தெரியுமே. அந்த பாப்பாவுக்கு ‘புஷ்பான்னு’ ஒரு மகள். மதுரையிலே படிச்சுகிட்டிருந்த, அந்த புஷ்பா, ஒருதடவை, அவ அம்மாவை பார்க்க எங்க வீட்டுக்கு வந்திருந்தா. அப்போ வீட்டிலிருந்த எல்லோரும் மலைக்கோட்டைக்கு போயிந்தோம். என்னைத் தேடி மாடிக்கு யாரோ ஒருத்தன் வந்தானாம். அந்த அயோக்கியன்தான் அவளைக் கெடுத்தானாம். பலதடவை அவளைக் கேட்டும், அவன் யாருன்னு, அடையாளம் தெரியாதுன்னு சொல்லிட்டா”.

அந்த புஷ்பாவுக்கு நான் மாலைபோட்டு, கல்யாணமான மாதிரி ஒரு போட்டோ எடுக்க சம்மதிச்சா, என் அப்பா எழுதிக் கொடுத்த வீட்டு ‘ஒத்திப் பத்திரத்தை’ திருப்பிக் கொடுப்பதாகவும், வீட்டை காலி செய்துவிடுவதாகவும் எங்களிடம் பேரம் பேசினாள் பாப்பா.

என் அப்பாவும், அம்மாவும், என்னிடம் கெஞ்சியதால், நானும் சரி என்று சம்மதித்தேன். பாப்பாவும் சொன்னபடியே எங்கள் வீட்டை, காலி செய்துவிட்டு, சேலத்திற்கு போய்விட்டாள். அதற்குப்பிறகு, அவர்களை நான் பார்க்கவே இல்லை” என்றான்.

“ஒரு வேளை நானும், புஷ்பாவும் சேர்ந்து எடுத்துக்கொண்ட அந்த போட்டோவைத்தான் நீ அந்த சந்திராவின் ஆல்பத்தில் பார்த்திருப்பே” என்றான் அறிவழகன்.

ஆழிச்சுழலில், சிக்கிய என் மனம், அமைதியானது. “ஆம்… சந்திரா என் மகள்தான். புஷ்பாவிற்கும் எனக்குமிடையே ஏற்பட்ட காமப்பிழையின் உருவாக்கமே ‘சந்திரா’, என்ற தீர்க்கமான முடிவை, என் அறிவும் மனமும் முழுமையாக ஏற்றுக் கொண்டது”.

அறிவழகன் வீட்டிலிருந்து கிளம்பத் தயாரானேன். இன்றே என் மூத்த மகள் ‘சந்திராவை’ பார்க்கவேண்டுமென மனம் துடித்தது...

என் அலைபேசி சிணுங்கியது. மறு முனையிலிருந்து, என் பெண் ரேவதி பேசினாள். “அப்பா, அன்னிக்கு உங்களை ஏ.டி.எம்., சென்டர்லேயிருந்து வீட்டிலே விட்டுட்டு, போனாளே உங்க “தங்கமான” பொண்ணு ‘சந்திரா’, அவ, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, ரோடு ஆக்ஸிடன்டிலே, ஸ்பாட்லயே செத்துப் போயிட்டா” என்றாள்.

நாற்பது வருடங்களுக்கு முன் நான் செய்த ‘காமப்பிழை’ அழிந்து, என் கண்களில் கண்ணீராய் பெருக்கெடுத்தது.