தொடர்கள்
கற்பனை
மிஸ்டர் ரீல்...! - ஜாசன்

20210408062037314.jpeg

சேலம் நெடுஞ்சாலை வீதியில் எடப்பாடியாரை சந்திக்க மிஸ்டர் ரீல் போனபோது.... அவரது திருமதி வாசலில் உட்கார்ந்து முறத்தில் அரிசியில் கல் பொறுக்கி கொண்டிருந்தார்.

மிஸ்டர் ரீல்... “சார் இல்லையா” என்று கேட்டபோது... “அதோ இருக்கிறாரே” என்று திருமதி கைகாட்டிய இடத்தில், முன்னாள் முதல்வர் துணி உலர்த்தி கொண்டிருந்தார். நேர்த்தியாக துணியை உலர்த்தி, அது பறந்து விடாமல் இருக்க, கிளிப் போட்டுக்கொண்டிருந்தார்.

அவரைப்பார்த்து மிஸ்டர் ரீல்... “என்ன சார் இது” என்று கேட்க.... இதுதான் நிஜம். கோட்டை எல்லாம் நிரந்தரம் இல்லை என்று தத்துவம் பேசிக்கொண்டிருந்தார். பிறகு, அவரே பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்து, எதிரே இருந்த நாற்காலியில் மிஸ்டர் ரீலை உட்காரச் சொல்லிவிட்டு... “என் மனைவிதான் துணியை நான் துவைக்கிறேன், நீங்கள் உலர்த்துங்கள். மளிகைக் கடைக்குப் போங்கள், காய்கறி வாங்கி வாருங்கள் என்று இலாகா ஒதுக்கி இருக்கிறார்” என்றார் எடப்பாடி. அதுமட்டுமல்ல... “வெற்றிநடை போடும் தமிழகமே” மறுபடியும் 2026-ல் தானே. இப்ப சும்மாதானே இருக்கீங்க என்று கேட்கிறார். அவங்க சொல்றதும் நியாயம்தானே என்று எடப்பாடி சொல்ல...

மிஸ்டர் ரீல், நியாயமில்லை என்று சொல்லத் தயங்கி.. “சரி. தோல்விக்கு என்ன காரணம்” என்று கேட்க... அப்போது அங்கு வந்த திருமதி எடப்பாடி, “ஸ்டாலினின் திருமதி தான் காரணம். அவங்க எல்லா சாமியையும் கும்பிடும்போது, எங்க வீட்டுக்காரர் ஸ்டாலின் முதல்வர் ஆகணும் என்று தெளிவாக புரியும்படி வேண்டினார்கள். ஆனால் இவர், மீண்டும் அம்மா ஆட்சி வர வேண்டும் என்று சாமி கும்பிட்டார். இதில் சாமி ரொம்பவும் குழம்பி போய் விட்டார். தற்சமயம், அம்மாதான் இல்லையே. எப்படி அம்மா ஆட்சி நடக்கும். இவர் பொய் சொல்றாரு என்று தீர்மானித்த சாமி, துர்கா ஸ்டாலின் சொன்னது கரெக்ட் என்று அவரை முதல்வர் ஆக்கி விட்டார் ஆண்டவன்” என்று சொல்ல....

உடனே மிஸ்டர் ரீல் குழம்பிப்போய்... “ஒருவேளை அப்படி இருக்குமோ என்று யோசித்து, எடப்பாடியை பார்த்து, மேடம் சொல்றது சரி மாதிரி தான் எனக்கு தோன்றுகிறது” என்று சொல்ல... அதற்கு முன்னாள் முதல்வர் சார்... “எடப்பாடி ஆட்சி என்று சொன்னா.. அம்மா ஆட்சி வேண்டாம்னு சொல்றாரு என்று ஓபிஎஸ் வதந்தியைப் பரப்ப தயாரா இருந்தார். என்னை என்ன பண்ண சொல்றீங்க” என்று கேட்டு அலுத்துக் கொண்டார்.

கூடவே ஆட்சி இல்லாததும் ஒரு சுகம் தான். திடீர்னு அமித்ஷா போன் பண்ணி, அடுத்த வாரம் தமிழ்நாட்டில் ‘சமஸ்கிருத வாரம்’ கொண்டாடுங்க என்று சொல்வார்.

இதேபோல்தான், “ராமர் கோயில் கட்ட, அதிமுக நிதி உதவி தரவில்லையே என்று கேட்டார். நான் அப்போது ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டேன். நிதி எவ்வளவு வேண்டுமானாலும் தரேன், தயவுசெய்து வெளியே தெரிய வேண்டாம் என்று சொல்லி நிதியை தந்தேன்” என்றார். இப்ப அவர் போன் பண்றதே இல்லை... இதனால் எனக்கு பிரஷர் நார்மல். இப்படி சில சந்தோஷங்கள் இருக்கத்தான் செய்கிறது என்றார் எடப்பாடி.

இது தவிர.. “பிரதமர் கொரானா மீட்டிங், அதற்குப் பிறகு முதல்வர் மீட்டிங்... அப்பப்பா ரொம்ப கஷ்டம் என்றவர்... சரி, புறப்படுங்கள். ராத்திரி எங்க வீட்ல டிபன் இட்லி. இட்லி மாவு அரைப்பது என் இலாகா, சட்னி அவங்க இலாகா” என்று சொல்ல... உடனே மிஸ்டர் ரீல்.. நீங்க இட்லி மேட்டர் கவனிங்க என்று புறப்பட்டார்.

அவசரத்தில், கழற்றிவிட்ட செருப்பை போடாமல் வந்தது நினைவுக்கு வர... மிஸ்டர் ரீல் செருப்பை மாட்டிக்கொண்டு, டிவியில் ஏதோ எடப்பாடி சந்தோஷமாக பேட்டி தருகிற சத்தம் கேட்க, மெல்ல எட்டிப் பார்த்தபோது... டிவிடி மூலம் அவர் பழைய மலரும் நினைவுகளில் மூழ்கி இருப்பது தெரிந்தது. அவரது கனவை கலைக்க வேண்டாம் என்று ஓசைப்படாமல் திரும்பிவிட்டார் மிஸ்டர் ரீல்.

அடுத்து உதயநிதி ஸ்டாலினை பார்க்க போனபோது... யாரோ ஒரு இயக்குனரிடம் பேசிக்கொண்டிருந்தார், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர்.

“மக்களின் முதல்வர் டைட்டில் நல்லா இருக்கு. அந்த ரேஷன் கடை சீன் இன்னும் கொஞ்சம் பெருசா இருக்கட்டும். ரேஷன் பொருள் தூக்க முடியாமல் ஒரு வயதான ஆயா தட்டுத்தடுமாற... முதல்வர் ஒரு கையில் ஆயாவை தூக்கி இடுப்பில் வைத்துக்கொள்வார். இன்னொரு கையில் அந்த ரேஷன் பொருட்கள், மன்னெண்ணைகேன் முக்கியம். மறந்துடாதீங்க.. இரண்டு கிலோமீட்டர் செருப்பு போடாம முதல்வர் நடந்து போய், ஆயா வீட்டில் இல்லை.. இல்லை.. குடிசையில் கொண்டு விடுகிறார். ஆயா தரும் தண்ணியை குடித்துவிட்டு, நாலு ஐநூறு ரூபாய் நோட்டை தருகிறார் என்று சொல்ல...”

அப்போ டைரக்டர்... “ஐயா என் ஓட்டு உங்களுக்குத்தான் என்று சொல்றா மாதிரி சீன் வைக்கவா” என்று கேட்க... பதறிப்போன திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர்.. “காரியமே கெட்டுவிடும். நான் ஏதோ ஓட்டுக்கு பணம் தந்தேன் என்று கதை கட்டி விடுவார்கள். இந்த ஒரு சீனை மட்டும் வெட்டி ஒட்டி, உதயநிதி அராஜகம் என்று சொல்வார்கள். ஏற்கனவே எனக்கும், எலக்ஷன் கமிஷனுக்கும் ஏழாம் பொருத்தம். அந்த இரண்டாயிரத்துக்கு வருமானவரி கட்டினார்களா என்று வருமான வரி துறை ரெய்டு விடுவாங்க. அந்தப் பணம் தர சீனே வேண்டாம் என்று சொல்லிவிட்டு... நச்சுனு ஒரு பத்து சீன், நாளைக்கு சொல்லுங்கள்” என்று இயக்குனரை அனுப்பிவைத்தார் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.

அப்போது மிஸ்டர் ரீல்... “உதயநிதி ஸ்டாலின் ஆகிய நான் என்று ராஜ்பவனில் குரல் கேட்கும் என்று நினைத்தேன், ஏமாத்திட்டீங்க...” என்று சொல்ல...

“என்னை என்ன பண்ண சொல்றீங்க... மாமா தான், சின்ன வயசுல எம்எல்ஏவே ஜாஸ்தி... மந்திரி பதவி எல்லாம் ஆசைப்படக் கூடாது என்று சொல்லிவிட்டார். எங்க குடும்பத்தில்... சபரீசன், அம்மாவை எதிர்த்து பேச தைரியம் யாருக்கும் கிடையாது. அதான் சும்மா இருக்கேன்” என்று சொல்ல... அப்போது ஒரு செல்பேசி ஒலிக்க... உடனே என்ன அமைச்சர் சார்.. “இதெல்லாம் நீங்க என்னை கேட்கலாமா.. நீங்களே முடிவு பண்ணுங்க என்றவர்.. நான் ஒரு நாலு மேட்டர் சொன்னேனே, அதை கொஞ்சம் கவனிங்க. எப்பவும் உங்க சுதந்திரத்தில் தலையிட மாட்டேன்” என்றார் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர்.

மறுபடியும் அவர் செல்பேசி ஒலிக்க... என்னது... “ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றல் உத்தரவா? சரி. அனுப்புங்க, பார்த்து சொல்றேன்” என்றார். கூடவே மிஸ்டர் ரீலைப் பார்த்து... “இதுக்கு முன்னே இருந்த இளைஞரணித் தலைவர், இப்படி ஒரு பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அதனால் எல்லா அமைச்சர்களும் எல்லா அதிகாரிகளும் எனக்கு போன் பண்ணி தொந்தரவு பண்றாங்க. எனக்கு பாதி டென்சன் இதுதான்” என்று உதயநிதி சொல்ல...

இதுக்கு முன்ன இளைஞரணி பொறுப்பில் இருந்தவர் யார்... என்று ஒன்றும் தெரியாதவர் போல் மிஸ்டர் ரீல் கேட்க... யாரு.. “இப்ப இருக்கிற முதல்வர்தான். இப்படி பழக்கப்படுத்தி விட்டார், கெட்ட பழக்கம் இது” என்று அலுத்துக் கொண்டார் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.