தொடர்கள்
அரசியல்
குடிசை வீட்டிலிருந்து கோட்டைக்கு செல்லும் 2 கம்யூ. எம்எல்ஏக்கள்... - மாலாஸ்ரீ


திமுக கூட்டணி சார்பில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மாரிமுத்து (49), திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அவர், அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமாரைவிட 29,102 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.

இவரது சொந்த ஊர், திருத்துறைப்பூண்டியில் இருந்து 15 கிமீ தூரத்தில் உள்ள கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த காடுவாகுடி கிராமம். மாரிமுத்து ஒரு குடிசை வீட்டில், தனது மனைவி ஜெயசுதா, தாய் தங்கம்மாள் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவரது தாயும், மனைவியும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள்.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதியில் திமுக கூட்டணியின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சின்னதுரை (46) போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரைவிட அதிக வாக்குகள் பெற்று எம்எல்ஏவாகி இருக்கிறார். இதன் மூலம் இம்மாவட்டத்தின் முதல் மா.கம்யூ எம்எல்ஏவாக சின்னதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவரது மனைவி, 100 நாள் வேலைதிட்டப் பணியாளர். இவர்களுக்கு சிறிய அளவிலான ஓட்டு வீட்டைத் தவிர, வேறெந்த சொத்துக்களும் இல்லை எனத் தெரியவந்துள்ளது.

மேற்கண்ட 2 கம்யூ. எம்எல்ஏக்களும் முதன்முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் குடிசை வீட்டிலிருந்து சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு செல்லும் பெருமை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.