தொடர்கள்
அரசியல்
மய்யத்தில் புயல்... - ஜாசன் (மூத்தப் பத்திரிகையாளர்)

20210408061902295.jpeg

கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி, பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது. இப்போது சட்டமன்றத் தேர்தலில், கமல் உட்பட அவர் கட்சியின் மற்றும் அவரது கூட்டணி கட்சியின் ஒரு வேட்பாளர் கூட ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதுதான் இப்போதைக்கு கமல் கட்சியின் செல்வாக்கு.

இந்தச் சூழலில், தேர்தல் தோல்விக்கு காரணம் மற்றும் கட்சியின் மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க 6.5.2021 கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டினார் கமல். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிப் பொறுப்பாளர்கள், கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் உட்பட ஏழு பேர் கட்சியை விட்டு விலகுவதாக கடிதம் தந்தார்கள். இதில் மௌரியா ஐபிஎஸ், அப்துல் கலாம் உதவியாளர் பொன்ராஜ் ஆகியோர் அடக்கம். டாக்டர் மகேந்திரனின் ராஜினமா உண்மையில் எல்லோருக்கும் அதிர்ச்சி. டாக்டர் மகேந்திரன், கட்சிக்கு பொருளாதார ரீதியாக பல உதவிகளை செய்தவர். அவரின் ராஜினாமா கடிதத்தில், கட்சியில் ஜனநாயகம் இல்லை. மிகப்பெரிய தோல்விக்குப் பின்பும் கூட, கமலின் அணுகுமுறையில் மாற்றம் இல்லை. இனியும் மாறும் என்ற நம்பிக்கை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு கமல், டாக்டர் மகேந்திரன் ஒரு துரோகி. முதலாவதாக களையப்பட வேண்டியவர் இவர்தான். முகவரி கொடுத்தவர்களின் முகங்களையே எடுத்துச் சொல்ல துணிந்தவர். ஒரு களையே தன்னை களை என்று புரிந்துகொண்டு, தன்னைத் தானே நீக்கிக் கொண்டிருக்கிறது என்று கமல் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம், மக்கள் நீதி மைய செய்திக்குறிப்பில் மகேந்திரன் மட்டுமே நீக்கப்படுகிறார் என்று சொல்லியிருக்கிறது. மற்றவர்களின் ராஜினாமா கடிதம் பற்றி எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. அதாவது கட்சியை விட்டு போக வேண்டாம் என்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அந்தச் செய்திக்குறிப்பு மறைமுகமாக குறிப்பிடுகிறது.

டாக்டர் மகேந்திரன், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட விரும்பினார். கமலஹாசனை, வேளச்சேரி தொகுதியில் போட்டியிட அவர் ஆலோசனை சொன்னார். ஆனால், முன்னாள் விஜய் டிவி நிர்வாகம் மகேந்திரனும், சங்கையா சொல்யூஷன் தலைவர் சுரேஷ் அய்யரும் அவரை கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வற்புறுத்தினார்கள். இதற்குக் காரணம்... டாக்டர் மகேந்திரனின் செல்வாக்கை வைத்து கமல் எளிதாக வெற்றி பெறலாம் என்பதுதான் கணக்கு. கமல், அந்தத் தொகுதியில் வானதி சீனிவாசனுக்கு, அடுத்து இரண்டாவது இடத்தில் வந்து டெபாசிட்டை தக்க வைத்துக்கொள்ளும் அளவுக்கு வாக்கு பெற டாக்டர் மகேந்திரனின் செல்வாக்கு தான் காரணம். கமல் என்ற நடிகருக்கோ கட்சித் தலைவர் என்ற முறையில் எல்லாம் கமலுக்கு வாக்குகள் விழவில்லை. கமல் கோவையில் போட்டியிட்டதால், டாக்டர் மகேந்திரன் சிங்காநல்லூரில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

எல்லா குழப்பத்திற்கும் காரணம்... சங்கையா சொல்யூஷன் சுரேஷ் ஐயர் மற்றும் முன்னாள் விஜய் டிவி நிர்வாகி மகேந்திரன் தான் என்பது டாக்டர் மகேந்திரனின் குற்றச்சாட்டு. அவர் கமல் கட்சிக்கு நிதி உதவி செய்ததை கூட கோயிலுக்காக நினைத்து, கட்சிக்கு நிதி அளித்தேன், இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று சொல்லியிருக்கிறார். அப்படியிருந்தும் கமல் அவருக்கு துரோகி பட்டம் தந்ததுடன், அவரை ஒரு களை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நாம் தமிழர் கட்சி, இந்த சட்டமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட 7% வாக்குகளைப் பெற்றிருக்கிறது. ஆனால் கமல் கட்சி, 3.72 சதவீதம் வாக்குகளைத்தான் பெற்றிருக்கிறது. எல்லோரும் எம்ஜிஆர் ஆக ஆசைப்பட்டால் இப்படித்தான் ஆகும்.