
சோழப்பேரரசின் தலைநகராம் உறையூரில், அடிக்கடி மேகவெடிப்பினால், அதீதமாய் கொட்டித் தீர்த்தது மழை. அபரிமிதமான வெள்ளப் பெருக்கினால், தலைநகரையே கரைத்து, கிழக்கே வங்கக்கடலில் சங்கமிக்க, காவிரியோ அவசரமாய் ஓடினாள்.
“மன்னர் மாண்பே மக்கள் நலம் காப்பது”, என்ற ஞானத்தை தன் முன்னோர்கள் வழியாக பெற்றிருந்தார், சோழப்பேரரசர் கரிகாலப் பெருவளத்தான். கட்டுக்கடங்காத நீரோட்டத்தால் அவதியுறும் தன் மக்களின் துயர் துடைக்கவே, காவிரியின் கரைகளை பலப்படுத்தி, வரும் உபரி நீரை தேக்கி வைக்க கல்லணையையும் கட்டி, சரித்திரத்தில் இடம்பிடித்தார் பேரரசர் ‘கரிகாலன்’. காலங்களை கடந்து, தமிழர் புகழ் தாங்கி நிற்கும் அந்தக் கல்லணையிலிருந்து, புறப்பட்டு, காவிரிக்கு தெற்காக, கிழக்கு நோக்கி ஓடிக்கொண்டிருந்தது வெண்ணாறு. நெல் விளையும் கரிசல் காட்டின் வழியோடுவதால், கார்மேகத்தை ஒத்திருந்த, வெண்ணாற்றின் தண்ணீரும், கரைதளும்பி ஓடிக்கொண்டிருந்தது.
அக்காலத்தில், மாதம் மும்மாரி பொழிந்ததால், வற்றாத ஜீவநதியாக வெண்ணாறு ஓடிக்கொண்டிருந்தாள். சரித்திரச் சுவடுகள் ஆழப்பதிந்த நெற்களஞ்சியமான, தஞ்சைத் தரணியின் செழிப்பிற்கும், வனப்பிற்கும் காரணமான வெண்ணாற்று நதிக்கரையில் இருந்தது ஒரு வண்ணமிகு நந்தவனம்.
நந்தவனத்துப் பூக்களோ, புவித்தாயின் மடியில், தங்களின் மணக்கும் இதழ்களைக் கொண்டு, பட்டாடை விரித்ததோடல்லாமல், மயக்கும் மகரந்தங்களை, மென்மையாக வீசும் மாருதத்திலும் கலந்தன.
புள்ளினங்கள் மாலையில் இசைக்கும் ‘வசந்தா’ ராகத்தின் ஆலாபனைக்கேற்ப, மலரின் நறுமணம் தாங்கி வந்த மென்காற்று, அழகு சோலையின் மரக்கிளைகளை தழுவித் தவழ்ந்தது. தென்றல் உரசியதைக் கூட தாங்கவொண்ணாத மகிழ மரங்களோ, நாணத்தினால் சிலிர்த்து, தங்களின் மேனிகளிலிருந்து, ஒருசில இலைகளை, வெண்ணாற்றில் உதிர்த்தன.
சித்ரா பௌர்ணமி முழுமதியின் குளிரொளி, அன்று, வானத்து கருமையைத் திருடிக் கொண்டது. அந்தத் திருட்டின் அலாதி சுகத்தில், ரீங்காரமிட்டபடியே வண்டுகளும், கரையோரமாய் மலர்ந்திருந்த அல்லிகளில் அமர்ந்தன.
அந்த அழகிய சந்திகாலப் பொழுதில், வெண்ணாற்றின் கரையிலிருந்த, மூங்கில் மரங்களின் வெடிப்புகளினூடே எழும்பிய, குழலோசையில், நெஞ்சம் மயங்கி, சூழல் மறந்து, அமர்ந்திருந்தாள் அவள். முழுமதியின் ஒளிபட்டதால், அவளின் ஆடகப்பொன்மேனி வெள்ளி முலாம் பூசிக்கொண்டது.
செங்கரும்பை, துதிக்கையால் வளைத்தொடிக்கும் வேழம்போல, நானும் அவளின் கையைப் பிடித்து, என்னோடு இழுக்க முற்பட்டேன்.
மறுகணம்…
“கட்டேல போறவன், வாய்ல கொள்ளிக்கட்டையை தேய்க்க, நீ அழாதேடி, காலையில என் புள்ளை வேலையிலிருந்து வந்ததும், அந்த குடுகுடுப்பைக்காரனை தேடிபிடிச்சு, அவனுக்கு காரியம் பண்ணச் சொல்லறேன்” என்று அழுது கொண்டிருக்கும் அம்மாவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தாள் என் அப்பாவழிப் பாட்டி.
அன்று காலையில், பள்ளியில், என் பத்தாம் வகுப்பு தமிழாசிரியர் வர்ணித்த வெண்ணாற்றின், இயற்கை வனப்புகள் அனைத்தும், நான் தூக்கத்திலிருந்து பதறிப்போய் எழுந்ததும் கரைந்துபோனது.
“வாசல்ல, அந்த குடுகுடுப்பை அமங்கலமா-குறி சொல்லிட்டு போறான். அதைக்கூட காதில வாங்காம… அப்படியென்ன வராண்டாவில் படுத்து, கும்பகர்ணத் தூக்கம் உனக்கு? என்று அம்மா கேட்டபோது மணி ராத்திரி-இரண்டு.
அந்த தெருவில் இருந்த ஆறு வீடுகளில், எங்கள் வீடுதான் அறுநூரு சதுர அடியில் கட்டப்பட்டிருந்த ஓட்டுவீடு. அந்த அரண்மனைக்குள், வராண்டா, ஹால், கிச்சன் என்று மூன்று பிரம்மாண்டமான(?) உட்பிரிவுகள் இருக்கும். நான், இரவில் வழக்கம்போல, வராண்டாவில்தான் உறங்குவேன். ஆனால், அன்று குடுகுடுப்பை வந்ததாக சொல்லி என் அம்மா போட்ட அலப்பறையில், என் அன்றைய தூக்கம் ‘அபார்ஷன்’ ஆனது.
நைட் ஷிஃப்டு முடிந்து, காலை மணி ஆறேகாலுக்கெல்லாம், வீட்டுக்கு வந்தார் என் அப்பா. வாசல் படிக்கட்டில் உட்கார்ந்திருந்த தன் அம்மாவிடம் “ஏம்மா… இப்படி பனிக்காலத்திலே, காலையிலேயே, எழுந்துட்டே? இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கக்கூடாதா? உனக்கு வயசு எழுபதைத் தாண்டியாச்சில்லே?" என்று, என் பாட்டியை மென்மையாக கோபித்துக் கொண்டார்.
“டேய்… ராத்திரி, இரண்டு மணிக்கெல்லாம், பாழாப்போன குடுகுடுப்பை ஒருத்தன், நம்மாத்து வாசல்லே நின்னு அமங்கலமா, உளறிட்டுப் போயிட்டான். அதுக்கப்புறம் உன் பொண்டாட்டியும் தூங்கலே… அழுதுதழுது என்னையும் தூங்கவிடலே” என்று கொஞ்சம் ஜாஸ்தியாகவே ஊதிவிட்டாள், என் பாட்டி.
பாட்டியின் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்ட அப்பா, “என்னடி சொன்னான் அந்த குடுகுடுப்பை?” என்று அம்மாவிடம் கேட்டார்.
ஐ.பி.எல் கிரிக்கெட் ஆட்டத்தை இரவு தூங்கியதால், லைவ்வாக பார்க்காமல், அடுத்தநாள் பகலில் ஹைலைட்ஸ் பார்ப்பவன் போல, நானும், ‘நடந்தது-என்ன?’ என்று அறிய என் காதுகளை தீட்டிக்கொண்டேன்.
“இந்த வீட்டு மஹாலஷ்மிக்கு, இன்னும் மூணு நாள்ல, மாங்கல்ய தோஷம் இருக்கு. அந்த கண்டத்தில இருந்து தப்பிக்க வழியே கிடையாது. இருந்தாலும், ‘சத்தியவான்’ உயிரை மீட்டு இழுத்துக்கிட்டு வந்த ‘சாவித்திரியாட்டுமா’, தாலியை தக்கவைக்கணும்னா, நான் சொல்லறதைக் கேளு…”
“நாளைக்கு காலையிலே ராகுகாலத்திலே, உன் வீட்டுக்குப் பின்னாடி, வேலிக்கு பக்கத்திலே இருக்கிற எருக்கஞ்செடியாண்ட, போ. மஞ்சத்துணிக்குள்ளே ஒரு எலுமிச்சம் பழத்தையும், பத்து ரூபாய் நோட்டையும் முடிஞ்சு, அந்த எருக்குக்கு அடியிலே குழிதோண்டி புதைச்சு வைச்சுட்டு வந்துடு…”.
“உனக்கு வந்திருக்கிற தோஷத்தையும், அதுக்கான பரிகாரத்தையும், யாருக்கும் சொல்லாதே. சொன்னியானா… ஜக்கம்மா தாலியை புடுங்கிக்கிட்டு போயிடுவா: அப்படீன்னு சொன்னான்” என்று அழுகைக்கிடையே சொல்லி முடித்தாள் என் அம்மா.
கோபப்படுவதில், துர்வாச முனிவரின் மறு அவதாரமான என் தந்தையோ, என் அம்மாவைப் பார்த்து, ”ஏண்டி… உனக்கு அறிவில்லே? எவனோ என்னத்தையோ உளறினான்னு, நீ ஏண்டி கவலைப்படறே?” என்று அதட்டலாக ஆறுதல் சொன்னார்.
பிறகு, “சரிசரி… அவன் சொன்னபடி மஞ்சத்துணியிலே, ஒரு எலுமிச்சம் பழத்தையும், பத்துரூபாய் சைஸுக்கு ஒரு பேப்பரையும் மடிச்சு, கட்டி அந்த எருக்குக்கு அடியிலே புதைச்சு வைச்சுட்டு வா” என்றார்.
அப்பா, எதிர்பார்த்தது போல, அன்று காலை எட்டு மணியளவில் ஒருவன், அந்த எருக்கஞ்செடிக்கடியில், நோண்டிக் கொண்டிருந்தான்.
அவனைப்பிடித்து அப்பா போட்ட இரண்டு தர்ம அடியில் “சாமி… வயித்துப் பொழப்புக்காக பொய் சொன்னேன். ஜக்கம்மா இல்லே… நான்தான் அப்படி சொன்னேன்” என்று சொன்னதும்தான் என் அம்மாவுக்கு உயிர் வந்தது.
“ஏண்டா… படுபாவிப்பயலே. விடிஞ்சபிறகு, ஆத்துக்கு வந்து ‘அம்மா... தாயேன்னு’ கேட்டிருந்தயானா, அவரோட பழைய வேட்டியையும், ஐம்பது பைசா காசும், நேத்திக்கு வைச்ச வத்தக்குழம்போட, மீந்துபோன பழைய சாதத்தையும் போட்டிருப்பேனே. அதை விட்டுட்டு, என் ‘தாலிக்கு ஆபத்துன்னு’ சொன்னியேடா… பாவி” என்று அவனை வசைபாடியதும்தான், ‘எமதர்மன்’ என் அப்பாவை விட்டுவிட்டு போனதாக, என் அம்மாவுக்கு, நிம்மதி வந்தது.
என் பாட்டியோ, அந்த குடுகுடுப்பையை கொல்லைப்புறம் இருந்த கிணத்தடிக்கு வரச்சொன்னாள். “மரியாதையா, முப்பது வாளி தண்ணி இறைச்சு, அங்கே வைச்சிருக்கிற இரண்டு அண்டாலேயும், ஊத்திட்டுப் போ” என்று, குடுகுடுப்பையை, கிடுகிடுக்க வைத்தாள் என் பாட்டி.
அதன் பிறகு, கடந்த ஐம்பது வருடங்களாக, நிஜ வாழ்வில், குடுகுடுப்பைகளே என் கண்ணில் படவில்லை. நேற்று என் பால்ய சினேகிதன் சோமு, “கிராமத்தில் குறி சொல்லவந்த குடுகுடுப்பைக்கு தர்ம அடி” என்று ஒரு வாட்ஸ்-ஆப் வீடியோ மெஸேஜ் அனுப்பியிருந்தான். அதை காலையில் பார்த்ததும்தான், மேலே சொன்ன, என் இளவயது அனுபவம் நினைவில் நிழலாடியது.
காலையில், மணி ஏழாகியிருந்தது. படுக்கையிலிருந்து எழுந்துகொண்டே… “மைதிலி… காஃப்பி” என்றேன். மைதிலியிடமிருந்து பதிலே வரவில்லை.
‘ஒருவேளை ராவணன், புஷ்பக விமானத்தில் ஶ்ரீலங்காவுக்கு கடத்தியிருப்பானோ?’ என்று டவுட் வந்தது. அப்படி மட்டும், இலங்கேஸ்வரன் ‘ஹைஜாக்’ செய்திருந்தால், என் மைதிலியின் அக்கப்போர்களை சமாளிக்க முடியாமல், எப்படியும் மதியம் சாப்பாட்டுக்குள் திரும்பக் கொண்டு வந்து வீட்டிலேயே விட்டுவிட்டு போய்விடுவான்’ என்று உள்மனம் சமாதானம் சொன்னது.
எனவே… தந்தசுத்தி செய்யலாமென்று கொல்லைப்புற கிணற்றடிக்குப் போனேன். அங்கே… கண்ணீர் உகுத்த, மைதிலியின் கண்களைக் கண்டதும், கலங்கிப் போனேன்.
“ஏண்டி இப்படி இடிஞ்சுபோய், நெளிஞ்ச அலுமினிய சொம்பாட்டுமா, மூஞ்சியைத் சுருக்கிண்டு, உட்கார்ந்திருக்கே? நான் இருக்கரச்சே உனக்கு என்ன கவலை” என்று அவளிடம் அக்கரையாக கேட்டேன்.
“இதுக்குத்தான்… எனக்கு, ஸ்மார்ட்-ஃபோன் வேண்டாம்னு தலைதலையா அடிச்சுண்டேன், கேட்டேளா…” என்றாள் சம்மந்தமே இல்லாமல்.
“மைதிலி… எதுவா இருந்தாலும், சுத்தி வளைக்காம, புரியும் படியா சொல்லு” என்றேன்.
“எவனோ, குடுகுடுப்பையாம். என் ஃபோனுக்கு, வாட்ஸ்ஆப் மெஸேஜ் அனுப்பி இருக்கான். எனக்கு மாங்கல்ய தோஷம் இருக்காம். ஒரு வாரத்துக்குள்ளே ‘நீங்க அவுட்டாம்’. அவனே, எதோ பரிகார பூஜை பண்ணி பிரசாதத்தை அனுப்பி வைக்கிறானாம். அதுக்காக, அவன் குடுத்திருக்கிற ‘அக்கவுன்ட் நம்பருக்கு’ பத்தாயிரம் ரூபாயை, அனுப்பச் சொல்லியிருக்கான். இந்த விஷயத்தை வெளியே சொன்னா, பரிகாரம் பலிக்காதாம். ஜக்கம்மா, கண்டிப்பா மாங்கல்யத்தை புடுங்கிண்டு போயிடுவாளாம்”, என்று வந்திருந்த மெஸேஜை எனக்கு காட்டினாள்.
“பணம் போனா போறது. எனக்கு, மாங்கல்யம்தான் முக்கியம்” என்று புலம்ப ஆரம்பித்துவிட்டாள் மைதிலி.
சற்று நேரத்தில் என் சிநேகிதன் சோமுவை விட்டு, எனது நம்பருக்கு ஒரு மெஸேஜ் அனுப்பச் சொன்னேன். அந்த மெஸேஜை, பார்த்தபிறகுதான், அவளது மாங்கல்யம் பிழைத்ததாக, மைதிலிக்கு நிம்மதி வந்தது.
உங்களுக்கும் அந்த மெஸேஜை கீழே கொடுத்துள்ளேன். படிக்கவும்…
“கொரோனா லாக்-டவுன் முடிந்து, அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை, யாரும் ‘குடுகுடுப்பை’ அனுப்பும் அக்கவுன்ட் நம்பருக்கு பணம் அனுப்ப வேண்டாம். சமூக இடைவெளியை கடைபிடித்து, மாஸ்க் அணிந்து, சானிடைஸர்களால் கைகளை சுத்தம் செய்து கொள்ளவும். இப்படி கட்டுப்பாட்டுடன் இருந்தால், அனைவரது மாங்கல்ய தோஷங்களும் தானே கான்ஸலாகிவிடும்” - இப்படிக்கு… ‘ஜக்கம்மா’
மெஸேஜை படித்துவிட்டு மைதிலி, சிரித்த முகத்துடன், எனக்கு சூடாக ஒரு டம்ளர் காஃப்பி தந்தாள். அப்போ நீங்க…?

Leave a comment
Upload