

காவிரி மைந்தன்

மலர்க்கூந்தல் தரும்வாடை! மகராணி கண் ஜாடை!!
அன்பே!
உள்ளத்தால் தொடுகின்ற உன்னதக்கலைதனையே உன்னிடத்தில் நான் பயின்றேன் என்பதோடு நில்லாமல், உன்னை நான் தொடுவதற்கும் அஃதே பயன்படும் விந்தைதனை என்ன சொல்ல?
செந்தாமரை மலர்போல் முகம் காட்டி சிரிக்கின்ற செங்கமலம் நீயன்றோ?
செந்தமிழ்த்தேனெடுத்து கவிவடித்து உன்னால் படிக்கப் பெறும் அவ்வரிகள் சுந்தரகாண்டமென்பேன்!
அஞ்சுகமே உன் நினைவே அல்லாது வேறெதையும் சிந்தையாலும் நான் தொடேன்!
பஞ்சணையில் நெஞ்சணைக்கும் பைங்கிளியின் ஸ்பரிசங்களில் பரவசங்கள் பெறுவதென்றும் புதுமையில்லை என்பதனால் பள்ளியறை முழுவதுமே எண்ண மலர்ப்பூக்களால் நிறைத்து ஏந்திழையே உன்புகழைப் படித்து உள்ளமெல்லாம் உருகிநிதம் வழிகிறதே.. பார் கண்ணே என்றேன்!
கனிவாய் இதழெடுத்து பதமாய் எனை அணைத்து இதமாய் தந்தாயடி.. இன்பக் கனிச்சாறு!!
வேரோடு சாய்ந்த மரம்போல் ஆனேன் நானே!
நான் வீழ்ந்த இடம் நீயென்பதால் பெருமைதானே!!
மோகத்தால் நான் தவிக்கும்போதெல்லாம் தேகத்தால் தழுவி அணைப்பவளே!
தாகங்கள் நீங்குதற்கு நாமிருவர் இதயத் தடாகத்திலல்லவா இறங்க வேண்டும்!
சொல்லத்தான் இயலாத சொற்களுக்கு முழுவடிவம் தாராளமாய் முனக வேண்டும்?
இப்படியேப் போனால்தான் எல்லாம் எது என்பதனைக் காட்டிடவோர் கருவி இல்லை!
கயல்விழியே.. கார்குழலே! காலையிளங்குயில்பாடி நம் தூக்கம் கலைக்க.. புலர்கின்ற பொழுதுக்கு இன்னும் சிலநாழிகைகள் இருக்க.. விழிதிறந்து மூடியபடி.. விளையாட்டு - எங்கே மறுபடி மறுபடி காட்டு என்றேன்!
அதிகாலை துயில் களைந்து நீங்கள் படுத்துகின்ற பாட்டை சொல்லத்தான் முடியுமா என்றாய்?
அன்பின் மழையில் இருவரும் நனைந்து ஆசைக்கடலில் இதயம் கலந்து ஒன்றியிருக்கும் சுகமடி கண்ணே! அடைக்கலம் என்பதும் சுகம்தரும் என்றாய்!
மலர்க்கூந்தல் தரும்வாடை மகராணி கண் ஜாடை சரிவிகிதக் கலவையதில் நான் மூழ்கலானேன்!
தளிர்மேனி குளிர்ந்ததென்று தேவி நீ சொன்னபோது மலரோடு தென்றல்வந்து மோதியதோ என்று கேட்டேன்!
நித்திரையோடு போராடுகிறேன் என்றாய்!
நீந்திக் கரை சேர வேண்டிய இரவல்லவா இந்நேரம் நித்திரைக்கு என்ன வேலை என்றேன்!
பூத்திரி குறைத்து பின் துவங்கிய லீலைகள் ராத்திரி முழுவதும் வேண்டும் என்று எங்கோ படித்தேன் என்றேன்!
யார் காதில் பூ சுற்றுகிறீர்கள்.. சற்று முன் உங்கள் கற்பனையில் உதித்திருக்கும் என்று கள்ளி நீ கண்டுபிடித்தாய்!
அவசரம் ஏதுமில்லாமல் அணுஅணுவாக அழகே உன்னை அளந்துகொண்டிருந்தேன்!
விரல்படும் இடமெல்லாம் சிணுங்கியபடி நீ இன்பத்தில் விழுந்துகிடந்தாய்!
மார்பிலே படர்ந்திருக்கும் மன்மத மயக்கத்தை தேவியே நீ மறைவின்றி கொடுத்தாய்!
தோளிலே சாய்ந்திடும் சொர்க்கமே நீ எந்தன் பாதியாய் இணைந்து இனித்தாய்!!
இடைவெளி இல்லாமல் இதழ்களைக் கேட்பது எங்ஙனம் நியாயமாகும் என்றாய்?
அதைவிட சுவையெதுவும் இருந்திடின் கொடுத்திடு அடங்கிடுவேன் நானும்!

Leave a comment
Upload