
சரவணன் காலையில் கைகளில் காபி, ஹிண்டு சகிதம் டிவி-க்கு முன் அமர்ந்தபோது, அந்தப் புகழ் பெற்ற சேனலில் பிரபல ஜோதிடர் தங்கமணி, அந்த நாளின் பலன் சொல்லிக் கொண்டிருந்தார்.
கருமையான சுருண்ட குட்டை முடி, அறுத்து ஒட்டிய அரைக் குட மிளகாய் போல் மூக்கு, கண்டுபிடிக்க நுண்நோக்கி தேவைப்படும் கண்கள், வாயில் ஒரு வாளி புன்னகை வழியப் பேசினார்.
“என் அன்பார்ந்த ரேவதி நட்சத்திரக் காரர்களே...
இன்று ரொம்ப கவனமாக இருக்கவும். பொறுமை, நிதானம் தேவை. கோபம் கூடவே கூடாது. பேச்சில் ஜாக்கிரதையாக இருக்கவும். வார்த்தைகளை அளந்து பேசவும்...
“யா காவாராயினும் நா காக்க” என்ற வள்ளுவ பெருந்தகையின் வாக்கை நினைவில் வெய்யுங்கள்.
தவறினால், உறவுகள் முறியலாம். நஷ்டம் ஏற்படலாம்.
அலுவலகத்தில் சக ஊழியர்கள், பணியாளர்களுடன் விரோதம் ஏற்படலாம். மேலாதிகாரிகள் அதிருப்தி கொண்டு அதனால் பதவி, மற்றும் ஊதிய உயர்வு, பாதிக்கப் படலாம்.
கோபம் சில வேளை அடிதடி கோர்ட் கேஸ்னு கூட கொண்டு போகலாம். ஜாக்கிரதை...
மற்றபடி இது உங்களுக்கு ஒரு பொன்னான நாள்.”
என்று ரேவதி மக்கள் தலையில் ஓங்கிக் குட்டிவிட்டு பின் போனால் போகிறது என்று ஒரு ரோஜாவை சொருகினார்.
அசுவாரசியமாக இதை சரவணன் கேட்க, பின்னாலிருந்த மனைவி பிரியா அவன் தலையில் தட்டினாள்.
“கேட்டாயா உன் பலனை? இன்னிக்கு உன் நட்சத்திரப் பிறந்த நாள். நீ ரேவதி நட்சத்திரம். ஞாபகம் இருக்கா” என்றாள்.
“ஓ சரி. இந்த மாதிரி ஜோசியர் எல்லாம், கொரானா வருவதைப் பத்தி எவ்வளவு அழகா முன்னாடியே சொன்னாங்க இல்ல...” என்றான்.
“கேலி பண்ணாதே. தங்கமணி மட்டும் சரியா தான் சொன்னார் போன வருஷம்.”
சரவணன் தன் நட்சத்திரப் பலன் கேட்ட தாக்கத்தினாலோ என்னவோ
விவாதம் செய்ய விரும்பவில்லை.
பிரியா.. “போன வருஷம், என் பிறந்த ஜென்ம நட்சத்திரமான ரோகிணி அன்று.. “ரோகிணி நட்சத்திரகாரர்களுக்கு அவர்களின் மாமா வழியாக அவர்கள் மிக விரும்பியது இன்று கிடைக்கும்”னு தங்க மணி சொன்ன போது... அன்று பண்ருட்டியிலிருந்து எங்க மாமா எனக்குப் பிடித்த பலாப்பழம் ரெண்டு எடுத்துக்கொண்டு வந்தாரா இல்லையா” என்றாள்.
“ஹும்” என்றான் சரவணன்.
அந்த மாமா... இதை சாக்காக வைத்து ஒரு வாரம் அவன் வீட்டில் தங்கி அழிச்சாட்டியம் செய்ததைச் சொல்ல வந்து, கடைசி நேரத்தில் வார்த்தைகளை விழுங்கினான்..
“ஓ கே நான் நம்பறேன்” என்றான்.
“ஆமாம். நிச்சயமாக. ஆபிசில் முணுக் முணுக்னு கோபப்படாதே. ப்ரோமோஷன் வர்ர டைம். எள் ஆயுடப்போறது.”
சரி - என்ற அழகான வெள்ளைக்கொடி வார்த்தைக்காக தமிழுக்கு மனதுக்குள் நன்றி சொல்லி...
“சரி” என்றான்.
பின் கொஞ்சம் யோசித்து...
“ஆமாம். எனக்கு பொறுமை கம்மி தான். ஆனால் ஜோசியர் ஏதோ அடி தடி எல்லாம் பாசிபிள் என்றாரே. நான் என்ன அப்படியெல்லாம் கீழ்த் தரமா அடிதடிக்கு போறவனா என்ன?” என்று சற்று பெருமையுடன் கேட்க....
“நீ அடிக்க மாட்டே. அடிச்சா வாங்கிப்பே இல்ல. அதான் தங்கமணி சொல்றார்” என்றாள் பிரியா.
ரோஷத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, “குளிச்சிட்டு ஆபீஸ் கிளம்பறேன். கொரனாவால ஆபீஸ் போற பழக்கமே ரொம்ப நாளா மறந்து போச்சு. இப்போ திரும்ப பழக வேண்டியதா இருக்கு” என்றான்.
குளித்து, காலை உணவருந்தி ஆபீஸ் கிளம்பும்போது செல் போன் காணோம்.
எட்டு வயதுப் பிள்ளை மயூர், தன் கையில் வைத்து அதை நோண்டிக் கொண்டிருக்க, கொஞ்சம் கோபத்தில் “போனை குடு” என்று பிடுங்கினான். போன் கீழே விழுந்து போனின் மேல் கண்ணாடி சில்லு தேங்காயாக நொறுங்கியது.
பிரியா... “கோவம் கூடாதுன்னு சொன்னா புரியாதா? பாரு தங்க மணி ஜோசியர் சொன்ன மாதிரி போன் காலி. நஷ்டம் ஏற்படலாம்னு சொன்னாரில்ல” என்று கத்தினாள்.
“சரி சரி, நீ ஏன் கத்தறே.”
“நீ தான் இன்னிக்கு கத்தக்கூடாது. நான் கத்தலாம்.”
உடைந்த போனை ஒட்டி கிட்டி ஒரு வழியா ஒப்பேத்திய பின், காரில் ஏறி ஆபீஸ் போய் சேர்ந்தான்.
அவன் விற்பனை மேலாளராக, மின் அணு கருவிகள் செய்யும் பெரிய நிறுவனத்தின் சென்னை, அண்ணா சாலையிலுள்ள தென் இந்திய தலைமை விற்பனை அலுவலகத்தில்.
எட்டு மாத - கொரோனா - வீட்டிலிருந்து வேலைக்குப்பின்... நிர்வாகம் டிசம்பரில் எல்லாரையும் அலுவலகம் வருமாறு மறைமுகமாக ஆணையிட்டு விட்டது.
அலுவலகத்தில் தன் இடத்தில் அமர்ந்து கணினியில் ஆழ்ந்தான்.
அன்றைக்கு அனுப்ப வேண்டிய, மின்வாரிய டெண்டர் வேலை பாக்கி இருக்க... விற்பனைப் பொறியாளர் ஸ்ரேயாவை அழைத்தான்.
“என்னம்மா இன்னிக்கு ஈ.பி. டெண்டர் அனுப்பணும். முடிச் சிட்டியா..”
“டென் மினிட்ஸ் சார்” என்றவள்... முழுசாக ரெண்டு மணி நேரம் கழித்து பூர்த்தி செய்த டெண்டரை நிதானமாக சரவணனிடம் கொடுத்தாள்.
அதை வேகமாக புரட்டிய போது, விற்கப்போகும் கருவியின்
மாடல் எண் 001என்று முடிவதற்கு பதில் 011 என்று இருந்தது. தவறான தேர்வு. அப்படியே அனுப்பி, ஆர்டர் வந்தால் 10 லட்சம் ரூபாய் நஷ்டமாயிருக்கும். நல்லவேளை பார்த்தான்.
கோபம் பொங்க... “ஏம்மா பத்து லட்சத்தை நீ குடுப்பியா.. இல்ல உங்க அப்பா வந்து குடுப்பாரா - கம்பெனிக்கு” என்று கத்த வந்தவன் மனதில்,
தங்கமணியின் அருள் முகம் தோன்ற...
“ஸ்ரேயா... மாடல் நம்பர் தவறாக இருக்கு. கொஞ்சம் மாத்தி டெண்டரை அனுப்பிடு என்று விளக்கி, அன்பொழுகினான்.”
ஸ்ரேயாவுக்கு குற்ற உணர்ச்சியை விட... ஆச்சர்யம் தான் அதிகமாயிருந்தது.
இவ்வளவு பெரிய தப்புக்கு, இந்த சிடுமூஞ்சி பாஸிடம் இருந்து இவ்வளவு மென்மையான ரியாக்ஷனை அவள் எதிர்பார்க்கவில்லை.
அன்று பார்த்து, சரவணனுக்கு எல்லா வேலையிலும் டென்ஷன்.
சரியாக வேலை செய்யாத அவர்கள் கருவி பற்றி இந்தியன் ஆயில் மேலதிகாரி, போனில் அரை மணி நேரம் - அவனுடைய நிறுவன கடைநிலை ஊழியரிலிருந்து, எம்.டி. வரை - எல்லாரையம் (அவனையும் சேர்த்து) திட்டி திட்டு என்று திட்டித் தீர்த்துவிட்டு, அவனை உண்டு இல்லை என்று ஆக்கி விட்டார். அவனை வாய் திறக்கக் கூட விடவில்லை.
“பொறுமை. கஸ்டமரிடம் பொறுமை” என்று மனதுக்குள் சொல்லி... மூன்று முறை மூச்சை நீண்ட நேரம் உள்ளடக்கிப் பின் மெதுவாக வெளியேற்றினான். (பிரியா பரிந்துரைத்த கோபம் தணிப்பு யோக முறை.)
மதிய உணவு நேரம் கடந்து போக... பணியாளன் குமாரிடம் கேன்டீனில் இருந்து மசால் தோசை வாங்கி வரச் சொன்னான். காலை வீட்டுக் களேபரத்தில் உணவு எடுத்து வரவில்லை.
குமார் திரும்பி வந்து ஒரு பொட்டலத்தை மேஜையில் வைத்து...
“சார் உப்புமா தான் இருந்தது” என்றான்.
உலகிலேயே அவனுக்குப் பிடிக்காத உணவு உப்புமா. உதாரணத்துக்கு, சரவணனுடைய நிறுவனத்தின் எம். டி அவனைக் கூப்பிட்டு, “நீ ஒரு ப்ளேட் உப்புமாவை இப்போ சாப்பிட்டால், உடனே உன்னை ஜெனரல் மேனேஜர் ஆக்குகிறேன்” என்று ஒரு வாய்ப்புக் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்களேன்...
சந்தேகமில்லாமல்... அந்த வாய்ப்பை வெகு நாகரீகமாக நிராகரித்து விடுவான் சரவணன். இது குமாருக்கும் தெரியும்.
கடுங்கோபத்துடன் குமரைப் பார்த்து... “இதை வாங்கறதுக்கு பதில் நீ அரை கிலோ கடலைப் புண்ணாக்கு கூட வங்கியிருக்கலாம்” என்று கூற நினைத்தவன், நிதானித்துப் பின்...
“பரவாயில்லப்பா, வச்சிட்டுப்போ” என்றான்.
பொட்டலத்தை மூலையில் வைத்து விட்டுப் பின், ஒரு தம்ளர் தண்ணீர் குடித்தான்.
பின் வந்த போனில், ஒருவர் “ஐயா நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிருஷ்டசாலி . உங்களுக்கு ரூபாய் மூன்று லட்சம் கடன், ஒரு சதவிகித வட்டியில் உடனே கொடுப்பது, எங்கள் வங்கியின் தற்போதய கடமை. அதற்காக தயை கூர்ந்து உங்கள் ஊர், பேர், ஈ மெயில், முகவரி, பாஸ்போர்ட், ஜாதகம், ஆதார், பான், ரேஷன் மற்றும் கடன்/பற்று அட்டைகள் பற்றி நாங்கள் கேட்கும் எல்லா விவரமும் கூறவும்” என்கிற ரீதியில் பேசிய போது... துளிக் கோபமின்றி அந்தப் பேருதவியைப் புன்னகையுடன் நிராகரித்தான்.
மூணு மணிக்கு ஜெனரல்மேனேஜர் ராமகிருஷ்ணன் கூப்பிட்டனுப்பினார்.
இந்த வருட விற்பனை மிகக் குறைவு. அவனும் அவன் குழுவும் இன்னும் உழைக்க வேண்டும் என்றார்.
உட்கார்ந்த இடத்தில், பின்புறம் அசையாமல் இருந்துகொண்டு, ஓடி ஓடி உழைக்கும் அவனையும், பிறரையும் இந்தக் கிழவர் எப்பொழுதும் குறை கூறுவதில் கோபம் வந்தது. நிதானத்துடன் பேசாமல் இருந்தான்.
பின்னர் ராமகிருஷ்ணன் சொன்னார்...
“ஷ்யாம்னு ஒரு சேல்ஸ் என்ஜினீயர் உன்கிட்ட இருக்கான் இல்லையா. அவனோட நேத்து பேசினப்ப சொன்னான், அவனால சவுத் டமில் நாட்ல நல்லா மார்க்கெட்டிங் பண்ண முடியும்னு. நிறைய கிளயண்ட்ஸ் தெரியுமாம். அவனுக்கு அந்த ஏரியா கொடுத்துடேன்.”
சரவணன் கோபம் கியர் மாறி உயர்ந்தது.. இரண்டு காரணங்கள். ஒன்று ஷ்யாம் ஒரு முழு சோம்பேறி, முழு முட்டாள். அவன் உப்புக்கு சப்பாணியாக இருப்பது தான் மேல். இரண்டாவது அவன் ராமகிருஷ்ணனின் மச்சான் மகன்.
சரவணன்... “சார்.. வேண்டாம். ஷ்யாம் ஒரு உதவாக்கரை, மற்றும் சோம்பேறி. அவனை சவுத் தமிழ் நாடுக்கு போட்டா, டூர் போறேன்னு சொல்லிட்டு, மாமா ஊரான கோவில்பட்டில போயி உட்கார்ந்து கடலை மிட்டாய் சாப்பிட்டுக் கொண்டிருப்பான்” என்று சொல்ல வந்த போது... அவன் மனத்திரையில் அரசியல் கட்சி போஸ்டர் போல, மேல் ஓரத்தில் பெரிய, தங்கமணி படமும் பக்கத்தில் கொஞ்சம் சிறிய
பிரியா படமும் தோன்ற... மனதை மாற்றிக்கொண்டான்.
பின் நிதானமாக...
“ஒகே சார். சேல்ஸ் என்ஜினீயர்ஸ் லோட் எல்லாம் எப்படி இருக்குனு பாத்துட்டு நாளை நிச்சயம் பண்ணலாமா சார்” என்று கேட்டு ஒரு நாள் வாய்தா வாங்கி, அன்றைய நெருக்கடியை வெற்றிகரமாக ஜெயித்தான்.
மாலை கிளம்பும்போது ஆறரை மணி. காரில் அமர்ந்து கிளம்பிய போது... வானத்தில் பறப்பது போல் தோன்றியது. அன்று தான், எவ்வளவு பொறுமை, நிதானம் மற்றும் முதிர்ச்சியுடன், துளிக் கோபமின்றி, அலுவல்களை கையாண்டான்.
‘ஒரு நாள் முதல்வன்’ போல் உணர்ந்தான்.
இப்படியே எப்பவும் இருக்கலாமா?......
நோ நோ என்றது உள் மனது.
- இப்படி நீ எப்பவும் இருந்தால், உன்னை கடலை மாவில் முக்கி... பஜ்ஜி போட்டு எண்ணெயில் பொரித்து சாப்பிட்டு விடுவார்கள்.
பகவான் ராமகிருஷ்ணர் (பொது மேலாளர் இல்லை) பாம்பு கதையில் என்ன சொன்னார்?
“கடிக்காதே பாம்பே. ஆனால் உன்னையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அதனால் சீறுவதை விட்டு விடாதே” என்று தானே?
நீயும் சீறு. ஆனால் யாருக்கும் தீங்கு வேண்டாம் - என்கிற பாணியில் உள் மனம் சொல்ல... தலை ஆட்டிக்கொண்டே வண்டி ஓட்டினான்.
“ஆனால் ஒன்று. இதெல்லாம் நாளை காலையில் இருந்து தான். அதுவரை கோபப்படாமல் கௌதம புத்தர் போல் இருந்து, இந்நாளை தங்கமணி சொன்னது போல், பொன் நாளாக மாற்றணும்” என்றும் தனக்குத் தானே கூறிக்கொண்டான்.
மழை கொஞ்சம் பெய்ததால்...
போக்குவரத்து, களி ஆகி முன் செல்லும் வண்டிகள் நிற்க... ஏதேச்சயாக இடது பக்க சந்தில் வண்டியைத் திருப்பினான்.
“டம்” என்ற சப்தத்துடன் எதிரில் வேகமாக வந்த இருச்சக்கர புல்லட் வாகனம் அவன் புது வண்டி ஓரத்தில் மோதி கீழே சரிந்தது.
அவசரத்தில் வண்டியை நிறுத்தி.. கீழே இறங்கிப் பார்த்தால், வண்டியின் வலப்பக்க ஓரம் சிராய்ப்பு.
கோபம் எகிற, தங்கமணி/பிரியா மனத்திரையில் காணாமல் போக, எழ முயற்சிக்கும் புல்லட்காரனைப் பார்த்து அரை இருட்டில்,
“அறிவு கெட்ட முண்டம். கண் இல்லையா உனக்கு. நேர வந்து இடிக்கிறே. ஊட்ல சொல்லிட்டு வந்துட்டியா. பன்னாடை” என்றான்.
அடுத்த வினாடியே தன் பெரும் தவறை உணர்ந்தான்.
அந்த சந்து ஒரு வழிச் சாலை. இவன் நுழையக்கூடாது. கவனமின்மை.
கீழே இருந்து எழுந்தவனுக்கு நாற்பத்தைந்து வயதிருக்கும்.
வழுக்கைத்தலை, ஆறடி, நூறு கிலோவில் அந்தக்கால மா.பொ.சி மீசையுடன், கரை வேட்டி, வெள்ளை சட்டை,வெள்ளை செருப்புடன் கடோத்கஜன் போல வந்தான்.
பக்கத்தில் ஒரு ஆள் கூட கிடையாது.
இதை முற்றிலும் எதிர்பார்க்காத சரவணன் இஷ்ட தெய்வங்களை வேண்டி, மனைவி சொல்லை மறந்த மடமைக்காக அந்தத் தெய்வங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.
கடோத்கஜன் ஒரு புன்னகை பூத்தான்...
பின் “ஏம்ப்பா ஒன் வே ல வந்துட்டு என்ன திட்டறே. ஒன் காரை விட
என் பைக்குக்கு அடி அதிகம். திரும்பி ஒழுங்கா வீடு போய் சேரு” என்று பெருந்தன்மையுடன் மன்னித்து விட்டு, அவனது சரிந்த
புல்லட்டை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டான்.
நாக்கு உலர்ந்த சரவணன், கொஞ்சம் சமாளித்து... “சாரி சார். மன்னிச்சுக்குங்க” என்று சொல்லி பின் “உங்க பை கீழே விழுந்துட்டுது” என்று கீழே கிடந்த சாக்குப் பையை எடுக்கப்போக...
அந்த ஆள்...
“யோவ் ஒழுங்கா வீடு போவியா.
பைய நான் பாத்துக்குறேன்” என்று கூறி அவனே பையை எடுக்க, அப்போதுதான் சரவணன் பையின் வெளியே துருத்திக் கொண்டிருக்கும் மூன்று வீச்சருவாக்களின் பள பளக்கும் முனைகளைப் பார்த்தான்.
சப்த நாடியும் அடங்கி உடனே வண்டியை ரிவெர்ஸ் எடுத்து கண் காணாத தூரத்துக்குச் சென்று மறைந்தான்.
எட்டு மணிக்கு கேகே நகர் சென்று, வீட்டில் மனைவியிடம் அன்று நடந்தது முழுவதும் கூறிய பின்...
“பிரியா, நீ சத்யவானின் சாவித்ரி போல, நாளாயினி போல, இவ்வளவு பெரிய கற்புக்கரசினு எனக்கு தெரியாம போச்சு. தங்கமணி சொன்னது போல் இன்று நடந்திருக்க வேண்டியது....
ஆனால், உன்னோட தாலி பாக்கியத்தாலும், கடவுள் புண்ணியத்தாலும் தான் அந்த புல்லட் ஆள்கிட்ட, அடிதடி, வெட்டு குத்து வாங்காமே பொழச்சேன்.
இருந்தாலும் அந்த ஆள் என்னை ஒரு தட்டு கூட தட்டாமல், ஒரு திட்டு கூட திட்டாமல் புன்னகையுடன் மன்னித்தது, பெரிய ஆச்சரியம் தான்” என்று உருகினான்.
“சரி, போனதுபோகட்டும். என்னைப் பத்திப் புரிஞ்சா சரி. இனிமேயாலும் என்னையும் ஜோசியத்தையும் மதிக்கக் கத்துக்கோ” என்றாள் பிரியா.
கடோத்கஜன் என்று நாம் கூறிவந்த காசி மேடு - கட்சி வட்ட செயலாளரும், லோக்கல் தாதாவுமான அருவா ஆறுமுகம் ஒன்பது மணிக்கு புல்லட்டை தன் சின்ன வீட்டு வாசலில் நிறுத்தி உள்ளே போனான்.
ரெட் லேபிள் விஸ்கி பாட்டிலை மேஜயில் எடுத்து வைத்து “சின்னா, கொஞ்சம் பிரிட்ஜ் தண்ணியும் கிளாஸ்ம் கொண்டா” என்றான்.
(சின்ன வீட்டுக்கு பெயரும் சின்னாவா!)
சின்னா, சின்னத் தேர் போல் அசைந்து தண்ணீர் மற்றும் கிளாஸ் உடன் வந்தாள்.
“இன்னிக்கு விஷயம் தெரிமா...
திருப்பி வர சொல்ல, ஒரு பரதேசிப்பய கார்ல ராங் சைடுல வந்து நம்ம பைக்க லேசா தட்டிட்டான். அப்பால கன்னா பின்னான்னு என்னை திட்டினான். வந்த கோவத்துல அருவால ஒரு போடு போடலான்னு
எடுக்கப் போனேன். அப்பொறம் தான் நீ காலைல சொன்னியே அது நியாபகம் வந்திச்சு.
டிவில தங்கமணி ஜோசியர் என்னோட ரேவதி நட்சத்திரத்துக்கு இன்னிக்கு மோசமான நாள் என்று சொன்னதாலே, இன்னிக்கு மட்டும் அடி தடி வெட்டுக்குத்துன்னு என்னம் போகாம, கோபப்படாம இருக்க நீ சொன்னியில்லே... அதான் அவனை போனா போறதுனு மன்னிச்சு உட்டேன்” என்றான்.
“என் ராசா” என்று அவனுக்கு நெற்றியில் அழகாக த்ரிஷ்டி கழித்தாள் சின்னா.
அடுத்த நாள் காலையில் அந்தப் புகழ் பெற்ற டிவி சேனலில், பிரபல ஜோசியர் தங்கமணி... “என் அன்பார்ந்த அஸ்வினி நட்சத்திரக்காரர்களே,
இன்று.........” என்று வழக்கம் போல் பலன் சொல்ல ஆரம்பித்தார்.

Leave a comment
Upload