தொடர்கள்
ஆன்மீகம்
தீண்டா திருமேனி பெருமாள்…! - ஆர் .ராஜேஷ் கன்னா.

20210426085318199.jpg

சென்னையை அடுத்த கொல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிறுவாபுரி முருகன் கோயில் அருகில் நீண்ட பழங்கால பெருமாள் கோயில் ஒன்று உள்ளது.

ஆரண்ய நதியும் கொசஸ்தலை நதியும் இருபக்கம் செல்லும் கிராமத்தில் வால்மீகி முனிவர் தனது ஆசிரமத்தை அமைத்து இருந்தார்.

வால்மீகி ஆசிரமத்தில் ராமபிரானின் புதல்வர்களான லவன் - குசன் இருவரும் வந்து தங்கி, வில் - அம்பு எடுத்து குருகுல பயிற்சி செய்ததால், சிறுவர்கள் அம்பு எடுத்து எய்த ஊர் என்ற பெயர் பெற்று நாளடைவில் சிறுவாபுரி என்று அழைக்கப்படுகிறது.

வால்மீகி செய்த பிரம்ம யாகத்தில், வரதராஜ பெருமாள் அம்ச பூதத்தில் லவன் குசன் இருவருக்கும் காட்சி அளித்தார். அதன்பின் வரதராஜ பெருமாள் விக்ரமாக எழுந்தருளினார். ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் எம்பெருமானோடு எழந்தருளினர். வரதராஜ பெருமாள் சதுர்பூஜமாகி திருவூரக (பாம்பு) அம்சமாக வால்மீகி ஆசிரமத்தில் வில் அம்பு பயிற்சிக்கு வந்த லவன் குசன் காட்சி அளித்ததாக ஐதிகம்.

வால்மீகி ஆசிரமத்தில் விக்ரமாக எழந்தருளிய வரதராஜ பெருமாளை அப்போதைய ஸ்தபதிகள் சுதை (சுண்ணாம்பு) மற்றும் மூலிகை கரைசல்கள் கொண்டு பிரமாண்டமான பெருமாளை உருவாக்கினார்கள். அன்று முதல் இன்று வரை பெருமாளை அர்ச்சகர்கள் கூட கையால் தொட்டதில்லை என்பதால் வரதராஜபெருமாள் ‘தீண்டா திருமேனி’ பெருமாள் என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார்.

20210426085514795.jpg

தீண்டா திருமேனி பெருமாள், ஸ்ரீரங்கநாதரும் 12 ஸ்தானம், 1008 சாளக்கிராம முர்த்திகளால் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுதை (சுண்ணாம்பு) திருமேனியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

தீண்டா திருமேனி பெருமாளின் கீரிடம் முதல் திருவடி வரை 1008 சாளக்கிராமம், நவரத்தினம், தங்கம் மற்றும் வெள்ளியுடன் பெருமாளின் திருவடியில் செப்பு தகட்டால் செய்த யந்திரம் ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள பெருமாளுக்கு அஷ்டபந்தன திருமேனி இல்லை என்பதாலும் விக்கிரகம் மேலே சுதை (சுண்ணாம்பு) உருவம் உள்ளதால் ஸ்ரீஎந்திரம் வைத்து 12 ஸ்தானங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

தீண்டா திருமேனி பெருமாளுக்கு அபிஷேகம், திருமஞ்சனம் எப்போதும் கிடையாது. ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் அன்று, தீபம் ஏற்றிய பிறகு, தேவதரு மரப்பட்டையில் இருந்த தயாரிக்கப்பட்ட சந்தனாதி தைலம், சாம்பிராணி தைலம், சந்தன தைலம் ஆகிய முலிகை கலவை தயாரித்து, அதனை தாழம்பு மடலை பிரஷ் போன்று உருவாக்கி தீண்டா திருமேனி எம்பெருமான் உடல் முழவதும், அர்ச்சகர் கைப்படாமல் பூசிவிடுவார். இந்த 48 நாட்களும், தீண்டா திருமேனி பெருமாள் உடல் அதிக சூட்டில் இருப்பதால் அவருக்கு தத்தியோதனம் (தயிர்சாதம்) தளிகை படைக்கபடும்.

20210426085547771.jpg

தீண்டா திருமேனி பெருமாளுக்கு சாத்தப்படும் தைலக்காப்பு வைகுண்ட ஏகாதசி முன்னால் தசமி வரை திரை போட்டு மறைத்து எம்பெருமான் முகம் மட்டும் பக்தர்கள் சேவிக்க அனுமதிக்க படுகிறார்கள். தசமி அன்று மீண்டும் தாழம்பூ மடலை பிரஷ் முலம் லாவகமாக செய்து அதில் வஸ்திரத்தினை தீண்டா திருமேனி பெருமாளுக்கு சாத்துவார்.

தீண்டா திருமேனி பெருமாள் கோயிலை கரிகால் மன்னன் கட்டியதாக தகவல் இருந்தாலும், அதற்கு முன்பு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தீண்டா திருமேனி திருக்கோயில் இருந்ததாக ஐதிகம்.

20210426085653219.jpg

தீண்டா திருமேனி பெருமாளுக்கு மலர் மாலைகள் சாத்தப்படுவதில்லை, எப்போதாவது ஒரு தடவை ஒரு துளசி இலை மட்டும் தாழம்பூ மடலை வைத்து எம்பெருமான் திருமார்பில் அர்ச்சகர் தூக்கியெறிகிறார். துளசி இலை பெருமாளின் மார்ப்பில் சென்று ஒட்டி கொள்கிறது மறுநாள் காலை, துளசி இலை பெருமாளின் திருவடியில் விழந்து கிடக்கும்.

தீண்டா திருமேனி பெருமாளின் ஸ்தல விருஷம் ஏழு வகையான தர்ப்பை என்பதால் கோயிலில் இருக்கும் பாம்பு புற்று அருகே தர்ப்பைகள் முளைத்துள்ளது. சிறுவாபுரி கிராமத்தில் இன்றும் பல விவசாய விளை நிலங்களில் தர்ப்பை புல் ஆங்காங்கே முளைத்துள்ளது. இதனை கொண்டு பெருமாளுக்கு பூஜைகள் நடக்கிறது.

மேற்கு பக்கமாக தீண்டா திருமேனி பெருமாள் சேவை சாதித்தாலும் கிழக்கு பக்கமாக ஒரு பன்னிரெண்டு அடி தூண் உயரத்தில் வைஷ்ணவி தாயார் விஷ்ணுவின் மாயா சக்தியாக எம்பெருமானை பார்த்து கொண்டிருக்கிறார். இதனால் தீண்டா திருமேனி பெருமாள் எப்போதும் சாந்தமாக காட்சி தருகிறார் என்று தகவல் உள்ளது.

இங்கு கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் செங்கமலவள்ளி தாயார், தனிகோயில் கொண்டு இருக்கிறார். தீண்டா திருமேனி பெருமாளுக்கு 4 கைகள், செங்கமலவள்ளி தாயருக்கும் 4 கைகள் என்பதால் வீரலட்சுமியாக சேவை சாதிக்கிறார்கள்.

தீண்டா திருமேனி பெருமாள் சிதை (சுண்ணாம்பால்) செய்யப்பட்டு உள்ளதால், வாடாமல் வாதங்கமால் இருக்கிறார். தீண்டா திருமேனி பெருமாள் திருக்கோயில் யோக லட்சுமி, போகலட்சுமி, வீரலட்சுமி என தாயார் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். இதனை லட்சுமிபிரயம் என்று அழைக்கிறார்கள். இந்தத் திருக்கோயிலுக்கு பிரார்த்தனையுடன் வந்தால் புத்திரபாக்கியம் மற்றும் வெற்றி கிடைக்கும்.

20210426085759921.jpg

தீண்டா திருமேனி பெருமாளை காலம் காலமாக அரச்சகர்கள் ஆகிய நாங்கள் யாரும் தொட்டதில்லை. தாழும்பூ மடலில் தீண்டா திருமேனி பெருமாளுக்கு தைலக்காப்பு மற்றும் வஸ்திரம் (உடை) சாத்துதல் நடைபெறுகிறது. நின்ற கோலத்தில் பகதர்களுக்கு சேவை சாதிக்கும் தீண்டா திருமேனி பெருமாள் என்ற வரதராஜ பெருமாள் திருமேனி உலகில் வேறெங்கும் கிடையாது என திருக்கோயில் அர்ச்சகர்கள் வரதராஜன் பட்டாச்சாரியர் மற்றும் சந்தானம் பட்டாட்சாரியர்கள் நம்மிடம் தெரிவித்தார்கள்.

தீண்டா திருமேனி கோயிலின் பின்புறம் இருந்த அக்ரஹார தெரு, தற்போது யாரும் இல்லாமல் வெறிசோடி கிடக்கிறது. இவ்வளவு வரலாறு கொண்ட சிறுவாபுரி செல்லும் போது, நீங்கள் கட்டாயம் தீண்டா திருமேனி பெருமாளை தரிசித்து, அவரருளை பெற்று வாருங்கள்!