

(ஓவியக் குறிப்பு)
நாச்சியார் கோயில் மூலவர் சன்னதி செவ்வக வடிவமாக அமைக்கப்பட்டுள்ளது. முதலில் முகமண்டபம், பின் மகாமண்டபம் அதைத் தொடர்ந்து இருக்கிறது மகா மண்டபத்தில் தான் கருடாழ்வார் சன்னதி இருக்கிறது. மூலவர் சன்னதிக்கு செங்குத்தாக உள்வருவது, வெளியேறுவது என இரண்டு வழிகளும் இங்கேயே அமைந்திருக்கிறது. அதனாலேயே துவஜஸ்தம்பத்திலிருந்து பக்தர்கள் மூலவரை தரிசிக்க முடியும். மூலவர் சன்னதியில், ரங்கநாதர் அழகிய மணவாளனாக காட்சி தருகிறார். இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாளுடைய உற்சவர் என்றும் அழைக்கப்படுகிறார். இதில் இருக்கும் உண்மை என்னவென்றால் மற்ற ஒரு கோவிலின் உற்சவர், இந்தக் கோவிலில் மூலவராக இருப்பது தனிச் சிறப்பு. சிறிது தூரத்தில் இருந்து சேவித்தால் அழகிய மணவாளர் மட்டுமே இருப்பது போல நமக்கு காட்சி தருகிறார். கமலவல்லி நாச்சியார், இக் கோயிலுக்கு நாச்சியார் கோயில் என்று பெயர் வரக் காரணமாய் இருப்பவர், மூலவருக்கு வலப்பக்கத்தில் அமர்ந்த நிலையில் இருக்கிறார். சிறிது உயரம் குறைவான நிலையில் இருக்கும் தாயாரை, பக்தர்கள் முகமண்டபத்தின் ஒரு கோடிக்கு செல்லும் போதுதான் நாச்சியாரை நன்றாக தரிசிக்க முடியும். மூலவர் அர்ச்சாவதாரம், சோழர் காலத்திய அமைப்பு என்பது விக்கிரகத்தில் மேலிருக்கும் வேலைப்பாடுகள், ஆபரணங்கள் ஆகியவற்றின் குறிப்பில் தெரிகிறது. கமலவல்லி நாச்சியாரின் உற்சவ மூர்த்தம், அழகிய மணமான பெருமானின் முன்னர் எழுந்தருளப் பண்ணி இருக்கிறது. இந்த வெண்கல உருவம், சோழர் காலத்தியது. ரங்கநாயகி தாயார் உருவத்தை ஒத்திருப்பதிலிருந்தே, அதனை புரிந்து கொள்ள முடிகிறது. அதிகபட்சமாக செம்பும், தங்கமும் கலந்திருப்பதை இந்த வெண்கல சிலையில் ஒரு விதமான ஊதா நிற படிமத்தை நமக்கு காண்பிக்கிறது. சிறிய அளவிலான நர்த்தன கிருஷ்ணன் விக்கிரகமும் இங்கே காணக் கிடைக்கிறது.

திருப்பாண ஆழ்வார் (சென்ற இதழ் தொடர்ச்சி.....)
திருப்பாணாழ்வாரின் சரித்திரத்தை சென்ற வாரம் பார்த்தோம். அவர் பாடல்கள் 10 மட்டும் திவ்ய பிரபந்தத்தில் முதல் ஆயிரத்தில் தொகுக்கப்பட்டுள்ளன மற்ற பாடல்களும் எழுதவில்லையா? எழுதியது அவ்வளவுதானா? இல்லை அவை நமக்கு கிடைக்கவில்லையா? மிக அரிதான ஆசிரியத்துறை என்கிற இலக்கிய வகையில் பாடல்களை எழுதியவர் பத்து பாடல்களோடு முடித்திருப்பாரா? அந்தப் பாடல்களில் அமைப்பையும் அதன் தமிழ் நடையையும் பார்க்கும்போது நமக்குள் இவ்வாறு பல கேள்விகள் எழுகின்றன. ஆழ்வார்கள் வரலாறு பல புத்தகங்களில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டது என்பது தெரிந்ததே. சரித்திரச் சான்றுகள் அவர்களுக்கு கிடையாது. அவர்கள் பாடல்களில் உள்ள அகச்சான்று மட்டுமே நமக்கு அவர்கள் காலத்தை வரையறுக்க உதவுகிறது. அமலனாதிபிரான் முதல் பாசுரத்தில் நீண் மதில் அரங்கம் என்ற ஒரே ஒரு வார்த்தை மட்டுமே கிடைக்கிறது. திருவரங்கம் கோயிலில் நீண்ட மதில்கள் கட்டிய பிறகு வாழ்ந்தவர் என்பதை தவிர பத்து பாடல்களை மட்டும் வைத்துக்கொண்டு அவரை அறிய முடியாது. ஆகையால், எந்த முடிவுக்கும் நாம் வராமல் அவருடைய தமிழ் அழகுக்காக அவற்றை ரசிப்பதில் தவறில்லை. முதல் பாசுரத்தை சென்ற வாரம் பார்த்தோம். அடுத்ததாக....
“பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத்தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான்
கோரமாதவம் செய்தனன் கொல்? அறியேன் அரங்கத்தம்மான் திருஆரமார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே”
பழைய வினைகள் எல்லாம் அறுத்து என்னை அவன் தனது குத்தகைக்கு எடுத்துக் கொண்டு விட்டான். அதுமட்டுமில்லாமல் என்னுள் நுழைந்து கொண்டான் நான் என்ன அவ்வளவு பெரிய தவம் செய்து இருப்பேனா? எனக்குத் தெரியாது அரங்கத்து அம்மானின் மாலையணிந்த மார்பு என்னை ஆட்கொண்டு விட்டது.
இந்தப் பாடல் வைணவர்கள் சொல்லும் மிகப்பெரிய தத்துவத்தை, சம்பிரதாய கருத்தை எளிதாக வலியுறுத்துகிறது. திருமாலை அடைந்திட அப்படி ஏதும் பெரிதாக தவம் செய்ய வேண்டியதில்லை என்று சொல்வதே இதன் சிறப்பு.
திருப்பாணாழ்வார் அரங்கனின் தலை முதல் கால் வரை அனுபவித்து எழுதி இருக்கிறார் சிவந்த ஆடை, உந்தி, உதரம், மார்பு, கழுத்து, வாய், பெரிய கண்கள், நீல மேனி (நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே) இவைகள் அனைத்தும் தன்னை ஆட்கொண்ட.தாக மிக நெருக்கமான கடவுளாக திருமாலை அவர் பாடியிருக்கிறார்.
“பரியனாகி வந்த அவுணன் உடல்கீண்ட அமரர்க்கு
அரிய ஆதிபிரான் அரங்கத்தமலன் முகத்து
கரியவாகிப், புடைபரந்து, மிளிர்ந்து, செவ்வரியோடி நீண்ட அப்
பெரியவாய கண்கள் என்னைப் பேதமை செய்தனவே”
மிகப் பெரிய வடிவோடு தன்னை எதிர்த்து வந்த இரணியனின் குடலைத் தன் நகங்களால் கிழித்த நரசிங்கன், பிரமன் முதலிய தேவர்களுக்கும் அணுகவும் அனுபவிக்கவும் அரியவனாக இருப்பவன். எல்லோருக்கும் முன்னால் முதலில் தோன்றி முதல் காரணமான ஆதிப்பரம்பொருள், அரங்கமாநகரில் கண்வளரும் அழகிய மணவாளன். அவனுடைய திருமுக மண்டலத்தில் கறுத்து, விசாலமாகப் பரந்து, ஒளிவீசும், செவ்வரியோடிய, காதளவோடிய கண்கள் என்னை அவனிடம் பித்தேறும்படி செய்துவிட்டன. கல்நெஞ்சனான என்னையும் அவன் கண்கள் தன் பக்கம் இழுத்துக்கொண்டு விட்டன.
இந்தக் கண்களின் அழகிலே ஈடுபட்ட நம்மாழ்வாரும் நாயகி பாவத்தில் பராங்குச நாயகியாகி....
ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றம் கொலோ அறியேன்
ஆழியங் கண்ணபிரான் திருக் கண்கள்கொலோ அறியேன்
இவை திருக் கண்களா அன்றி மங்கையர்களின் உயிரைக் கவரும் கூற்றமா? தெரியவில்லையே! என்று அக்கண்களின் அழகிலே ஈடுபடுகிறார்.
“ஆலமா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்
ஞாலமேழும் உண்டான் அரங்கத்தரவின் அணையான்
கோலமா மணியாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோர் எழில்
நீலமேனி ஐயோ! நிறை கொண்டது என் நெஞ்சினையே”
பிரளய காலத்தில் ஆலமரத்தின் சிறிய இலையிலே தன்னந்தனியே சின்னஞ்சிறு பாலகனாய் பள்ளிகொண்டான். ஏழு உலகங்களையும் தன் திருவயிற்றிலே அடக்கியவன். திருவரங்க நகரில் திருவனந்தாழ்வானை அணையாகக் கொண்டு பள்ளிகொண்டவன். அவனுடைய இரத்தின ஆரமும், முத்து மாலையும் எல்லாவற்றுக்கும் மேலாக எல்லை காண முடியாத அந்த நீலமேனி அழகும், ஐயோ! அதை எப்படிச் சொல்வேன்! என் நெஞ்சு பூராவும் வியாபித்து விட்டதே.
கம்பரும் இதை அடியொற்றி இராமன் அழகை வருணிக்கும் பொழுது...
மையோ! மரகதமோ! மறிகடலோ! மழைமுகிலோ!
ஐயோ! இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்
என்று வியந்து போகிறார். ஐயோ என்ற அவச்சொல் இங்கு அதிசயத்தைக் காட்டும் சொல்லாகி விடுகிறது.
கடைசி பாசுரத்தில்...
“கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை
உண்டவாயன், என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன், அணியரங்கன், என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே”
நீலமேக வண்ணன், ஆயர்குலத்தில் பிறந்த வெண்ணையுண்ட வாயன், அவன் என் நெஞ்சைக் கொள்ளை கொண்டான். அண்டங்களுக்கெல்லாம் தலைவனான அவன் திருவரங்கத்தில் அழகாகக் கண்வளர்பவன். உண்ண உண்ணத் தெவிட்டாத அமுதம் போன்ற அவனைக் கண்டு சேவித்த கண்கள் வேறெதையும் சேவிக்குமா? ஆரா அமுதனான அவனுடைய அழகைக் கண்டு களித்த கண்கள் வேறு எதையும் கண்டு களிக்குமா? கண்டு களிக்கவும் பாணர் விரும்பவில்லை.
மற்ற ஆழ்வார்கள் தங்கள் ஊரையும் பெயரையும் (முத்திரை) பாசுரக் கணக்கையும் கூறியதுபோல... இவர் தம் பெயரையோ ஊரையோ குறிப்பிடவில்லை.
‘உற்றாரை யான் வேண்டேன் ஊர்வேண்டேன் பேர் வேண்டேன்’ என்ற மனோபாவம்! அவருடைய கண்ணும் கருத்தும் அரங்கனிடமே, அவன் அழகிலேயே ஈடுபட்டன. அவர் தன்னை மறந்தார். இத்தனை காலமாகக் கோயிலுக்குள்ளே வந்து தரிசிக்க முடியமல் இருந்ததால் இன்று அரங்கநாதனை மிக அருகிலிருந்து தரிசித்த ஆனந்தக் களிப்பில் தன்னையே இழந்தார். தன் நாமமும் கெட்டார், தலைப்பட்டார் தலைவன் தாள். ‘அரங்கநாதா, உன்னைக் கண்ணாரக் கண்டபின், உன்னைக் கண்ட கண்கள் வேறு எதையும் பார்க்க விரும்புமா?’ என்று கேட்டவுடன் அரங்கன் திருப்பாணாழ்வாரைத் தன் மேனியோடு சேர்த்துக் கொண்டார். காந்தம் இரும்பை ஈர்ப்பதுபோல, காய்ந்த இரும்பில் விழுந்த நீர் போல ஆழ்வார் அரங்கனோடு ஐக்கியமானார்.
திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம்...
அமுதம் பருகுவோம்....

Leave a comment
Upload