
கவிஞர் வைரமுத்துவின் “நாட்படு தேறல்” என்ற தலைப்பில் ஒரு பாடல் இந்த வாரத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
கவிஞரின் முயற்சியில் தனது சாதனைக்கு விளம்பரமாக
மொத்தத்தில் 100 பாடல்கள், 100 இசையமைப்பாளர்கள், 100 இயக்குநர்கள், 100 பாடகர்கள் என்ற திட்டத்தோடு 100 பாடல்களை எழுதியுள்ளார். அதன் முதல் பாடலான “நாக்கு செவந்தவரே” பாடல் ஏப்ரல் இறுதியில் வெளியாகியது.
இந்தப் பாடலை கீர்த்திகா உதயநிதி இயக்கி, வாகு மசான் இப்பாடலை பாடியும் இசையமைத்தும் உள்ளார். இதை வைரமுத்து தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
இதன் தலைப்பு பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதன் தலைப்புப் பாடலுக்கு ஜெரார்ட் பெலிக்ஸ் இசையமைத்து இருந்தார். சங்கர் மகாதேவன் இப்பாடலை பாடி இருந்தார்.
அந்த வரிசையில் இந்த வாரம்...
“என் காதலா” என்ற தலைப்பில் வைரமுத்து எழுதிய பாடல் வரிகளோடு விஜய் இயக்கத்தில் அனிகா, யோகன் சாக்கோ நடித்து வெளியாகிய குறும்பட பாடல் சர்ச்சையை கிளப்பியது. “என் காதலா..” என்று ஆரம்பிக்கும் பாடல்... பள்ளி செல்லும் ஒரு சிறு பெண், வயதான ஒரு கிழவர் மேல் கொண்ட காதலை பாடல் வரிகளில் வெளிப்படுத்துவது போல் அமைக்கப்பட்ட காட்சிகள்.
“வாய் முத்தம் வயது அறியுமா..?
நானும் சின்ன கன்று என்ற இந்த சிந்தை மாறுமா..?” என்று போகிறது பாடல் வரிகள்.. என்னய்யா இது..? கன்று, மாடுன்னு.. அசிங்கமாக இல்லையா?
அது வெறும் பாடல்தானே.. அதில் என்ன தப்பு என்று கேட்பவர்களுக்கு... அது ஒரு திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தின் தன்மையை ஒட்டி எழுதுவது வேறு... ஆனால், கவிஞர் தன்னுடைய சாதனையை வெளிச்சம் படுத்த தனக்காக எழுதும் பாடல்களில், இப்படி ஒரு கான்செப்ட் வைத்து எழுதுவது சரியில்லை. அதுவும் வைரமுத்துவின் மேல் ஏற்கனவே பல சர்ச்சைகள், பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் இருக்கும் போது... தான் இப்படி தான் என்பதை அவரே வெளிப்படுத்தி கொள்கிறார்.
“அவனா? அவன் ஒரு லூசும்மா... ஏழு கழுதை வயசாச்சி.. வேலைக்கு போகல.. கல்யாணம் பண்ணல.. ஏதோ கவதை எழுதுறேன்னு இந்த காட்டுக்குள்ள சுத்திக்கிட்டு இருப்பான் பைத்தியக்காரன்.. மனசுல பெரிய பாரதியார்ன்னு நினைப்பு..!” என்று அந்த குறும் பட பாடலின் ஆரம்பத்தில் ஒரு கதாபாத்திரம் சொல்கிறது. அது இயக்குனரின் வசனம்.. “பெரிய பாரதியார் போல நினைப்பு” என்று அவர் வைரமுத்துவை கிண்டல் செய்திருப்பது போல் தோன்றுகிறது.
ஒரு சிறு பெண் வயதானவரோடு கொண்ட காதல் என்ற கான்செப்ட்டில்.
என்ன தப்பு? காதலுக்கு வயதில்லையே என வைரமுத்துவை ஆதரிப்பவர்கள் சொல்வதற்கு முன்னாடியே வைரமுத்துவே அந்த பாடலில்...
“ஆணும் பெண்ணும் சேர்வது.. ஆசைப்போக்கில் நேர்வது..
அறமிருக்கும் வாழ்விலே முரண் இருக்கும் என்பதால்..
முரண் இருக்கும் வாழ்விலே
அறம் இருக்கும் இல்லையா?” என்று
சொல்லிவிடுகிறார்.
அழகியலோடு இருக்கும் காதல் உண்டு, மறுப்பதற்கில்லை... ஆனால், வயது வித்தியாசம் குறைந்த பட்சம் “முதல் மரியாதை” படம் போல் இருந்திருந்தால்..! ஆனால் பள்ளிக்கூட சிறு பெண், கிழவர் மேல் காதல் கொள்ளுவதை எல்லாம் காதலில் சேர்த்துக்கொள்ள முடியாது. நிஜத்தில் நடந்தால், கிழவனை தூக்கி போக்சோ சட்டத்தின் கீழ் உள்ளே போட்டு நாலு மிறி ஏறி மிறிப்பார்கள். நிறைவேறாத எண்ணங்களை பாடல்களின் மூலம் வெளிப்படுத்தி திருப்தி பட்டுக்கொள்ளும் நம் கவிஞர் தான் தனது ஆசைகளை, தனது பாடல்கள் மூலம் வெளிப்படுத்தி கொண்டே இருக்கிறார். இந்த வியாதிக்கு குணமே இல்லையா? அந்தோ பரிதாபம்..! பள்ளிச் சிறுமிகளை கூட விட்டுவைக்காது, சில பள்ளி ஆசிரியர்களே காமுகர்களாக வலம் வரும் காலம் இது. இதுபோன்ற “சிறுப்பெண்கள் கிழவர்களிடம் கேட்கும் வாய் முத்தமும், ஆண்-பெண் சேர்வது” பற்றியும் பாடல்களை எழுதி இன்னும் கெடுப்பது தேவையா..? ஏற்கனவே 2 வயது பெண் குழந்தையை கூட விடாது வெறிப்பிடித்தவர்கள் இருக்கும் இந்த புரையோடிய சமூகத்திற்கு, நல்ல பாடல்களை கொடுக்க பாரதியார் அளவுக்கு திறமை இல்லாவிட்டாலும்... தயவு செய்து கொஞ்சம் சமூக அக்கறையுடன் பாடல்களை எழுதுங்கள்.
கேரள அர்சின் மிக உயரிய ‘ஓஎன்வி’ விருதுக்கு வைரமுத்து தேர்ந்தெடுக்கப்பட்டதாக செய்தி வெளியானது.
இது தொடர்பாக ஸ்டாலினை போய் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார் கவிஞர். இலக்கியத்திற்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ஞானபீட விருது பெற்ற கேரள இலக்கியவாதியும், தேசிய விருது பெற்ற பாடலாசிரியருமான ஓ.என்.வி. குறுப் பெயரில் அவரது இறப்பிற்கு பின் 2017 ஆம் ஆண்டு முதல் மிக சிறந்த இலக்கியவாதிகளுக்கு இந்த விருதும், 3 லட்சம் பணமும் வழங்கப்படுகிறது. ஆனால், மலையாளிகளுக்கு வழங்கப்படும் விருதுக்கு, எப்படி வைரமுத்துவை தேர்ந்தெடுத்தீர்கள் என்றும்... மேலும் பல சர்ச்சைகள்... பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய வைரமுத்துவுக்கு இந்த விருதை கொடுக்க கூடாது என்று கேரளாவிலேயே எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது விருது வழங்கும் கமிட்டி இந்த முடிவை மறுபரிசீலனை செய்வதாக கூறியுள்ளது. கவிஞருக்கு மேலும் ஒரு அடியாக இது விழுந்துள்ளது.

Leave a comment
Upload