கொரோனா முதல் அலை, நீலகிரி மக்களுக்கு எந்த தொந்தரவையும் கொடுக்கவில்லை. முளையிலே கிள்ளி போடுவது போல, மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்வியா எடுத்த நடவடிக்கை கொரோனா தொற்றின் தாக்கம் மிக குறைவாக இருந்தது...

கடந்த செப்டம்பர் மாதம் தளர்வுகள் அறிவித்தபோது... வெளியூர்களுக்கு சென்று வந்தவர்கள், தொற்றுடன் வந்து, தொற்றை பரப்பியது தான் காரணம் என்று பரவலாக பேசப்பட்டுவந்தது. அதிலும் ஒரு சில இடங்களில் தொற்று ஏற்பட்டவுடன் சிகிச்சைக்கு அழைத்து சென்று தொற்றில் இருந்து காப்பாற்றி வந்தனர். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கட்டுக்குள் தான் இருந்து வந்தது தொற்று.

சுற்றுலாக்களின் வருகையால் தொற்று ஏற்படவில்லை என்பது தான் ஆறுதலான விஷயம். இருந்தாலும்... சுற்றுலாக்களுக்கு தமிழக அரசே தடை விதித்து, சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு விட்டன. இதனால் சுற்றுலாக்களை நம்பி வியாபாரம் செய்பவர்கள்...

விடுதிகள், ஹோட்டல்கள் மற்றும் டூரிஸ்ட் டாக்ஸி ஓட்டுனர்களுக்கு வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுவிட்டது. சுற்றுலாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் குதித்த வியாபாரிகளுக்கு, அரசால் உதவி செய்ய முடியவில்லை. காரணம்... கொரோனா தொற்று அதிகமாகி கொண்டிருக்கிறது என்ற வருத்தமான விஷயம்.

மாவட்ட கலெக்டர், வாழ்வாதாரம் இழந்த வியாபாரிகள் மற்றும் சவர தொழிலாளிகளுக்கு உணவு, காய்கறி பொருள்களை வழங்கி ஆறுதல் படுத்தினார்...

இந்த கொரோனா தொற்று காலத்தில் தேர்தல் நடத்தியது தான் ஒரு பெரிய தவறான விஷயம். தேர்தல் பரப்புரை சமயத்தில் கொரோனா கட்டுப்பாடுகள், காற்றில் பறக்கவிட்டு எந்த சமூக இடைவெளியும் இல்லாமல் தேர்தல் பிரச்சாரம் நடந்ததின் விளைவு, இன்று கோவையில் அதிகமான தொற்றும், மரணங்களும் அதிகரித்துள்ளன... அதே போல நீலகிரியில், கூடலூர், குன்னூரில் அதிகமான தொற்று ஏற்பட்டுள்ளது.

வெளியூர் சென்று வந்தவர்களால் தான் குன்னூரில் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று கூறுகிறார் ஒரு பத்திரிகை நண்பர். அதிலும் குன்னூரில்.. அதிக மக்கள் நெருக்கடியாக வாழ்வதும் ஒரு காரணம். ஊரடங்கு ஒரு நல்ல பலனை கொடுக்கும் என்கிறார். அதே சமயம்... மக்களுக்கு கொடுக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு உள்ளது. அதை அரசு சரிசெய்ய வேண்டும் என்கின்றனர்.
ஊட்டியில் தொற்று சற்று குறைவாகத்தான் பாதித்துள்ளது. இங்கும் நெருக்கடியான குடியிருப்பு பகுதிகளில் தொற்று அதிகம் ஏற்பட்டுள்ளது. வெளியூர் சென்று வந்தவர்களால் தான் தொற்று ஏற்பட்டுள்ளது... கடந்த வருடம், கிராமங்களில் தொற்று பரவியது. இந்த இரண்டாவது அலையில் நகரங்களில் பரவுகிறது.

முக்கியமாக திருமணம், இறப்பு நிகழ்வுகளில் கலந்து கொண்டது தான் தொற்றுக்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
கூடலூரில் அதிகமாக தொற்று மற்றும் இறப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு பொது மக்கள் எந்த கட்டுப்பாட்டையும் பின்பற்றுவது இல்லை என்று கூறுகிறார்கள். மேலும் கேரளா எல்லையில் கூடலூர் இருப்பதால், அங்கு சென்று வருபவர்களால் தான் தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் கூறுகிறார்கள்.

கூடலூர் எம்.எல்.ஏ. பொன் ஜெயசீலன் நம்மிடம் பேசும் போது...
“என் தொகுதியான கூடலூர் பகுதியில், கொரோனா பாதிப்பு சற்று அதிகமாக தான் இருக்கிறது. கடந்த லாக் டவுன் சமயத்தில் காலை ஆறு மணிமுதல் பத்து மணிவரை கடைகள் திறந்து இருந்ததால், மக்கள் கூட்டமாக வந்ததின் விளைவு தான் இந்த தொற்றின் அதிகரிப்பு. நான் முழு லாக் டவுன் தான் வேண்டும் என்று கூறிவருகிறேன். அது போல... அரசு, இந்த எட்டு நாளைக்கு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. அடுத்த 15 நாட்களுக்கு, மீண்டும் கண்டிப்பான ஊரடங்கை அறிவித்து செயல்பட்டால்தான், இந்தத் தொற்றிலிருந்து நாம் மீண்டு வர முடியும். கடந்த ஞாயிற்றுக்கிழமை முழு தளர்வை அறிவித்து, அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு, போக்குவரத்தும் திறந்து விட்டத்தின் விளைவு அளவுக்குமீறி மக்கள் கூட்டம் சேர்ந்ததால், தொற்றின் தாக்கம் அதிகமாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அந்தத் தாக்கம் அதிகமாகி மறைந்து போகவேண்டும் என்றால்... அவசியம் முழு ஊரடங்கு வேண்டும். வீட்டில் இருந்து யாரும் வெளியே வராமல் பார்த்து கொள்ள வேண்டியது காட்டாயம்.

தற்போது கூடலூர் பகுதியில், தனியார் தேயிலை தோட்டங்களில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் பத்து பேர் ஒன்றாக சேர்ந்து இலைகளை பறித்து கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது... ஏதோ பெயரளவில் மூன்று நாள் விடுமுறை அறிவித்து விட்டு, தற்போது வழக்கம்போல் இயங்கி கொண்டிருப்பதால், கொரோனா தொற்று அதிகரிக்க தான் வாய்ப்பு. இதைவிட கொடுமை... அரசு நிறுவனமான டான் டி எஸ்ட்டேட்டில், வழக்கம்போல முழு நேர வேலை நடப்பது தான் வேதனையான ஒன்று. அங்கு அதிகம் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. இது குறித்து ஆர்.டி.ஓ மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பேசியுள்ளேன். இதை விட கொடுமை... தேவர் சோலை எஸ்டேட்டில், வேலையும் வாங்கி கொண்டு கடந்த இரண்டு மாதமாக சம்பளமும் தரவில்லை. இங்கு நான் நேரடியாக சென்று

தொழிலாளிகளுடனும், நிர்வாகத்தினருடன் பேசி நிலுவை தொகையை பெற்று கொடுத்துவிட்டு தான் வந்தேன்.

பின்னர் தேவன் எஸ்டேட் பகுதி மக்களை சந்தித்து, கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கூறி.. தேவர் சோலை, கன்னடியர் பாடி, நாடுகாணி பகுதியில் ஆய்வை மேற்கொண்டு வந்தேன். மக்களின் ஒத்துழைப்பு வேண்டும்... ரேஷன் கடைக்கு வருகிறேன் என்று கூறி வருவது சரியில்லை.


இப்படி இருந்தால் எப்படி கொரோனவை கட்டுக்குள் கொண்டு வருவது... மக்களும் வீட்டினுள் கொஞ்ச நாள் இருக்கத்தான் வேண்டும். சரியாக அரசின் நெறிமுறைகளை கடைபிடித்தால், கொரோனா என்ற தொடர் சங்கிலியை உடைத்து விடலாம்” என்று முடித்தார்.

நீலகிரி மாவட்டம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்வியா தினமும் அதிரடி விசிட் களை மேற்கொள்கிறார். அலுவலகத்திலிருந்து திடீர் என்று நேரடி கட்டுப்பாட்டு இடங்களுக்கு சர்ப்ரைஸ் விசிட் மேற்கொள்கிறார். அவரின் திடீர் விசிட் தெரியாமல், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் கூட கலெக்டரின் காரை தேடி பின் தொடர்கிறார்...

அதே போல நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களை நிறுத்தி, யார் அனுமதி கொடுத்தார்கள் என்று கேட்டு வாகனத்தில் ஒட்டப்பட்டுள்ள போலி ஸ்டிக்கர்களை ஆட்சியர் எடுத்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பழங்குடியினரின் கிராமங்களுதிலுக்குச் சென்ற கலெக்டர், தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை நடத்தி, கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்றிக்கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
எங்கெல்லாம் மக்கள் கூட்டமாக நிற்கிறார்களோ, அங்கு கலெக்டர் சென்று சத்தமும் போட்டு அறிவுரை கூறி வருகிறார். ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி மார்கெட்டுகளுக்கும், பஸ் நிலையங்களுக்கும் நேரில் சென்று மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் பல முறை அறிவுரை கூறிவருகிறார். இந்த முக்கிய நகரங்கள் முழுவதும் மாவட்ட ஆட்சியரின் கொரோனா விழிப்புணர்வு மற்றும் அறிவுரை குரல் ஒலித்து கொண்டே இருக்கிறது.

அதே போல மாவட்ட தலைமை மருத்துவமனையில் 6 K L கொள்ளளவு ஆக்சிஜன் டேங்கை நிறுவி, அதன் மூலம் தடையில்லா ஆக்சிஜன் வழங்க பட்டுள்ளது. இதை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் பார்த்து, மாவட்ட ஆட்சியரை பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் ராமச்சந்திரனிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பற்றி கேட்டபோது... “மாவட்ட நிர்வாகம் மிக சிறப்பாக அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் செய்து வருகின்றனர். அவர்களுடன் இணைந்து நானும் ஆய்வு செய்து வருகிறேன். மக்கள் இந்த ஊரடங்கு காலத்தில் வெளியில் வருவதை தவிர்க்கவேண்டும்.

மேலும்... முகக்கவசம் அணிய வேண்டும். மக்களின் தொடர் சங்கிலியை அறுத்துவிடுவது தான், கொரோனா தொற்றில் இருந்து நம்மை காப்பாற்றி கொள்ளும் ஒரு வழி. அதே போல தடுப்பு ஊசியை அனைவரும் போட்டுக்கொள்வது மிகவும் அவசியம். கொரோனாவிலிருந்து நம்மை தற்காத்து கொள்ளும் ஒரு கேடயம். நம் அரசின் நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டியது நம் கடமை” என்று கூறினார்.
ஊட்டி நகராட்சி ஆணையர் சரஸ்வதி, மாவட்ட ஆட்சியருடன் ஆய்வுக்கு செல்வது மட்டுமில்லாமல்... தன் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு அறிவுரையும் கூறி வருகிறார்.

ஆணையர் சரஸ்வதியிடம் பேசினோம்... “தனிப்பட்ட வகையில் ஓவொருவரும் தங்களின் உயிரை மதித்து, பாதுகாப்பாக இருக்கும் காலம் இது. நீலகிரி மாவட்டத்தில் தொற்று குறைவாக தான் இருந்தது. தற்போது கூடலூர், குன்னூரில் அதிகமாக இருப்பது வருத்தம் அளிக்கிறது. அதே சமயம் நம் ஊட்டி நகராட்சியில் பாதிக்கப்பட்டுளோர் குறைவாக இருக்கிறார்கள்.

பொது மக்கள் வெளியே வராமல் இருந்தாலே போதும், தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். நாங்கள் சொல்லுவதை கேட்டாலே, நோய் குறைய வாய்ப்புகள் உள்ளன. எல்லா கடைகளும் அடைத்துள்ள நிலையில், அந்தந்த பகுதிகளுக்கு தோட்டக்கலை சார்பாக காய்கறிகள் வரும்போது வீட்டில் இருந்து ஒரு நபர் முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் வந்து வாங்கி செல்வது நல்லது. தனி நபர்கள் ஒவொருவரும் கட்டுப்பாடுடன் இருந்தாலே, கொரோனவை கட்டுப்படுத்திவிடலாம். தற்போது அரசு துறை பணியாளர்கள்,

காவல்துறையினர் என்று தொற்று ஏற்பட்டுள்ளது. காரணம் அவர்களின் குடும்பத்தார் யாருக்காவது தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும். மருத்துவமனையில் கூட சிலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதனால்தான் மாவட்ட ஆட்சியர், நோயாளிகளுக்கு உதவி செய்ய அட்டெண்டெர்ஸ் யாரும் வர வேண்டாம் என்ற உத்தரவையும் கொடுத்துள்ளார். வரக்கூடிய நாட்களில் முழு ஊரடங்கு தொடரும்பட்சத்தில் வீட்டை விட்டு யாரும் வெளியே வந்து சுற்ற வேண்டாம்.

கட்டுப்பாட்டுடன் இருந்தால் தொற்றின் வீரியம் குறைய வாய்ப்புகள் உள்ளது. முன்கள பணியாளர்களின் கஷ்டத்தை உணர்ந்து, மக்கள் முழு ஒத்துழைப்பை கொடுக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
ஊட்டி வியாபாரிகள் சங்க செயலர் ரவிகுமாரை தொடர்பு கொண்டு பேசினோம்...

“மிகவும் கடினமான காலம். இதை கடப்பது நம் கையில் தான் இருக்கிறது. தெரிந்த பல அன்பான முகங்கள் மறைந்து விட்டது தான் வேதனையான விஷயம். பந்தலூர், கூடலூர் பகுதியில் அதிகமான இறப்புகள். ஊட்டி மருத்துவமனைக்கு கூட்டி வந்து அட்மிட் செய்து சிகிச்சை பெறும்போது, பலர் இறந்து விடுவது வருத்தமான விஷயம். மாவட்ட கலெக்டர் மற்றும் நிர்வாகம், நகராட்சி சுகாதார துறை மிக சிறப்பாக கொரோனா தடுப்பு பணியை மேற்கொண்டு தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தது. தற்போது தொற்று பரவி வருவதால் தான் ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. மக்கள் ஒத்துழைப்பை கட்டாயம் கொடுக்கவேண்டும். அரசும், நாங்களும் காய் கறிகளை தனி வாகனங்கள் மூலம் எடுத்து சென்று கொடுத்து வருகிறோம். நானே 68 குடும்பகங்களுக்கு, ஒரு மாதத்திற்கான அனைத்து பொருள்களையும் கொடுத்துள்ளேன். முதியோர் இல்லம், அனாதை ஆஸ்ரமங்கள் என்று உணவு பொருள்களை வழங்கி வருகிறோம்.

நகரில் உள்ள வெலிங்டன் முதியோர் இல்லத்தில் இருந்து அழைப்பு வந்தது, அவர்களுக்கும் உதவி பொருள்களை கொடுத்துளோம். தடுப்பு ஊசியும், ஊரடங்கும் தான் இந்த கொரோனா சங்கிலியை அறுக்கும் ஆயுதம். அதனால் மக்கள் முழு ஒத்துழைப்பை கொடுக்கவேண்டும். ரேஷன் கடைக்கு போகிறேன், மருந்து கடைக்கு போகிறேன் என்று சுற்றுவதையும் கூட்டத்தையும் தவிர்க்கவேண்டும்... தடுக்க வேண்டும்... அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பை கொடுத்து, கொரோனாவில் இருந்து மீண்டு வருவோம்” என்று கூறினார்.
ஊட்டி யுவ ஜெயின் சங்கம், இந்த ஊரடங்கு நேரத்தில்.. கட்டுப்பாடு பகுதிகளில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு, உணவு மற்றும் காய்கறி பொருட்களை வழங்கி வருகின்றனர். இச்சங்கத்தின்

செயலர் அபிஷேக்கிடம் கேட்டபொழுது... “நாங்கள் பதினோரு பேர் இணைந்து எங்கள் சங்கத்தின் மூலம் உதவிகளை செய்து வருகிறோம்.

கடந்த ஒன்பது நாட்களாக 325 உணவு பொட்டலங்களை கொடுத்துளோம். மற்றும் நகரில் பணிபுரியும் காவல் துறை நண்பர்களுக்கு, காலையில் லெமன் ஜூசும், மாலையில் டி யும் கொடுக்கிறோம். ஒரு நாளைக்கு 120 கப் கொடுத்துளோம். காய்கறி, உணவு பொருட்கள் என்று 200 பைகள் கட்டுப்பாடு பகுதிகளுக்கு சென்று வழங்கியுள்ளோம்.

100 PPE KIT மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளோம். இந்த ஊரடங்கு முடியும் வரை எங்களின் இந்தப் பணி தொடரும் என்று கூறினார்.
மருத்துவமனைகளில் இறக்கும் கொரோனா நோயாளிகளின் உடல்களை எடுத்து சென்று அடக்கம் செய்யும் பணியை, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் செய்து வருகின்றனர். இந்த அமைப்பின் செயலர் சமது அவர்களிடம் பேசினோம்...

“எங்கள் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் இருபது பேர் கொண்ட குழு, இந்த இறுதி சடங்கு பணியை செய்து வருகின்றனர். கூடலூர், குன்னூரில் தனி தனி குழு உண்டு.
உடல்களை அடக்கம் செய்யவும், எரியூட்டவும் வசதியுள்ளவர்களிடம் அதற்கான செலவை வாங்கிவிடுவோம். முடியாதவர்களுக்கு அந்தச் செலவை நாங்களே ஏற்றுக் கொள்கிறோம். அதற்கு சில ஸ்பான்சர்களும் உண்டு...

எங்க இஸ்லாமியர்களின் உடல்களை எங்கள் கபர்ஸ்தானத்தில் அடக்கம் செய்து விடுகிறோம். இந்துக்களின் உடல்களை, அவர்களின் முறைப்படி அடக்கம் அல்லது எரியூட்டிவிடுகிறோம். அதே சமயம்... இறக்கும் கிறிஸ்தவர்களின் உடல்களுக்கு தான் இடம் இல்லை என்று வருத்தத்துடன் கூறினார். அவர்களின் உடல்களை எரியூட்டி, சாம்பலை அவர்களிடம் கொடுத்து வருவது மிகுந்த வேதனையை அளிக்கிறது. காந்தல் கல்லறையில் இடம் இருந்தும், அங்கு கொரோனா நோயாளிகளின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்காதது ஏன் என்று தான் புரியவில்லை” என்கிறார் சமது.

ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் கூறும் போது... கொரோனா தொற்று நீலகிரியை பொறுத்தமட்டில் மிக குறைவாக இருந்தது. தற்போது சற்று அதிகமாகியிருப்பது கவலை அளிக்கிறது.

நம்ம கலெக்டர் இன்னசன்ட் திவ்வியா தலைமையில், அதிகாரிகள் சிறப்பான பணிகளை தொய்வின்றி தினமும் செய்து வருகின்றனர். இந்த கண்டிப்பான ஊரடங்கால், கட்டாயம் தொற்று குறையும் என்பதில் நம்பிக்கை உள்ளது. மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்” என்று கூறினார்.
கொரோனா இரண்டாவது அலை தான் நீலகிரியையும் பதம் பார்த்துள்ளது. தினமும் ஆம்புலன்ஸின் சப்தங்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. இதில் 108 அவசர ஆம்புலன்சுகள் இருந்தாலும், நீலகிரி முழுவதும் தனியார் ஆம்புலன்சுகள் இயக்கப்படுகின்றன. இவர்களின் பணி இந்தக் கொரோனா காலத்தில் மிகவும் உதவிகரமாக இருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
தனியார் ஆம்புலன்ஸ் சேவையின் ஒருங்கிணைப்பாளர் ரிஸ்வான் நம்மிடம் கூறும்போது...

“மாவட்டத்தில் மொத்தம் 36 தனியார் ஆம்புலன்ஸ்கள் செயல் படுகின்றன. எந்த அவசர சிகிச்சைக்கும் நாங்கள் பறந்து வந்து விடுவோம். கோவைக்கும் - நீலகிரிக்கும் எங்களுடைய அவசர பயணம் தொடர்கிறது. இந்தக் கொரோனா காலத்தில் எங்களின் பணி தீவீரமாக இருந்தது. தற்போது கொரோனா நோயாளிகளை அழைத்து வர 108 ஆம்புலன்ஸ் முழுமையாக உபியோகிப்பதால், எங்களை மற்ற அவசர சிகிச்சைக்கு நோயாளிகளை லோக்கல் மருத்துவமனைக்கும், கோவை மருத்துவமனைக்கும் அழைத்து செல்லுமாறு நம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

அதனால் எங்கள் பணி துரிதமாக உள்ளது. அரசு மருத்துவமனையில் இருந்து கோவைக்கு நோயாளிகளை ஷிபிட் செய்ய எங்களை தான் அழைக்கிறார்கள். சில அவசர காலங்களில் இறந்த உடல்களை கூட எடுத்து சென்று வருகிறோம். தினமும் எங்களின் ஆம்புலன்சுகளை சர்வீஸ் செய்து விடுகிறோம். இந்த கொரோனா தொற்று குறைந்தால் தான் எங்களுக்கு ஓய்வு” என்கிறார்.
குன்னூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு, ரூபாய் ஒரு லட்சத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் இரவு பகலாக ஓய்வின்றி உழைத்து கொண்டிருக்கிறார்கள். விரைவில் இந்த கொரோனா தாக்கம் குறைந்தால்தான், நாம் வணங்கும் இறைவனுக்கு பூமாலைகளை செலுத்த முடியும்!.....

Leave a comment
Upload