
இப்போ ஆன்லைன் கிளாஸ் நிறைய நடக்குது இல்ல... அதுபற்றி போய், பார்த்து எழுதுங்க... என்று மிஸ்டர் ரீல் டேபிளில் ஆசிரியர் துண்டு சீட்டு எழுதி வைத்திருந்தார்.
சரி... என்று வேண்டப்பட்ட மாணவியை தொடர்புகொண்டு, ஆன்லைன் கிளாஸ் எப்பம்மா என்று மிஸ்டர் ரீல் கேட்க... ஆவேசமான அந்த மாணவி... எதுக்கு கேட்கறீங்க..? எங்க அம்மா கேட்க சொன்னாங்களா..? நான் ஆன்லைன் கிளாஸ் ஒழுங்கா அட்டென்ட் பண்ணி, போன மாசம் வெச்ச டெஸ்ட்ல பாஸ்கூட ஆகிட்டேன். நீ பாசானா... நீ கேட்ட அந்த புது செல்போன் வாங்கித் தரேன்னு, அதை வாங்கித் தராமல் ஏமாத்துறாங்க எங்க அம்மா. முதல்ல அதை வாங்கித் தரச் சொல்லுங்க. வாக்கு சுத்தம் முக்கியம். சொன்னா செய்யணும்... இல்லை சொல்ல கூடாது என்று பொரிந்து தள்ள...
உடனே மிஸ்டர் ரீல்... கோச்சிக்காத பாப்பா... “நீ ஆன்லைன் கிளாஸ் எப்போனு சொல்லு.. நான் வந்து சும்மா வேடிக்கை பார்க்கிறேன்” என்று சொல்ல... அதற்கு அந்த மாணவி... “நான் ஒன்னும் பாப்பா இல்ல... போன மாதம் சட்டசபைத் தேர்தலில் ஓட்டு போட்டேன். ஓட்டுக்கு 500 ரூபாய் வாங்கி, அந்தப் பணத்தில் ஆன்லைனில் ஒரு செருப்பு வாங்கினேன் என்றவர், கூடவே... ஆவேசமாக நீங்க எதுக்கு என் ஆன்லைன் கிளாசை பார்க்கணும். எங்க அம்மாவோட உளவுத்துறை நீங்கதானா” என்று சண்டைக்கு இழுக்க... பயந்து போன மிஸ்டர் ரீல்... இந்த அம்மாக்களால் காரியமே கெட்டுவிடும் என்று பயந்து, அந்த மாணவியிடம்... “பவ்யமாக, அதெல்லாம் இல்லம்மா... ஆன்லைன் கிளாஸ் பற்றி ஒரு கட்டுரை எழுதணும்.. அதுக்குத்தான்” என்று மிஸ்டர் ரீல் கெஞ்சல் குரலில் சொல்ல... அந்த மாணவி கொஞ்சம் இரக்கப்பட்டு... “ஓ.. அப்படியா சங்கதி, வாங்க.. வாங்க என்று இ-பாஸ் தர...” மிஸ்டர் ரீல் மாணவியின் வீட்டுக்கு போனபோது... வாங்க அங்கிள்... இன்னும் ஐந்து நிமிடம் இருக்கு. மேக்கப் செய்து, ரெடியாகி உட்கார... அடுத்த சில நிமிடங்களில் ஆன்லைன் கிளாஸ் ஆரம்பமானது.
ஆசிரியர் உஷாரா சாமி மாதிரி தெரிந்தார். கோட் சூட் எல்லாம் அணிந்து, அதன் மேல் ஒரு போர்வை சுற்றி.. தலையில் ஹெல்மெட், அதன்மேல் முக கவசம் என்று சந்திரனுக்குப் போகும் விஞ்ஞானி லெவலில் இருந்தவர்... கண்ணை மூடி கைகூப்பியபடியே வணக்கத்துக்குரிய மாணவிகளே.. நீங்கள்தான் எனக்கு படியளக்கும் பெருமாள். நான், என் மனைவி, என் மகன், மகள், அம்மா, அப்பா மற்றும் வேலைக்காரி எல்லோரும் உங்கள் உப்பை சாப்பிட்டு தான் வளர்கிறோம். எங்கள் மகாலட்சுமி நீங்கள்தான். எங்கள் வீட்டில் குளியலறை கிடையாது. எனவே குளியல் அறை காட்சிகளுக்கு வாய்ப்பே கிடையாது என்று உங்களுக்கு உத்தரவாதமாக நான் சொல்லுகிறேன். நீங்கள் பாடத்தை கவனித்தாலும் சரி... கவனிக்காமல் விட்டாலும் சரி... நான் கண்டிப்பாக, கட்டாயமாக கண்டு கொள்ளவே மாட்டேன். நானெல்லாம் எடப்பாடியின் முன்னோடி... என் கொள்கையே ஆல் பாஸ் என்பது தான். ஒரு விஷயத்தை நீங்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். தேர்வு எழுதினால் தான் மார்க் போட முடியும். மார்க் போட்டால் தான், பாஸ் போடமுடியும். எனவே தயவு செய்து உங்களை காலில் விழுந்து கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் தேர்வு எழுதுங்கள். தயவுசெய்து எழுதுங்கள்... சயின்ஸ் கேள்விக்கு இலக்கணம் எழுதினாலும், வரலாறு கேள்விக்கு பௌதிக பார்முலா எழுதியிருந்தாலும், கணித கேள்விக்கு ஒன்னாம் கிளாஸ் வாய்ப்பாடு எழுதி இருந்தாலும், நீங்கள் பாஸ் தான். ஆனால் ஏதாவது எழுதி இருக்க வேண்டும், அது மட்டும் முக்கியம். எனவே மீண்டும் உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்... எழுதுங்கள், ஏதாவது எழுதுங்கள் என்று.
உங்கள் பெற்றோர்களின் வாட்ஸ் அப்புக்கு புகார் அனுப்பும், அல்ப புத்தி ஆசிரியர் நானில்லை. உங்கள் பெற்றோரின் தொடர்பு எண்ணை நான் என் செல்பேசியில் டெலிட் செய்து விட்டேன். இது சத்தியமான உண்மை தெய்வமே. நான் தெய்வத்திடம் பொய் பேச மாட்டேன். பீஸ் கட்ட நினைவு படுத்த சொல்லி மேனேஜ்மென்ட் என்னிடம் சொல்லும்போது, அதற்காக மட்டும் துண்டு சீட்டில் எழுதி பத்திரமாக வைத்திருக்கும் உங்கள் மம்மியின் செல்பேசியில்... வணக்கம் மேடம், இந்த மாதம் பீஸ் என்று ஆரம்பித்தாலே... உங்கள் மம்மி, தெய்வம்.. அதுக்கு தான்யா பேங்க் க்யூல நிக்கிறேன் என்று மரியாதையாக சொல்லும் அந்த தெய்வம். எனவே தெய்வமே.. எனக்கு இன்னும் இரண்டு வருடம் தான் சர்வீஸ் இருக்கிறது. நான் உண்டு, ஆன்லைன் கிளாஸ் உண்டு என்று மிச்ச செச்சத்தை கழித்து விடுகிறேன் தெய்வமே. என் ஆண்டவனே... அதனால் என்னை, எந்தச் சூழ்நிலையிலும் போக்சோ சட்டத்தில் பிடித்துக் கொடுத்து விடாதீர்கள். ஆண்டவனே.. நான் அவ்வளவு பெரிய ஆள் எல்லாம் இல்லை தெய்வமே என்று சொல்லி சாஷ்டாங்கமாக நான்கு முறை விழுந்து வணங்கி, நின்று கைகூப்பி குலுங்கி குலுங்கி அழுதார். அத்துடன் ஆன்லைன் கிளாஸ் முடிந்தது. அந்த மாணவியிடம்... “இதுதான் ஆன்லைன் கிளாசா” என்று கேட்க...
அந்த மாணவி... “ஒரு வாரமாக சார், இப்படித்தான் கிளாஸ் எடுக்கிறார்” என்றார். மிஸ்டர் ரீல் அந்த ஆசிரியரை நினைத்து ஒரு மாதிரி ஃபீல் ஆகி எதுவும் பேசாமல் வந்துவிட்டார்.

Leave a comment
Upload