
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்திலிருந்து சுமார் 9 கி.மீ தொலைவில் காவிரி தென்கரையில் உள்ள 127 சிவ தலங்களில் 65-வது தலம் திருநறையூர் சித்தநாதீஸ்வரர் கோயிலில் இருந்து, 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மகாவிஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 108 திவ்ய தேசக் கோயில்களில் ஒன்றான புகழ்பெற்ற நாச்சியார் கோவில், ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் (திருநறையூர் நம்பி கோயில்) எழுந்தருளியுள்ள மகாலட்சுமி தாயாருக்கு (வஞ்சுளவல்லி தாயார்) ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தீபாவளி சீர் வழங்கும் வைபவம் மிகவும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.
ஸ்தல புராணம்:
மேதாவி மகரிஷி சிவபெருமானிடம், ``மகாலட்சுமியே எனக்கு மகளாக வந்து பிறக்க வேண்டும்’’ என்று வேண்டி கடும் தவம் புரிந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, கோயில் பகுதிக்கு அருகில் இருந்த புனிதமான 'வஞ்சுள' (பவழமல்லி) மரத்தின் அடியில், மகாலட்சுமி தாயார் ஒரு குழந்தையாகத் தோன்றினாள். முனிவர் அவளை அன்புடன் வளர்த்து, 'வஞ்சுளவல்லி' என்று பெயரிட்டார். வஞ்சுளவல்லி திருமணப் பருவத்தை அடைந்ததும், தன் மகளுக்கு மணம் செய்து வைக்க வேண்டும் என்று சிவபெருமானிடம் மேதாவி மகரிஷி வேண்டினார். இதை ஏற்று பார்வதி தேவி சமேதராகக் காட்சி தந்து ஸ்ரீநிவாச பெருமாளுக்கு மகாலட்சுமியைக் கன்னிகாதானம் செய்து வைத்ததாக கூறப்படுகின்றது. சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் முன்னிலையில் ஸ்ரீநிவாச பெருமாள் (திருநறையூர் நம்பி) - வஞ்சுளவல்லி தாயாரின் திருக்கல்யாணம் நடைபெற்றதால், இங்குப் பெருமாள் சந்நிதிக்கு அருகில் பிரம்மபுரீஸ்வரர் (சிவன்) சந்நிதியும் அமைந்துள்ளது. சைவம் மற்றும் வைணவ ஒற்றுமைக்கு இத்தலம் மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.

இன்றும் இங்குப் பெருமாளை விட வஞ்சுளவல்லி தாயாருக்கே அனைத்து முதன்மைகளும் வழங்கப்படுகின்றன. இங்குத் தாயாரை மையப்படுத்தியே கருவறையும் அமைக்கப்பட்டிருக்கிறது. பெருமாளை விடச் சற்று முன்புறம் நின்ற கோலத்தில் இருக்கும் தாயார் தரிசனம் விசேஷமானது. வீதியுலா செல்லும் போதும் இவரே முன்பு செல்ல அதற்குப் பின்பே பெருமாள் எழுந்தருளுகிறார். இவருக்கு முதலில் அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்குள்ள உற்சவ தாயார் கையில் கிளியை ஏந்தி, இடுப்பில் சாவிக்கொத்து வைத்தபடி அருள்பாலிக்கிறாள். இவள்தான் அனைத்தையும் நிர்வாகம் செய்கிறாள் என்பதை உணர்த்துவதற்காக இவ்வாறு வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் தான் இந்த கோயில் பெருமாள் பெயரால் அழைக்கப்படாமல், தாயாரின் பெயரால் நாச்சியார்கோவில் என்று அழைக்கப்படுகின்றது.
தீபாவளி சீர் வைபவம்:

மேதாவி முனிவர் சிவபெருமானின் அருளால் மகாலட்சுமி தாயாரை மகளாகப் பெற்றெடுத்ததால், ஆன்மீக ரீதியாக சித்தநாதேஸ்வரர் கோயில் (திருநறையூர் சித்தீச்சரம்) மகாலட்சுமி தாயாரின் பிறந்த வீடாகக் கருதப்படுகிறது. நமது இந்து தர்ம பாரம்பரிய வழக்கப்படி, திருமணமான பெண் தனது முதல் தீபாவளி (தலைத் தீபாவளி) மற்றும் ஒவ்வொரு முக்கிய பண்டிகைகளுக்கும் பிறந்த வீட்டிலிருந்து சீர் பெறுவது மரபாகும். அந்த உன்னதமான குடும்ப உறவுமுறை வழக்கத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளின் போது, சித்தநாதேஸ்வரர் கோயிலில் இருந்து பட்டுப் புடவைகள், வேஷ்டி துண்டு, பலகாரங்கள், பழங்கள், தேங்காய், தாம்பூலம் மற்றும் மங்களப் பொருட்கள் அடங்கிய "பிறந்த வீட்டுச் சீர்" வரிசைகள் மேளதாளத்துடன் சித்தநாதேஸ்வரர் கோயில் சிவாச்சாரியார்கள் மற்றும் பக்தர்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டு, அங்குள்ள வஞ்சுளவல்லி தாயாருக்கு விமரிசையாகச் சாத்தப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.

சீர் வழங்கும் இந்த வைபவம் சைவம் மற்றும் வைணவ ஒற்றுமைக்கு ஒரு மிகச்சிறந்த வரலாற்றுச் சான்றாக விளங்குகிறது. இதனைக் காணத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் நாச்சியார்கோவிலுக்கு வருகை தருகிறார்கள்.

Leave a comment
Upload