
சிவகாசி சீதாபதி சித்தப்பா, சாருவின் தலை தீபாவளிக்காகத் தன் மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் தீபாவளிக்கு முந்திய நாள் காலையில் ஆறு மணிக்குத் தன் அண்ணா நரசிம்மன் வீட்டு வாசலில் ஆட்டோவில் வந்து இறங்கினார்.
வருஷம் 1980. நவம்பர். இடம்: மயிலாப்பூர் கச்சேரி ரோடு.
குட்டையான காவிக் கரை போட்ட கதர் நாலு முழம் வேட்டி, செங்காவி நிற ஜிப்பா, குளிருக்காகக் காவிக் கலர் துண்டைத் தலப்பாக் கட்டி ரயில்வே ஸ்டேஷன் போர்ட்டர் ஜாடையில் இருந்தார்.
வீட்டு வாசலில் இந்தப் பக்கம் ஒரு பசு, அந்தப் பக்கம் ஒரு எருமை என்று மாடுகள் கட்டப்பட்டிருந்தன. இடையே ஆட்டோவை நிறுத்திய டிரைவர் கத்தினான். "சீக்கிரமா இறங்கு சார். எந்த மாடு என்னை முட்டும்னு தெரியல."
சித்தப்பா நாலு ரூபா ஐம்பது பைசா கொடுத்தார்.
ஆட்டோக்காரன் கடுப்பாகி, "எட்டு ரூபாய் கொடு சார்," என்றான்.
நிதானமாகச் சொன்னார் சித்தப்பா, "அதெல்லாம் முடியாது. இவ்வளவுதான் உனக்கு."
"எட்டு ரூபா குடுக்காட்டி நகர மாட்டேன்," என்றான் ஆட்டோக்காரன்.
"இன்னிக்கு உன்னை எருமை மாடோ இல்ல பசு மாடோ முட்டணும்னு விதி இருந்தா நான் என்ன பண்ண முடியும்?" என்று கூறி, அந்தப் பெரிய பட்டாசு சூட்கேஸைத் தலையில் வைத்துக்கொண்டு இறங்கினார். கூடவே மனைவியும் பிள்ளைகளும் மற்ற சாமான்களுடன் இறங்கினார்கள்.
ஆட்டோக்காரன் வெள்ளைக் கொடி காட்டி ஆறு ரூபாய்க்கு வந்தான். பிடிவாதமாக இருந்த சித்தப்பா கடைசியில் மனமிரங்கி அஞ்சு ரூபாய்க்குச் சம்மதித்தார்.
கைப்பையில் இருந்து, ஒரே ஒரு ஊசி பட்டாசு சரத்தைப் போனஸாக ஆட்டோ டிரைவரிடம், "ஒரிஜினல் சிவகாசி பட்டாசுப்பா. சந்தோஷமா வெடிச்சு ஜாம் ஜாம்னு தீபாவளி கொண்டாடு," என்று கொடுத்தார்.
பசங்களிடம் சொன்னார், "பாத்தியா மெட்ராஸ் ஆட்டோக்காரனை எப்படி சமாளிச்சேன்னு!"
வீட்டு வாசலில் நரசிம்மனும் மனைவி பானுவும் சித்தப்பா & கோ-வை வரவேற்றனர்.
உள்ளே வந்து பெட்டிகளை எல்லாம் வைத்தார்.
"சாரு எங்கே?" என்று கத்த, சாரு வந்தாள். கொண்டுவந்த பெரிய பழைய சூட்கேஸை நடு கூடத்தில் வைத்துப் பிரித்தார் சித்தப்பா.
உள்ளே முழுக்க அவியல் மாதிரி பட்டாசு வகைகள் பொங்கி வழிந்தன.
தன் இரண்டு பசங்களையும் கூப்பிட்டு, "டேய், எல்லா வெடியும் அழகாப் பிரியுங்கடா," என்றார் சித்தப்பா.
வெடிகள் பிரிந்தன.
பானு வாயைப் பிளந்து, "அம்மாடி, இவ்வளவு வெடியா?" என்றாள்.
"விலை தெரியுமா மன்னி? ஐம்பது ரூபாய்க்குள்ளதான். எல்லாம் ஆந்தை பிராண்டு. இதுவே மெட்ராஸ்ல ஐனூறு ரூபாய் ஆயிடும். எல்லாம் சிவகாசியில ஃபேக்டரியிலிருந்து நேரா வாங்கினது. இந்தப் ஃபேக்டரி ஓனரோட பையனுக்குத்தான் நம்ம சாருவைப் பார்த்தோம். நல்ல சிவப்பா அழகா இருந்தானே, ஞாபகம் இருக்கா?"
யாரும் ஒன்றும் சொல்லவில்லை.
"இவ்வளவு வெடியை யாரு சித்தப்பா வெடிப்பாங்க?" என்றாள் சாரு.
"எல்லாம் உன் வீட்டுக்காரருக்குத்தான்."
"சரி சித்தப்பா. அவர் பாவம், வடநாட்டிலேயே பிறந்து வளர்ந்தவர். அங்க தீபாவளிக்கு எல்லாம் எலைட் கிளாஸ்ல பட்டாசு வெடிப்பது இல்லையாம். இவர் வேற எப்பவும் படிப்பு தானாம்..." சாரு பேச்சில் பெருமை தொனித்தது.
"அப்ப இந்த பட்டாசு எல்லாம் பார்த்தா பயப்படுவார்ன்னு சொல்லு."
சாருவுக்கு ரோஷம் வந்துவிட்டது. "பழக்கம் இல்லை என்பதற்கும் பயத்துக்கும் வித்தியாசம் இல்லையா சித்தப்பா!" என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள்.
"ஏன்டா, அவ வாயைக் கிண்டற வந்த உடனே!" என்றார் அண்ணன் நரசிம்மன் சிரித்துக்கொண்டே.
"என்ன இருந்தாலும், ஆத்துல குதிச்சு நீந்துவது, பட்டாசு வெடிப்பது எல்லாம் நம் ஊரு வீர விளையாட்டு இல்லையா? டெல்லிக்காரங்க நம்ம விடக் கொஞ்சம் பயந்தாங்குள்ளிகள்தானே," என்று கூறிப் பெருமையுடன் நிமிர்ந்து நின்றார் சித்தப்பா.
சித்தப்பா சீதாபதியின் இந்த நீறு பூத்த நெருப்பு போன்ற கோபத்துக்குக் காரணம் உண்டு.
அவர் இப்போ கொண்டுவந்த பட்டாசு எல்லாம் உற்பத்தி செய்த ஃபேக்டரியின் சொந்தக்காரர் மகனான சார்டர்ட் அக்கவுண்டன்ட் செல்லப்பாவுக்கு, அண்ணன் நரசிம்மன் தன் பொண்ணு சாருவைக் கொடுக்கவில்லை என்று அவருக்கு ரொம்ப வருத்தம் உண்டு.
காரணம் சாருதான்; "எனக்கு உள்ளூர் மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம்" என்று சொல்லிவிட்டாள். சீதாபதி ரொம்ப அப்செட் ஆகிவிட்டார்.
ஆனாலும் டெல்லி வரனான பரதன் சாருவைப் பெண் பார்க்க வந்தபோது (ஆறு மாசம் முன்பு) சீதாபதியும் தான் இருந்தார்.
பரதன் அழகாக, உயரமாக, பெல்பாட்டம் ஜீன்ஸ், கோடு போட்ட டி-ஷர்ட் அணிந்து வந்திருந்தான். நல்ல படிப்பு. சாரு பார்த்தவுடனேயே மயங்கிவிட்டாள்.
சீதாபதி பரதனை விசாரணைக் கைதிபோல் குறுக்குக் கேள்வி கேட்க ஆரம்பித்தார்.
வாழ்நாளிலேயே ஒரே ஒரு க்ஷேத்ராடனத்துக்காக அவர் மனைவியுடன் சென்ற போது டெல்லியை எட்டிப்பார்த்திருந்தார். அந்த ஞானத்தை வைத்துப் பரதனைக் கேள்வி கேட்டார்.
"நீங்க டெல்லியில எங்க இருக்கீங்க? கன்னாட் பிளேசா? அங்க அந்த அஜ்மல் கான் ரோடு போயிருக்கேளோ? எவ்வளவு கடை? ரொம்ப கலகலப்பா இருக்கும். சான்ஸ் கிடைச்சா போய் பாருங்கோ," என்றார்.
"அஜ்மல் கான் ரோடு பக்கத்துலதான் நான் பிறந்தேன். அங்கதான் வளர்ந்தேன். ஆனா, அது கரோல் பாக்ல இருக்கு; கன்னாட் பிளேஸ்ல இல்லையே," என்று பரதன் புன்னகையுடன் சாதாரணமாகச் சொல்ல, சீதாபதியின் ஈகோ பலூன் வெடித்துச் சுக்குநூறானது.
பரதன் - சாருவின் கல்யாணம் நிச்சயமாகி எத்திராஜ் கல்யாண மண்டபத்தில் நடந்து முடிந்துவிட்டது.
மூன்று நாள் ஊட்டிக்கு சாருவுடன் சென்று வந்த பரதன், உடனே தன்னுடைய அரசாங்க உத்தியோகத்துக்கு டெல்லிக்குப் சென்றுவிட்டான். அவன் அரசாங்கத்தில் ரொம்ப முக்கியமான வேலையில் இருப்பதாகச் சீதாபதிக்கு நரசிம்மன் சொன்னார். என்ன வேலை என்று அவரும் சொல்லலை, சீதாபதியும் கேட்கவில்லை.
குடும்பத்தின் மாப்பிள்ளை என்ற மரியாதை இருந்தாலும், சீதாபதிக்கு ஏதாவது ஒரு சின்ன விஷயத்திலாவது இந்தப் பரதனை மட்டம் தட்ட வேண்டும் என்று ஒரு குழந்தைத்தனமான ஈகோ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது.
தலை தீபாவளி சென்னையில் என்பது நிச்சயமானவுடன், சென்னையிலேயே தீபாவளி கொண்டாடுவதாக முடிவுபண்ணிவிட்டார். அண்ணன் நரசிம்மனுக்கும் அண்ணி பானுவுக்கும் ரொம்ப சந்தோஷம்.
குளித்துவிட்டு சீதாபதி எல்லா வெடியையும் எடுத்து வந்து மொட்டை மாடியில் வெயிலில் உலர்த்தினார். தன் இரண்டு பிள்ளைகளிடம் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளச் சொன்னார்.
அவருக்கு ஒரு பயம்—காக்காய் வந்து எங்கேயாவது வெடியைப் பட்சணம் என்று நினைத்துக்கொண்டு எடுத்துப் போய்விடுமோ என்று!
மத்தியானத்துக்கு மேல், வீட்டுக்கு பக்கத்தில் இருந்த பட்டாசு கடைக்குப் போய், ஒவ்வொரு பட்டாசுக்கும் விலை விசாரித்துவிட்டு வந்தார். வீட்டுக்கு வந்து சாரு, நரசிம்மன் எல்லாரிடமும் பட்டாசு எல்லாம் இங்கே என்ன விலை, தான் வாங்கி வந்த சிவகாசி பிராண்ட் எவ்வளவு குறைவான விலை என்பதை நிரூபிக்கட்டிக் காட்டினார்.
சாரு ஒரு கேள்வி கேட்டாள்:
"சித்தப்பா, நீங்கள் இங்க பட்டாசு கடையில் பார்த்த பிராண்ட் எல்லாம் ஸ்டாண்டர்ட் அல்லது லயன் பிராண்டா இருக்கும். நீங்கள் வாங்கி வந்த பட்டாசு எல்லாம் ஏதோ 'ஆந்தை பிராண்ட் 'னு போட்டுருக்கு. அதெல்லாம் ஒழுங்கா வெடிக்குமா?"
சித்தப்பாவுக்கு ரோஷம் தலைக்கேறிவிட்டது. உடனே மதிய வேளையிலேயே நாலு அணுகுண்டு, ரெண்டு எலக்ட்ரிக் ஆயிரம்வாலா எல்லாவற்றையும் மொட்டை மாடியில் கொளுத்திப் போட்டு வெடித்துத் தள்ளித் திமிலோகப்படுத்திவிட்டார்.
மத்தியானம் 3 மணிக்கு விமானத்தில் வந்து பின் மீனம்பாக்கத்திலிருந்து டாக்ஸியில் வந்து வீட்டு வாசலில் இறங்கினான் பரதன்.
பக்கத்து வீட்டு வாண்டு ஓலை வெடியைக் கொளுத்திப்போட, சட்டென்று கொஞ்சம் நகர்ந்துகொண்டான் பரதன்.
"வாங்கோ, மாப்பிள்ளை, வாங்கோ!" என்று வாயெல்லாம் சிரிப்புடன் வந்தார் சித்தப்பா. "அது ஓலை வெடி மாப்ள. ஒண்ணும் செய்யாது, பயப்படாதீங்கோ. இங்க அணுகுண்டு, 1000 வாலா, ராக்கெட்னு என்னென்னமோ இருக்கு, ஜாக்கிரதை," என்றார்.
பரதன் அவரைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே தலையைத் தாழ்த்தி வணக்கம் கூறி உள்ளே சென்றுவிட்டார்.
சித்தப்பா பரதனுக்கு விழுந்து விழுந்து உபசாரம் செய்தார். "மாப்ள, ஸ்வீட் சாப்பிடுங்கோ ! தீபாவளி லேகியம் வேணுமா?" என்று கேட்டார். "சாயங்காலம் ஏழு மணிக்கு ஆரம்பிச்சுடலாமா மாப்ள, வெடி வெடிக்க?" என்றார்.
சாரு சொல்லிவிட்டாள், "ஒரே அலைச்சல். உள்ள போய் தூங்கப் போறார். ராத்திரி வெடி எல்லாம் கிடையாது."
"ஓஹோ, அப்படியா? பாவம், நல்லா தூங்கட்டும். ஆனா, காலையில நாலு மணிக்கு எழுந்துடணும். குளிச்சிட்டு புது டிரஸ் போட்டுட்டு வெடி வெடிச்சு ஆகணும். அதுதான் தலை தீபாவளிக்கு அழகு," என்றார் சித்தப்பா.
காலையில் 4:00 மணிக்குப் பரதனை எழுப்பிவிட, அவன் தலையில் எண்ணெய் தடவிக்கொண்டு குளித்துவிட்டுப் புதுசு உடுத்தி வந்தபோது, "வாங்கோ மாப்பிள்ளை!" என்று கடத்திக்கொண்டு வாசலுக்குப் போய்விட்டார் சீதாபதி.
அவர் பிள்ளைகளுக்கு கூட ஒரே குதூகலம். "சங்கு சக்கரம் வேணுமா? புஸ்வாணம் வேணுமா?" என்று பிள்ளைகள் கேட்க, புன்னகையுடன் "எதுவும் வேண்டாம்" என்று சொல்லிக்கொண்டிருந்தான் பரதன். சித்தப்பா ஆன மட்டும் உசுப்பேத்திப் பார்த்துவிட்டு, "மாப்ள, டெல்லிக்காரர்களுக்குத் தைரியம் இல்லைன்னு சொல்லுவா. அது தப்புன்னு நீங்கள் ப்ரூவ் பண்ண வேண்டாமா?" என்றார்.
அவரிடம் இருந்து ஒற்றை ராக்கெட்டை மட்டும் வாங்கி, அங்கிருந்த பாட்டிலுக்குள் வைத்து, நுனியில் இருந்து திரியை கொஞ்சம் பிரித்துவிட்டு, வெகு ஜாக்கிரதையாகப் பற்றவைத்தான் பரதன். மெதுவாக ராக்கெட் கிளம்பி மேலே போய் பூ சிதறியது.
சித்தப்பா, "ஒரு ராக்கெட் விடுறதுக்கு பாட்டில் எல்லாம் எதுக்கு? என்னை மாதிரி தைரியமா கையிலேயே வச்சுக்கொளுத்தி விடணும். இங்க பாருங்க!" என்று ராக்கெட்டை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, மறுகையால் கம்பி மத்தாப்பு நெருப்பால் ராக்கெட்டைப் பற்றவைக்கும்போது அந்த அசம்பாவிதம் நடந்தது.
கீழே வாண்டுகள் பற்றவைத்த புஸ்வாணம் ஒன்று டியூப் லைட் மாதிரி ரொம்ப நாழி கழித்து திடீரென்று பொறி கொட்டி எரிந்தது. சித்தப்பா வேட்டியின் பின்புறம் திகுதிகு என்று தீ பற்ற ஆரம்பித்தது.
மின்னல் போல் எழுந்த பரதன், சித்தப்பாவைத் தரையில் தள்ளிப் படுக்கவைத்து, அவர் கைகளால் அவர் முகத்தை மூடித் தரையில் அவரை உருட்டினான். பின்னர் ஜன்னலில் இருந்த தடிமனான பருத்திக் கர்ட்டனைப் பிடுங்கி எடுத்துச் சித்தப்பா மீது போர்த்தி மீண்டும் உருட்டினான். தீ அணைந்தது. என்ன நடந்தது என்று சித்தப்பா உணர்வதற்குள் அவரை வீட்டுக்குள் தூக்கி வந்து தரையில் படுக்கவிட்டான். குளிர்ந்த நீரைச் சித்தப்பாவின் உடல் முழுவதும் தெளித்து ஆசுவாசப்படுத்தினான். "நல்ல காலம் உங்களுக்கு ஒண்ணும் ஆகல " என்றார். சித்தப்பா குழப்பத்துடன் பார்த்தார்.
வீட்டில் எல்லாரும் ஓடிவர, சித்தி அதிர்ச்சியுடன், "மாப்ள, நீங்கதான் தெய்வம் மாதிரி வந்து காப்பாத்தினீங்க! எப்படி உங்களுக்கு இதெல்லாம் தெரியும்?" என்றார்.
சிரித்தான் பரதன் சுருக்கமாக.
சாருவின் முகத்தில் பெருமை வழிந்தது.
காலையில் தீபாவளி முடிந்ததும் எல்லாரிடமும் ஒரு விஷயத்தைச் சொன்னான் பரதன்.
"நான் மத்தியானம் பிளைட்ல வேலைக்குத் திரும்பிப் போகணும்."
எல்லாருக்கும் வருத்தம்.
பரதனைத் தனியாக அழைத்துச் சென்று சாரு கேட்டாள், "நாளைக்குப் போகக் கூடாதா?"
"இல்ல சாரு. மிசோரம் பக்கம் கலவரம். தீவிரவாதிகள் பிரச்சினை திடீரென்று அதிகமாகிவிட்டது. சண்டை பெரிதாகிக்கொண்டிருக்கிறது. நிறைய பேர் இறந்துவிட்டார்கள். நான் போயாக வேண்டும்."
"உங்களைவிட்டால் ஆள் கிடையாதா? 'பாரா கமாண்டோ ஃபோர்ஸில் இருக்கும் காரணத்தால் எப்பவும் எல்லாத்துக்கும் நீங்கள் தான் போகணுமா?" என்று கண் கலங்கினாள்.
"நான் ராக்கெட் லான்ச்சர் போன்ற பல சிறப்பு ஆயுதங்களில் பயிற்சி உள்ளவன் என்பதை உனக்குச் சொல்லியிருக்கிறேன். நான் இத்தகைய தருணத்தில் நம் ராணுவத்துடன் இருக்க வேண்டாமா?" என்றான் பரதன்.
கண்ணைத் துடைத்துக்கொண்டு, "சரி. ஆனால் நீங்கள் போகும்போது நீங்கள் யார் என்று கொஞ்சம் சித்தப்பாவிடம் மட்டும் ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள். அவர் அலப்பறை தாங்க முடியல," என்று சிரித்தாள் சாரு.
அவளை அணைத்தவாறு பரதன், "நான் யார் என்பதை அனாவசியமாக வெளியே சொல்லக்கூடாது. சித்தப்பா வயதில் பெரியவர், நல்லவர். நான் வெடிக்குப் பயந்தவன் என்று நினைத்தால் நினைத்துவிட்டுப் போகட்டுமே! அதனால ஏன் நீ டென்ஷன் ஆகணும்?" என்று கூறிப் பலமாகச் சிரித்தான். சாருவும் அவன் சிரிப்பில் கலந்தபோது மிக லேசாக உணர்ந்தாள்.
"மாப்ளை" என்ற சித்தப்பாவின் குரல் அடுத்த அறையில் இருந்து சத்தம் போட்டு கேட்டது. "கிளம்புறதுக்குள்ள அட்லீஸ்ட் ஒரு டஜன் ஆட்டம்பாமானும் நீங்க வெடிச்சுத் தான் ஆகணும் மாப்ளை" என்று உரக்கச் சொன்னார் சித்தப்பா சீதாபதி.

Leave a comment
Upload