தொடர்கள்
கதை
திரில்லிங்! சுந்தர மணிவண்ணன்

20261007061733336.jpeg

“கண்ணா, கிளம்பு! கிளம்பு!” அவனை அவசரப்படுத்தினாள் வள்ளி.

“வள்ளி, எந்தக் கடையிலும் உள்ள நுழைய முடியாது. கூட்டம் அலைமோதுது. ரோட்ல எந்தப் பக்கமும் போக முடியாது. நெரிசலோ நெரிசல்.திரும்பின பக்கமெல்லாம் ட்ராஃபிக் ஜாம்!”

டி.வியை திறந்தா இந்தச் செய்தியைத் தான் திரும்ப திரும்ப போட்டுக் காட்றான்.

“ பர்ச்சேஸுக்கு வெளியில போயிட்டு வர்றது அவ்வளவு ஈஸி இல்ல வள்ளி.பேசாம ஆன்லைன்ல ஆர்டர் போட்டுடலாமா?”

சோம்பலை முறித்துக்கொண்டே சொன்னான் கண்ணன்.

“கண்ணா, தீபாவளி பர்சேஸ்! நமக்குப் பிடிச்சதை நேர்ல போய் வாங்கினாதான் சரிப்பட்டு வரும். நாலு கடைக்குப் போய், கும்பல்ல இடி பட்டு, நமக்குப் பிடிச்சதை வாங்கிட்டு வெளிய வர்றச்சே இருக்கிற சந்தோஷமும், சாதிச்சிட்டோம்கிற திரில்லும்… ஆஹா”

சொல்லி முடிப்பதற்குள் பழைய நினைவுக்குள் புகுந்து எழுந்தாள் வள்ளி.

அன்று அவள் கையிலிருந்த மொபைல் முணுமுணுத்தது. திரையில் தெரிந்த எண்ணைப் பார்த்ததும் அவளுக்குப் புரிந்துவிட்டது.

நேற்றுதானே பெண் பார்க்கும் படலம் முடிந்தது!

அவன் பெரியகோஷ்டியோடு அவளைப் பெண் பார்க்க வந்திருந்தான். சொஜ்ஜி, பஜ்ஜி, காபி என்று ட்ரேயை ஏந்தி, சம்பிரதாயப்படி எல்லோருக்கும் இன்முகத்துடன் பரிமாறினாள்.

“உனக்குப் பாடத் தெரியுமா? யார்கிட்டயாவது சங்கீதம் கத்துக்கிறியா?” வரப்போகும் மாமியார் ஆசையோடு கேட்டார்.

“மாணிக்க வீணையேந்தும்…”

கணீரென்ற குரலில் பாடி எல்லோரையும் அசத்தினாள்.

மாப்பிள்ளையாக வரப்போகும் கண்ணனைப் பற்றி அறிய வந்தவர்களின் கேள்விகள் அவன் மீது ஆவலோடு வந்து விழுந்தன. .சலிக்காமல் பதில் சொன்னான் கண்ணன். அவனுடைய வெண்கலக் குரலில் கலந்த கம்பீரம் வள்ளியை வசீகரித்தது.

“நீங்க ரெண்டு பேரும் தனியா சந்திச்சு ஏதாவது பேசணுமா?”

இரு வீட்டாரும் கேட்டார்கள்.

கண்ணன் வள்ளியைப் பார்த்தான். அந்த ஆசையை அவன் கண்களே காட்டின.

வள்ளி வெட்கத்தில் தலை குனிந்தாள்

வள்ளிக்கு மட்டும் அந்த ஆசை இல்லை. அவனைப் பற்றிய பயோடேட்டா அவள் கையில் இருந்தது.

இரு வீட்டாரின் சம்மதம் கிடைத்ததும், அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி மத்தாப்பானது.

கண்ணனால் காத்திருக்க முடியவில்லை. முதல் நாளே வள்ளியிடம் பேச வேண்டும் என்று மொபைலை எடுத்து அழைத்தான்.

“எடுப்பதா? வேண்டாமா?”

வள்ளியின் மனதுக்குள் ஒரு போராட்டம்.

‘வேண்டாம்’ என்றது அவள் மனம். ஃபோனை எடுக்காமல் விட்டுவிட்டாள்..

மீண்டும் மீண்டும் முயற்சி செய்தான் கண்ணன். பலனில்லை.

மறுநாள் வந்த அழைப்பைப் பரிதாபப்பட்டு எடுத்தாள்.

“ஹலோ… வள்ளி இல்லையா?”

குரலை மாற்றிப் பேசியதால், அவளுடைய குரலை அவனால் அடையாளம் காண முடியவில்லை.

“வள்ளிதான் பேசறேன்!” தன் பழைய குரலுக்குத் தாவினாள் வள்ளி.

“அடிப்பாவி! பல குரல்ல பேசுவியா? இந்த விஷயம் எனக்குத் தெரியாதே! நேற்றெல்லாம் ஃபோன் பண்ணேன். எடுக்கவே

இல்லை. ரொம்ப பிஸியா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை கண்ணா.”

“அப்ப ஏன் ஃபோனை எடுத்துப் பேசலை?”

“இப்ப பேசறதுக்கு விஷயம் ஒண்ணுமில்லை கண்ணா.”

“நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகப்போவுது. ஜாலியா ஏதாவது பேசணும்கிற ஆசையே உனக்கு இல்லையா?”

“நிறைய இருக்கு. ஆனா, இப்ப வேண்டாம்.”

“என்ன வள்ளி, சொல்ற?”

“ஆமாம் கண்ணா! முதல்ல பேசலாம்னு சொல்லுவ. அப்புறம் ஹோட்டலுக்குப் போகலாம்னு சொல்லுவ. அதுக்கப்புறம் சினிமா, பீச்சுன்னு சுத்தலாம்னு சொல்லுவ.”

சற்று நிறுத்தினாள்.

“இதையெல்லாம் இப்பவே முடிச்சிட்டா, கல்யாணத்துக்கப்புறம்….. திரில்லே இல்லாமப் போயிடும் கண்ணா!”

அவள் இப்படிச் சொல்வாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

“நான் பழைய காலத்துப் பொண்ணு மாதிரி இருக்க இப்ப ஆசைப்படறேன். நீ பெண் பார்க்க வந்தப்ப பட்டுப் புடவை கட்டிக்கிட்டேன். உங்க அம்மா பாடத் தெரியுமான்னு கேட்டதும் பாடிக் காட்டினேன். அதெல்லாமே ஒரு தனி அழகு. இப்பவே மாடர்னா, பந்தா காட்டறது எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கலை.”

சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.

“உனக்கு, கண்ணா?”

“எனக்கும் அதுதான் ரொம்பப் பிடிக்கும்!” என்றான் அவசரமாக.

“கல்யாணத்துக்கப்புறம் நிறைய பேசலாம். இப்ப பை பை!”

ஃபோனை அணைத்த வள்ளி மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.