
உ
கலாலாபா
காருண்ய விக்ரஹ காந்தா காந்திதூத ஜபாவலி:I
கலாலாபா கம்புகண்டீ கர நிர்ஜித பல்லவா II
தேவியின் கண்கள் கருணையைப் பொழிகின்றன. அவளின் கருணைதான் உலக உயிர்களைக் காப்பாற்றுகிறது. இந்தப் பிரபஞ்சமே பராசக்தியின் கருணையின் கற்பனை. அவள் ஒருத்திதான் எக்காலமும் சத்தியமாக இருப்பவர்.
இந்த உலக வாழ்க்கையில் நாம் சிக்கிக்கொண்டு அல்லல்படும் வரை, இந்த வாழ்வு மாயம் என்பது தெரியாமலேயே இருக்கிறது. நாம் உள்ளுக்குள் எப்படி இருக்கிறோம், எத்தனை தூரம் அம்பிகையின் நினைவில் ஆழ்ந்திருக்கிறோம், எவ்வளவு பரிசுத்தமாய் இருக்கிறோம் என்பது நமக்கே தெரிவதில்லை. நம்மை அறிந்தவள் பராசக்தி மட்டுமே!
நம்மிடம் உள்ள குறையை உணர்ந்தால் மட்டுமே நாம் நிறைவை நோக்கிப் போக முடியும். எனவே, இதையும் அவளிடமே நாம் வேண்டிக் கொள்ள வேண்டும். "அம்மா, நான் இன்னமும் அப்படியேதான் இருக்கிறேனா? என்னை மேலும் கைதூக்கி விடு. உன்னை நிஜமாகப் பக்தி செய்ய அனுக்கிரகம் செய்" என்று அவளைத்தான் நாம் வேண்டிக்கொள்ள வேண்டும்.
சிருஷ்டியிலும் ஸ்தியிலும் நிரந்தரமான ஆனந்தம் என்பது இல்லை. நாம் விழித்துக் கொண்டிருப்பது போல் தோன்றினாலும், உண்மையில் நாம் கனவில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அம்பிகையின் பரம கருணையினால்தான் அவள் இதை நமக்குத் தந்திருக்கிறாள். இந்த லோகத்தில் வெவ்வேறாகக் காணப்படுகின்ற அனைத்து ஜீவராசிகளும் ஒரே பராசக்தியின் கற்பனையில் உதித்தவையே; அவளைத் தவிர வேறொன்றும் இல்லை என்கிறது 'ஸ்ரீதேவி உபநிஷத்'.
நம்முடைய கனவை ஆத்ம பரிசோதனை செய்து கொள்வதற்காகத்தான் உள்மனதைப் படைத்திருக்கிறாள் அம்பிகை. அதற்குள் ஜென்ம ஜென்மமாகப் பதிந்து போயிருக்கிற வாசனைகளை ஓரளவுக்கு கனவின் மூலம் வெளியேற்றுகிறாள் அம்பிகை. கனவில் நாம் காணும் காட்சிகள்—அது தரும் ஆனந்தமோ, வேதனையோ, மகிழ்வோ, துக்கமோ—அதன் மூலம் நம்முடைய கர்மவினைகள் கழிகின்றன என்கிறார்கள் பெரியவர்கள். நம்முடைய கர்மாவைக் கழிப்பதற்கான வழிகளையும் அவளே கருணையுடன் தந்துவிடுகிறாள்.
நமது இந்திரியங்களைத் தூண்டுகின்ற சிற்றின்ப விஷயங்களிலிருந்து நம்மைச் கருணையோடு காப்பாற்றுபவள் அம்பிகையேதான். நம் மனப்பக்குவத்தின் நிலை எந்த அளவு இருக்கிறது என்பதை உரைத்துப் பார்த்து நாமே புரிந்து கொள்ளத்தான் அம்பிகை இந்த நாடகங்களை நடத்துகிறார். நம் மீது கொண்ட பிரியமும் பாசமும் அக்கறையுமே அவளின் கருணை!
"ஸ்வப்பனம் என்பது படைப்புத் தொழிலைக் காட்டுகிறது. நம்மைப் பக்குவப்படுத்தவும், நம்மைத் திருத்திக்கொண்டு நிறைவை அறிந்து நிம்மதி பெறவும் அம்பிகை கருணையோடு சொப்பன அவஸ்தையை நமக்கு வைத்திருக்கிறாள்" என்கிறார் ஸ்ரீ மகா பெரியவா.
சொப்பனம் என்பது படைப்புத் தொழிலைக் காட்டுகிறது; அப்போது நாம் பிரம்மா மாதிரி சிருஷ்டி செய்கிறோம். 'ஜாக்ரத்' என்ற விழிப்பு நிலையில் விஷ்ணுவைப் போல் பரிபாலனம் செய்கிறோம். தூக்கத்தில் நமது இந்திரியங்கள், மனசு எல்லாம் அழிந்துபோனது போல் எந்த வேலையும் செய்யாமல் ஓய்ந்து போய்விடுகிறது; இது ருத்ரனின் சம்ஹாரம் போன்ற நிலை. அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உண்டு. அம்பிகையே இந்த அண்டம் முழுவதும் நிறைந்து, நமக்குள்ளும் இடைவெளி இல்லாமல் நிறைந்திருக்கிறாள். எல்லாவற்றிலும் நிறைந்திருக்கக்கூடிய ஒரே வஸ்துவான அவளே நமக்குள்ளும் நிறைந்திருக்கிறாள்.
மனதைக் கவரும் வடிவுடையவள். அவளுடைய முகப்பிரகாசம் புஷ்ப வரிசைகளின் காந்தியைப் பழிக்கும் ஒளி உடையது. சங்கு போன்ற கழுத்தை உடையவள். மென்மேலும் அழகிலும் இளம் தளிர்களை வெல்லும் கரங்களை உடையவள்! அம்பிகையின் அழகைச் சொல்லும்போது வார்த்தைகள்தான் நமக்குத் கிட்டுவதில்லை.
அம்பிகையின் அனுக்கிரகம் என்றால், அது மாயலோகத்திலிருந்து நம்மை விடுவித்து மோட்ச நிலையில் சிறப்பிப்பதைத் குறிக்கிறது. அம்பிகையைப் "பிரம்மாவாக உலகைப் படைக்கிறாய், விஷ்ணுவாகக் காக்கிறாய், ருத்திரனாகச் சம்ஹாரம் செய்கிறாய், நீயே மகேஸ்வர சக்தி" என்றுதான் போற்றிப் புகழ்கிறது ஸ்ரீலலிதா.
அம்பிகையை 'மாயை' என்றுதான் பொதுவாகச் சொல்கிறார்கள். "மகாமாயே, உன் துளிர் போல் சிவந்த பாதங்களில் லயித்துப் போகிறேன்" என்கிறார் ஸ்ரீ மூகர்.
“லீயே புரஹர ஜாயே மாயே தவ தருண பல்லவச் சாயே சரனே”
மாயையில் லயிப்பதாகச் சொன்னாலும், அந்த மாயையான அம்பிகையுடன் நாம் இரண்டறக் கலப்பதாகத்தான் அர்த்தம். யார் மறைக்கிறார்களோ, அவள்தானே அந்த மறைப்பை எடுக்க முடியும்? அந்த கருணையை அருள்பவள் அம்பிகை!
***************************

Leave a comment
Upload