தொடர்கள்
கதை
தீபாவளி விருந்து - ஜி.ஏ. பிரபா

2026100706204949.jpeg

“எல்லாம் ரெடியா?”

எட்டிப் பார்த்தான் ரகு.

"இதோ. பாயசத்துக்கு முந்திரி வறுத்தா ஆச்சு"

ரம்யா பரபரவென்று கிச்சனுக்குள் அலைந்து கொண்டிருந்தாள். ரகுவின் அம்மாவும் அவளுக்கு உதவியாக இருந்தார்..

சுவாமி அறையின் முன்பு ஏராளமான பலகாரங்களும், சாப்பாடு வகைகளும் இருந்தன. எல்லாமே சித்ரான்னம்தான்.

தயிர் சாதம், தேங்காய் சாதம், புளி சாதம், எலுமிச்சம்பழ சாதம், சாம்பார் சாதம் என்று வகைவகையாக இருந்தது. அது போக லட்டு, ஜிலேபி, திரட்டுப்பால் என்று இனிப்பு வகைகள். பாயசமும் கொதித்துக் கொண்டிருந்தது.

குழந்தைகள் எட்டி எட்டிப் பார்த்தன.

ரகுவுக்கும், ரம்யாவுக்கும், "குழந்தைகள் இதில் கை வைக்காமல் இருக்க வேண்டுமே! என்று பயமாக இருந்தது.

மூத்தவன் விஷ்ணு. ஒன்பது வயது, இளையவள் மானசா ஏழு வயது. சாப்பிடும் வயது ஆயிற்றே! வடை வாசனையைப் பிடித்துக்கொண்டு, "வடை, வடை" என்று எட்டிப் பார்த்தார்கள்.

"இன்னும் கொஞ்ச நேரம் கண்ணா, சுவாமிக்கு நெய்வேத்தியமானதும் தருகிறேன்.”- ரம்யா.

“இன்னைக்கு யாரு நம்ம வீட்டுக்கு வராங்க?”,

“அப்பாவின் நண்பர்கள் நம் வீட்டுக்கு விருந்துக்கு வருகிறார்கள்" என்றார் ரகுவின் அப்பா.

ரகு வங்கியில் வேலை பார்க்கிறான். அவனுடைய நாலைந்து நண்பர்கள் ஆந்திரா மற்றும் வடநாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு நம் தமிழகப் பலகாரங்கள் என்றால் பிடிக்கும். எனவே அந்தக் குடும்பங்களைத் தீபாவளிக்கு விருந்துக்கு அழைத்திருந்தான் ரகு. அதற்காகத்தான் ரம்யா செய்து கொண்டிருந்தாள்.

காலையிலேயே எண்ணெய் குளியல் முடித்து புது ஆடைகள் அணிந்து பட்டாசு வெடித்து விட்டார்கள் குழந்தைகள்.

காலை டிபனுக்கு இட்லி, வடை, பொங்கல் என்று வயிற்றை நிரப்பியாகிவிட்டது. மதியத்திற்கு சமையல் ஆகிக் கொண்டிருந்தது. ஒரு மணிக்கு விருந்தினர்கள் வந்து விடுவார்கள்.அக்கம் பக்கம் வீடுகளும் பலகாரங்களுடன் பார்க்க வருவார்கள்.

ரம்யாவுக்கு நின்று பேச நேரமில்லை. எல்லா பலகாரங்களையும் செய்து முடித்து விருந்துக்கு தயார் செய்து விட்டு அதன் பிறகுதான் அவள் புதிய புடவையை கட்ட முடியும்.

அம்மா பழங்களைப் பிரித்துத் தட்டில் வைக்க.

அப்பா வெத்தலை பாக்கு பொட்டலங்களை அருகில் அடுக்கினார்.

"ஏன் தாத்தா, அவங்க நம்ம வீட்டுக்குச் சாப்பிட வராங்க?" என்று கேட்டான் விஷ்ணு.

"தீபாவளி சமயத்துல நாம நாலு பேரோடு உணவுகளைப் பகிர்ந்து உண்ண வேண்டும் கண்ணா. உனக்கு நரகாசுரன் கதை தெரியும் அல்லவா?"

"ஆமாம், கிருஷ்ணர் நரகாசுரனைச் சம்ஹாரம் செய்த நாள் இன்று. அவன் கேட்டுக் கொண்டபடிதானே நாம் தீபாவளி கொண்டாடுகிறோம்?"

"அது மட்டும் இல்லை கண்ணா, இந்த நன்னாளில் நாம் அனைவரும் லட்டு, இனிப்பு வகைகளையும் உணவு வகைகளையும் பகிர்ந்து உண்ண வேண்டும். கிருஷ்ணனுக்கு நெய்வேத்தியம் செய்துவிட்டு அதை நாலு பேருக்குக் கொடுத்தால் அது மகா புண்ணியம். நாம செஞ்சு,நாமே சாப்பிட்டா எந்தப் பலனும் கிடையாது. "

"அப்படியா தாத்தா?"

"ஆமாம், தீபாவளி அன்று நாம மட்டும் சாப்பிட்டா பகவானுக்கு மகிழ்ச்சி இருக்காது. பகிர்ந்து உண்ணுதல்தான் ஆனந்தம். நீங்கள் அமைதியாக உட்கார்ந்து இருங்கள். நான் சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்துவிட்டு உங்களுக்கு வடையும் லட்டும் தருகிறேன்" என்றார் அப்பா.

குழந்தைகள் அந்தப் பலகாரங்களையே பார்த்துக் கொண்டிருந்தன. அம்மா மீண்டும் கிச்சனுக்குள் போனார்.

"நான் போய் வாழை இலை வாங்கிட்டு வருகிறேன்" என்று கிளம்பினான் ரகு.

"நான் மாம்பழத்தை நறுக்கி வைக்கிறேன்" என்றபடி உள்ளே சென்றார் அப்பா.

சிறிது நேரத்தில் வெளியில் வந்த ரம்யா பரபரப்புடன் "மாமா, இது என்ன? சுவாமி முன் வைத்திருந்த எந்தப் பாத்திரத்தையும் காணோமே!" என்று கூவினாள்.

ரகுவின் அம்மா ஓடிவந்தார்.

"எங்கு போயிற்று? ஏதாவது குரங்கு வந்துவிட்டதா?"

அந்த வீடு சற்று பெரியது. ரகுவின் தாத்தா கட்டிய வீடு. அப்பா அதை மராமத்து செய்து வசித்து வந்தார். பின்னாடியே நிறைய மாமரங்களும் காய்கறிச் செடிகளும் இருந்தன. ஏதேனும் குரங்கு வந்திருக்குமோ என்று யோசித்தனர்.

அதற்குள் ரகுவின் குரல் கேட்டது,

"இங்கே வந்து பாருங்க, என்ன நடக்குதுன்னு!"

வேகமாக அனைவரும் வாசலுக்கு ஓடினார்கள். அங்கு மானசாவும் விஷ்ணுவும் அமர்ந்து, ஒவ்வொரு பாத்திரத்திலிருந்தும் பதார்த்தங்களை எடுத்துத் தெருவில் இருந்த ஏழைகளுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

இவர்கள் வீடு இருப்பது சன்னதித் தெரு. தெருமுனையில் மிகப் பிரம்மாண்டமான, பழமையான கோவில் ஒன்று இருந்தது; அங்கு சகல தெய்வங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் எப்போது கூட்டம் இருக்கும். அந்த வாசலில் அமர்ந்திருந்த பிச்சைக்காரர்களை அழைத்து வந்து, ஒவ்வொரு பதார்த்தமாகத் தட்டில் போட்டு, ஒவ்வொரு வடையாக வைக்க, அவர்களும் மகிழ்ச்சியோடு குழந்தைகளை வாழ்த்திவிட்டுப் போய்க் கொண்டிருந்தார்கள்.

“தாத்தா பகிர்ந்து உண்ணனும், பசித்தவர்களுக்கு உணவு தரணும்னு சொன்னீங்கல்ல. அதான்”- உற்சாகத்தோடு கூவினான் விஷ்ணு.

“தாத்தா உங்களுக்கும் இந்தாங்க” ஒரு லட்டை நீட்டியது மானசா.

"என்னடா இது?" ரகு வேகமாய் அவர்களை அடிக்கக் கை ஓங்கினான்.

"அடிக்காதே!" அப்பா அவனைத் தடுத்தார்.

"இன்றுதான் உண்மையான தீபாவளி விருந்து!”

“என்னப்பா நீங்களும், இன்னும் சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்யவே இல்லையே?"

"இதைவிடச் சிறந்த நெய்வேத்தியம் எதுவும் இல்லை ரகு. குழந்தைகளைத் திட்டாதே, உள்ளே வா. மீண்டும் இவைகளைத் தயார் செய்யலாம், நேரம் இருக்கிறது" என்றார் அப்பா.

ரகுவுக்கு அப்பாவின் வார்த்தைகள் புரிந்தன. அவனும் குழந்தைகளுடன் அமர்ந்து, நின்றிருந்தவர்களுக்கு ஒவ்வொரு இனிப்பாக எடுத்து வைக்கத் தொடங்கினான்.

அங்கு தீபாவளி விருந்து அமர்க்களமாக நடந்தேறியது!

​​​​