
அன்றைய நாளின் வரவுச்செலவு கணக்கைப்பார்த்து, பணியாளர்களுக்குஊதியப்பணம் கொடுத்து, தனது சிறு மளிகைக் கடையைக்கட்டியபோது இரவு மணி ஒன்பாதாகிவிட்டது காமராசுவிற்கு.
சனிக்கிழமை மாலைநேரம் வங்கியில் பணத்தைக்கட்ட முடியாதுபோக, மெஷினிலும் செலுத்த முடியாததால் கையிருப்புத்தொகை எண்பதாயிரத்தோடு வீட்டிற்கு கிளம்பினார்.
நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை மகளுக்கும் மனைவிக்கும், வீட்டிற்குச்செல்லும் வழியிலுள்ள துணிக்கடையில் ஆயத்த ஆடைகள் வாங்கணும் என மனைவி சொன்னது ஞாபகத்திற்கு வர, மகளுக்கு இரண்டு செட் ஆடைகளும் மனைவிக்குப் புடவைகளும் எடுத்துக்கொண்டு துணிகள் வாங்கியப்யையும் தான்எடுத்து வந்த பணப்பையையும் ஜூட் பேக்கில் வைத்து தனது இருசக்கர வாகனத்தின் சைடில் உள்ள ஹூக்கில் மாற்றிவிட்டு வீட்டிற்கு கிளம்பினார். வீடுவந்து சேர்ந்தபின்தான் கவனித்தார் வண்டியின் சைடு ஹூக்கில் மாட்டப் பட்டியிருந்த ஜூட்பை காணாமல் போயிருந்தது.
பதட்டம் அடைந்த காமராசு திரும்பவும் வண்டியை எடுத்துக் கொண்டு வந்த வழியை நோக்கி தொலைந்துப்போன பையைத் தேடிக் கொண்டு கிளம்பினார். பையிலிருந்தக் கடைப்பணமும், மகள், மனைவிக்கு வாங்கிய ஆடைகளையும் நினைத்தபடியே ஓட்டிச் சென்றார்.
வீட்டிற்கு வந்த கணவர் உள்ளே வராமல் பதட்டமாய் மீண்டும் கிளம்பியதைக் கண்டு மனைவியின் மனசு படபடவென அடித்துக் கொண்டது. துணிகளை வாங்கிய கடைக்குச்சென்று விசாரித்தும், துணிக்கடைக்கு வெளியே பையை ஹூக்கில் மாட்டியது நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. பிறகு எங்கே தொலைந்திருக்கும்?
துணிக்கடைக்கும் வீட்டிற்கும் நடுவே ஒரு கி.மீட்டர் தூரம் இருக்கும்.
நடுவே கடைத்தெரு, அந்நேரம் இரவானதால் வீதியில் மக்கள் நடமாட்டமும் அதிகமாக இல்லை. எங்கேயும் வண்டியை நிறுத்தவும் இல்லை.
பிறகு எங்கே போனது ? ஒன்றும் புரியாமலும் செய்வதறியாமலும் திரும்பவும் துணிக்கடைக்குள் சென்று கையில் உள்ள இருப்பிற்கு தகுந்த வேறு புதிய ஆடைகளை எடுத்துக்கொண்டு ஒன்றும் நடவாதது போல வீடு வந்து சேர்ந்தார் காமராசு. தொகை காணாமல் போனதைச் சொல்லி மனைவியைச் சங்கடப் படுத்தவேண்டாம், கவலையில் பண்டிகை நாளின் மகிழ்ச்சி தொலைந்துவிடும் என நினைத்து செய்தியைச் சொல்லாமல் மறைத்து சகஜமாகவே இருந்தார் காமராசு.
முகம் என்பது அகத்தைக் காட்டுகின்ற கண்ணாடித்தானே! மனைவி அதனை கவனித்து ஏதும் பிரச்சனையா என கேட்டதற்கும் ஒன்றுமில்லை என சமாளித்துவிட்டு தூக்கம் வரமலே படுத்து புரண்டு புரண்டு தன்னையறியாமலேயே உறங்கி எழுந்தார் காமராசு.
நாளை தீபாவளி நாள்,கையில் சுத்தமாக காசில்லை என வருத்தமிருந்தாலும்,தொலைந்த தொகையும் உடைகளும்,நல்லவர் யாருக்கேனும் கையை அடைந்து, அவர்கள் குடும்பமாவது நிம்மதியாக இந்த தீபாவளிநாளில் இருக்கட்டும், நல்ல முறையில் பயன்படட்டும் என்று மனத்தினைத் தேற்றிக்கொண்டு வாசலில் காபி கோப்பையோடு வந்தமர்ந்தார்.
அதே தெருவைச் சார்ந்த மணியன், காமராசுவை விட வயதில் மூத்தவர், நல்லா இருக்கியாய்யா? என கேட்டபடி வந்தவர் தீபாவளி வந்திடுச்சா?! என கேட்டதும்,
ம்.ம் வந்திடுச்சு என வருத்தமாய் சொன்னவர், இவரெல்லாம் வாங்கியக் கடனைக் திரும்பக் கொடுத்தாலே போதும் என கஷ்டம் விலகிடும் என மனத்தில் நினைக்கவும், இந்தா காமராசு, சரியான நேரத்தில் எனக்கு கொடுத்து உதவினாய், என்னால் திரும்பக் கொடுக்க முடியலையே என வருந்தினேன், தீபாவளிக்குள்ளே கொடுத்திடனும்னுதான் முயற்சி செய்தேன், எனது சீட்டுப்பணம் வந்தது கொடுக்கிறேன் என இருபதாயிரத்தைக் கொடுத்துவிட்டு ரொம்ப நன்றிப்பா என்று கிளம்பினார்.
பணத்தை வாங்கிய காமராசு அதனை எண்ணத்தொடங்கினார், கடைசி ரூபாய்த்தாள் வித்தியாசமாக இருந்ததைப் பார்த்ததும் திருப்பி திருப்பிப் பார்த்த காமராசு,
மணியா நில்லு, இது ஏது? என கேட்டார்.
சொன்னனேப்பா.. தீபாவளிச்சீட்டு முடிந்து வந்த பணம்யா இது.
அந்த ரூபாய்த்தால்களில் ஒரு ஐநூறு ரூபாய்த்தாளில் ஹார்டின் போடப்பட்டு நடுவே 100%என எழுதியிருந்ததை கடையில் பார்த்து தான் சிரித்தது ஞாபகத்திற்கு வந்தது.
பொய்ச் சொல்கிறார்?! இவர்தான் எனது பையை எடுத்திருப்பாரா?! இவரை நேற்று எங்கும் நாம் பார்க்கவில்லையே இந்த தாள் இவரிடம் உள்ளதே என்று குழம்பிய காமராசு,
சீட்டுப்பணம் கொடுத்தது யார் என கேட்டார்
நம்ம சங்கர்தான்பா.. வட்டிக்கு கொடுப்பாரே அவன்கிட்டேதானே நான் தீபாவளிச் சீட்டு சேர்ந்திருந்தேன் என்றவர், எனக்கிருந்த எல்லா கடனையும் அடைத்துவிட்டேன் இந்த தீபாவளிதான் நான் மகிழ்ச்சியாக கொண்டாடப் போகும் தீபாவளி என்று முகம் முழுவதும் மகிழ்ச்சிப் பொங்கச் சொன்னார் மணியன்.
ஒரு வேளை அவன் எடுத்திருப்பானோ ?! என்று கவலைப்பட்ட போது மணி காலை பத்தாகிவிட்டது.
பணம்தான் போய்விட்டது என மனசு ஆறுதலடைந் தாலும் கவனக் குறைவால் ஒரு இழப்பு என்பதை அறிவு ஏற்றுக் கொள்ளாதிருந்து பெரிய வருத்தத்தை கொடுத்தது.
சங்கரைப் பார்க்க கிளம்பினார். நீங்க நேற்று மணியனுக்கு சீட்டுப் பணம் கொடுத்தீங்களா என கேட்டதும்,
ஆமாம், ஐம்பதினாயிரம் கொடுத்தேன் என்றார்.
பின் அந்த ஐநூறு ரூபாய்த் தாள் பற்றிய செய்தியைச் சொன்னதும், அதுபற்றி எனக்கு எதுவும் தெரியல,ஒரு இடத்திலே பணத்தை வாங்கி வேற தேவைக்கு கொடுக்கிறதுதான் என் தொழிலே ராசு என்றார்.
சரியென்று கிளம்பிய காமராசுவை நிறுத்திய சங்கர், எனக்கு நேற்றைய வரவே ஒரே ஒருவரிடத்திலிருந்துதான் வந்தது, அதுவும் நான் என் கடையை மூடியபின்தான் வந்தது. அந்த தொகையைத்தான் வாங்கி மணியனுக்கு கொடுத்தேன் என்றார்.
யார் கொடுத்தது என ஆர்வமாய் கேட்டார் காமராசு.
நான் வழக்கமாக டிபன் சாப்பிடுவது இரவு ரோட்டோரக்கடையிலேதான், நேற்று சாப்பிடப்போனபோது அந்த கடைக்காரர் பூபதிதான் எனக்குத் தரவேண்டிய ஐம்பதினாயிரத்தை மொத்தமாக கொடுத்தார் என்றார்.
கடை எங்கே உள்ளது என்றார்..
வடக்கு வீதியில் பள்ளிக்கூடம்தாண்டி ஒரு பெரிய ஸ்பீடு பிரேக்கர் அடிக்கடுக்காய் இருக்கும் பாருங்க.. அதற்கு பக்கத்திலேதான் என்றார் சங்கர்.
நம் கடையிலிருந்து வீட்டிற்கு போகும் வழிதானே அது என்று நினைத்தார் காமராசு.
இரவில் மட்டும்தான் கடை என்பதால் காத்தியிருந்து ஏழு மணிக்கு அவரது கடைக்குச்சென்ற காமராசு அவரையும்,கடையையும் கவனித்து வந்தார்.
அந்நேரத்தில் அங்குவந்த ஒரு இருசக்கர வாகனம் ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்க அதில் பக்கவாட்டில் மாட்டப்பட்டியிருந்த காய்கறிப் பை கீழே விழவும் அதனை ஒருவர் எடுத்துக் கொடுத்ததைப்பார்த்த்தும் காமராசுவிற்கும் நாமும் இந்த வழியாகதான் போனோம்,அப்போது இதைப்போல் ஏற்பட்டு அதிர்ச்சியில் விழுந்திருக்குமோ என நினைத்தபோது, நேற்றும் இப்படித்தான் சார் யாரோ ஒருத்தர் தன் பையை கீழே விட்டு விட்டுப் போயிட்டாரு.. எடுத்து வைத்துக்கொண்டு இரவு கடையைக் கட்டும் வரை வைத்திருந்தேன் என்றார் கடைக்காரர்.
அவர் அருகே வந்த காமராசு, அதிலென்ன இருந்தது என கேட்டார். சில ஆடைகளும், எண்பாதயிரம் பணமும் அதில் இருந்தது என்றார்.
தேடி கொடுத்திருக்கலாமே என்றதற்கு, நானும் மனுசந்தானே, யோசித்தேன், பிறகு என் நிலைமையை நினைத்துப் பார்த்து தவறேதுமில்லை என கிடைத்தப் பணத்தை வைத்து எனக்கிருந்த கந்துவட்டிக்கடன் ஐம்பதாயிரத்தை அடைத்து, மீதியை என் பெண்ணுக்கு கல்லூரி பீஸ் கட்ட வைத்துக்கொண்டேன். வாழ்க்கையிலேயே இந்த தீபாவளியைத்தான் கடன் தொல்லை ஏதுமில்லாமல் மகிழ்ச்சியாக கொண்டாடப் போகின்றோம் என்றவர் அவர் யாராக இருந்தாலும் நல்லா இருக்கணும் சார், தொகையை இழந்து கஷ்டப்படுவார்தான் என்ன செய்ய ஆண்டவன்தான் அவருக்கு மனத் தைரியத்தைக் கொடுக்கணும் என்றார் இரவுக் கடைக்காரர்.
அந்த பையில ஏதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கலாம்,ஏன் அந்த பையைப் பற்றிய தகவலைச் சொல்லாமல் கூட இருந்திருக்கலாம், இவர் உண்மையைச் சொல்கிறார் என்ற போது காமராசுவிற்கு அந்த பணமும்,ஆடைகளும் தன்னுடையது என்று சொல்ல மனம் வரவில்லை.
உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்" என்ற பைபிள் வசன ஒலி அசரிரீ போல் காற்றில் ஒலித்தது.
"போனது போனதாகவே இருக்கட்டும்" கொண்டாட்டங்கள் என்பது மகிழ்ச்சியைப் பகிர்வதற்காகவே, என்ற மனநிலையில் வீடு திரும்பினார் காமராசு.
வீதியில் சிறுவர்கள் வைத்த புஸ்வானம் ஒன்று தன்னை அழித்துக் கொண்டு பல வண்ணங்களைப் வெளியேற்றவும் சிறுவர்கள் கூட்டமாக, குதுகூலமாக மகிழ்ந்திருந்தனர். நிச்சயமாக மூவருக்கும் இந்த தீபாவளி நல்லதொரு மகிழ்ச்சியைத் தந்திருக்கும்.

Leave a comment
Upload