தன் மெடிக்கல் ஷாப்பின் ஷட்டரை இழுத்து மூடிக் கொண்டிருந்த ஆனந்தனிடம் "சார்,சார் ரொம்ப அவசரம். இந்த மருந்துகளை கொடுத்துவிட்டு மூடுங்கள்" என்று கையிலிருந்த ப்ரிஸ்கிரிப்ஷனை நீட்டினான் மகேஷ்.
மகேஷ் மதுரையில் உள்ள தனியார் வங்கியில் மேனேஜர். அந்த கிராமத்தில் லோன் வாங்கியவரைப் பார்த்து தவணைப் பணம் கேட்பதற்காக மதுரையிலிருந்து காரில் வந்திருந்தான். அவனுடைய போதாத காலம், அரை மணி முன்பு ஒரு பெண்மணி மீது கார் மோதியதால் அருகிலிருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு டாக்டர் தந்த மருந்து சீட்டோடு ஆனந்தனின் கடைக்கு வந்து மருந்து வாங்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தான்.
அதே சமயம் அவனுடைய நல்ல காலம் -அந்த பெண்மணிக்கு பெரிய அளவில் காயங்கள் ஏதுமில்லை; மருந்தை கொடுத்து விட்டு புறப்படும் போது தான் கவனித்தான்-- தன் மொபைல் பையில் இல்லை என்பதை.
மருந்து கடையில் g pay செய்த போது தவற விட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் வந்து அந்த கடைக்கு போனான். ஆனால் ஐந்து மணிக்குத்தான் கடை திறக்கும் காத்திருந்தான். வேறு வழி ?
சரியாக ஐந்து மணிக்கு ஆனந்தன் கடையை திறந்த போது மேசையிலிருந்த மகேஷின் மொபைல் ஒலித்துக் கொண்டிருந்தது. எடுத்துப் பார்த்தவன் அதிலிருந்த போட்டோவைப் பார்த்து திகைத்து நின்றான். "போட்டோவில் இருக்கும் பெண்மணி யார்?"என்று கேட்டான்.
அது “எங்க அம்மா.! ஏன் ? என்று மகேஷ் சொல்லக் கேட்டதும் "உள்ளே வாங்க தம்பி" என்று அழைத்து உட்கார சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் ஏதும் பேசாமல் அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆனந்தன்.
"என்னங்க, டயமாச்சு என்ன விஷயம் ??" என்ற மகேஷிடம் "தம்பீ, நான் உன் தாய் மாமன். 30 வருடங்களுக்கு முன் கல்யாண விவகாரத்தால் பிரிந்து போன தங்கை நளினியை இப்போதுதான் உன் மொபைலில்பார்க்கிறேன். எங்கெங்கோதேடிப்பார்த்தேன்.
ஆனால் ரோஷக்காரி எந்த தகவலும் சொல்லவில்லை. எப்படி இருக்கிறாள் அவள்?" என்று நா தழுதழுக்க கேட்டான்.
மகேஷ் உற்றுப் பார்த்ததில் தன் அம்மாவின் சாயலை அவரிடம் தெரிகிறதா என்று துழாவினான்.
"அப்பா 10 வருடங்கள் முன்பு காலமாகிவிட்டார். நானும் அம்மாவும் இப்போது மதுரையில் வசிக்கிறோம்" என்றான்.
அவனிடம் மதுரை முகவரியை வாங்கிக்கொண்டு அடுத்த ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தோடு மகேஷின் வீட்டுக்கு சென்ற ஆனந்தன் வெகுநேரம் தங்கை நளினியிடம் பேசிவிட்டு "எங்கள் மகள் மல்லிகாவை மகேஷுக்கு கட்டி வைத்து புது கணக்கு தொடங்குவோம்" என்றதும் நளினி நமட்டு சிரிப்பு சிரித்தாள்.
"நம்மை எதிர்பாராமலேயே நம் பிள்ளைகள் அவர்கள் கணக்கை தொடங்கிவிட்டார்கள் அண்ணா" என்று சிரித்துவிட்டு மகேஷ் மறைத்து வைத்திருந்த மல்லிகாவின் ஃபோட்டைவை டீபாய் மீது வைத்தாள்.
ஓரமாக பூனைகள்போல் உட்கார்ந்திருந்த மல்லிகாவையும் மகேஷையும் பார்த்து வாய்பிளந்து நின்றனர் ஆனந்தன் தம்பதி.

Leave a comment
Upload