தொடர்கள்
ஆன்மீகம்
இராவணனின் சிவபக்தியும்..!! இசை ஞானமும்…!!! - ஆரூர் சுந்தரசேகர்.

Ravana's devotion to Shiva..!! and musical knowledge...!!!

இராமாயணம், நம் வாழ்வியல் தத்துவங்களையும், உறவுகளின் மேன்மையையும் விளக்கும் ஒரு பெருங்கடல். இராமாயணத்தில் இராமன் அவரது நான்கு சகோதரர்கள், சீதையைத் திருமணம் செய்து கொண்டது, பதினான்கு வருடங்கள் காட்டிற்குச் சென்றது, சீதையை இராவணன் கடத்தியது, ஹனுமான் மற்றும் அவரது வானர படை உதவியுடன் சீதையை இராவணனிடமிருந்து மீட்டு வந்ததை தான் சொல்வார்கள். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இராமாயணம் மேலோட்டமாக தான் தெரியும். இராமாயணத்தில் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு தனி வரலாறு இருக்கிறது, அதில் பலரும் அறியாத சில ஆச்சரியமான தகவல்கள் உள்ளன.

Ravana's devotion to Shiva..!! and musical knowledge...!!!

இராமாயண காப்பியத்தில் பிரதான எதிரியான இராவணன் பற்றி பலரும் அறிந்திருக்கலாம். நமக்கு இராவணன் ஒரு கொடூரமான அசுரன், பிறன்மனை கவர்ந்தவன் என அறியப்பட்டாலும், அவன் ஒரு சிறந்த அறிவு படைத்தவன் மற்றும் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவன் என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இராவணன் சிறந்த சிவபக்தன், சாம வேதத்தில் மிகவும் நிபுணத்துவம் பெற்றவன். அது மட்டுமின்றி இசையிலும் மிகச் சிறந்து விளங்கினான். இராவணன் மிகச்சிறந்த வீணை இசைக் கலைஞன், வீணை மீட்டுவதில் அவனுக்கு நிகர் அவனை. வீணை இசையின் வல்லமையை எடுத்துக்காட்டும் விதமாக, தனது நாட்டுக் கொடியில் வீணையின் சின்னத்தைப் பொறித்தான். இராவணன் தனது வீணை இசையில் காம்போதி ராகத்தை இசைத்ததால், சிவபெருமான் அந்த இசையில் லயித்து, இவனுக்குக் காட்சி கொடுத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
இராவணன் பேராற்றல் கொண்ட போர்வீரனாகவும், மிகச் சிறந்த நிர்வாகியாகவும் இருந்தான். மேலும் பல விசித்திரமான போர் ஆயுதங்களைத் தானே கண்டுபிடித்து அதை போர்க்களத்திலும் உபயோகித்திருக்கிறான். கயிலை மலையையே அசைத்த பராக்கிரமசாலி. கல்வி கேள்விகளிலும் மிகச் சிறந்தவன். கட்டடக் கலை, சிற்பக்கலையில் சிறந்தவன். இராவணன் ஆயுர்வேத மருத்துவம் நன்கு கற்றுணர்ந்தவன் எனவும், அதைப்பற்றிய பல புத்தகங்கள் எழுதியுள்ளான் எனவும் நாடி சாஸ்திரம் கூறுகிறது.

Ravana's devotion to Shiva..!! and musical knowledge...!!!

இராமாயணத்தில் இராவணனுக்குப் பத்துத் தலைகள் கொண்டவனாகவும் சித்தரிக்கப்படுகிறது. அவன் பத்துத் தலைகளோடு கூடிய அரக்கன் அல்லன், ஒரே நேரத்தில் பத்து விடயங்களைச் செய்யும் ஆற்றல் படைத்தவன், தசாவதானி.
இராவணன் மரணத் தருவாயில் இருக்கும்போது, ஸ்ரீ ராமர், அவரது தம்பி இலட்சுமணனை அழைத்து இராவணனுக்கு இறுதி மரியாதை செலுத்துமாறு கூறி, அவனிடமிருந்து சரியான ஆட்சி மற்றும் நிர்வாகத் திறனுக்கான வழிமுறையைக் கற்றுக் கொள்ளுமாறு கூறினார். அதனை ஏற்று இராவணனும் இலட்சுமணனுக்கு ஞானத்தைப் போதித்தார் என்று காப்பியங்கள் கூறுகின்றன.

Ravana's devotion to Shiva..!! and musical knowledge...!!!

இராவணன் வாழ்வில் செய்த பிழை, இராமனின் மனைவி சீதாவைக் கடத்திச் சென்று சிறை வைத்தது என்றாலும், முறைதவறி நடக்க முற்படவில்லை. சீதையைக் கடத்தி வரும் போதும், அவரைத் தொடாமல் அவர் இருந்த நிலத்தையே தூக்கி தன் விமானத்தில் வைத்தார் என்றே இதிகாசங்கள் கூறுகின்றன.
இதனால் இராவணன் மீது மதிப்பே ஏற்படுகிறது. விமர்சனத்திற்கும் அப்பால் உயர்ந்து நிற்கிறார். சீதையைக் கடத்திச் சென்றதாகக் கூறும் பகுதியை நீக்கிவிட்டுப் பார்த்தால் போர்த்திறனிலும் ஆட்சிச் சிறப்பிலும், அறிவியல், கலைகள் ஆகிய திறமைகளிலும் ஒப்பற்ற ஓர் பேரரசன்.

​ Ravana's devotion to Shiva..!! and musical knowledge...!!!

வால்மீகி இராமாயணத்தில் இராவணனின் தேஜஸ் ஆயிரம் சூரியன்களின் ஒளியைச் சேர்ந்து பார்ப்பது போல் ஸ்ரீராமர் எண்ணுவதாக வருகிறது. மற்றும் இப்பேர்ப்பட்ட ஒருவரை எதிரியாய் அடைந்து விட்டோமே என்று ஸ்ரீராமர் நினைப்பதாகவும் உள்ளது. ஸ்ரீராமர் அவர்களே இராவணனைப் பற்றி உயர்ந்த அபிப்பிராயம் கொண்டுள்ளபோது இராவணனின் நல்ல குணங்களைப் போற்றுவது தவறாகாது..

இராவணனது குடும்ப வரலாறு:
பிரம்மாவால் படைப்புத்தொழிலில் உதவி புரிபவரில் ஒருவரான புலஸ்திய முனிவரின் மகனான விஸ்ரவ மகரிஷிக்கும், அரக்கர் குல தலைவர் சுமாலியின் மகள் கைகேசிக்கும் பிறந்தவர்களே இராவணன், கும்பகர்ணன், வீபீடனன், சூர்ப்பனகை ஆவர். இராவணன் மயன் மகளாகிய மண்டோதரியை மணந்தான்.
இராவணன் - மண்டோதரிக்கும் ஏழு மகன்கள் அவர்கள் இந்திரஜித், அட்சயகுமாரன், திரிசிரன், அதிகாயன், பிரகஸ்தன் மற்றும் நராந்தகன் - தேவாந்தகன் (இரட்டையர்) ஆவார்.
குபேரன் இராவணனின் ஒன்றுவிட்ட அண்ணன் ஆவார். குபேரனுக்காக விஸ்வகர்மா இலங்கையில் அமைத்த அழகிய நகரத்தையும், விமானத்தையும் இராவணன் கைப்பற்றி அரசாண்டார்.

Ravana's devotion to Shiva..!! and musical knowledge...!!!

இராவணன் – இரு ஆவணன் என்பதற்குப் பேருரிமையுடையவன் என்று பொருளாகும். மேலும் இராவணன் என்பதற்குப் பிறர்க்கில்லா அழகன் என்னும் பொருளும் உண்டு. இராவணன் – இராவண்ணன் (இரா=இருள்=கருமை) என இருளைப் போன்ற கருமை நிறமுடையவன் என்று பொருளாகும் படியும் உள்ளது. பத்துத் தலை இராவணன், தசக்கிரீவன், தசகண்டன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பலபெயர்களின் இராவணன் அழைக்கப்பெறுகிறார்.

இராவணன் தீவிர சிவ பக்தர்:

Ravana's devotion to Shiva..!! and musical knowledge...!!!

இராவணன் சிவ பெருமானின் மீது அதி தீவிர பக்தி கொண்டிருந்தார். அன்றாடம் சிவபெருமானைத் தவறாது வழிபட்டு வந்தார். எப்பொழுதும் திருநீறு அணிந்திருப்பார். இலங்கை என்றும் அழியாமல் இருக்க, சிவபெருமானை நோக்கி தவமிருந்ததாகவும் குறிப்புகள் உள்ளன.
இராவணன் இசையால் சிவபெருமானை தன்வயப்படுத்த,
சிவனுக்காக தன்னுடைய உடலில் இருந்த நரம்புகளையே வீணை மீட்கும் கம்பிகளாக்கி இசை மீட்டியிருக்கிறார். இதனால் சிவபெருமான் இராவணனுக்கு அருள் புரியும் வகையில் சந்திரகாசம் எனும் வாளை கொடுத்துள்ளார். எல்லாவற்றையும் விட, தமக்கு இணையாக அவனுக்கு ஈஸ்வரன் (இராவணேஸ்வரன்) என்ற பட்டத்தையும் அளித்தார்.

Ravana's devotion to Shiva..!! and musical knowledge...!!!

தேவாரத்தில் இராவணன்:
இராவணன் சைவ சமயத்தவர்களால் போற்றப்படும் பன்னிரு திருமுறைகளையும் பாடிய சமய குரவர்கள் நால்வராலும் போற்றப்பட்டவர்.
மூன்று வயதில் தேவாரம் இயற்றத் தொடங்கிய திருஞானசம்பந்தர் முந்நூற்றைம்பதிற்கும் மேற்பட்ட தேவாரங்களில் இராவணனைப் பாடியுள்ளார்.

Ravana's devotion to Shiva..!! and musical knowledge...!!!

“கொடித்தேர் இலங்கைக் குலக்கோன்” – (ப.திருமுறை: 1: 33: 8)
“தென்னிலங்கையர் குலபதி” – (ப.திருமுறை: 2: 107: 8)
மற்றும் இவர் இராவணனை இயக்கரின் அரசனாகச் சொல்கிறார்.
இலங்கையில் வாழ்ந்த தமிழர்களை இயக்கர் எனவும், நாகர் எனவும் அழைத்ததையும் கண்டேன்.
“வானினொடு நீரும் இயங்குவோருக்கு
இறைவனாய இராவணன்” – (ப.திருமுறை: 1: 53: 7)
இராவணன் காலத்தில் இலங்கையில் வாழ்ந்தவர்கள் வானிலும் [வானில் விமானத்திலும்] நீரிலும் [நீரில் கப்பலிலும்] இயங்கித் திரிந்ததால் இயக்கர் என அழைக்கப்பட்டனர் என்பதைத் தெளிவுபடுத்துகிறார். இதைத்தவிர
“சாமவேதமோர் கீதம் ஓதியத் தசமுகன் பரவும்
நாமதேய முடையார்” – (ப.திருமுறை: 2: 92: 8)
இராவணன் சாமகீதம் பாடி வணங்கிய பொழுது வைத்த பெயரே, இறைவனின் பெயராக நிலைத்து இருக்கின்றது என்கிறார். இறை என்ற சொல்லை நினைத்து நினைத்து பயிற்சி செய்து பழகியவனாம் என்பதை
“இறை பயிலும் இராவணன்” -(ப.திருமுறை: 3: 66: 8)
எனக்கூறிப் போற்றியுள்ளார்.
இராவணன் யாழிசையில் வல்லவன் என்பதை
“ ஏழிசை யாழ் இராவணன்” – (ப.திருமுறை: 3: 117: 8) என்றும்
“விரலினால் நீடி யாழ் பாடவே” – (ப.திருமுறை: 3: 24: 8) என்றும் தேவாரத்தில் எடுத்துச் சொல்லி இராவணனை ஓர் மாபெரும் இசையாளனாகக் காட்டியுள்ளார்.

இவ்வாறாகத் திருஞானசம்பந்தர், தான் பாடிய ஒவ்வொரு பதிகத்திலும் எட்டாவது பாடலில் இராவணனைப் பாடியிருக்கிறார்

Ravana's devotion to Shiva..!! and musical knowledge...!!!

திருநாவுக்கரசர் பத்தாவது பாடலில் பாடியுள்ளார்.
“கங்கை நீர் சடையுள் வைக்கக் காண்டலும் மங்கையூட
தென்கையான் தேர்கடாவிச் சென்றெடுத்தான் மலையை”
– (ப.திருமுறை: 4: 34: 10)
தெற்கத்தையான் ஆன இராவணன் தேர் ஓட்டிச் சென்று மலையை எடுத்தான் எனக்கூறும் திருநாவுக்கரசரே
“தென்னவன் மலையெடுக்க சேயிழை நடுக்கம் கண்டு”
– (ப.திருமுறை: 4: 43: 10) எனக் கூற,

சுந்தரமூர்த்தி நாயனார், இவர்களுக்கு எல்லாம் ஒருபடி மேல் சென்று இராவணனுக்கு இறைவன் அருள்செய்த திறத்தைக் கண்டே தான் இறைவனின் திருவடியை அடைந்ததாகாக் கூறுகிறார்.
“எறியு மாக்கடல் இலங்கையர் கோனைத்
துலங்க மால்வரைக் கீழடர் திட்டுக்
குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டு
கோலவாளொடு நாளது கொடுத்த
செறிவு கண்டு நின் திருவடி அடைந்தேன்”
– (ப.திருமுறை: 7: 55: 9)

இசையும் பக்தியும் :

Ravana's devotion to Shiva..!! and musical knowledge...!!!

இராமாயணத்தில் இராவணனை ஓர் கொடூரமான அரக்கனாக மட்டுமே பெரும்பகுதி சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிறந்த ஆட்சியிலும், வேதங்கள் அனைத்தையும் கற்றுத்தேர்ந்த இராவணன் மிகப்பெரிய இசைக் கலைஞர், வீணை வாசிப்பதிலும் வித்தைக்காரராக இருந்துள்ளார். தனக்கென்றே இராவண வீணா என்ற இசைக்கருவியை உருவாக்கினார். இராவணன் சாம வேதத்தில் நிபுணத்துவம் பெற்றவர். இதனை இராமாயணமே எடுத்தியம்புகிறது. இவர் தனது கை நரம்புகளால் சாம கானம் பாடி சிவனை மகிழ்வித்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது. அதில் சிவனைப் போற்றும் வகையில் சிவ தாண்டவத்தின் சில பாடல்களை இசைத்திருக்கிறார். இசைக்கு மயங்காத இதயம் எதுவும் இல்லை.

கைலாயத்தைத் தூக்கிய இராவணன்:

Ravana's devotion to Shiva..!! and musical knowledge...!!!

ஒருமுறை கைலாயத்தை இலங்கையில் வைக்க விரும்பிய இராவணன் வடக்கே சென்று, எந்த வித கடினமும் இல்லாமல் இமயத்தைத் தூக்கி தன் நாடு நோக்கி நடந்தான். மலையில் திடீரென ஏற்பட்ட ஆட்டத்தை உணர்ந்த பார்வதி தேவி பாதுகாப்பு வேண்டி சிவனிடம் ஓட, நடந்ததை அறிந்த சிவன், இராவணனுக்கு ஒரு பாடம் புகட்ட விரும்பி தன் இடது கட்டைவிரலால் மலையைச் சற்று அழுத்த, தப்பிக்க வழியின்றி கீழே மாட்டிக் கொண்டான் இராவணன். அப்போது தன் தொடை நரம்பினால் வீணை போன்ற ஏற்பாடு செய்து, சாம வேதப் பாடல்களைப் பாட, மனம் இரங்கினார் சிவ பெருமான், பின், இராவணனைச் செல்ல அனுமதித்தார்.

சிவ தாண்டவ ஸ்தோத்திரம் :
சிவபெருமானை ஆடலரசன், நடராஜன் என்று கூறுவர். ஆடவருக்கே உரியத் தாண்டவம் எனும் நடனவகையில் அவர் தலைசிறந்த விற்பன்னர். மிக விறுவிறுப்பான இந்த நடனத்தை ஆண்களால் மட்டுமே ஆட இயலும். சிவபெருமானுடைய இந்தத் தாண்டவ நடனத்தைப் பற்றிய ஒரு அருமையான ஸ்தோத்திரம் சமஸ்கிருதத்தில் உள்ளது. நடனத்தின் ஜதிகளுக்கேற்றவாறு இந்த ஸ்தோத்திரத்தின் சொற்பிரயோகங்கள் அமைந்து படிப்போரைப் பரவசப்படுத்துகின்றன. இதனை இயற்றியவர் இராவணன். இந்தச் சிவதாண்டவ ஸ்தோத்திரத்தினையும் பாடுகிறார். இவற்றினால் மனமகிழ்ந்த சிவபெருமான் அவனை விடுவித்து, அவன் பக்தியை மெச்சி சந்திரஹாசம் எனும் வாளையும் பரிசளிக்கிறார்.

Ravana's devotion to Shiva..!! and musical knowledge...!!!

சிவதாண்டவத்தின் ஜதிகளுக்கேற்ப சொற்களைப் பயன்படுத்தி அவன் இயற்றியுள்ள இந்த சமஸ்கிருத ஸ்தோத்திரம் படிக்கவே இனிமையாகவும் கம்பீரமாகவும் இருக்கும். பெரும்பாலான அடிகளில் ஒரே எழுத்தில் தொடங்கும் (மோனை) பலவிதமான பொருள்கொண்ட சொற்கள் அமைந்து தாண்டவத்தின் ஆண்மைத்தனமான அழகை (பௌருஷத்தை) சித்தரிக்கின்றன. சொற்கள் எழுப்பும் ஒலிகளும் வார்த்தை ஜாலங்களாகி நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
இது சிவபெருமானின் அழகையும் ஆற்றலையும் புகழ்ந்து பாடும் சங்கத மொழிப் பாடலாக விளங்குகின்றது. தாளம் போடவைக்கும் நடையும் எதுகை மோனையும் இப்பாடலின் சிறப்பம்சமாகவுள்ள அதே சமயம், அதில் மயங்கி ஈசனே நடனமாடுவார் என்ற பொருளில் "சிவ தாண்டவ ஸ்தோத்திரம்" எனும் பெயர்க் காரணப் பெயராகவும் அமைகின்றது.

இராமாயணத்தில் வீணைக் கொடி:

Ravana's devotion to Shiva..!! and musical knowledge...!!!

வீணைக் கொடியை தன் கொடியாகக் கொண்ட இராவணன் என்பவனை போதிய ஆதாரங்கள் மூலம் அறிய முடியாவிட்டாலும் இராமாயணம் மற்றும் தேவாரங்களில் இருந்தும் சில சிங்கள நூல்களில் இருந்தும் தெரிகிறது.
வால்மீகி இராமாயணத்தில்தான் இதற்கான ஆதாரம் உள்ளது. சீதையைத தேடிச் சென்ற அனுமன், இராவணனின் அந்தப்புரத்தில் நுழைந்த போது, ‘விபஞ்சி’ என்ற ஒரு வகை வீணையுடன் பல பெண்கள் தூங்குவதைக் காண்கிறார். ஒரு பெண்மணி வீணை வாசித்த களைப்பில் அதைக் கட்டிக்கொண்டு உறங்கும் காட்சியும் வருகிறது. இந்த காட்சி சுந்தர காண்டத்திலும் வருகின்றது. ஆயினும் இராவணன் சாம கானப் பிரியன், சிவ பக்தன் , வீணை வாசிப்பதில் வல்லவன் என்று கேட்டபோதிலும் அவன் வீணை வாசிக்கும் காட்சியை வால்மீகி வருணிக்கவில்லை.
இராவணனுக்கும் வீணைக்கும் உள்ள தொடர்பைப் போர்க் களத்தையே வீணை வாசிப்பதற்கு ஒப்பிடுகிறார்.
யுத்த காண்டத்தில் வால்மீகி பின்வருமாறு உவமையாகக் கூறியுள்ளார்.
போர்க்களம் என்பதை ‘வீணையாகவும்’ அதில் இராவணன் பயன்படுத்தும் வில், அம்புகள் வீணை வாசிக்கும் கருவியாகவும் கூறியுள்ளார். இதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் இராவணனிடம் ‘ராவண ஹஸ்தக’ என்ற விசேஷ வகை வீணை இருந்ததாகவும், அதனை வயலின் வாசிப்பது போல இராவணன் வயலின் வில்லால் வாசிப்பாராம். ஆக்கையால்தான் போர்க்களத்தை வீணைக்கு ஒப்பிடும் உவமையை வால்மீகி பயன்படுத்துகிறார்.
கம்பனும் ‘இராவணன்- வீணை’ தொடர்பைப் பல பாடல்களில் ‘வீணைக்கொடி’ மூலம் விளக்குகிறார் .
ஆரண்ய காண்டத்தில் இராவணனுடன் சடாயு போரிட்ட காட்சியை வர்ணிக்க வந்த கம்பன் வீணைக் கொடியைப் பற்றிச் சொல்லியுள்ளார்.
“இடிப்பு ஒத்த முழக்கின், இருஞ் சிறை வீசி எற்றி,
முடிப் பத்திகளைப் படி இட்டு, முழங்கு துண்டம்
கடிப்பக் கடிது உற்றவன், காண்தகும் நீண்ட வீணைக்
கொடி பற்றி ஒடித்து, உயர் வானவர் ஆசி கொண்டான்.
பொருள் :-
இடி முழக்கத்துடன் பறந்து வந்து, சிறகுகளால் ராவணன் தலைகளைத் தள்ளிவிட்டு , நீண்ட வீணைக்கொடியைப் பழித்து ஒடித்து, அச்செயல் மூலம் தேவர்களின் வாழ்த்துக்களைப் பெற்றான்.

கம்பன் மறுபடியும் சடாயு உயிர் நீத்த படலத்தில் வீணைக்கொடியை ஞாபகப்படுத்துகிறார்
இராமனும் இலக்குவனும் தெற்கு நோக்கி பயணம் செய்கையில் சடாயு இறந்த இடத்தில் வீணைக்கொடி ஒன்று தரையின் மீது கிடந்ததைக் கண்டனர் என்று….
“ஆகும்; அன்னதே கருமம்' என்று, அத் திசை நோக்கி,
ஏகி, யோசனை இரண்டு சென்றார்; இடை எதிர்ந்தார்,
மாக மால் வரை கால் பொர மறிந்தது மான,
பாக வீணையின் கொடி ஒன்று கிடந்தது பார்மேல்.”
இதற்கு அடுத்த சில பாடல்களில் சடாயுதான் சீதையைக் கவர்ந்த பகைவருடன் போரிட்டு இதைச் செய்திருக்க வேண்டும் என்று இராமன், இலக்குவனிடம் சொல்லி கண்ணீர் விடுகிறார்.
கம்ப இராமாயண யுத்த காண்டத்தில், முதற் போர் புரி படலத்தில் வரும் பாடல்

“ஏழிசைக் கருவி வீற்றிருந்தது என்னினும்
சூழிருந்திசைகளைத் தொடரும் தொல்கொடி
வாழிய உலகு எலாம் வளைத்து வாய் இடும்
ஊழியின் அந்தகன் நாவின் ஓங்கவே”
பொருள்:-
“தேரிலே ஏழிசைக் கருவியாகிய வீணையின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது .அந்தக் கொடி காற்றில் திக்குகள் தோறும் படபடத்தது. அது யமனுடைய நாக்கு போல இருந்தது ஊழிக் காலத்தில் உலகத்தை எல்லாம் தனது வாய்க்குள் போட்டு விழுங்கும் யமனின் நாக்கு போல உயர்ந்து விளங்கியது”.
யுத்த காண்டத்தில், இன்னும் ஒரு பாடலில் கம்பன் வீணைக்கொடியின் அவல நிலையைக் கூறுகின்றார்…
“எழுத்து வீணை கொடு ஏந்து பதாகை மேல்
கழுகும் காகமும் மொய்த்தன”
பொருள்:-
வரையப் பெற்ற வீணையைச் சின்னமாகக் கொண்ட ராவணனின் கொடி மீது காகமும் கழுகும் மொய்த்தன .

இராவணனைப் பற்றி போகர்:

Ravana's devotion to Shiva..!! and musical knowledge...!!!

சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கிய போகர், பதினெண் சித்தர்களில் ஒருவர். இவர்தான் நவபாசானத்தால் பழனி முருகன் சிலையைச் செய்தவர். சித்த மருத்துவம் பற்றிப் பல நூல்கள் எழுதியுள்ளார். இவர் இராவணனை ‘போகர் ஏழாயிரம்’ என்ற நூலில் இராவணனார் எனப் பெருமதிப்புடன் குறிப்பிடுவதைக் கீழுள்ள பாடலில் காணலாம்.
“ கூறுவேன் இலங்கைபதி மார்க்கந்தன்னை கொற்றவனே புலிப்பாணி மைந்தகேளு
தேறுபுகழ் நவகண்டந் தன்னிலப்பா தேர்வேந்தர் ராஜர்களின் கோட்டைதன்னில்
வீறுபுகழ் இராவணனார் கோட்டையப்பா விண்ணாழி கோட்டையது விளம்பப்போமோ
மாறுபடாக் கோட்டையது வளப்பஞ்சொல்வேன் மகத்தான வசதிகள் மெத்தவுண்டே” – (போகர் 7000, 6வது காண்டம் – 84)
சிலேடையாக மனிதவுடலை இராவணன் கோட்டையாகக் குறிப்பிடுவதாயினும் இலங்கையையும் இராவணனையும் போகர் எத்தனை பாடல்களில் குறிப்பிடுகிறார் என்பதை இந்நூலைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

இராவணன் தன் கோட்டையைச் சுற்றி மூலிகை அரணை அமைத்திருந்ததாகவும், தனது கோட்டைக்குள் நுழைந்தவர்கள் மூலிகை அரணை கடக்கும் போது, மனம் மயங்கி, புத்தி மாறி, தான் எங்கு, எதற்கு வந்தோம் என்ற சுயநினைவை இழக்கும். அளவிற்கு இராவணன், அரிய மூலிகையைக் கண்டறிந்து கையாண்டுள்ளார்.

இராவணன் எழுதிய நூல்கள்:
இலங்கையை வியத்தகு நல்லாட்சி புரிந்த அரசன், இசை, இலக்கியம், மருத்துவம் மற்றும் சிறந்த அறிவியல் ஞானமும் கொண்டவன் என்பதற்கு ஒரு உதாரணம் புஷ்பக விமானம். மருத்துவத்திலும் சிறந்தவன் என்பதற்கு இராவணன் எழுதிய இந்த நூல்களே சாட்சி...

Ravana's devotion to Shiva..!! and musical knowledge...!!!

இராவணன் பல அரிய நூல்களை எழுதியுள்ளான். அவன் எழுதிய நூல்கள் 27 ஆகும். அவை பின்வருமாறு…
1. உடற்கூறு நூல்
2. மலை வாகடம்
3. மாதர் மருத்துவம்
4. இராவணன் – 12000
5. நாடி, எண்வகை பரிசோதனை நூல்
6. இராவணன் வைத்திய சிந்தாமணி
7. இராவணன் மருந்துகள் - 12000
8. இராவணன் நோய் நிதானம் - 72 000
9. இராவணன் – கியாழங்கள் – 7000
10. இராவணன் வாலை வாகடம் – 40000
11. இராவணன் வர்ம ஆதி நூல்
12. வர்ம திறவுகோல் நூல்கள்
13. யாழ்பாணம் – மூலிகை அகராதி
14. யாழ்பாணன் – பொது அகராதி
15. பெரிய மாட்டு வாகடம்
16. நச்சு மருத்துவம்
17. அகால மரண நூல்
18. உடல் தொழில் நூல்
19. தத்துவ விளக்க நூல்
20. இராவணன் பொது மருத்துவம்
21. இராவணன் சுகாதார மருத்துவம்
22. இராவணன் திராவக தீநீர் நூல் – அர்க்க பிரகாசம்
23. இராவணன் அறுவை மருத்துவம் – 6000
24. இராவணன் பொருட்பண்பு நூல்
25. பாண்ட புதையல் முறைகள் – 600
26. இராவணன் வில்லை வாகடம்
27. இராவணன் மெழுகு வாகடம்

இராவணன் கோயில்கள்:

Ravana's devotion to Shiva..!! and musical knowledge...!!!

இதிகாசங்களின்படி, இராவணன் தீமையே உருவான அரக்கனாக இருந்தாலும், சிறந்த சிவ பக்தனான இராவணன் ஒரு சில மக்களுக்கு இன்னும் தெய்வமாகவே விளங்குகிறான். இராவணனுக்குக் கோவில் கட்டி வழிபாடும் நடத்துகின்றனர்.
இராவணன் கோயில் , பிஸ்ரக்ஹ் ,கிரேடர் நொய்டா ,உத்தரப் பிரதேசம்,இந்தியா. இது இராவணனின் பிறந்த ஊர் என்று சொல்லப்படுகிறது, மேலும் இராவணன் இறந்த தினமான தசரா அன்று இராவணனுக்குத் துக்கம் கடைப்பிடிக்கப்படுகின்றது .
இராவணன் கோவில், இராவண கிராமம், விதிஷா மாவட்டம், ,மத்தியப் பிரதேசம், இந்தியா. இந்த கிராமத்திலுள்ள ஆயிரக்கணக்கான கன்னியா குப்ஜா பிராமண பிரிவைச் சார்ந்தவர்கள் இங்குள்ள இராவணன் கோயிலில் தினமும் பூசைகளும், நெய்வேத்யங்களும் செய்து வருகின்றனர்.
இராவணன் கோயில் ,கான்பூர் ,உத்தரப் பிரதேசம்,இந்தியா.
சில நூற்றாண்டுகளுக்கு முன் சிவஷங்கர் என்னும் மன்னனால் கட்டப்பட்டது . இந்த கோயில் வருடத்திற்கு ஒருமுறை தசரா தினமன்று திறக்கப்பட்டு, அன்று இராவணனின் நலனுக்காகச் சிறப்புப் பூஜைகளும் சடங்குகளும் செய்யப்பட்டு வருகிறது.
இராவணன் கோயில், ஜோத்பூர் /மண்டூர் ,குஜராத் .
இந்திய தேவ் பிராமண இனத்தவர்களால் இந்த கோயிலில் பூஜைகள் செய்யப்படுகின்றன, இவர்கள் தாங்கள் இராவணனின் வழித்தோன்றல்கள் எனக் கூறுகின்றனர், மேலும் இராவணன் இறந்த தினமான தசரா அன்று இராவணனுக்குத் துக்கம் அனுஷ்டித்து, அன்றைய தினம் பிண்டம் வைத்து தென்புலத்தார் கடனையும் தவறாமல் செய்து நீராடுவதை வழக்கமாக கடைப்பிடிக்கின்றனர்
இராமன் நாமம் இருக்கும் வரை, இராவண நாமமும் நிலைத்திருக்கும்:
இறுதிப் போரில் இராவணன் விடுத்த சூலத்தினை இராமன் தவிடுபொடியாக்கிய உடன், யாரிவன் இந்த இராமன் என்று ஐயுற்று இவ்வாறாகச் சொல்கிறான்:
முன்பு தன் சகோதரன் விபீடனனார் சொன்னதுபோல்,
“சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்; திருமாலாம்
அவனோ? அல்லன்; மெய் வரம் எல்லாம் அடுகின்றான்;
தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்;
இவனோதான் அவ் வேத முதல் காரணன்?” என்றான்.
(கம்பராமாயணம் – இராவணன் வதைப்படலம் 135.)
சிவன், பிரம்மன், திருமால் – இவர்களில் யாருமல்லன் இராமன் – இவர்களுக்கெல்லாம் மேலான பரமன் – வேதமுதல்வனோ என்கிறான்.

இவனே தான் வேதங்கள் கூறும் மும்மூர்த்திகளுக்கும் மேலான முழுமுதற் பொருள்! என இராமரைப் பார்த்து உறுதியாக நினைத்தானாம் இராவணன். ஆனாலும் இராமன் தெய்வம் என்றால், அவன் நாமம் இருக்கும் வரை, என் பெயரும் நிலைத்திருக்கும்! என்றெண்ணியே போரைத் தொடர்ந்தான் இராவணன்.

Ravana's devotion to Shiva..!! and musical knowledge...!!!

உலகில் மலைகளும் நதிகளும் இருக்கும் வரை இந்த இராமாயணக் கதை உலகங்களில் விளங்கப் போகிறது என்று ஆசீர்வதித்தார் பிரம்மா.
யாவத் ஸ்தாஸ்வந்தி கிரய: சரிதஸ்ச மஹீதலே I
தாவத் ராமாயணகதா லோகேஷு ப்ரசரிஷ்யதி II
– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், முப்பத்தேழாம் ஸ்லோகம்
பூமி உள்ளவரை இராமாயணம் ஒலிக்கும்!!


இராவணனுக்கு எத்தனையோ நல்ல குணங்களும், அரிய திறமைகளும் கொட்டிக்கிடந்தாலும், இராவணன் செய்த ஒரு பிழையால், இவை அனைத்தும் மறைக்கப்பட்டன,
மறக்கப்பட்டன. இதற்கு இராவணன் தன்னைத் தவிர வேறு எவரையும் குற்றம் சொல்ல முடியாது. நன்மைகள் நம்மிடம் பல இருந்தாலும், நாம் செய்யும் தீமை ஒன்றே என்றும் நின்று பேசும் என்பதற்கு இராவணனின் வாழ்க்கையே ஒரு சிறந்த உதாரணம்!!

Ravana's devotion to Shiva..!! and musical knowledge...!!!