தொடர்கள்
கதை
அம்முகுட்டியும் அம்பிகையும் - எச் ஶ்ரீதுரை

20261007060841470.jpeg

கோயில் வாசலில் முனியம்மா போட்டிருந்த கோலம் பளிச்சுனு சிரிக்கிறது. நல்ல மனுஷி. உழைப்பாளி. காலமே மூணு மூணரைக்கெல்லாம் வந்து கோலம் போட்டுட்டுப் போய்விடுவாள்.

பிசு பிசுன்னு பெய்ஞ்சுண்டிருக்கிற ஆகாசம் எப்பொழுது வேனும்னாலும் பொத்துக்கொண்டு கொட்டுவேன்னு சொல்ற மாதிரி நிறைசூலியா நிக்கறது.

ஸ்ரீசம்ரட்சணாம்பிகை சமேத நீலகண்டேசுவரர் திருக்கோயில் ராஜகோபுரத்தோட அஞ்சு நிலைகளில் இருக்கிற பல்புகள் ஒண்ணு ரெண்டு இப்பவோ அப்பவோன்னு கண் சிமிட்டிண்டு இருக்குது. ராஜகோபுரத்தோட நட்டநடு செண்டர்ல ரெண்டாவது நிலைக்கும் மூணாவது நிலைக்கும் நடுவுல இருக்குற “சிவ சிவ” லைட்டு சிவப்புக் கலர்ல ஜொலிக்கறது. ராஜகோபுர உச்சியில் இருக்கிற பல்பு வெள்ளை வெளேர்னு கலங்கரை விளக்கம் மாதிரி பிரகாசிக்கிறது.

பிரதான கதவுல இருக்கிற திட்டி வாசலைத் திறந்து கொண்டு கோயிலுக்குள்ளே நுழையறேன். வாட்சுமேன் செல்வராஜ் ராத்திரி முழுக்கப் பிடிச்சுப்போட்ட பீடியோட நெடி ஒரு சுத்து சுத்தி வருது. கோயிலுக்குள்ள பீடி குடிக்காதேடான்னு சொன்னால் கேட்டாதானே? அந்த வரைக்கும் தண்ணி கிண்ணி போட்டுட்டு காவலுக்கு வராமல், பீடியோடு நிறுத்திக்கிறானேன்னு திருப்திப்பட்டுக்க வேண்டியதுதான்.

தினந்தோறும் பொழுதுவிடிஞ்சதும் திட்டிவாசல் கதவைத் திறந்து வெச்சுட்டு நந்தவனக் கிணத்துல குளிக்கப் போயிடுவான். இன்னைக்கு தீபாவளின்னு சீக்கிரமே குளிக்கப் போயிருக்கான் போலிருக்கு.

கொடிமரத்தைப் பார்த்துக் கும்பிட்டுக் கன்னத்தில் போட்டுண்டு, “ஸ்ரீநீலகண்டேஸ்வரா, சம்ரட்சணாம்பிகே, இன்னிய பொழுது நன்னாப் போகணும்னு வேண்டிண்டு இடுப்புல இருக்கிற சாவிக்கொத்தைக் கையில எடுக்கிறேன்.

தீபாவளியும் அதுவுமா இன்றைக்கு வழக்கத்தைவிடக் கொஞ்சம் அதிகமாகவே ஊர் ஜனங்கள் வருவா. எனக்குக் கல்யாணம் ஆன கையோடு ஒரு பையன் பொறந்திருந்தால் இன்னேரம் அவனுக்குப் பூணூல் போட்டு, பூஜை புனஸ்காரங்களையெல்லாம் கத்துக் குடுத்து கூடமாட ஒத்தாசை செய்யக் கூப்பிட்டு வந்திருப்பேன். ஹூம்.

அபச்சாரம். அபச்சாரம். ஆண் குழந்தை இல்லாமப் போனால் என்ன? தங்க விக்ரஹமாட்டம் எங்கள் சம்ரட்சணாம்பிகையே அம்முக்குட்டின்ற பேருல ஒரு பொண்ணா வந்து எங்காத்துல பொறந்திருக்காளே. இதைவிட வேறு பாக்கியம் எனக்கு என்ன வேணும்?

சாதாரண நாளுல இந்தக் கோயில் காத்து வாங்கிட்டுதான் இருக்கும். காலையில பத்து மணிக்கே கதவைப் பூட்டினாக் கூட ஏன்னு யாரும் கேட்டுட மாட்டா. ஏதோ இன்னிக்கு தீபாவளிப்பண்டிகையும் அதுவுமா நாலு மனுஷாள் வந்தால் ஒண்டியாக சமாளிக்க மாட்டேனா என்ன?

“அப்பா, நீ வந்தப்புறம்தான் நான் புது டிரெஸ்ஸு உடுத்திப்பேன். சீக்கிரமா வந்துடு!”

அம்முக்குட்டி சொன்னது கண்டாமணிச் சப்தம் மாதிரி என் காதிலேயே புரண்டுண்டு இருக்கு.

வருஷாவருஷம் தீபாவளி, பொங்கல் பண்டிகை நாள்களில் மத்த எல்லோரையும் மாதிரி தன் அப்பாவுடன் பண்டிகையைக் கொண்டாடமுடியலைன்னு குழந்தைக்குக் கோபம். ஆசை ஆசையாய் வாங்கிக் கொடுத்த பாவாடை தாவணியை கங்காஸ்நானம் ஆன கையோடு உடுத்திக்கொள்ள மாட்டேன் என்று குழந்தை பிடிவாதம் பிடிக்கிறாள்.

“சீக்கிரம் வந்துர்றேண்டா அம்முக்குட்டி” ன்னு சொல்லிண்டே அம்பாள் சன்னிதிக் கதவைத் திறக்கிறேன்.

“யார் கிட்ட சாமி பேசிக்கிட்டிருக்கே” அப்பிடின்ற குரலைக் கேட்டுத் திரும்பிப் பாக்கறேன். வாட்சுமேன் செல்வராஜ் குளிச்சுட்டு ஜம்முனு நெத்தி நிறைய விபூதியோட நிக்கறான். இந்தப் புழுத்துப்போன லுங்கி இல்லாம வேஷ்டி கட்டிண்டிருந்தான்னா இன்னும் கூட நன்னா இருப்பான். அது சரி. நான் மனசுக்குள்ளே பேசிண்டது இவனுக்கு எப்படிக் கேட்டதுன்னுதான் தெரியலை.

“இந்தாப்பா, மத்த எல்லா சந்நிதிகளையும் தொறந்து சுவிட்சைப் போடு”ன்னு அவன் கிட்டே சொல்லிட்டு அம்பாளுக்கு ரெண்டு பக்கமும் தொங்கற சரவிளக்குகள்ல எண்ணை விட்டுப் புதுத் திரி போட்டு ஏத்தினேன். திருமேனியில இருக்கிற பழைய பூவையெல்லாம் களைஞ்சு கையோடு கொண்டுவந்த சம்பங்கி மாலையைப் போட்டதும், “வாடா பையா, குட்மார்னிங்” னு எங்க சம்ரட்சணாம்பிகை ஒரு சிரிப்புச் சிரிக்கிறாள்.

சட்டுனு என் உடம்பு முழுக்கச் சிலிர்க்குது. வாய் தன்னைப்போல “ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை” ன்னு முணுமுணுக்க ஆரம்பிக்குது.

எங்க அம்பாள் சம்ரட்சணாம்பிகை பேசும் தெய்வமில்லையா?

திருப்பாற்கடலைக் கடைஞ்சப்போ கிளம்பின ஆலகால விஷத்தை முழுங்கிட்டு எங்க நீலகண்டேஸ்வரர் சித்த நேரம் மயங்கி ஓய்வு எடுத்தபோது இந்த அம்பாள்தான் சகல லோகங்களையும் சம்ரட்சணம் பண்ணினதா ஸதலபுராணம். அத்னாலத்தான் அம்பாளுக்கு சம்ரட்சணாம்பிகைங்கிற திருப்பெயரும் ஏற்பட்டது.

மத்தவாளுக்கு எப்படியோ. எங்கள் அம்பாள் என்னையும் என் குடும்பத்தாரையும்சம்ரட்சிக்கிறாள். கைவிடாமலிருக்கிறாள். அவ்வப்பொழுது என்னோடு பேசவும் செய்கிறாள்.

என்ன நம்பமாட்டேங்கறேளா?

நீங்கள்ளாம் நம்புறதும், நம்பாததும் உங்க இஷ்டம். என்னோட சம்ரட்சணாம்பிகை என்னோடு பேசுவாள். அவ்வளவுதான்.

​​​@@@@ @@@@ @@@@ @@@@

ஜவுளிக்கடை உபயத்துல கோயில் சுவத்துல தொங்கற சுவர்க்கடிகாரம் அஞ்சரை மணியைக் காட்டறது.

உடம்பும் மனசும் பரபரக்கிறது.

ஈசுவரன், நடராஜா, பிள்ளையார், சண்முகர், பைரவர், சண்டிகேஸ்வரர், நவக்கிரகம், நந்தி எல்லாரையும் எழுப்பிவிட்டு, அங்கங்கே விளக்கேத்தி, பழைய பூவைக் களைஞ்சு புதுப்பூவைச் சூட்டினபிறகு, மடப்பள்ளியைத் திறந்து மளிகைச் சாமான்களையெல்லாம் எடுத்துத் தயாரா வெக்கணும். இன்றைக்கு தீபாவளி ஸ்பெஷல்ங்கிறதாலே, நிறைய பிரசாதங்கள் செய்யணும்னு தர்மகர்த்தா உத்தரவு. எக்ஸ்ட்ராவா கொஞ்சம் பணம் படியளக்கிறேன்னு தர்மகர்த்தா சொன்னதாலே என் ஃப்ரெண்டு வைத்தாவை பிரசாதம் சமைக்க வரச்சொல்லியிருக்கேன்.

மத்த நாளிலேல்லாம் நான் ஒருத்தனே சமாளிச்சுடுவேன். தினப்படி பிரசாதம்னா வேற ஒண்ணும் கிடையாது. காலையில் ஒருபடி அரிசிச் சாதம். சாயரட்சைக்கு ஒருபடி சாதம். அதுல பாதியை வாட்சுமேனுக்கும், கூட்டிப்பெருக்குற முனியம்மாவுக்கும் கொடுத்துட்டு மீதியை நான் எடுத்துண்டு போயிடுவேன். நான், என் பெண்டாட்டி, அம்முக்குட்டி மூணு பேருக்கும் அது தலைக்குமேலே வெள்ளம். ஒரு குழம்போ, துவையலோ செஞ்சு அப்பளாம் சுட்டுட்டா அதுவே பரமபோக்யம். மத்தபடி காப்பிக்கு ஆகிற செலவுதான் பிரதானம்.

சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, கிருத்திகை என்றால் சுண்டல், தயிர்சாதம் உண்டு. வெள்ளிக்கிழமைகளிலே அம்பாளுக்குச் சக்கரைப்பொங்கல் நைவேத்தியம் செஞ்சாகணும். அதெல்லாம் நானே ஒண்டியா சமாளிச்சுடுவேன்.

எல்லா சுவாமிகளுக்கும், அம்பாளுக்கும் தீபாவளிக்குப் புதுத் துணி சாத்தணும். வடக்குப்பட்டி ஜமீந்தார் குடும்ப உபயம். நடராஜா, சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகருக்கும் மட்டும் தீபாவளி அன்னைக்கு அபிஷேகம். அதுவும் ஜமீந்தார் உபயம்தான். காலையில பத்து மணிக்கெல்லாம் அபிஷேகத்துக்கு உபயதாராள் வந்துடுவா. வயசாயிட்டதாலே இப்பல்லாம் ஜமீந்தாரரும், அவர் பாரியாளும் வர்றதில்லே. அடுத்த வாரிசுகளுக்கும் இதிலெல்லாம் அக்கறையில்லை. நாலஞ்சு வருஷமா ஜமீந்தாரோட கணக்குப்பிள்ளைதான் வந்து மரியாதையை வாங்கிண்டு போறார்.

இப்பொழுதுதான் லேசாப் பொழுது விடியறது. ஏழு மணிக்கெல்லாம் ஊர்க்காராள் ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சுடுவா. அதுக்குள்ள எல்லா மூர்த்திகளுக்கும் புதுத்துணிகளை சாத்திடணும். நீலகண்டருக்கு பத்துமுழம் புது ஜரிகை வேஷ்டி அம்சமா இருக்குது. “அப்புறமா வந்து திருஷ்டி சுத்திப் போடறேம்பா ஈச்வரா!” ன்னு சொல்லிட்டு சம்ரட்சணாம்பிகை சந்நிதிக்குப் போய் அம்பாளுக்கு அருமையானமாம்பழ நிறப்பட்டிலே அரக்குக் கலர் ஜரிகை பார்டர் போட்ட புதுப்புடவையை சாத்தும்பொழுது என் கண்ணுல களுக்குனு தண்ணீர் எட்டிப்பார்த்தது.

“என்னடா பையா?” ன்னு அம்பாள் என்னை விசாரிக்கிறாள்.

“அம்மா, கோவிச்சுக்கப் படாது. தீபாவளியும் அதுவுமா ஆத்துல என் கொழந்தை அம்முக்குட்டி நான் வராம புதுத்துணி உடுத்தமாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறது. குருக்களும், பட்டர்களும் குடும்பத்தோடு எந்தக் காலத்துல எந்த பண்டிகையைக்கொண்டாட முடியறது, நீயே சொல்லும்மா அம்பிகே!”

“இப்ப நான் என்ன பண்ணணுங்குறே?”

“அம்மா, ஒனக்குத் தெரியாத விஷயம் உண்டாம்மா? இன்னிக்கு தீபாவளி. வழக்கத்தை விடக் கொஞ்சம் அதிகமா உள்ளூர் ஜனங்கள் கோயிலுக்கு வருவான்னு எதிர்பார்க்கலாம். வர்றவாளுக்கு விபூதி, குங்குமம் குடுக்கக்கூட எனக்கு ஒத்தாசைக்கு யாரும் கிடையாது. ஏதோ வைத்தா புண்ணியத்துல பிரசாதங்கள் தயாராகிடும். அதனாலே….”

“அதனாலே…..?”

“அம்மா அம்பிகே. நீதான் அந்த ஜமீன்தார் வகையறா மனுஷாளோட மனசுல எப்பிடியாவது புகுந்து இந்த நடராஜா அபிஷேகத்தை சாயந்திரம் வெச்சிக்கலாம்னு சொல்ல வெச்சிட்டால் போதும்”

“முதல்ல நான் உனக்கு அம்மாவா, இல்ல அம்பிகையா அதைச் சொல்லு”

“அம்…..அம்மாதான். சாட்சாத் நீ எனக்கு….எனக்கு மட்டுமில்லே என் குடும்பத்துக்கே நீ அம்மாதான்….”

“அப்புறமென்ன, கவலையை விடு!”

வெளியில லேசா தூறல் போட்டுண்டிருக்கும் பொழுதே என் ஒடம்பெல்லாம் வேர்த்துது.

இடுப்பு அங்கவஸ்திரத்தை ஒதறி சட்டுன்னு என் உடம்பைத் துடைச்சுண்டு மத்த தெய்வங்களுக்கெல்லாம் புதுத்துணி சாத்தக் கிளம்பறேன்.

“குருக்களே, மடப்பள்ளிலே சாமான்லாம் ரெடியா? விறகு ஈரமில்லாமல் இருக்கா? போன மாசம்தான் கண் ஆப்பரேஷன் பண்ணிண்டேன். எனக்குப் புகை ஆகாது”ன்னு சொல்லிண்டே பிரசாதம் பண்ணறதுக்குத் தயாராக வைத்தா வந்து நின்றான். கக்கத்துல இருக்கிற துணிப்பையிலேருந்து பழைய வேஷ்டி எட்டிப்ப் பார்க்குது.

சாமர்த்தியசாலிதான். தீபாவளிக்குக் கட்டிண்டிருக்கிற புதுவேஷ்டி மடைப்பள்ளிப் புகையில அழுக்காயிடக் கூடாதுன்னு முன்னேற்பாடோடு வந்திருக்கிறான்.

“கவலைப்படாதே வைத்தா. இந்த வருஷம் தருமகர்த்தா கேஸ் அடுப்புக்கே ஏற்பாடு பண்ணியிருக்கார்”ன்னு அவன் கிட்டே மடப்பள்ளி சாவியை நீட்டினேன்.

“கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை”ன்னு மதுரை சோமசுந்தரம் பாட்டை வாட்சுமேன் செல்வராஜ லவுட்ஸ்பீக்கர்ல திறந்து விட்டிருந்தான். இனி வரிசையா டி.எம்.எஸ், சீர்காழி, எம். எஸ்., எல் ஆர் ஈசுவரி ன்னு ஒவ்வொருத்தரா லவுட்ஸ்பீக்கர்ல தங்கள் வித்தையைக் காமிக்கப் போறா.

ஊர் ஜனங்கள் ஒவ்வொருத்தரா கங்காஸ்நானம் முடிச்சுட்டு நீலகண்டேஸ்வரரை தரிசனம் பண்ணறதுக்கு வர ஆரம்பிக்கிறா.

இனிமேல் எனக்கு நிக்க நேரமிருக்காது. எட்டு மணி வாக்கில என் ஆம்படையாள் ஃப்ளாஸ்க்குல காப்பி கொண்டு வந்து கொடுத்தால்தான் எனக்குக் கொஞ்சமாவது தெம்பு வரும்.

“சாமி, நமஸ்காரம்!”

“வாங்கோ, அர்ச்சனை பண்ணணுமா? பேரு, நட்சத்திரம், கோத்திரம் சொல்லுங்கோ….!” தூங்கற நேரத்துல கூட ஒரு குருக்களோட வாயில இந்த வார்த்தைகள்தானே வரணும்.

​​​@@@@ @@@@ @@@@ @@@@

பேரும் கோத்ரமும் கேட்பது, அர்ச்சனை நாமாக்களை முணுமுணுத்தபடியே உரிக்காத தேங்காய்களை உரிச்சு உடைச்சு சுவாமிக்கு நைவேத்தியம் பண்ணறது, தீபாராதனை காட்டும் பொழுது அனிச்சையா, “எல்லோரும் ஒரு ஓரமா நின்னு மத்தவாளையும் தரிசனம் செய்ய வழி விடுங்கோ”ன்னு சொல்றது, தேங்காய்ப் பழத்தைத் திருப்பிக் கொடுக்கிறது, தட்டுல விழற ரூபாய்களையும், சில்லறைகளையும் பத்திரப் படுத்தறதுன்னு நேரம் போறதே தெரியமாட்டேங்கிறது.

“சாமீ, கொஞ்சம் அம்பாள் சன்னிதிக்கு வந்து அர்ச்சனை பண்ணுவீங்களா?”ன்னு யாரோ ஒருத்தர் கேட்டதுக்கு, “சித்த வெயிட் பண்ணுங்கோ. இங்கே ஈசுவரன் சன்னிதியிலே கொஞ்சம் கூட்டம் குறைஞ்சால்தான் என்னால அம்பாள் சன்னிதிக்கு வர முடியும். நான் ஒரே ஆள்தான்” என்று நான் பதில் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே என் ஆம்படையாள் காபி ஃபிளாஸ்க்குடன் வந்தாள்.

காப்பியை குடிப்பதற்கு முன்பு, “குழந்தை அம்முக்குட்டி என்ன பண்றாள்? தீபாவளி டிரெஸ்சை உடுத்திண்டாளா?”ன்னு ஆர்வமாக் கேட்டேன்.

“நீங்க ஆத்துக்குத் திரும்பி வந்தப்புறம்தான் உடுத்திப்பாளாம். கொஞ்சம் பட்சணத்தையாவது சாப்பிடுடீன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்” என்றாள் என்னவள்.

காப்பி குடிக்கும் ஆர்வம் சட்டென்று குறைந்தது. கால் தம்ளருக்கு மேல் குடிக்க மனசு வரவில்லை.

“இந்தா, மீதிக்காப்பியை மடைப்ப்ள்ளியில இருக்கிற நம்ம வைத்தாவுக்குக் குடுத்துட்டுப் போ. அப்பா சீக்கிரம் வந்துடுவேன்னு அம்முக்குட்டி கிட்டே சொல்லு. இந்தா, அப்பிடியே நம்ம அம்பாள் சன்னிதிக்குப் போய் வெளியிலேருந்து தரிசனம் செஞ்சுட்டுப் போ. அம்பாள் புதுப்பாவாடையில ஜொலிக்கிறாள் பார்…..” என்று சொல்லி அவளை அனுப்பிவிட்டு அடுத்த பேட்ச் மனுஷாகிட்ட “சொல்லுங்கோ, யார்பேருக்கு அர்ச்சனை பண்ணனும்?”னு விட்ட எடத்துலேருந்து மறுபடியும் ஆரம்பிக்கிறேன்.

ஈசுவரன் சன்னிதி, அம்பாள் சன்னிதின்னு மாறி, மாறிப் போயிட்டு, நடுவுல ஒரு சிலருக்காக தட்சிணாமூர்த்திக்கும், நவக்கிரகங்களுக்கும் ஆரத்தி காண்பிச்சுட்டு ஒருவழியா அம்பாள் சன்னிதிக்கே வந்து நின்ன போது மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது.

இதற்கு முன்னால், ஒரு சில வருஷங்கள் ஜமீந்தார் வீட்டினர் நடராஜா அபிஷேகத்தை சாயந்திரம் செய்யும்படி கேட்டுக்கொண்டது உண்டு. அந்த நம்பிக்கையில்தான் இந்த வருஷமும் அபிஷேகம் சாயந்திரத்திற்குத் தள்ளிப்போக வேண்டுமென்று அம்பாளிடம் கோரிக்கை வெச்சிருக்கேன். இன்றைக்கு அப்படிப்பட்ட கோரிக்கை எதுவும் இதுவரையில் வரவில்லை. அபிஷேகம் இல்லாத பட்சத்தில் சீக்கிரமே கோவிலைப் பூட்டிக்கொண்டு வீட்டிற்குப் போய் முழந்தை அம்முக்குட்டியை சமாதானப் படுத்தி, புதுத்துணியை உடுத்திக்கொள்ள வைக்கலாம் என்று நினைத்தேன். அது நடக்காது போலிருக்கிறது.

“அம்மா, என்னம்மா இப்படிக் காலை வாரிவிட்டிருக்கியே?” அப்படீன்னு அம்பாளோட திருமுகத்தைப் பார்க்கிறேன்.

“இப்போ என்னடா ஆயிடுத்து?” அப்பிடின்னு அம்பாள் என் கிட்டே திரும்பிக் கேட்கவில்லை. பதில் எதுவும் சொல்லாமல் எப்பவும் போல சிரிச்சுக்கிட்டே இருக்காள்.

இந்த அம்பாள் சிரிக்காவிட்டால்தான் அதிசயம். பொசுக் பொசுக்கென்று கல்யாணப் பெண்ணோட தோழி மாதிரி சிரிப்பை அள்ளிவிட்டுக்கொண்டே இருப்பாள்.

அந்த மாதிரி சமயத்தில் எதுவும் பேசமாட்டாள். வெறும் சிரிப்பு மட்டும்தான். அம்பாளுடைய சிரிப்பைக் கேட்க எனக்கு ஒருபொழுதும் அலுக்கவே அலுக்காது.

எது எப்படியானால் என்ன, இன்றைக்கு நான் சொன்னதற்கு என்னோட அம்பாள் செவிசாய்க்கவில்லை. சமயத்தில் இப்படி ஏதாவது செய்தோ அல்லது எதுவும் செய்யாமல் இருந்தோ தான்தான் நமக்கெல்லாம் தெய்வம் என்பதை ருசுப்படுத்திக்கொண்டே இருப்பதில் என் அம்பாளுக்கு ஒரு ருசி.

“அம்பிகே எல்லாம் உன் சித்தம்”னு நான் என் பார்வையைத் தாழ்த்திண்டு விட்ட இடத்திலேருந்து அபிராமி அந்தாதியைத் தொடரும் பொழுது சாட்சாத் ஜமீந்தாரும், அவரோட பாரியாளும் பரிவாரங்களோஅடு உள்ளே வந்துண்டிருக்கா.

“போச்சு. இன்றைக்கு நான் வீடு திரும்ப மதியம் ஒரு மணியோ ரெண்டு மணியோ ஆகிவிடப் போறது. என் குழந்தை அம்முக்குட்டி ராத்திரி வரைக்கும் என் முகத்துல முழிக்கவே மாட்டாள். அம்பிகே உனக்குத் திருப்திதானே?”

“……….”

“என்ன இது எப்பப் பார்த்தாலும் ஒரு அசட்டுச் சிரிப்பு?”ன்னு நினைச்சுண்டு “வாங்கோ ஜமீந்தார்வாள்”னு இடுப்புச் சாவிக்கொத்தைத் துழாவி நடராஜா சன்னதி சாவியை எடுத்துண்டு ஜமீந்தாரர் குடும்பத்தோடு நடராஜா சன்னிதியைப் பார்த்து நடக்கிறேன்.

முதல் நாளே அபிஷேகத்துக்கு வேண்டியச் சந்தனம், விபூதி, குங்குமம், சாம்பிராணி, தேன், பன்னீர் சகலமும் ரெடிபண்ணிவிட்டேன். பித்தளை அண்டாவிலே ரெண்டு குடம் கிணற்றுத் தண்ணீரைச் சேர்த்து ஏலக்காய், பச்சைக்கறபூரப் பொடியைக் கலந்தால் எல்லாம் அபிஷேகத்துக்குச் சித்தமாகிவிடும்.

அபிஷேகத் தீர்த்தத்தைத் தயார் செய்துவிட்டு, பழைய டேப்ரிகார்டரில் ருத்ரம் சமகத்தை ஒலிக்க வைத்துவிட்டு “சித்தே இருங்கோ ஜமீந்தார்வாள்! மடைப்பள்ளியிலே பிரசாதம் எல்லாம் ரெடி ஆயிடுச்சான்னு நான் பார்த்துண்டு வந்ததும் அபிஷேகத்தை ஆரம்பிச்சுடலாம்”னு சொல்லிட்டு மெதுவா மடப்பள்ளியை நோக்கிக் கிளம்பினேன்.

அம்பாள் இன்னிக்கு என்னைச் சோதிக்கணும்னு ஆசைப்பட்டு விட்டாள்.

“சே, இப்படியெல்லாம் மனசைத் தளரவிடக் கூடாது. இந்த நடராஜாவுக்கு என்னை விட்டால் அக்கறையாய் அபிஷேகம் செய்யறதுக்கு யார் இருக்கா? அப்பனே நடராஜா, என்னை மன்னிச்சுடுப்பா. அப்புறமா நீ வேற மூஞ்சியைத் தூக்கி வெச்சிக்கப் போறே….”ன்னு நினைச்சபடி துவஜஸ்தம்பத்தை தாண்டறேன்…..

ஹா…. என் கண்ணையே நம்ப முடியலே.

மயில்கழுத்துக் கலர்ல பட்டுப்பாவாடையும் சட்டையும் பட்டுரோஸ் கலர்ல தாவணியுமா தான் ஆசைப்பட்டு வாங்கின தீபாவளித் துணிய உடுத்திண்டு தன் பள்ளிக்கூட ஸ்நேகிதிகளோடு என் குழந்தை அம்முக்குட்டி பிரத்தியட்சமாகின்றாள்.

“ஏய் அம்முக்குட்டி”ன்னு கூப்பிடறேன்.

“அப்பா”ன்னு என் கிட்டே ஓடி வந்த என் குழந்தை அம்முக்குட்டி “அப்பா, என் புது டிரெஸ் எப்பிடியிருக்குப்பா?”ன்னு கேட்கிறது.

“என் கண்ணே பட்டுடும் போல இருக்குடா”ன்னு அவளை உச்சிமோந்ததும், “அம்பாள் சன்னிதியில் நமஸ்காரம் பண்ணிட்டு அப்படியே நடராஜா சன்னிதிக்கு வந்துடு. அபிஷேகம் ஆரம்பிக்கப் போறது”ன்னு சொல்றேன். என்னோட குழந்தை ஒரு தேர் மாதிரி நகர்ந்து கோயிலுக்குள்ளே போகிறது.

மடைப்பள்ளியில் நுழைந்து “வைத்தா, உனக்குக் காபி வந்துதா? இன்னும் ஒரு அரைமணியில் பிரசாதம் எல்லாம் தயாராகிடுமா?” என்றேன்.

“நீ அபிஷேகத்தை முடிக்கிறதுக்குள்ள எல்லாம் தயாராயிடும்” என்றான் வைத்தா.

மடைப்பள்ளியை விட்டு வெளியே வந்தேன்.

“வீட்டுக்குப் போவதற்கு முன்பு அம்பாள் கிட்டே போய் நின்னு ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டுக் கிளம்பணும்’னு நினைச்சிண்டேன்.

நான் “தேங்க்ஸ்”னு சொன்னால் “போடா அசட்டுப் பயலே!”ன்னு அம்பாள் என்னைப் பார்த்துச் சிரிக்கப்போகிறாள். சிரிச்சுட்டுப் போகட்டுமே.

“குருக்களே, எவ்வளவு நேரம்?”னு ஜமீந்தாரோட அடிப்பொடி ஒண்ணு என்னை வந்து கூப்பிடறது.

“இதோ வந்துட்டேன்”ன்னு சொல்லிண்டே நெறைஞ்ச மனசோடு எங்க நடராஜா சன்னிதியைப் பாத்து நடக்க ஆரம்பிச்சேன்.