தொடர்கள்
கதை
சர்மாஜியின் கொரோனா வைத்திய சாலை... - கி.கல்யாணராமன்

20210504160046356.jpeg

சர்மாஜி ஆனந்தமாக விசில் அடித்தபடியே சினிமா பாடலை பாடிக்கொண்டிருந்தார்.

“என்ன சர்மாஜி... இன்னைக்கு ரொம்ப ஜாலியா இருக்கீங்க?” மனைவி அபிதாவின் கேள்விக்கு...

சர்மாஜி... “நான் மீண்டும் ஆராய்ச்சி செய்து, கொரனாவுக்கு தீர்வு கண்டுபிடித்துவிட்டேன். அதுதான் ஐயாவுக்கு ஜாலி...”

“அது என்ன தீர்வு?”

“நான் சொல்லமாட்டேன். நான் எது சொன்னாலும் அதைக் கிண்டல் செய்வது, வேண்டுமென்றே விவகாரமாக கேள்வி கேட்பது என்று நீ என்னை மிகவும் கேவலப் படுத்துகிறாய். அதனால் உன்னிடம் எதுவும் சொல்லமாட்டேன்”

“என்னிடம் சொன்னால், நான் உங்களுக்கு நல்ல யோசனை சொல்வேன். என்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்ல்வீர்கள்? அப்படி யாரிடாமாவது சொன்னால் அவர்கள் மட்டும் கேலி செய்ய மாட்டார்களா?”

சர்மாஜி சொல்வதா வேண்டாமா என்று யோசித்தார்...

“என்ன சர்மாஜி, என்னிடம் சொல்லாமலே நீங்க உங்க வைத்திய சாலையில் வைத்தியம் செய்வீர்களா? என்கிட்டே சொன்னா நான் உங்க வைத்தியம் நல்ல வைத்தியமா என்று சொல்வேன்...”

“சரி அபிதா. நீ இவ்வளவு கேட்பதால் சொல்கிறேன். நான் உனக்கு முதலில் ஒன்றை தெளிவு படுத்த வேண்டும்.”

“அது என்ன?”

“கொரோனா வந்தால் மூச்சு திணறல் வருகிறது இல்லையா?”

“அமாம். அதற்குதான் ஆக்சிஜன் தேவைப்படுகிறது.”

“அதில்தான் ஐயாவோட வைத்திய ரகசியம் இருக்கு.”

“அப்படி என்ன ரகசியம்? மூச்சு விடாமல் நிறுத்தி விடுவதா?”

“இதற்கு, நான்கு விதமான சிகிச்சை இருக்கு.”

“அது என்ன சிகிச்சை? எப்படி செய்வது?”

“முதல் சிகிச்சை பபுள் விடுவது!”

“என்னது.. சின்ன குழந்தைகள் பொருட்காட்சியில் வங்கி வந்து ஊதி குட்டியா பலூன் மாதிரி விடுவார்களே.. அப்படி விட்டால் கொரோனா சரியாகிவிடுமா?”

“அதேதான். ஆனால், இந்த பபுள் விடுவதற்கு பிரத்தியேகமாக நான் ஒரு குழம்பு தயாரித்து வைத்திருக்கிறேன். அதை வைத்துதான் கொரோனா வந்த ஆசாமி பபுள் விடனும்.”

“அதில் அப்படி என்ன விசேஷம்?”

“இந்த குழம்பு தயாரிக்க பலவிதான சேர்க்கைகள் உண்டு. பசு மாட்டு கோமியம், சாணம், பால், தயிர், நெய் அத்துடன், கழுதை பால், ஒட்டக பால் எல்லாம் சேர்க்கவேண்டும். இதை எல்லாம் கலந்து பூமியில் புதைத்து வைத்து ஒரு மாதம் சென்ற பின்பு எடுக்க வேண்டும்.”

“அதில் பபுள் விட முடியுமா... ரொம்ப நாத்தம் அடிக்கதா?”

“அந்த பபுள் வெடிக்கும்போது, அதில் இருந்து ஒரு ஆவி வரும். அந்த ஆவி கொரோனாவை விரட்டிவிடும்.”

“நல்ல வைத்தியம். கொரோனாவை விரட்டுதோ இல்லையோ, கொரோனா வந்தா ஆசாமி நாத்தம் தாங்காம ஓடிவிடுவான்.”

“இரண்டாவது வைத்தியம்..பலூன் ஊதுவது..”

“என்ன கொரோனா வந்தால் பலூன் ஊதினால் போய்விடுமா? மூச்சே விடமுடியாது. இதில் எங்கே பலூன் ஊதுவது?”

“இந்த பலூன் ஐயாவோட தனி கண்டுபிடிப்பு. இதைப்பற்றி உன்னிடம் ரகசியமாக சொல்கிறேன்.”

சர்மாஜி அவர் மனைவி அபிதாவின் காதில் எதோ ரகசியமாக சொன்னார்....

“சீச்சீ.. அசிங்கம். அதையா வாயில் வைத்து ஊதுவது. கண்றாவி. உங்களுக்கு ஏன்தான் புத்தி இப்படி போகிறதோ!”

“அதில்தான் வைத்திய வெற்றி இருக்கு. அது எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும்.”

“போதும் உங்க கன்றாவி வைத்தியம். மூன்றாவது என்ன வைத்தியம்?

“அதற்கு ஒரு குக்கரும், குக்கர் நீராவி வரும் துளையில் பொருத்தும் ரப்பர் குழாயும் வேண்டும்.”

“அது எதுக்கு?”

“குக்கரில் தண்ணீர் வைத்து அதில் மஞ்சள் பொடி, உப்பு, பொடி செய்த மிளகு, அதி மதுரம், கிராம்பு, லவங்க பட்டை, வேப்ப மரத்து இலை, ஆடாதொடா இலை, நொச்சி இலை எல்லாம் போட்டு குக்கரை மூடிவிட்டு, நீராவி வரும் வரை காத்திருக்க வேண்டும்.”

“அப்புறம் என்ன சர்மாஜி, நல்ல பாசுமதி அரிசியை போட்டு பிரியாணி செய்ய வேண்டுமா?”

“போ அபிதா. நீ என்னை கேலி செய்ய ஆரம்பித்துவிட்டாய்.”

“சரி. சொல்லுங்க...”

“குக்கரில் இருந்து வரும் ஆவியை ரப்பர் குழாய் மூலம் குக்கரில் இணைத்து, நேரடியாக கொரோனா வந்த ஆசாமியின் மூக்கில் விடவேண்டும்.”

“அப்படி விட்டால், ஆசாமியின் மூக்கு வெந்து போய் ஆள் அத்துடன் குளோஸ். கொரோனாவும் காலி.. இதுதான் உங்க வைத்தியமா?”

சர்மாஜிக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது....

“உன்னிடம் நான் என் வைத்திய ஆராய்ச்சியை சொன்னது தவறு. என்னுடைய நான்காவது ஆந்த்ரா லேகியம் மற்றும் மூக்கு மருந்து வைத்தியம் பற்றி நான் சொல்லப்போவது இல்லை” என்று அபிதாவிடம் கோபித்துக்கொண்டு சர்மாஜி சென்றுவிட்டார்.