ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகள் முடிவில் நெல்லை பக்கத்து கிராமமான கோடகநல்லூரில் நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம். ஏழ்மையும், எளிமையும் சேர்ந்து சந்தோஷமாகக் குடும்பம் நடத்திய இளம் சுதந்திர இந்திய நாட்கள்.
ஊருக்கு மேற்கே கால் கிலோ மீட்டரில் இருக்கும் நங்கையார் அம்மன் கோவில் பக்கத்தில், சகதி நிறைந்து, அங்கொன்றும் இங்கொன்றுமாக தாமரை மற்றும் நீராம்பல் பூக்கள், யாரோ மெனக்கெட்டு தெளித்தது போல் மிதக்கும் தாமரைக் குளத்துக்குப் பின் இருக்கும் துண்டு வயல் காக்காய் குத்தகைக்கு எடுத்தது.
வயலில் நெல் கொஞ்சம், வாழை கொஞ்சம் என்று பயிர் இருக்கும்.
வயலின் மேற்கு கரையிலுள்ள சுமார் ரெண்டு கிரௌண்ட் அளவு மனையில் நாலஞ்சு மா, சில தென்னை என்று உண்டு. மூலையில் சிறு குடிசை. இது காக்காயின் சொத்து. கூட மனைவி நாச்சியார்.
காக்காய் என்றதுமே, ஏதோ ஒரு பாவப்பட்ட, வடையிழந்த பறவை மாதிரி நினைக்க வேண்டாம்...
ஐந்தடி எட்டங்குலத்தில் டார்ஜான் போன்ற உருவ அமைப்பு கொண்ட
நாற்பதுகளில் உள்ள இரும்பு மனிதன் அவன்.
கருமைக்கும் மாநிறத்துக்கும் இடைப்பட்ட நிறம், சிறிய கூரிய கண்கள், வேப்பங்குச்சி உதவியில் சீரான வெண்பல் வரிசை, அடர்ந்த மீசை, ஆறு பேக் உடல், இடையில் மடித்து கட்டப்பட்ட வேட்டி. இதற்கு மேலே ரெண்டு இன்ச் பட்டையான ஒரு தோல் பெல்ட். உள்ளே தற்காப்புக்கு ஒரு சிறிய கூரான கத்தி. இது தான் காக்காய்.
அவன் பெயர் ஏன் காக்காய் என்று அமைந்தது என்று அவனுக்கே தெரியாது.
அதைப்பற்றி அவன் நினைத்ததோ, சிந்தித்ததோ, வருத்தப்பட்டதோ, கிடையாது.
தன் தோட்டத்து மாமரங்களில் காய்த்த காய் கனிகளைக் கவர வரும் பறவைகள் மற்றும், அணில்களிடமிருந்து காப்பாற்ற அவன் எறியும் கவண் கற்களில் அடிபட்டு எப்போவாவது ஓரிரு காக்கைகள் கீழே விழுந்ததுண்டு என்பதால் காலப்போக்கில் இப்பெயர் வந்திருக்கலாம் என்று ஊரில் பேச்சு உண்டு.
இது உண்மையோ இல்லையோ, காக்காயிடம் இது பற்றி கேட்டால் வெறும் சிரிப்புத் தான் பதிலாக வரும்.
சிறு வயதிலேயே திருமணம் ஆனதால், இருபது வயதுக்கு மேற்பட்ட இரண்டு பிள்ளைகள் உண்டு அவனுக்கு.
“இந்த நிலம், மாடு, ஊரு எல்லாம் கட்டி மேக்க நம்மால ஆகாது. நீரே செய்யும்” என்று பிள்ளைகள் இருவரும் பம்பாய் சென்று விட்டனர்.
காக்காய்க்கு குடி, புகையிலை போன்ற எந்தப் பழக்கமும் கிடையாது. உழைத்து உரம் ஏறிய நோயற்ற உடல்.
அவனுக்குத் தெரியாத வேலையே கிடையாது. சொந்த விவசாயத்தில் வரும் வருமானம் வருஷத்தில் மூணு மாசம் கூட சாப்பிட வராது.
பயிரைத் தவிர, வயிற்று பிழைப்புக்கு காக்காய் வண்டி ஓட்டுவான். மரம் வெட்டுவான். கட்டுமான வேலை, இரும்பு வேலை செய்வான். மாட்டுக்கு லாடம் அடிப்பான்.
நீங்கள் மாட்டுக்கு லாடம் கட்டுவதை பக்கத்திலிருந்து பார்த்திருக்கிறீர்களா?. .
மயிலைக் காளை ஜோடிக்கு ஆறு மாதம் ஒரு முறை லாடம் கட்ட வைப்பார் என் தாத்தா.
வழக்கமாக, மாட்டின் கழுத்தில் ஒரு தடிக் கயிறும், இடுப்பில் ஒன்றும் கட்டி இருவர் எதிரும் புதிருமாக இழுத்து மாட்டின் கழுத்தை வளைத்து முன்னாங்கால்களை மடக்கித் தள்ள, மண் குவியலில் மாடு சரிந்து படுப்பதைப் பார்த்தால் பாவமாக இருக்கும்.
பின்னர் முன் பின் கால்கள் சேர்த்து கட்டப்பட்டு ஏதோ சர்ஜரி
செய்வது போல் பழைய லாடம் எடுத்து, புது லாடங்கள் கட்டுவது நடக்கும். இதற்கு லாடம் கட்டுபவரைத் தவிர, கூட மாட உதவ மூணு பேரும், முக்கியமாக மாட்டின் குறைந்த பட்ச ஒத்துழைப்பும் வேண்டியிருக்கும்.
லாடம் கட்டுதல் முடிந்ததும் சில சமயம் வலி காரணமாக மாடுகள் வேலைக்கு மூணு நாள் லீவு போட்டு விடும்.
காக்காய் லாடம் கட்ட வந்த பின் இந்நிலைமை மாறியது. காரணம்
காக்காயின் கை நேர்த்தி, மாடுகளுடன் உறவாடும் திறமை,
மற்றும், வலி - ரத்தம் இல்லாமல் தொழில் செய்யும் நயம்.
காக்காயை பார்த்ததுமே மாடுகள் பரவசமாய்விடுமோ என்று தோன்றும்.
கழுத்து இடுப்புக் கயிறு கட்டும்போதே மாடு, சலூன் சுழல் நாற்காலியில் வந்தமர்ந்து தலையைக் காட்டும் வாடிக்கையாளர் போல் கிட்டத்தட்ட தானே படுத்து, கால்களைக்கட்ட ஒத்துழைக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
படுத்த மாட்டின் கொம்புகளை மட்டும் என்னைப் பிடித்துக்கொள்ள காக்காய் சொல்ல, பயம் சேர்ந்த பரபரப்புடன் மாட்டின் பெரிய கொம்புகளைத் தொட்ட முதல் வினாடிகள் இப்போதும் நினைவுக்கு வருகிறது.
பழைய லாடத்தை உளியால் எடுத்து குளம்புகளைப் பதமாகச் செதுக்கி, கால்களின் உள் வெளி குளம்புகள் அளவறிந்து பொருத்தமான லாடத் துண்டுகள் எடுத்தமைத்து அடிப்பதில் ஒரு கை தேர்ந்த டைலர் போல் செயல்படுவான் காக்காய்.
லாட ஆணிகள் சாய்வாக அடிக்கப்பட்டு வலியின்றி குளம்புக்குகள் செல்லும்.
மாடு சுகத்தில் தூங்கி விடும். மாட்டை, இட, வலப் பக்க கால் அமைப்பு காரணமாக, லாடம் அடிக்க சௌகரியமாக புரட்டி மறுபக்கம் படுக்க வைத்து வேலை முடிந்தவுடன் கால் கட்டு அகற்றும் போது ஜல்லிக்கட்டுக் காளை போல் துள்ளி நடக்கும் மாடு.
தாத்தா ஒரு ஜோடி மாட்டு லாடத்துக்கு (லாட விலையும் சேர்த்து) நாலணா - “ரொம்ப அதிகம்” - என்று சொல்லிக் கொண்டே கொடுப்பார்.
கூட கால் மரக்கால் நெல்லும் உண்டு.
அம்மன் கோவில் தீச்சட்டி தூக்குவது என்பது லேசுப்பட்ட வேலை இல்லை.
நங்கயார் அம்மன் கோயில் கொடையின் போது, முதல் ஆளாக காக்காய் தீச்சட்டி தூக்குவான். மஞ்சள் நீராடி, உடல் முழுக்க திருநீறு, சந்தனம், கழுத்தில் மல்லிகை மற்றும் சாமந்தி மாலைகள் சகிதம், விறகுக்கரிக் கங்குகள் நிறைந்து, கொழுந்து விட்டு தக தகவென்று எரியும் மண் பானையை, வெறும் தலையில் வைத்து இரு கைகளிலும் வெப்பங்கொத்து குலுங்க, உக்ரமான முகத்துடன் காக்காய் குதித்து, குதித்து, கொட்டுக்குத் தகுந்த ஆட்டத்துடன் நடக்கும் போது பார்க்கும் எல்லோருக்கும் பயம் கலந்த பக்தி வரும். நாலு மணி நேரம் அப்படி ஊர்வலம் வந்து அம்மன் கோவிலுக்கு திரும்ப வேண்டும்.
பின் கோவிலில் குறி சொல்ல ஆரம்பிப்பான் காக்காய். பத்தமடை, சேர்மாதேவியிலிருந்தெல்லாம் ஜனம் குறி கேட்கவரும்.
அச்சமயத்தில் அம்மன் காக்காயின் நாவில் வந்து அமர்வாள் என்பார்கள்.
அம்மன் அருளால் அவன் சொன்னது அவ்வளவும் அப்படியே நடக்குமாம். பிள்ளைகளுக்கு பேர் வைப்பான். திருமணம், மகப்பேறு, நோய், குடும்பச் சச்சரவு, நிலம், வீடு பொருள் வாங்க, விற்க, உத்யோகம் போன்ற பலவற்றுக்கும் தீர்வு அல்லது பிராயச்சித்தம் சொல்வான்.
மறுநாள் காலையில் அவ்வளவு நேரம் தீ சட்டி தலையில் இருந்த
தீக் காயமோ, வலியோ, மற்றும் அம்மனின் தாக்கத்தின் மிச்சமோ, ஒன்றும் இல்லாமல் சிரிப்பான்.
காக்காயின் வீரத்துக்கும் பலத்துக்கும் நிறைய உதாரணங்கள் ஊரில உண்டு.
சில வருஷம் முன்னாலே இரட்டை மாட்டு வில்வண்டியில் மேலத்தெரு கிழக்கோர வீட்டு குப்புசாமி குடும்பத்தில் நாலு பேரை வைத்து அவன் ஓட்டிச் சென்ற போது ஒரு பக்க அச்சு ஆணி கழன்று சக்கரம் வெளியேவிழும் நிலையில் வண்டியிலிருந்து குதித்து, குடை சாய்ந்து விழப்போன வண்டியை தம் பிடித்து தூக்கி நிறுத்தி, நின்று எல்லாரையும் வண்டியிலிருந்து முழுசாக இறக்கினதைப் பரபரப்புடன் நிறைய நாள் ஊரில் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
பெருமாள் கோயில் திருவிழாவில் நடந்த நிகழ்வுகள் காக்காயின் பேராண்மையையும் உடல் உறுதியையும் சந்தேகமின்றி நிரூபித்தன.
தேர் திருவிழா நடப்பதற்கு ஒரு நாள் முன்னே தகர ஷீட் அடிக்கப்பட்ட தேர்க் கொட்டாயை பிரிப்பார்கள். பெரிய தேர் எல்லாம் கிடையாது. சிறிசு தான்.
பிரித்து சுத்தம் செய்யும்போது உள்ளே தேர்ப் பீடத்தின் மேல் சோம்பலுடன் பெரிய பாம்பு ஒன்று ஓய்வெடுத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. கொட்டாய் பிரித்த சண்முகம் கொஞ்சம் பயத்துடன் மரப் பீடத்தை சுத்தியலால் ஒரு தட்டுத் தட்ட, எழுந்த பாம்பு வால் சுருட்டி உட்கார்ந்து, விரித்த உள்ளங்கை அளவுக்கு படம் எடுத்து புஸ் என்று ஒரு சீறல் சீறியது. சுத்தியல் சிதற பின்னால் விழுந்த சண்முகம்...
“ஐய்யய்யோ பெரியவரு” என்று அலற கூட்டம் சேர்ந்தது. (பெரியவர் என்றால் நல்ல பாம்பு என்பது ஊர் வழக்கு.)
ரெண்டு மணி நேரம் பாம்பு அசையாமல் ஆடாமல் படத்துடன் நின்றது.
ஏதோ தெய்வக் குத்தம் நடந்து விட்டதாக பேசிக்கொண்டனர்.
அடுத்து என்ன செய்வது என்பது யாருக்கும் தெரியவில்லை. தேர் நாளை ஓடாது என்றனர் சிலர்.
தாமிரபரணியில் குளித்துவிட்டு வரும் வழியில் இதைப் பார்த்த
காக்காய், எல்லாரையும் தள்ளி நிக்கச் சொல்லி தேரில் ஏறினான்.
ஒரு நிமிஷம் கை கூப்பி பாம்பை வணங்கினான். பின் சர்வ சாதாரணமாக பாம்பின் கழுத்தைப் பிடித்து தூக்கினான். பாம்பு சாதுவாய் அவன் கையில், அடியில் கல் கட்டின நீட்டுப் புடலங்காய் போல ஐந்தடிக்கு தொங்கியது. நிதானமாய் நடந்து ஆற்றுக்கு பக்கம், தேரடி மாடன் சாமி சிலைக்குப் பின் இருந்த புத்தருகில் சென்று பாம்பை விட்டு விட்டு வந்தான்.
“என்ன பயப்படுதியளா. ஒண்ணுமில்லை. பெரியவருக்கு வயசாயிட்டுல்லா. வூட்டுக்கு போற வழி மறந்து போச்சு. அதான் இங்ஙன வந்து இருந்துக்கிட்டாரு” என்றவாறு நடக்க ஆரம்பித்தான்.
மலைத்துப்போன கூட்டத்தில் வயதானவர் ஒருத்தர் “அது என்ன கையை நீட்டி டக்குனு புடிச்சிட்டீரு... கடிச்சிட்டிருந்தா?” என்றார்.
“பெரியவர் நம்மூர்ல கடிக்க மாட்டாருல்லா. தவிர இந்த விஷமெல்லாம் நமக்கு எறாது” என்று சிரித்தவாறே சென்று விட்டான் காக்காய்.
அடுத்த வருஷம்...
கோவில் தீர்த்த வாரித் திருநாள் ஆத்தங்கரையில் நடந்த போது, பொங்கி நொப்பும் நுரையுமாக வழிந்த தாமிரபரணி வெள்ளத்தில், படித்துறைக்கு இடது பக்கம் உள்ள சுழியில் (ரெண்டு ஆள் ஆழப் பள்ளம் ) தயிர்க் கார மாலையின் எட்டு வயசு மகள் தவறி விழ ஒரே கூச்சல்.
வெள்ளப்பெருக்கில் சுழல் அதிகமாகும் சமயம், அதில் அகப்பட்டால் ஆபத்தும் அதிகமாகும்.
“குதிச்சம்னா சுழி நம்மள உள்ற இழுத்துக்கிடும்” என்று காப்பாற்ற பலரும் முன் வர யோசித்த போது... காக்காய் திடீர் என்று நீள் வாட்டில் தண்ணீரின் போக்கிலேயே சுழியை நோக்கி வேகமாய்ப் பாய்ந்து, தண்ணிக்கு மேலே தெரிந்த சிறுமியின் தலை மயிரைப் பற்றியபடியே சுழியைத் தாண்டி அப்புறமாகச் சென்று பின்னர் நீந்தி சிறுமியுடன் கரையடைந்தான்.
அவன் காலில் அப்படியே விழுந்த மாலை, லேசில் யெந்திரிக்கவில்லை.
இப்படியாக பஞ்ச பூதங்களையும் ஜயிக்கும் உடல் மற்றும் மன வலிமை கொண்டவனான காக்காய், ஒரு ஐயனாராகவே, ஊரில் பார்க்கப்பட்டான்.
ஆனால், காலம் விரைவில் பதில் சொல்லியது.
செங்கமலம் அறுபது வயதை தாண்டிய பாட்டி. தெருவில் கீழக்கோடியில் இருந்து நாலாவது தெற்கு பார்த்த வீடு அவளுடையது.
கணவன் இறந்த பின் தனி வாழ்க்கை. ஒரே பிள்ளை திருமணத்துக்குப் பின் பட்டணத்துக்கு (சென்னை) வேலை மார்க்கமாக சென்றுவிட்டான்.
ஊருக்கு லீவில் மனைவி பிள்ளைகளுடன் வருவதாக இருந்தான். மழை காரணமாக வரமுடியவில்லை என்று கார்டு போட்டு நேற்று வந்தது.. பாட்டிக்கு ரொம்ப வருத்தம்.
கோடகநால்லுரிலும் மழை, காற்று. ரெண்டு நாளாக. பின் பக்கத்தில்
பெரிய வேப்ப மரக்கிளை காற்றில் ஒடிந்து தொங்கியது. காக்காயைக் கூப்பிட்டு வெட்ட சொன்னால் விறகாவது மிஞ்சும் என்று கூப்பிட்டாள்.
மரக்கிளையைக் கோடாலியால் வெட்டிப் பின் விறகாக கூறு போட்டான் காக்காய்.
அரையணா காசும், சட்டி நிறைய சோறும் கொடுப்பாள் பாட்டி வழக்கமாக...
அன்று சோறு இல்லை. மகன் வருவான் என்று முந்தா நாள் அதிசயமாக அரைத்த தோசை மாவு ஒரு சின்ன பித்தாளை வாளியில் அவளுக்கு அவசியம் இல்லாமல் இருந்தது.
பாட்டியின் வாயு உடம்புக்கு அது ஒத்துக்கொள்ளது. வாளியைத் தூக்கி காக்காயிடம் கொடுத்து,
“காக்காய், நாச்சியார தோசை சுடச் சொல்லு. நிறைய நல்லெண்ணெய் ஊத்தினால் நல்லா வரும்” என்றாள்.
காக்காயின் வாழ்க்கையில் இது எதிர்பாராத நிகழ்வு.
அவனுக்கு உலகத்துலயே மிகப்பிடித்த விஷயம் தோசை தான். அந்த நினைப்பே அவன் ருசி நரம்புகளைக் கொந்தளிக்க வைக்கும். சிறு சிறு ஓட்டைகளுடன் பூர்ண சந்திரன் போன்ற தோசை அடிக்கடி அவன் கனவில் வருவதுண்டு.
ஆனால், அக்காலத்தில் தோசை அபூர்வமாக வீட்டில் செய்யப்படும் ஒரு உணவுப் பண்டம். பண்டிகை நாட்களை தவிர வேறு நாட்களில் எல்லாம் செய்யக் கட்டுப்படியாகாது. மேலும் அவன் மனைவி நங்கையாருக்கு தோசை மாவின் பார்முலா கூட சரியாகத் தெரியாது. அதனால் அவனுக்கு தோசை என்பது ஒரு அபூர்வமான விஷயம்.
வருஷத்துக்கு ஓரிரு முறை வேலை நிமித்தமாக நெல்லை செல்லும் போது போத்தி ஹோட்டலில் அரை அணா கொடுத்து அரை வாளி சாம்பாரில் ரெண்டு தோசையை மிதக்க விட்டு சாப்பிடுவான். அந்த அனுபவம் அடுத்த சில மாதங்களுக்குத் தாங்கும்.
பாட்டி கொடுத்த தோசை மாவு வாளியுடன் பொழுது சாய வீடு
சென்றவன், நாச்சியாரிடம் கொடுத்து தோசை சுடச் சொல்லியிருக்கிறான்.
அடுப்பு மூட்டி தோசைக்கல்லை தேடி எடுத்து வைத்த பின், நல்லெண்ணெய் புட்டியை தேடியிருக்கிறாள். மின்சாரம் இல்லாத காலத்தில், லாந்தர் விளக்கின் அரைகுறை வெளிச்சத்தில் அருகில் இருந்த விளக்கெண்ணெய் புட்டியை எடுத்து விட்டாள்.
காக்காய்க்கு தாராளமாக எண்ணெய் ஊற்றி ஒரு டஜன் தோசை வார்த்துப் போட்டாள். பேய்ப் பசியில் மாயாபஜார் ரங்கராவ் போல்
எல்லாவற்றையும் உள்ளே தள்ளிவிட்டான் காக்காய். எதுவும் பாக்கி வைக்கவில்லை. பசி ருசி அறியாது...
நள்ளிரவுக்கு மேல் விளக்கெண்ணெய் தன் கடமையைச் செய்ய, மூட முடியாத குழாய் போல் ஆனது காக்காயின் வயிறு.
இரண்டு நாள் பத்தியத்தில் உடல்நிலை இன்னும் மோசமாகிக் காய்ச்சல் அடிக்க, வயிற்றுப் போக்கும் நீடித்தது. பேட்டை ஆஸ்பத்திரியில் மாட்டு வண்டியில் கொண்டு போய் சேர்க்க, சலைன் மற்றும் பல மருந்துகள் ஏற்றப்பட்டன. காலராவோ என்னவோ என்ற சந்தேகம் மருத்துவர்களுக்கே ஏற்பட்டது.
ஒரு மாதத்துக்கு பின் சாவின் விளிம்பை எட்டிப்பார்த்துவிட்டு, தப்பித்து, நல்லகாலமாக பெத்தோம் பிழைத்தோம் என்று உயிருடன் வீடு திரும்பினான்.
உடம்பு கொஞ்சம் சரியான பின் செங்கமலம் பாட்டியிடம் அவளுடைய வாளியை திருப்பிக்கொடுக்க சோர்வுடன் வந்தபோது, காக்காய் இந்தக் கதையெல்லாம் சொன்னான்.
“ஆசுப்பத்திரியில இருக்கும்போது உயிர் போயிடுமோனு கவலைல நங்கையார் அம்மனுக்கு நேந்துகிட்டேன். இனிமே என் வாழ்க்கைல தோசை சாப்பிடமாட்டேன்னு... அம்மன் மனசு குளுந்து பிழைக்க வெச்சிடுச்சு.”
கிரேக்க வீரன் அக்கில்லிஸ்க்கு குதியங்கால் போல், துரியோதனனுக்கு தொடை போல். காக்காய்க்கு வயிறு தான் பலவீனமான இடம் என்று ஊருக்குப் புரிந்தது.
காக்காய் அதற்குப்பின் பழைய ஆளாக ஆகவே இல்லை. அவன் வயிற்று வலியும் முற்றும் தீரவேயில்லை. வீட்டை விட்டு அவன் அதிகமாக நகரவும் இல்லை.
ஆறு மாதத்துக்குப் பின் அவன் பிள்ளைகள் வந்து அவனையும் மனைவியையும் பம்பாய்க்கு கூட்டிச் சென்று விட்டனர். காக்காய், நிலத்தை அவன் அண்ணன் மகனிடம் பார்த்துக்கச் சொல்லி, ஒப்படைத்து விட்டனர்.
நான் பின்னர் சென்னை சென்று... மேல் நிலை, கல்லூரி எல்லாம் முடித்து வேலைக்கு சென்ற நெடு நாள் வரை காக்காய் பற்றி எந்தச் செய்தியும் இல்லை. நானும் மெனக்கெட்டு யாரையும் கேட்கவில்லை என்பதை இங்கே ஒப்புக்கொள்ள வேண்டும். இருந்தும் எப்பொழுதாவது காக்காய் பற்றிய நினைவு வரும். கொஞ்சம் வருத்தமாக இருக்கும்.
2001-வது ஆண்டு கோவில் விழாக்கு ஊர் சென்ற போது ஊர்
நண்பன் சீனு என்ற ஸ்ரீனிவாசன் மும்பையிலிருந்து வந்திருந்தான். மாடுங்கா ஸ்டேட் பாங்க் பிரான்ச்சில் மேனேஜர்.
சீனுவோடும் மற்றும் சில பழைய நண்பர்களுடன் இரவில் எங்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம். ராஜம்மா பாட்டி, சன்னியாசிக் கோனார், போஸ்ட் மாஸ்டர் ராமசாமி போன்ற பல பழைய சுவாரஸ்யமான ஊர் மனிதர்களைப் பற்றி பேசும்போது... காக்காய் பற்றிய பேச்சு வந்தது. காக்காயின் வீரம் மன உறுதி, உழைப்பு, மற்றவர்களுக்கு உதவும் தன்மை எல்லாம் பற்றிப் பேச வேண்டும் என்று நான் ஆரம்பித்தபோது... புது விஷயம் ஒன்று சொன்னான் சீனு.
“காக்காய் மகன்கள் ரெண்டுபேரும் பெரிய பிசினஸ் மென் ஆயுட்டாங்க தெரியுமா உங்களுக்கெல்லாம்....
மும்பைல ரெஸ்டாரண்ட் செயின் நடத்தறாங்க. மூணு ப்ராஞ்ச் இருக்கு. நல்ல டர்ன் ஓவர். அவர்கள் போவது வருவது எல்லாம் மெர்சிடஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூவில் தான். இப்போ நான் லோன் சாங்ஷன் பண்ணியிருக்கேன் நாலாவது பிரான்ச்க்கு....
ரெஸ்டாரண்ட் செயினுக்கு ‘நெல்லை தோசா’னு பேரு. தோசை வரைட்டி ரொம்ப பேமஸ்அங்க. எப்பவும் கூட்டம் தான்.”
“அப்படியா வெரி குட். கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. சரி. நீ நம்ப காக்காயைப் பார்த்தாயா?” என்றேன் ஆவலுடன்.
“இல்லை... ஆனால், அவங்க வீட்டுக்குச் சென்று அவர் மனைவி நாச்சியாரை ஒரு முறை பார்த்தேன். நன்றாக இருக்கிறார். காக்காய் இந்த சவுகரியத்தை எல்லாம் நன்றாக அனுபவித்து விட்டு, சில வருடங்களுக்கு முன்பு தனது எண்பதாவது வயதில் நிம்மதியாக இறந்து விட்டார் என்று சொன்னார்.
ஆனால் முன்பு ஒரு முறை உடல் நலம் சரியில்லாத போது அம்மனுக்கு நேந்துகிட்டதால கடைசி மூச்சுவரை அவர் தோசையை மட்டும் சாப்பிடவே இல்லை - அவங்க ஹோட்டல் தோசை உட்பட - என்பது அவங்களுக்கு எல்லாம் பெரிய குறையாம்” என்றான் சீனு.
Leave a comment
Upload