தொடர்கள்
மக்கள் கருத்து
மக்கள் கருத்து.. - தில்லைக்கரசி சம்பத்


கடந்த இரண்டு ஆண்டுகளாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது, இது உங்களை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது?

G.வேலுமணி, ராயப்பேட்டை.

நான் என்ன தியேட்டர் ஓனரா? என்னை பாதிக்க??! நம்மள எல்லாம் கொரோனா பாதிக்காம இருந்தா பத்தாதா?


சுசீலா வெற்றிவேல், ஆதம்பாக்கம்.

வாழ்க்கையோட சுவாரசியமே போச்சுங்க... நாங்க குடும்பத்தோட மாசத்துக்கு ஒரு முறை சினிமா போவோம். சனிக்கிழமை எங்க வீட்டுக்காரருக்கு லீவு. அதனால அன்னைக்கு ஈவினிங் ஷோ, பைக்ல குழந்தைகளை உட்கார வச்சிக்கிட்டு போய் படம் பார்க்க போவோம். இடைவெளில ஐஸ்கிரீம், பாப்கார்ன் வாங்கி ஜாலியா சாப்பிட்டு, படம் முடிஞ்ச பிறகு ஹோட்டல்ல நல்லா ஒரு வெட்டு வெட்டிட்டு, வீட்டுக்கு வருவோம். மறுநாள் ஞாயிற்றுக்கிழமைங்கிறதால நிம்மதியா தூங்கி, லேட்டா எழுந்திருப்போம். இத ஒரு வழக்கமாவே வச்சிருந்தோம். பாழாப்போன கொரோனா வந்து, எங்க வாழ்க்கையோட சின்ன சின்ன கொண்டாட்டங்களை கூட சிதறடிச்சிடுச்சு.


வெ.ஸ்ரீஹரி, கேளம்பாக்கம்.

ஏக்கமோ ஏக்கமா இருக்கு. லீவு நாளில் நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து காலையிலேயே ஃபீனிக்ஸ் மால் போய்டுவோம். அங்க ஃபுல் ஏசில செம ஜாலியா மாலுக்குள்ளேயே சுத்திட்டு மூவி ஆரம்பிச்ச பிறகு தியேட்டர் உள்ள போய்டுவோம். நண்பர்கள் ஒருத்தரை ஒருத்தர் கலாய்ச்சிக்கிட்டு, கிண்டல் பண்ணிக்கிட்டு படம் பார்த்து என்ஜாய் பண்ணுவோம். இன்ட்டெர்வெல்ல பாப்கார்ன் வித் கோக் சாப்பிடுவோம். மூவி முடிஞ்சோன மெக்டொனால்ட்ல சாப்பிட்டு, நைட் வீடு திரும்புவோம். மூவி பார்க்கிறதை விட நண்பர்கள் கூட ஜாலியா இருக்கிறதை தான் ரொம்ப மிஸ் பண்றேன்.


சி.வெங்கடேஷ், திருவெறும்பூர்.

என்னை எந்த அளவு பாதிச்சு இருக்குன்னா தியேட்டருக்கு போனது, சூப்பர் ஸ்டார் ஸ்க்ரீன்ல வர்றப்ப பலமா விசில் அடிச்சது, கொரோனா பயமில்லாம எவன் எவன் கூடயோ பக்கத்து சீட்ல நெருக்கமா உக்காந்து படம் பார்த்தது, எல்லாம் போன ஜென்மத்தில நடந்த கதை மாதிரி இருக்கு. அந்த அளவுக்கு கொரோனோ நமக்கு வேப்பிலை அடிச்சு வச்சிருக்கு.


த.பத்ரிநாதன், மடிப்பாக்கம்.

தியேட்டர் போய் படம் பார்க்கிற பழக்கம் இல்லை. இப்ப வர்ற படம் எல்லாம் குடும்பத்தோட பார்க்கிற மாதிரியா இருக்கு? வீட்டிலேயே டிவி இருக்கு. அது போதும். அதனால் எந்த பாதிப்பும் இல்லை.


ஆர்.அன்பழகன், ஆதம்பாக்கம்.

ரொம்ப சந்தோஷம். தொல்லை விட்டுச்சு. சினிமா என்ன சும்மாவா காட்டுறான்? நாலு பேர் குடும்பமா சினிமா பாக்க போனா டிக்கெட் விலையை விட கார் பார்க்கிங் கட்டணம் அதிகம். பார்க்கிங்கை விட பாப்கார்ன் விலை அதிகம். சுளையா இரண்டாயிரம் போய்டும். மாசம் ரெண்டு தடவை சினிமாக்கு போகனும்னு வீட்டுல உயிர வாங்குவாங்க.
மாசம் 4000 ரூபாய் சினிமாக்கு போய்கிட்டு இருந்தது. இந்த ஒரு வருஷத்துல சினிமா செலவு மிச்சம். சும்மா இல்ல... இப்ப தோராயமா 50,000 ரூபாய் சேமிப்பு. ஐ யம் ஹேப்பி.