தொடர்கள்
தொடர்கள்
மிஸ்டர் ரீல்...! - ஜாசன்

20210504230645809.jpeg

மிஸ்டர் ரீல் சசிகலாவை சந்திக்க வேண்டும் என்று தினகரனிடம் கோரிக்கை வைத்தபோது... 2 டோஸ் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும், கொரோனா டாக்டரிடம் ‘நெகட்டிவ்’ சான்றிதழ் வாங்கிக் கொண்டு, வாசலிலுள்ள கூர்க்காவிடம் காண்பித்தால், அவர் உள்ளே அனுப்புவார் என்று சொன்னார்.

மிஸ்டர் ரீல் “அப்படியே செய்து, நெகட்டிவ் சான்றிதழை கூர்க்காவிடம் காண்பிக்க...” அவர் “சலோ என்று உள்ளே அனுப்பி வைத்தார்.”

உள்ளே போன மிஸ்டர் ரீல்... சின்னம்மாவிடம், சாரி... சசிகலாவிடம் நெகட்டிவ் சான்றிதழை நீட்ட... “கூர்க்கா பார்த்து ஓகே சொல்லிட்டார் இல்ல... அப்புறம் என்ன?” என்று உட்கார சொன்னார்.

சசிகலாவுக்கும் மிஸ்டர் ரீலுக்கும் சமூக இடைவெளி பத்தடி இருக்கும். “என்ன மிஸ்டர் ரீல்... ஆடியோ ரிலீஸ் ஆன பிறகுதான், என்னைப் பார்க்க யோசனை வந்ததா” என்று சசிகலா சொல்லும்போது... அவரது உதவியாளர் கார்த்திக்... “இவங்க பேரு பவுனம்மாள், அறந்தாங்கியில் காய்கறி வியாபாரம் செய்கிறார்கள்” என்ற சிறு குறிப்பு சொல்லி செல்பேசியை தர... எதிர்முனையில் இருந்தவரிடம்... “என்ன பவுனம்மாள், எப்படி இருக்கீங்க..? உங்க காய்கறி வியாபாரம் எல்லாம் எப்படி இருக்கு. அறந்தாங்கியில் மழை எல்லாம் பெய்கிறதா? நீங்க கவலைப்படாதீங்க.. கட்சியை எல்லாம் சரி பண்ணிடலாம். இப்பவும் நான்தான் பொதுச்செயலாளர்... ஜாக்கிரதையா இருங்க... முக கவசம் போடுங்க, வெளியே வராதீர்கள்” என்று கொரோனா வாசகங்கள் சொல்லி செல்பேசியை அணைத்தார். அப்போது அவரது உதவியாளர், இந்த மூன்று நாள் செல்பேசியில் பேசியதில் 30000 பில் ஆயிடுச்சு என்ற தகவலையும் சொல்லிவிட்டு நகர்ந்தார்.

அப்போது மிஸ்டர் ரீல்... “நீங்க தான் போன் பண்ணி பேசுறீங்க, அவங்க பேசலயா” என்று கேட்க... “கட்சி பொதுச்செயலாளர் தான், தொண்டர்கிட்ட பேசணும். தொண்டன் கட்சி பொதுச்செயலர்கிட்ட பேசக்கூடாது, இது அதிமுக. எடப்பாடி கட்சி இல்லை” என்று சொல்ல....

அப்போது மிஸ்டர் ரீல்... “எடப்பாடி, நாங்கள்தான் அதிமுக. உங்களுக்கும் அந்தக் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று சொல்கிறாரே என்று கேட்க... “இதெல்லாம் நான் அரசியலுக்கு லீவ் போட்டபோது நடந்த விஷயங்கள். ஆனால், இப்போது நீங்கள்தான் அதிமுக, இரட்டை இலை சின்னத்தின் உரிமையாளர் நீங்கதான். பொதுச்செயலாளர் என்றால் அது நீங்கதான்” என்று சொல்கிறார்கள் என்று சசிகலா சொல்ல...

ஆனால், “அவர்களெல்லாம் தினகரன் கட்சிக்காரங்க என்று எடப்பாடி சொல்கிறாரே” என்று மிஸ்டர் ரீல் கேட்க... ஆனா, “கட்சியோட ஒருங்கிணைப்பாளர் இப்படி சொல்லவில்லை, அதை கவனித்தீர்களா” என்று சசிகலா கேட்க... ஆமா.. “ஏன் அப்படி சொல்லல” என்று மிஸ்டர் ரீல் கேட்க... “அவர் எப்படி சொல்வார். நேத்து காலையில.. இங்க இட்லி, வடகறி சாப்பிட்டு போனார். எங்க ஏரியா பக்கத்துல, அவரு வீடு மாறி இருக்கிறார்” என்று சசிகலா சொல்ல... “நீங்க இருக்கிறது போக் ரோடு. அவர் இருக்கிறது பாண்டி பஜார் தாண்டி சிவாஜி வீட்டுகிட்ட” என்று கூகுள் மேப் லெவலில் மிஸ்டர் ரீல் சொல்ல... அதற்கு சிரித்தபடியே... “அவர் குடியிருப்பது தி.நகர் தான். நாங்களும் திநகரில் தான் இருக்கோம்” அப்படிப் பாருங்க மிஸ்டர் ரீல் என்று சொல்ல....

அப்போது மிஸ்டர் ரீல்... “நிஜமாகவே இங்க வந்து இட்லி வடகறி சாப்பிட்டாரா... நம்புற மாதிரி இல்ல” என்று சொல்ல... அப்போது சசிகலா, அவரது உதவியாளர் கார்த்திக்கை அழைத்து, இவருக்கு “அந்த இட்லி வடகறி வீடியோவை காண்பிங்க என்று சொல்ல... வீடியோவில் ஓபிஎஸ் நெஜமாவே இட்லி வடகறி தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சாப்பிட்டு முடித்ததும், சாஷ்டாங்கமா பழைய வழக்கப்படி, சசிகலாவை நமஸ்கரிக்க... அதன் பிறகு, கையில் ஏதோ ஒரு சூட்கேசுடன் போகிற வீடியோவை காண்பித்தார்.”

உடனே மிஸ்டர் ரீல்... “ஆடியோ ரிலீஸ் பண்றீங்களே, அப்படியே இந்த வீடியோவை ரிலீஸ் பண்ண வேண்டியதுதானே” என்று கேட்க... “அதெல்லாம் இப்ப செய்ய மாட்டேன்” என்று சசிகலா சொல்ல... அப்போ “அடுத்த ஆட்சியில் நீங்க தானே முதல்வர்” என்று மிஸ்டர் ரீல் கேட்க... “அதெல்லாம் இல்லை. கட்சிப் பொதுச் செயலாளர் மட்டும்தான் முதல்வர். அன்றும் சரி.. இன்றும் சரி.. ஓபிஎஸ் தான்” என்று சொல்ல...

அப்போது மிஸ்டர் ரீல்... “தினகரன் தானே முதல்வராக ஆசைப்பட்டார்” என்று கேட்க... “அதெல்லாம் கிடையாது. அவர் சபாநாயகர் தான்” என்று சொல்ல... அப்போது மிஸ்டர் ரீல்... “இன்னும் அஞ்சு வருஷம் இருக்கு, அதுக்குள்ள எத்தனையோ நடக்கும்” என்று சொல்ல... அப்போது சசிகலா... “இன்னும் மூணு வருஷத்தில் பாராளுமன்ற தேர்தல் வருது. அமித்ஷாகிட்ட பேசிட்டேன். உங்க கட்சி, கூட்டணிக் கட்சிக்கு என்று எல்லோருடைய தேர்தல் செலவையும் நான் பார்த்துக் கொள்கிறேன், தொகுதிக்கு ஐம்பது கோடி என்று 400 தொகுதிக்கும் நானே செலவு செய்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அமித் ஷா ஜி அச்சா சொல்லிவிட்டார்” என்று சசிகலா சொல்ல....

மிஸ்டர் ரீல்... “அந்த வருமான வரித்துறை வழக்கு, அமலாக்கத்துறை வழக்கு, இப்படி நிறைய இருக்கே... அதெல்லாம்” என்று கேட்க... அப்போது சசிகலா சிரித்தபடியே... “அதெல்லாம் இருக்கு.. ஆனா, இப்போ இல்ல” என்று சொல்ல... அப்போது மிஸ்டர் ரீல்.. “உண்மையில் நீங்கள் தியாகத் தலைவி தான். ஜெயா டிவி கரெக்டா தான் சொல்றாங்க. மத்தவங்கள பதவியில் உட்கார வச்சி, அதுவும் உங்க கைக்காசு போட்டு செலவு செய்து” என்று சொல்ல... அப்போது கண் கலங்கிய படியே... “இந்த தியாகத் தலைவியை, அக்கா துணைப் பிரதமராக்க ஆசைப்பட்டாங்க.. இப்ப அக்கா இல்ல. அக்கா ஆசைப்பட்ட அந்த துணை பிரதமர் பதவியை நான் ஏத்துக்க தீர்மானித்து விட்டேன். அப்பத்தான் அக்காவோட ஆன்மா சாந்தி அடையும்” என்று சொல்லி ஜெயலலிதா படத்தை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டார் சசிகலா.

துணைப்பிரதமர் சசிகலா என்று ஒரு முறை சொல்லிப் பார்த்தார் மிஸ்டர் ரீல். அவருக்கு ஒரு மாதிரி கிறுகிறு என்று தலை சுற்ற... வெளியே வந்து ஒரு ஓரமாக உட்கார்ந்து விட்டு, தலைசுற்றல் நின்றதும் கிளம்பினார் மிஸ்டர் ரீல்.