தொடர்கள்
கதை
“செய்யலாமா-கூடாதா…” - வெ. சுப்பிரமணியன்

20210504155755975.jpeg

“சார் போஸ்ட்… என்று வாசலில் சத்தம் கேட்கவும், “நான்தான் வாங்குவேன்” என்று போட்டி போட்டுக்கொண்டு, பத்து வயதை தாண்டாத என் பேரனும், பேத்தியும் வாசலுக்கு ஓடினார்கள்.

“இது ரிஜிஸ்டர் தபால், அதனால பெரியவங்க யாராவதுதான் கையெழுத்து போட்டு வாங்கணும். நீங்க சின்னக் குழந்தைங்க இல்லையா?” என்று போஸ்ட்மேன் சொல்லவும்... “தாத்தா… நீ வந்தாதான் தருவாராம்” என்று எனக்கு அழைப்பு விடுத்தார்கள் என் பேரக்குழந்தைகள்.

“சார்… உங்களிடம் பேனா இருக்கா?” என்று கேட்ட போஸ்ட்மேனை பார்த்ததும், “உங்களை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே? என்று நான் கேட்டேன்.

“ஆமாம் சார். நீங்ககூட, நாற்பது வருஷத்துக்கு முன்னாடி, என்னோட ஓன்றாக யூ.ஜி. படிச்ச என் நண்பரோட ஜாடையிலே இருக்கீங்க” என்று சொன்னார் தபால்காரர்.

ஆச்சரியத்தில் கண்கள் மலர, “டேய்… தென்னரசு” என்று சொல்லிவிட்டு, ‘சாரி சார்…’ என்றேன்.

“ராகவா… நீ சொன்னது சரிதான். நான் உன் கிளாஸ்மேட் தென்னரசுதான்” என்று அவர் சொல்லவும்...

“உள்ளே வாப்பா” என்றேன்.

“உனக்குதான் கடைசி தபால் டெலிவரி” என்று சொல்லிவிட்டு, காம்பவுண்டுக்குள் வந்தவன், வீட்டின் வராண்டாவில் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

“வணக்கம்… வாங்கோ” என்று சொல்லியபடியே, அவருக்கு குடிக்க, தண்ணீர் கொண்டுவந்தாள் என் மனைவி.

“இவர் பெயர் தென்னரசு. கல்லூரியில் என்னோட ஒண்ணா படிச்சவர். நாற்பது வருஷம் கழிச்சு இப்போதான் திரும்பவும் மீட் பண்ணிக்கிறோம்” என்று என் மனைவிக்கு தென்னரசை அறிமுகம் செய்தேன்.

“ஏம்பா… நீ அந்த காலத்திலேயே, அரசு தேர்வாணையம் நடத்திய பரீட்சை எழுதி, தேர்வாகியிருந்தியே… கவர்மென்ட் உத்தியோகத்திற்கு போகலையா?” என்றேன்.

“எக்ஸாம் பாஸ் பண்ணினது உண்மைதான். போஸ்டிங் போடும்போது, இட-ஒதுக்கீட்டு முன்னுரிமையாலே, என்னைவிடவும் அதிகமா மார்க் வாங்கின நம்மோட நண்பர்களுக்கு வேலை கிடைக்காம, எனக்குதான் போஸ்டிங் ஆச்சு. அதுவே எனக்கு உறுத்தலா இருந்தது”.

“போறாததுக்கு, நான் வேலை பார்த்த அந்த டிப்பார்ட்மென்ட்லே, லஞ்சமும், ஊழலும் தலைவிரிச்சு ஆடிச்சு.”

“ஓரு நாள் டிரைவிங் லைஸன்ஸ் ரெனிவலுக்காக வந்த பப்ளிக் ஒருத்தர், ‘கோட்டாவிலே’ வேலைகிடைச்சு ஜாயின் பண்ணிட்டு, வேலை பார்க்கிறதுக்கு லஞ்சம் வேற வாங்கறானுங்க” என்று, சொன்னது, எனக்கு நறுக்குன்னு மனசிலே தைச்சிறுச்சு. அதான் வேலையை ராஜினாமா பண்ணிட்டேன்” என்றான் தென்னரசு.

“அப்புறம், பிழைப்புக்கு என்ன பண்ணினேள்?” என்றாள் என் மனைவி.

“எங்க அப்பா டைலர். அதனாலே, எனக்கும் சின்ன வயசிலே இருந்து, எங்கத் ‘தலைமுறைத் தொழிலான’, டைலரிங் நல்லாவே தெரியும். படிச்ச படிப்பை அடமானமா வைச்சு, பாங்க்-லோன் போட்டேன். நாலு தையல் மெஷின் வாங்கினேன். இப்போ எனக்கு தஞ்சாவூர்லே, சொந்தமா இரண்டு டெய்லரிங் கடை இருக்கு. என்னோட முதல் இரண்டு மகனுங்கதான் தையல் கடைகளை பார்த்துக்கிறாங்க. அவங்களுக்கும் டைலரிங் தெரியும்” என்று சொன்னான் தென்னரசு.

“அது சரி… இப்போ எப்படி போஸ்ட்மேன் ஆனே?” என்றேன் நான்.

“அதுவா… என் மூணாவது பையன், இங்கே திருச்சியிலே, போஸ்டல் டிப்பார்ட்மென்டில, டெலிவரி செக்ஷன்ல இருக்கான். இன்னிக்கு அவனுக்கு உடம்பு சரியில்லே. நாலு தபால்தான் டெலிவரிக்கு இருந்துச்சு. குடுடா, நான் டெலிவரியை முடிச்சிட்டு வரேன்னு சொல்லி, ‘டெம்பரவரியா’ போஸ்ட்மேன் ஆயிட்டேன்” என்றான் தென்னரசு.

அப்போது, என் மகன் கல்லூரியிலிருந்து, வேலை முடிந்து மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்தான். “இவன்தான் என் மகன். நான் காலேஜில இருந்து ரிட்டயர் ஆனதும், அந்த காலேஜிலேயே, இவனுக்கு வாத்தியார் வேலை கிடைத்தது” என்று சொல்லி, என் மகனை, தென்னரசுக்கு அறிமுகம் செய்தேன்.

“சரி… நான் கிளம்பறேம்பா. இன்னோரு நாளைக்கு மீட் பண்ணுவோம்” என்று சொல்லிவிட்டு, புறப்பட்டான் தென்னரசு.

வீட்டுக்குள்ளே வந்து, தபாலை பிரித்து படித்தேன். “தலைமுறைத் தொழிலை, சந்ததிகள் செய்யலாமா? கூடாதா?”, என்ற தலைப்பில் நடக்கவுள்ள, ஒருநாள் கருத்தரங்கிற்கான அழைப்பிதழை, நான் வேலை பார்த்த கல்லூரியிலிருந்து, எனக்கு அனுப்பியிருந்தார்கள்.
வாசலில் அழைப்பு மணி மீண்டும் ஒலித்தது. எட்டிப் பார்த்தேன். “செப்டிக்டாங்கை கிளீன் பண்ணலாமா சார்” என்று கேட்டுக்கொண்டு ஒருவன் நின்று கொண்டிருந்தான்.

காலையில்தான் என் மனைவி, “ஏங்க… அடுத்தவாரம், நம்ம பெண்ணோட வளைகாப்பு விசேஷத்துக்கு, எல்லாரும் வரப் போறாங்க. முடிஞ்சா ஆளை வரச்சொல்லி, இந்த செப்டிக்-டாங்கை சுத்தம் செய்யச் சொல்லுங்களேன்” எனக் கேட்டிருந்தாள்.

எழுந்து வாசலுக்குப் போனேன். “நம்ப செப்டிங்டாங்க் இரண்டாயிரம் லிட்டர் கப்பாஸிட்டி இருக்கும். கிளீன் பண்ண எவ்வளவு கேட்பீங்க? என்றேன்.

“சார்… நான் புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கிற பையன். ரேட்டை பத்தி ஓனர்கிட்டயே பேசிக்கங்க. நீங்க சரின்னு சொன்னா வண்டியை உடனே அனுப்புவாரு. இந்தாங்க விசிட்டிங் கார்டு” என்று சொல்லி, ஒரு கார்டை என்னிடம் நீட்டினான்.

“சங்கரி செப்டிக் டாங்க் கிளீனிங்” என்று எழுதி, கீழே ‘உரிமையாளர் - பாபு…(பி.எஸ்.ஸி)’ என்று போட்டிருந்தது.

“அந்த கார்டிலிருந்த நம்பருக்கு ஃபோன் போட்டேன். “சொல்லுங்க சார்… செப்டிக்டாங்க் கிளீன் பண்ணனுமா? வண்டி அனுப்பட்டுமா? என்று பதில் வந்தது.

“அதற்குதான் ஃபோன் பண்ணினேன். உங்க ஆஃபீஸ் இருக்குமிடம் ‘புதூர்னு’ போட்டிருந்தது. அந்தக் காலத்திலே, நான்கூட புதூர் ஸ்கூல்லதான் படிச்சேன்” என்றேன்.

“அப்படியா… நானும் புதூர் ஸ்கூல்லதான் படிச்சேன். எங்க அம்மா ‘சங்கரி’, அந்த காலத்திலே, புதூரிலே ரொம்ப ஃபேமஸ்” என்றார் அவர்.

“நீங்க ‘துப்புறவுத் தொழிலாளி’ சங்கரியோட மகன் பாபுவா! என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.

“ஆமாம் சார்” என்றவரிடம், உங்ககூட ராகவன்னு ஒரு பையன் படிச்சானா?” என்றேன்.

“ஆமாம் சார். நீங்க…” என்று அவர் கேட்டதும், “நான்தான் புதூர்-ராகவன். நாம எட்டாம் வகுப்புவரை ஒண்ணா படிச்சோமே” என்றேன்.

“ராகவன்… எப்படி இருக்கீங்க?” என்றவன், கிட்டத்தட்ட ஐம்பது வருஷமாச்சு உங்களைப் பார்த்து. உங்க வீடு எங்கே இருக்கு?. நானே வண்டியை எடுத்துகிட்டு வரேன்” என்றான் பாபு.

“உங்களோட வேலையாள் ஒருத்தன், என் வீட்டு வாசலில் நிற்கிறான். அவங்கிட்டே ஃபோனைக் குடுக்கிறேன்” என்று சொல்லி விட்டு, அவனது வேலையாளிடம் ஃபோனைக் குடுத்தேன்.

பாபுவிற்கு வழி சொல்லிவிட்டு, “சார், என் முதலாளி, அரை மணி நேரத்திலே வந்திடுவார். நான் அந்த டீக்கடை வரைக்கும் போயிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.

வராண்டாவில் போட்டிருந்த ஈசிச்சேரில் சாய்ந்தேன். ஐம்பது வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்வு ஒன்று எண்ணத்தில் உருண்டது.

“மாமி… உங்க ராகவன், கீழே கிடக்கிற ‘பன்னி போட்ட அசிங்கத்தை’ தோட்டி - சங்கரி வைச்சிருக்கிற குச்சியால எடுத்து, அவளோட கூடையிலே போட்டு விளையாடிகிட்டிருக்கான்” என்று என் அம்மாவிடம் போட்டுக் கொடுத்துவிட்டு போய்விட்டாள், காய்கறி விற்பவள்.

“டேய் கடங்காரா… சங்கரியோட ‘ஆய்-துரட்டியை’ எடுத்தியா?” என்று என் முதுகில் டின் கட்டினாள் என் அம்மா.

“நான் அசந்த நேரமா பார்த்து, ராகவன்-சாமி, தெரியாம என்னோட தோட்டிக்குச்சியை எடுத்திட்டாரு. அவரை அடிக்காதீங்க மாமி” என்று என் அம்மாவிடம், எனக்காக பரிந்து பேசினாள் சங்கரி.

“சரிசரி”… என்று சமாதானமான என் அம்மாவோ, சங்கரியிடம், “இந்தா… உன் புள்ளை பாபு, அன்னிக்கு என்கிட்டே, ஜாமெட்ரி-பாக்ஸ் வாங்கித்தாங்க மாமின்னு கேட்டான். இந்தப் புது பாக்ஸை அவன்கிட்டே குடு” என்றாள்.

வாசலில் வந்து நின்ற ‘செப்டிக் டாங்க் கிளீனிங்’ லாரியிலிருந்து, ‘பாபு’ இறங்கி என்னை நோக்கி வரவும், நானும் நிகழ்காலத்துக்கு வந்தேன்.

“ராகவன் எப்படி இருக்கீங்க?” என்றவனை, “மரியாதையெல்லாம் எதுக்குப்பா? சும்மா ஒருமையிலேயே கூப்பிடு” என்ற என்னை, கண்கள் பனிக்க பார்த்தான் பாபு.

“என்னடா? சயின்ஸ் டிகிரி முடிச்சிருக்கே. வேற வேலை பார்க்காமா, உங்கம்மா செய்துவந்த இந்த துப்புரவுத் தொழிலையே கன்டினியூ பண்ணிட்டே?” என்றேன்.

“ராகவா… எங்கம்மா கூடையை முதுகிலே சுமந்துகிட்டு, கையிலே இருக்கிற குச்சியோட நுனியிலே கொட்டாங்குச்சியை சொருகிகிட்டு, ஊரையே சுத்தமா வைச்சிருந்தாங்க”.

சாகக் கிடக்கும்போது, எங்கிட்டே, “ஊரை சுத்தமா வைச்சுக்கிற நம்மோட ‘தலைமுறைத் தொழிலை’, உட்டுராதேன்னு, சத்தியம் வாங்கிகிட்டு செத்துபோச்சு”.

“ஏதோ, உங்க அம்மா மாதிரி, நல்லவங்க செஞ்ச உதவியாலத்தான், தோட்டி மகனான, நானும் காலேஜ்வரை படிச்சேன். காலம் மாறிகிட்டே வந்துடுச்சு. அதோட, எங்க பரம்பரைத் தொழிலை செய்ய யாருமே முன் வரலை.

“நானும் பத்துவருஷம் ஒரு பெரிய கெமிக்கல் கம்பெனியிலே வேலை பார்த்தேன். கையில சேர்ந்த காசை முன்பணமாக்கி, ஒரு ‘செப்டிக்-டாங்க் கிளீனிங்’ வண்டியை, லோன்ல வாங்கினேன். இப்போ கிட்டத்தட்ட இருபத்தைந்து வருஷமா இந்தத் தொழிலை செய்யறேன். இந்த சிட்டியிலே மட்டும் என் ‘அம்மா’ பேர்ல ஆறு வண்டி ஓடுது”.

“இஞ்சினியரிங் படிச்ச, என் பையனும், இந்த தொழில்தான் பார்க்கிறான். என் பொண்ணு, தனியார் வங்கியிலே கிளார்க்காயிருக்கா”.

“எனக்கு இந்த தொழில்லே, கைநிறைய காசு வருது. அம்மா பார்த்த சோஷியல் சர்வீஸை, கன்டினியூ பண்ணறேன்னு ஆத்மதிருப்தியும் கிடைக்கிது” என்று சொன்னான்.

என் வீட்டுக் கழிவுகளையும் சுத்தமாக்கிவிட்டு, பிறகு, சந்திப்பதாக சொல்லிவிட்டு சென்றான்.

அடுத்தவாரம், என் வீட்டில் நடந்த, என் மகளின் வளைகாப்பிற்கு, தென்னரசையும், பாபுவையும் அழைத்திருந்தேன்.

அதன்பின் இரண்டு நாள் கழித்து, கல்லூரியில் நடந்த “தலைமுறைத் தொழிலை, சந்ததிகள் செய்யலாமா? கூடாதா?” என்ற கருத்தரங்கில், கலந்துகொள்ள நான் போகவில்லை.

‘செய்யலாமா-கூடாதா…” என்ற வினாவுக்கான விடை என்னவென்று, உங்களுக்குத்தான் நன்றாகத் தெரியுமே…!