தொடர்கள்
ஆன்மீகம்
ஆன்மீக ஆசான் - 42 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

2021050319491725.jpeg

ஸ்ரீ மகா பெரியவா இந்த உலகில் சரீரத்தோடு உலா வந்த போது அவரோடு பல்வேறு காலகட்டங்களில் பயணித்த பலரை பற்றியும் நாம் பார்த்து வருகிறோம். இந்த வாரம்...

ஸ்ரீ மு.மு. இஸ்மாயில்

ஸ்ரீ மஹாபெரியவளின் அதி தீவிர பக்தர்களை பற்றி நாம் பேசும்போது நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவர் திரு மு.மு. இஸ்மாயில் அவர்கள். இஸ்லாமிய மதத்தின் மீதும், ஆன்மீகத்தின் மீதும், தமிழ் இலக்கியங்கள் மீதும் மிகுந்த பற்று கொண்டவர். நான் ஏற்கனவே பல பதிவுகளில் கூறியது போல், ஸ்ரீ மகா பெரியவாளின் ஆசிர்வாதம் கிடைக்கப் பெற்றவர்கள் தங்கள் துறையில் மிகவும் சிறந்து விளங்குவர். பார் போற்றும் மாமனிதர்களாக வளம் வருவர். அவர்களை போல் இவரும் மிகச்சிறந்த மனிதராக விளங்கினார்.

1921ஆம் வருடம் பிறந்த இவர் ஒன்பது வயதில் தாயையும், பதிமூன்று வயதில் தந்தையையும் இழந்த அவரை, உறவினர்கள் வளர்த்தார்கள். அவருக்கு ஆரம்பம் முதலே ஸ்ரீ மகா பெரியவாளின் அனுக்கிரஹம் இருந்திருக்கிறது. புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மிகவும் மதிக்கும் ஒருவராக இருந்தார். சில காலம் 1980ஆம் வருடம் தமிழகத்தின் கவர்னராக பொறுப்பேற்றார்.

20210503195006925.jpeg

ஆரம்ப காலத்தில் சென்னை விவேகானந்த கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1946 ஆம் ஆண்டு முதல் 1959 ஆம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகத் தொழில் புரிந்தார். பின்பு சென்னை மற்றும் டில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்தார். அவருக்கு அரசியலிலும் ஆர்வம் இருந்தது. ஆனால் தன்னை முழுமையாக ஆன்மீகத்திலும், தமிழ் இலக்கியத்திலும் ஈடுபடுத்திக்கொண்டார்.

நீதிபதி மு.மு. இஸ்மாயீல் அவர்களுக்கு சமூகத்தில் எப்பேர்ப்பட்ட மதிப்பும் மரியாதையும் இருந்தது என்பதற்கு ஒரு சம்பவத்தை கூறுகிறேன்.

திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் இரண்டாம் முறையாக தமிழக முதலமைச்சராக பதவியேற்ற போது, அவரோடு 17 மந்திரிகளும் பதவியேற்றனர். பதவி ஏற்பு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் 1980-ஆம் ஆண்டு ஜுன் 9-ஆம் தேதி பகல் 12 மணிக்கு நடந்தேறியது.

உறுதி மொழியையும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் கவர்னர் பட்வாரிலால் ஆங்கிலத்தில் வாசிக்க, எம்.ஜி.ஆர். அதன் தமிழ் வாசகத்தை திரும்பச் சொல்லி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். பதவி ஏற்றதும், எம்.ஜி.ஆரும், கவர்னரும் கை குலுக்கிக்கொண்டனர். பின்னர் 17 அமைச்சர்களும் ஒருவர்பின் ஒருவராக வந்து பதவி ஏற்றனர்.

ஒவ்வொரு அமைச்சரும் பதவியேற்றதும் எம்.ஜிஆரிடம் சென்று வணங்கி, ஆசி பெற்றனர்.

இதற்குப் பிறகுதான் அந்த அதிசயம் நடந்தது. தமிழக மக்களுக்கு விடிவெள்ளியாக, அத்தனை அமைச்சர்களுக்கும் தலைவனாகத் திகழ்ந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் கிடுகிடுவென்று மேடையிலிருந்து இறங்கி ஓடோடி வந்தார். கூடியிருந்தவர்கள் அத்தனைப்பேரும் எம்.ஜி.ஆரின் நடவடிக்கையையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

மேடையிலிருந்து வேகமாக கீழிறங்கி வந்த முதல்வர் எம்.ஜி.ஆர். முன் வரிசையில் அமர்ந்திருந்த மு.மு.இஸ்மாயீல் அவர்களின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு, பவ்யமாக வணங்கி வாழ்த்துப் பெற்றார். மற்றொரு ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால், தன்னை வளர்த்து ஆளாக்கிய, தன் உயிருக்கும் மேலாக அவர் கருதிய அருமை அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி அவர்களின் காலைத் தொட்டு கும்பிடுவதற்கு முன் எம்.ஜி.ஆர்.அவர்கள் ஆசி பெற்றது நம் நீதிபதி மு.மு.இஸ்மாயில் அவர்களிடம்தான்.

திரு. இஸ்மாயில் அவர்கள் கம்பர் மீதும், ராமாயணத்தின் மீதும் மிகுந்த பற்று கொண்டவர். ஸ்ரீ மகா பெரியவாளை பற்றி கேள்விப்பட்டு அவரை சந்திக்க விரும்பி, தன் நண்பர் மூலம் அனுமதி பெற்று சென்று தரிசித்து ஆசிர்வாதம் பெற்றார். முதல் முறையே பெரியவா அவரை அமர செய்து பல மணிநேரம் இந்திய சட்டங்கள் குறித்தும், கம்பராமாயணம் குறித்தும் பேசினார்கள். இஸ்லாமியர் என்பதால் குங்கும பிரசாதம் கொடுக்காமல், சந்தானம் கொடுத்து அவரை நெகிழ செய்தார். இஸ்லாமியர்களுக்கும் சந்தானம் பிரசாதம் தானே.

பல முறை பெரியவாளை சந்தித்து, அனுக்கிரஹம் பெற்ற பாக்கியம் திரு இஸ்மாயில் அவர்களுக்கு கிடைத்தது. தன் இறுதி நாள் வரை, கம்பன் கழகம் மூலம் பல சொற்பொழிவுகளை ஆற்றினார். பல புத்தகங்களை எழுதினார். 2005 ஆண்டு அவர் மறைந்தார்.