திருக்கடல்மல்லை பூதத்தாழ்வார் சன்னதி.
திருக்கடல்மல்லை, இன்றைய மாமல்லபுரம் இங்கே ஸ்தல சயனப் பெருமாள் கோயிலில் பூதத்தாழ்வார் சன்னதி அமைந்துள்ளது. இது பூதத்தாழ்வார் அவதார ஸ்தலம் என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவர் அவதரித்த நந்தவனம் இந்த கோவில் கோபுரத்திற்கு எதிரே இருந்ததாக வரலாறு உண்டு.
ஸ்தலசயனப் பெருமாள் கோபுரம் விஜயநகரம் மற்றும் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது என்பதற்கான அறிகுறிகள் எல்லாம் வெளிப்படையாக தெரியும் அளவுக்கு இருக்கிறது. இது ஐந்து அடுக்குகள் கொண்ட கோபுரம் ஆகும். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று என்றால், அதில் ராமாயணம் மற்றும் புராணங்களில் இருந்து காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் உட்புற சுவர்களிலும் இவை இருக்கின்றன. பெருமாள் சன்னதிக்கு மேலே இருக்கும் விமானம் பல்லவர் காலத்தியது என்பது அதன் அமைப்பிலிருந்தும், திருஊரகம், திருப்பாடகம் ஆகிய தலங்களில் உள்ள விமானங்களை ஒத்து இருப்பதை காணமுடியும். காஞ்சிபுரத்தில் வரதராஜர் கோவிலின் புண்ணியகோட்டி விமானத்தையும் ஒத்திருப்பதை அறிந்துகொள்ளலாம். கோவிலில் ஆஞ்சநேயர், நில மங்கை தாயார், பூதத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர் மற்றும் ராமர் என தனி சன்னதிகள் பெருமாள் சன்னதியை சுற்றி வரும் பிராகாரத்தில் அமைந்துள்ளன.
(ஓவியக் குறிப்பு..)
பூதத்தாழ்வார் சன்னதி மிக எளிமையானது. ஆழ்வார் உட்கார்ந்த நிலையிலே அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். அவருடைய திருக்கரம் ஆத்ம உபதேசத்தை குறிக்கும் வகையில் ஆட்காட்டி விரலும் கட்டை விரலும் சேர்ந்து கவிழ்ந்த முத்திரையாக அவருடைய இதயத்திற்கு அருகில் இருக்கிறது. இடது திருக்கரம் அவருடைய உதரத்தின் கீழே இருக்கிறது. மற்றொரு கவனிக்கத்தக்க அம்சம் மூலவர் அர்ச்சாவதாரத்தின் பீடம் கீழே சக்கரங்களை கொண்டுள்ளது. ஒரு ரதத்தில் அல்லது தேரில் அமர்ந்து இருப்பது போன்று இந்த பீடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆழ்வார் உடைய திருமேனி, விஜயநகர் காலத்திய வடிவமைப்பு கொண்டது. நிச்சயமாக பல்லவர் காலத்தது அல்ல. சமீபத்தில் செய்யப்பட்ட ஒரு பிரபாவளி ஆழ்வாரின் மூலவர் திருமேனியை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆழ்வாரின் உற்சவத் திருமேனி தாமரை பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. உற்சவ முத்தத்தின் அமைப்பு விஜயநகர் காலத்தியது. தலையில் முடி கொண்டையாக உச்சந்தலையில் அமைந்திருக்கிறது. திருமேனி சற்றே வலப்பக்கம் சாய்ந்து கையில் அஞ்சலி முத்திரையை கொண்டுள்ளது. உற்சவ மூர்த்தியின் பீடமானது அந்த மூர்த்தத்திற்கு ஒரு உயரத்தை கொடுக்கும் அளவுக்கு உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. உற்சவ காலங்களில் அலங்காரம் செய்வதற்கு ஏற்றார்போல் அந்த உயரமானது அமைந்திருப்பது சிறப்பு. உற்சவ மூர்த்தம் முகத்தில் அரும்பிய புன்னகையோடு இருப்பது தனிப் பெரும் சிறப்பாகும்.
பூதத்தாழ்வார்...
ஆழ்வார்கள் பன்னிருவரில், முதலில் தோன்றியவர் பொய்கை ஆழ்வார்; இரண்டாவதாக அவதரித்தவர் பூதத்தாழ்வார்; மூன்றாவதாக அவதரித்தவர் பேயாழ்வார். இவர்கள் மூவரும் முறையே ஐப்பசி மாதத்தின் அடுத்ததடுத்த நாட்களில் (திருவோணம், அவிட்டம், சதயம்) தோன்றியவர்கள் ஆவர். இவர்கள் எப்போதும், “முதலாழ்வார்கள்” என்றே அழைக்கப்படுகின்றனர்.
பூதத்தாழ்வார்: பொய்கை ஆழ்வார் தோன்றிய மறுநாள் திருக்கடல்மல்லையில் (மகாபலிபுரம்) மலர்ந்த நீலோற்பலமலரில், அவிட்ட நக்ஷத்திரத்தில் திருமாலின் கதையின் அம்சமாய்த் தோன்றினார், கடல் வண்ணம் பூதமென்பது போலத் தோன்றும். அதனால் பூதத்தாழ்வார் என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். இவர் அருளிச்செய்த திவ்யப்ரபந்தம் “இரண்டாம் திருவந்தாதி” என்று வழங்கப்படுகிறது. “அன்பே தகளியா” என்று தொடங்கம் இந்தப் ப்ரபந்தம் 100 பாசுரங்களைக் கொண்டது.
ப்ரபந்தங்களும் நாலாயிர திவ்யப்ரபந்தத்தில் மூன்றாவது ஆயிரமான “இயற்பா”வில் ஸ்ரீமந்நாதமுனிகளால் வகை செய்யப்பட்டிருக்கிறது.
ஆக, மூவரும் உலகு இயற்கைக்கு மாறாக ஒரு தாயின் வயிற்றில் தோன்றியவர்கள் அல்லர். இவர்கள் மூவரும் தோன்றியது முதலேயே திருமாலால் அருளப்பட்டு அவனுக்கு அடிமை பூண்டு அவன் புகழ்பாடி அவன் அடியார்களுக்குத் தொண்டு செய்து, மேலும் ஓரிடத்திலும் நிலை நில்லாது அவன் (திருமால்) புகழ் பரப்பித் திரிந்தனர்.
இவர்கள் எப்படி ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர்? இந்த திவ்ய விஷயம் எந்த இடத்தில் நடந்தது? எதனால் இது நிகழ்ந்தது? என்பவையெல்லாம் மிகவும் சுவையான விஷயங்களாகும்.
அவரின் அந்த முதல் பாசுரம் பற்றியும் அவரின் திருவந்தாதியின் சிறப்பு பற்றியும் அறிவோம்.
அமுதத் தமிழ் பருகுவோம்...
Leave a comment
Upload