தொடர்கள்
கதை
“அம்மாவே   வந்திருந்தாளோ?” - வெ.சுப்பிரமணியன்

20210630214353955.jpeg

இரவு முழுவதும் ஏனோ தூக்கமே வரவில்லை. காலையில் எழுந்ததும், லேசாக தலைவலித்தது. கண்கள் எரிச்சலாய் இருந்ததுடன், லேசாக சிவந்தும் இருந்தது.

“அப்பா… எனக்கு ஆஃபீஸில் லீவு சாங்ஷன் ஆகலை. அதோட, அவளுக்கும் திடீர்னு ஸ்டமக் அப்செட் ஆயிடுத்து. அதனால, நாளைக்கு நடக்கப்போற தாத்தாவோட ஸிரார்தத்துக்கு, நான் யாரையுமே கூட்டிண்டு சென்னையிலே இருந்து வரமுடியாது. என் பிரஷரை நீ புரிஞ்சுக்கோ” என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டான் என் மகன்.

“மைதிலி… சூடா ஒரு கப் காஃபி தாயேன்” என்றேன். சாதாரணமாக, விடியல் நேரத்தில், சௌஜன்யமாக இருக்கும் என் சகதர்மிணி, ஏனோ எரிந்து விழுந்தாள்.

“இன்னிக்குப் பொழுது, ஏன் விடிஞ்சுதுன்னு இருக்கு. உங்க சீமந்தப் புத்திரி அனு, நாளைக்கு எதோ அவளோட ஆஃபீஸ்லே, திடீர்னு ஆடிட்டிங் அரேஞ்சு பண்ணிட்டாளாம். அதனால, தாத்தாவோட தெவசத்துக்கு வரமுடியாதுன்னு, இப்போதான் பெங்களூருலிருந்து, எனக்கு ஃபோன் பண்ணினாள். ஆத்துகாரியங்களுக்கு வரமுடியாம அப்படி என்னதான் ஆஃபீஸ் வேலை பாழாபோறதோ?” என்று அலுத்துக் கொண்டாள்.

“உங்க நம்பர் பிசின்னு வந்ததாமே? யார்கிட்டே பொழுதுவிடிஞ்சதும் வம்பளந்திண்டிருந்தேள்?” என்று என்மீது, எரிந்து விழுந்தாள் மைதிலி.

“உன்னோட சத்-புத்திரன், பாலுவுக்கு, நாளைக்கு இங்கே வரமுடியாத காரணத்தை சொல்லிண்டிருந்தான்” என்று நான் சொல்லிக் கொண்டிருந்தபோதே, அவளின் அலைபேசி அழைத்தது.

“ரெகுலரா, நம்ம ஆத்து தெவசங்களுக்கு சமைக்க வரும், ராஜி-மாமி ஃபோன் பண்ணினாள். நேத்திக்கு ராத்திரி கீழே விழுந்துட்டாளாம். அதனால, நாளைக்கு சமைக்க வர முடியாதுன்னுட்டா. இப்போ என்ன பண்ணறது. நாளைக்கு உங்க அப்பாவோட ஸ்ரார்த்தம். ஒரே விசனமா இருக்கு” என்றாள் மைதிலி.

“சரி… அவளை விட்டா வேறு யாருமே இல்லையா என்ன? அந்த, கிழக்குத் தெருவிலேயிருந்து, ‘ஸ்பேர்-பஸ்’ மாதிரி, அவசரத்துக்கு சமைக்க, ஒரு மாமி வருவாளே? அவ என்ன ஆனா?” என்றேன்.

“அந்த மாமியோட ஆத்துக்காரர், சென்னைக்குப் போய், கண் ஆப்ரேஷன் பண்ணிண்டாராம். அதனால மாமியும் அவரோடவே போயிட்டாளாம். ஒரு மாசம் கழிச்சுதான் வருவாளாம்” என்று தனக்கு ஏற்பட்ட இக்கட்டால் புலம்பினாள், மைதிலி.

நானும், நண்பர்கள் மூலமாக, ‘ஸ்ரார்த்த சமையலுக்கு மாமிகளை தேடித்தேடிப் பார்த்து அலுத்துப் போய்விட்டேன். எதுக்கும் காரியம் பண்ணிவைக்க வரும் ஸாஸ்திரிகள் சங்கரனையே கேட்டால் என்ன என்று தோன்றியது.

சங்கரன் கொடுத்த இரண்டு நம்பர்களில் ஒரு மாமியின் நம்பர் ‘அவுட்டாஃப் கவரேஜாகவே’ இருந்தது. இன்னோரு நம்பருக்கு கால்பண்ணினேன். எதிர் முனையிலிருந்து “நான் சாரதா-மாமி பேசறேன். சொல்லுங்கோ… சங்கரன் ஸாஸ்திரிகள் சொன்னார். அவருக்கொசரம்தான் நான் உங்காத்துக்கு சமைக்க வரேன்னு ஒத்துண்டேன். என்னிக்கு சிரார்த்தம்” என்றாள் மாமி.

என்னோட அப்பாவுக்குதான், அதுவும் நாளைக்கு என்றேன்.

“அடடே… நாளைக்கு நான் பிசியா இருக்கேனே. நாளைக்கு மறுநாள்னா வந்து சமைச்சுத்தரேன்” என்றாள்.

எனக்கு வந்த எரிச்சலில், “சரி மாமி, நான் நாளைக்கு மண்டையைப் போடறேன், நீங்க மறுநாள் வந்து சமைச்சுத் தாங்கோ” என்று எரிந்து விழுந்து, ஃபோனையும் கட் பண்ணிவிட்டேன்.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, “மைதிலி மேடம் தானே?” என்று, புது நம்பரிலிருந்து வந்த ஃபோன்காலை அட்டென்ட் பண்ணினேன். “யார் நீங்க? உங்களுக்கு யார் வேண்டும்?’ என்றேன்.

“சங்கரன் ஸாஸ்திரிகளிடம், நாளைக்கு உங்க ஆத்து தெவசத்துக்கு சமைக்க, மாமி வேணும்னு கேட்டிருந்தேளாம். இப்போ பேசிண்டு இருக்கிறது, என்னோட நம்பர்தான். உங்க ஆத்து அட்ரஸை மெஸேஜ் பண்ணிட்டேள்னா, நாளைக்கு காலையிலே, ஆறு மணிக்கெல்லாம், உங்க ஆத்துக்கு நானே வந்துடறேன். எத்தனை பேருக்கு சமைக்கணும், என்ன அயிட்டம் பண்ணனும்னு, மெஸேஜ் அனுப்பிடுங்கோ’ என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் ‘அந்த’ மாமி.

ஸ்பீக்கரில் ஃபோனை போட்டிருந்ததால், கேட்டுக்கொண்டிருந்த என் சகதர்மிணி மைதிலியின் முகமும், சித்திரா பௌர்ணமி நிலவு போல பிரகாசித்தது.

இருந்தாலும் என்னிடமிருந்து, ஃபோனை வாங்கியவள், “மாமி… உங்களைத்தான் ‘மலை’ மாதிரி நம்பி இருக்கேன். அவசியம் வந்திருங்கோ. தட்ஷிணையைப் பத்தி யோசிக்காதீங்கோ.” என்று தன் படபடப்பை வெளிக்காட்டினாள் மைதிலி.

“நீ கவலைப் படாதேம்மா. நானே வந்து சமைச்சுத்தரேன்” என்று மாமி ஒருமையில் பேசி உத்திரவாதம் அளித்ததும்தான், சோகத்தால் நெளிந்து போன அவள் முகம் உருண்டது.

அடுத்தநாள், சொன்னபடி ‘சமையல் மாமி’ காலையில் ஆறு மணிக்கெல்லாம், வாசலுக்கு வந்து நின்றாள். “எப்படி வந்தேள் மாமி?” என்ற மைதிலியிடம், ‘எனக்கென்னம்மா, சொன்னா… சொன்ன இடத்துக்கு… சொன்ன நேரத்துக்கு, ‘பறந்தாவது’ வந்துடுவேன்” என்று சொல்லிவிட்டு, “நான் சமையல்ல கரெக்டா இருந்தாலும், பேச்சிலே உரிமை எடுத்துப்பேன். அதை நீயும் உன் புருஷனும், தப்பா எடுத்துக்க கூடாது” என்றாள் மாமி.

“மொத்தம் நாலு பேருக்குதானே சமைக்கணும்னு சொல்லியிருந்தே? எங்கே உன் ஆத்துக்காரன். கூப்பிடு அவனை” என்று மாமி ஒருமையில் சொன்னதும், சற்றே நிலைகுலைந்து போன மைதிலி, என்னிடம் வந்தாள்.

“வந்திருக்கிற சமையல் மாமி, முன்னப்பின்னே எதாவது ஒருமையில் உங்களைப் பேசினால், நீங்க தப்பா எடுத்துக்காதீங்கோ. நமக்கு இன்னிக்கு அவளை விட்டா வேறு யாரும் இல்லை” என்று உஷார் செய்துவிட்டுப் போனாள்.

‘மனைவி சொல்லே மந்திரம்’ என்று நானும் எப்படியாவது அப்பாவுக்கு ஸ்ரார்த்தம் ஆனா சரிதான் என்று, மாமியிடம் போய், “சொல்லுங்கோ மாமி, கூப்பிட்டேளாமே? எதாவது ஹெல்ப் வேணுமா?” என்றேன்.

“எதுக்கு இவ்வளவு காய் வாங்கியிருக்கே? நாலு பேருக்கு தேவையானதை வாங்கினாப் போதாதா? பிராமணா இரண்டு பேரும், எத்தனை மணிக்கு வரப்போறா, வாத்தியார் எப்போ வரேன்னார்?” என்று கேள்விகளால் குடைந்தாள்.

அப்போது சங்கரனிடமிருந்து ஃபோன்கால் வந்தது. “சார், என் சித்தப்பா இன்னிக்கு காலையிலே மூணு மணிக்கெல்லாம், தஞ்சாவூர்லே, சிவலோகபிராப்தி அடைஞ்சுட்டார். அதனால நான் கிளம்பி, தஞ்சாவூருக்கு போயிண்டிருக்கேன். எனக்கு பதிலா, ‘கிட்டு’ ஸாஸ்திரிகளை, காத்தால பத்து மணிக்கெல்லாம், உங்க ஆத்துக்கு வரச் சொல்லியிருக்கேன். அவரே, இரண்டு பிராமணாளை, தெவசத்துக்கு சாப்பிட கூட்டிண்டு வந்திடுவார். அவரோட மொபைல் நம்பரை உங்களுக்கு அனுப்பி இருக்கேன். தப்பா நினைச்சுக்காதீங்கோ…” என்று சொன்னதும், எனக்குள் பிரஷர் அதிகமானது.

அன்று மணி பன்னிரெண்டாகியும், ஸாஸ்திரிகளும், பிராமணர்களும் வரவில்லை. சங்கரன் மற்றும் கிட்டு ஸாஸ்திரிகளின் அலைபேசிகளும் தொடர்பெல்லைக்கு வெளியே இருந்தது.

சமையல் மாமியோ, கச்சிதமாக சமைத்திருந்தாள். ஸிரார்த்தம் நல்லபடியாக நடக்காவிட்டால், ‘பித்ருசாபம்’ வந்துவிடுமோ என்று, மைதிலி கலங்கிப்போயிருந்தாள்.

அப்போது, வீட்டு வாசலில், ஒரு ஆட்டோ வந்து நின்றது. இருபது வருடங்களுக்கு முன்னால், என் மகனோடு, கல்லூரியில் ஒன்றாக யூ.ஜி. படித்த அவனின், நண்பர்கள், ‘ஷாகுல்’ மற்றும், ‘எட்வின்’ என்ற இருவர் இறங்கினார்கள்.

“சார்… எப்படி இருக்கீங்க. நாங்க இரண்டு பேரும், கிரானைட் பிஸினெஸ் பண்ணறோம். திருச்சிக்கு மார்கெட்டிங் விஷயமாக வந்தோம். இன்னிக்கு, பாலு இங்கே வருவதாக ஃபோனில் சொல்லியிருந்தான். அவனையும், அப்படியே உங்களையும், பார்த்திட்டு போகலாம்னு வந்தோம்’ என்றார்கள்.

உள்ளே இருந்த சமையல் மாமி, என்னை ஒரு நிமிடம் அழைத்தாள்... “இங்கே பாருப்பா… பிராமணா வரலேன்னு கவலைப் பட்டியே. இப்போ, உன்னோட தோப்பனாரே, அந்த பித்ரு லோகத்திலே இருந்து, ரெண்டு பேரை அனுப்பி வைச்சிருக்கார். நீ அவாளுக்கு கால் அலம்ப தண்ணி எடுத்துக் குடுத்து, அவா ரெண்டு பேரோட வயிறு நிறைய சாதம் போடு. அதுதான், உங்கப்பாவுக்கு நீ செய்யப் போற, ‘பிராமண-போஜனம்’, புரிஞ்சுதா” என்றாள்.

‘ஷாகுலும், எட்வினும்’ சாப்பிட உட்கார்ந்தார்கள். மைதிலியும், சமையல் மாமியும், பரிமாறினார்கள். வயிறார சாப்பிட்ட இருவரும், என்னிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, “சார், இருபது வருஷத்துக்கு முன்னாடி, அடிக்கடி உங்க வீட்டுக்கு வந்து, ‘உங்க அம்மா’ கையால சாப்பிடுவோம். இன்னிக்கு சாப்பிட்டதும், அதே சந்தோஷம்தான் கிடைச்சுது. நாங்க கிளம்பறோம்” என்று சொல்லிவிட்டு போய்விட்டார்கள்.

அவர்கள் போன பிறகு மாமியும், கிளம்பினாள். என்னமோ தெரியவில்லை, மைதிலி கொடுத்த தட்ஷிணை மற்றும், குங்குமத்தை, வாங்கிக் கொள்ளாமல், ‘இன்னிக்கு வேண்டாமே’ என்று சொல்லி அன்புடன் மறுத்துவிட்டாள்.

சங்கரன், ஃபோன் பண்ணினார். “கோவிச்சுக்காதீங்கோ சார். நான் சொன்ன சமையல் மாமிகள் யாருமே, உங்க ஆத்துக்கு, சமைக்க போகலேன்னார்கள். கிட்டுவும், வரமுடியாம போயிடுத்தாம். பிராமணாளுக்கும், சமையல் மாமிக்கும் எப்படி மேனேஜ் பண்ணினேள்?” என்று கேட்டபடியே, “சாய்ங்காலம் கூப்பிடறேன் சார்” என்று சொல்லிவிட்டு அலைபேசியை துண்டித்தார்.

குழப்பத்துடன், நானும் சற்று கண்ணயர்ந்தேன். என் காதருகே, “குழந்தே… சாப்பிட்டயாடா… மோர்க்குழம்பு உனக்கு பிடிச்சமாதிரி இருந்துதா? உங்கப்பாவுக்கு எள்ளுருண்டையிலே வெல்லம் ஜாஸ்தியா போட்டிருந்தாதான் பிடிக்கும். அதனால வெல்லம் தூக்கலா போட்டிருந்தேனே” என்று, என் அம்மாவின் குரல், என் காதில் ஒலித்தது. சட்டென்று கண்விழித்தேன்.

என் மனைவி தலைதெறிக்க ஓடி வந்தாள். “ஏன்னா… சித்த வாங்கோளேன். கொல்லைப்பக்கம் உங்க அம்மா கூப்பிட்டமாதிரி எனக்கு கேட்டுது. போய்ப் பார்த்தேன், அம்மாவைக் காணோம். ‘சாத்து உருண்டை’ வைச்சிருந்தோமோனோ? அதை ஒரு காக்காய் சாப்பிட்டுண்டு இருந்துது. திடீர்ன்னு அந்த காக்கா, ‘வரேன் மைதிலின்னு’ சொல்லிண்டே பறந்த மாதிரி எனக்கு ஒரு பிரம்மை” என்று புலம்பினாள்.
ஒருவேளை, அன்று, எங்கள் இக்கட்டான சூழ்நிலையை புரிந்துகொண்டு, என் அப்பாவின் சிராத்தத்துக்கு சமைக்க, என் “அம்மாவே வந்திருந்தாளோ?”