சிவகுமார் மன நோய் மருத்துவர். அன்று அவரைப் பார்க்க சுந்தரவதனன் என்பவர் முன் அனுமதி வாங்கி இருந்தார். சுந்தரவதனன் என்றால் மிகவும் அழகாக இருப்பார் என்று சிவகுமார் நினைத்துக் கொண்டிருந்தார். அனால் அவரை நேரில் பார்த்தபோது... “இவனுக்கு சுந்தரவதனன் என்று பெயர் வைத்திருக்கக் கூடாது. சுந்தரவானரம் என்று வைத்திருக்க வேண்டும். அந்த மாதிரி முக அமைப்பு, தலை முடி பரட்டை, ஒரு அழுக்கு சட்டை. சீக்கிரம் இவனை அனுப்பி விடவேண்டும்.”
“வாங்க சுந்தரவதனன். ஏன் இப்படி இருக்கிறீர்கள்? வீட்டில் ஏதாவது சண்டையா? அல்லது உங்களுக்கு உடல் நலம் இல்லையா? உங்களுக்கு என்ன ஆயிற்று? உங்கள் பிரச்சனை என்ன என்று சொல்லுங்கள். எதுவாக இருந்தாலும் குணப்படுத்தி விடலாம்.”
“எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல டாக்டர்...”
“பிறகு எதற்கு என்னைப் பார்க்க வந்தீர்கள்?”
“நமிதாவும், ஷகிலாவும் எப்பொழுதும் சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதுதான் என் பிரச்சனை.”
“அவர்கள் யார்? ஏன் சண்டை போடுகிறார்கள்?”
“என்ன டாக்டர் இப்படி அப்பாவியாக இருக்கிறீர்கள். அவர்கள் சினிமா நடிகைகள். உங்களைப் பார்த்தா மிகவும் இள வயதா தெரியுது. அதனாலதான் உங்களுக்கு ஷகிலா நமிதா பற்றி தெரியல.”
“சரி. அவர்கள் இருவரும் நடிகைகள். அவங்க சண்டை போட்டால் உங்களுக்கு என்ன?”
“அவர்கள் என் மனைவிகள். மனைவிகள் சண்டை போட்டால் எனக்கு பிரச்சனை வராதா?”
“ஓ.. அப்படியா.. அவர்களுடன் உங்களுக்கு எப்பொழுது கல்யாணம் ஆகியது?”
“ இருபது வருடத்துக்கு முன்னால்..”
“அப்படின்னா இருபது வருடமாக சண்டையா? ஏன் முன்பே என்னிடம் வரவில்லை? இருவருக்கும் எப்பொழுது சண்டை ஆரம்பித்தது?”
“முதலில் நான் ஷகிலாவை தான் கல்யாணம் செய்து கொண்டடேன். சமீபத்தில் ஒரு மாதம் முன்பு தான் நமிதாவை கல்யாணம் செய்து கொண்டேன். அதிலிருந்து ஒரே சண்டை...”
சிவகுமார் மனதுக்குள்... “இவனுக்கு எதோ சித்த பிரமை போல் இருக்கு. இவன் இஷ்டத்துக்கு சினிமா நடிகைகளை கல்யாணம் செய்து கொள்வானா? அது எப்படி முடியும்? இவனிடம் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்”.
“அது எப்படி உங்க விருப்பப்படி எப்ப வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்கிறீர்கள்? உங்களுடன் அவர்களுக்கு கல்யாணம் ஆகியது அவர்களுக்குத் தெரியுமா?”
“அவர்களுக்கு எப்படி டாக்டர் தெரியும்?”
“ஆச்சரியமாக இருக்கே.. அது எப்படி அவர்களுக்கு தெரியாமல் அவர்களை கல்யாணம் செய்து கொண்டீர்கள்?”
“இதில் என்ன ஆச்சரியம் டாக்டர். எல்லாம் கனவில்தான்.”
“நாசமா போச்சு.. இப்ப அவர்கள் சண்டை போட்டுக்கொள்வதும் கனவில் தானே.?”
“ஆமாம் டாக்டர். இருவருக்கும் என்மேல் ரொம்ப ஆசை. அதனால் சக்களத்தி சண்டை..”
“சரி. அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?”
“நீங்க எப்படியாவது அவர்கள் சண்டையை நிறுத்த வேண்டும்.”
“அது முடியாது. அதை விட உங்களுக்கு எளிதில் ஒரு வழி சொல்கிறேன். இன்று இரவு அவர்கள் கனவில் வரும்போது அவர்களை விவாகரத்து செய்து விடுங்கள். பிறகு இப்பொழுது பிரபலாமாக இருக்கும் இரண்டு நடிகைகளை திருமணம் செய்துகொள்ளுங்கள்.”
“ஆகா.., நல்ல யோசனை. அப்படியே செய்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த தமன்னாவையும், ஹன்சிகாவையும் கல்யாணம் செய்து கொண்டுவிடுகிறேன்.”
“ஆனால், எச்சரிக்கை... இருவரையும் ஒரே வீட்டில் குடி வைக்க வேண்டாம். சண்டை வந்துவிடும்!”
“சரி. டாக்டர். மிக்க நன்றி. இந்தாருங்கள் உங்கள் பீஸ்..”
சிவகுமார் பணத்தை வாங்கிக்கொண்டு தலையில் அடித்துக்கொண்டார்.
Leave a comment
Upload