தொடர்கள்
மக்கள் கருத்து
மக்கள் கருத்து.. - தில்லைக்கரசி சம்பத்

நியாயவிலை கடையில் வாங்கும் ரேஷன் பொருட்களை, நீங்கள் பயன்படுத்துகிறிர்களா?

மைதிலி பழனி, வண்டலூர்.

20210630150715176.jpeg

நாங்க அரிசி துவரம் பருப்பு பாமாயில் சர்க்கரை எல்லாம் வாங்கி பயன்படுத்துறோம்.. முன்னாடி மண்ணெண்ணெய் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க.. இப்ப கேஸ் சிலிண்டர் வச்சிருக்கிறதால மண்ணெண்ணெய் கொடுக்கிறதில்ல. அதோட ரேஷன் கடையில் அரிசி வாங்காம இருந்தா தான் கோதுமை கொடுப்பாங்க. இரண்டும் சேர்த்து கொடுக்க மாட்டாங்க. ஒரு மாசத்துக்கு 20 கிலோ அரிசி கொடுக்குறாங்க. அதனால் ரேஷன் கடையில அரிசி வாங்கிக்கிட்டு வீட்டுக்கு தேவைப்படுற கோதுமை மாவை வெளிக்கடையில வாங்கிக்குவோம்.


பானுமதி கண்ணபிரான், ஆதம்பாக்கம்.

எங்க ரேஷன் கார்டுக்கு சர்க்கரை மட்டும் தான் கொடுக்குறாங்க. மாசத்துக்கு 5 கிலோ .‌ முன்னெல்லாம் சர்க்கரையோட, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு கொடுத்தாங்க. அரிசி எப்பவுமே வாங்கியதில்லை.


வினோதினி மகேஷ், தாம்பரம்.

ரேஷன் கார்டு சும்மா ஒரு ஆதார டாக்குமெண்ட்க்காக தான் வாங்கி வச்சிருக்கோம். சர்க்கரை மட்டும்தான் வாங்க முடியும். அந்த சர்க்கரையும் தூக்கி என் மாமியார்கிட்ட கொடுத்துடுவேன். அவங்க அவங்களோட ரெண்டு நாத்தனார்களுக்கு கொடுத்துடுவாங்க.


சரோஜா பரமசிவம், சைதாப்பேட்டை.

அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் எல்லாமே வாங்கிட்டு தான் இருந்தோம். கேஸ் சிலிண்டர் வச்சிருந்தா மண்ணெண்ணெய் கிடையாதுனு சொல்லிட்டாங்க.. சிலிண்டர் விலை 800 ரூவா தாண்டி நிக்குது. ஒரு அவசர ஆத்திரத்துக்கு வெந்நீர் வைக்கவும், திடீரெனு சிலிண்டர் தீந்து போனா... ஸ்டவ் அடுப்புல சமைக்க மண்ணெண்ணெய் உபயோக படுத்திகிட்டு இருந்தோம்.. இப்ப ரேஷன் விலையில மண்ணெண்ணெய் கொடுக்காததால, அங்கேயே லிட்டருக்கு 30 ரூபா அதிக விலை கொடுத்து வாங்கிக்கிட்டு இருக்கோம். ‌


வெ.தியாகு, மண்ணிவாக்கம்.

கொரோனா நிவாரணமா திமுக தேர்தல் வாக்குறுதியா சொன்னது போலவே ஜூன் மாசத்துல ரேஷன் அட்டைக்காரங்களுக்கு ரூ 4000 ரூபாய் 2 தவணையா கொடுத்தாங்க . அதோட ஜூன் அஞ்சாந்தேதியிலிருந்து... கோதுமை மாவு, ரவை, சர்க்கரை, உளுந்து, புளி, கடுகு, சீரகம், சோப்புன்னு மொத்தம் 13 சாமானுங்க கொடுத்தது கொரோனா காலத்துல ரொம்ப உதவியா இருக்குது. போன மாசம் நிவாரண தொகை ரூ 4000த்தை வாங்காதவங்க, இந்த மாசம் வாங்கிக்கலாம்ன்னு ரேஷன் கடையில சொல்லி இருக்காங்க.


தேவகி வரதராஜன், சிங்கப்பெருமாள்கோயில், செங்கல்பட்டு.

அரிசி, சக்கரை, பருப்பு எல்லாமே வாங்குவோம். அரிசி சில சமயம் நல்லா இருக்காது. அதனால மாட்டுக்கு தீனியா வச்சிருவோம். அரிசி நல்லா இருந்தா இட்லி மாவுக்கு அரைச்சு உபயோகிப்போம். ஆனா இந்த பொருளெல்லாம் ரேஷன் கடையில என்னைக்கு போடுறாங்கனு கூட ஒழுங்கா சொல்ல மாட்டாங்க. திடீர்னு ரேஷன்ல சக்கரை போடுறாங்கனு ஊர்ல ஒருத்தருக்கு ஒருத்தர் சேதி சொல்லி, பிறவு அவசர அவசரமா ரேஷன் கடைக்கு கார்டை எடுத்துக்கிட்டு ஓடுவோம். 1 மணி நேரம் லேட்டா போனா தீர்ந்து போச்சு.. அப்புறம் வான்னு சொல்லிடுவாங்க. கடைக்காரங்க உண்மையைத்தான் சொல்றாங்களா இல்ல பதுக்கி வச்சு வெளியில விக்கிறாங்களான்னு தெரியல. நாமளும் ரொம்ப எதிர்த்து கேட்கவும் முடியாது. அப்புறம் அடுத்த தடவ கடைக்கு போனா நம்ம பங்குல கைய வச்சிருவாங்கனு பயம் இருக்கிறதால கம்முன்னு இருக்கோம். அரசாங்கம் தான் இத எல்லாம் கொஞ்சம் கவனிக்கனும்.


க.சுப்பிரமணியம் , படப்பை.

மண்ணெண்ணெய் தவிர எல்லா சாமானும் வாங்கி உபயோகிக்கிறோம். எங்க ரேஷன் கடையில சரியான அளவுல பொருட்களை கொடுக்க மாட்டேங்கிறாங்க... ஸ்மார்ட் கார்டு முறை, கைரேகைப் பதிவு முறை, எந்தெந்த பொருளை எத்தனை கிலோ வாங்கினோம்ங்கிற தகவல் நம்ம போனுக்கு எஸ்எம்எஸ் வர்றதுனு எல்லாம் பக்காவா இருந்தாலும்... தப்பு நடக்க தான் செய்யுது.

அரிசி, சக்கரை, பருப்பு எல்லாத்தையும் ரேஷன் கடைக்கு கொண்டு வரும்போதே 1 கிலோ, 1/2 கிலோன்னு பொருளுக்கு தகுந்த மாதிரி பொட்டலமாவே கட்டி கொடுத்துட்டா, அளவுல ஏமாத்த முடியாது.