தொடர்கள்
சிறு தொடர்கதை
மறு வாசனை... - 6 - அய்யாசாமி

20210817095645413.jpeg

கும்பகோணத்திற்கு வந்து தங்கியபின், அங்கிருந்து காலையில் கிளம்பிய செட்டியார், அவளிவநல்லூர் கிராமம் வந்து சேர்ந்தபோது மணி காலை ஏழு.

அபிஷேக ஏற்பாடுகளை செய்த கனேசன் என்கிற உள்ளூர் நபருக்கு போன் செய்தவுடன் அவரும் வந்தார்.

இன்னும் ஆலயம் திறக்கப்படாமல் இருப்பதைக் கண்டு அருகில் இருக்கும் குருக்கள் வீட்டிற்குச் சென்ற கணேசன் குருவைக் கூப்பிட...

குருவும், லலிதாவும், இரவு முழுவதும் தூங்காமல் இருந்திருக்க வேண்டும்,
முகம் வீங்கி இருந்தது. அழுது அழுது கண்கள் சிவந்து இருக்க தலையைக் குனிந்தபடியே குழந்தையை தூக்கிக் கொண்டு கோவிலுக்கு வந்தனர்.

அபிஷேக சாமன்களை அம்பாள், சுவாமி என பிரித்து வைத்து பால், தயிர், இளநீர், பன்னீர் அனைத்தாலும் தன் கண்ணீரோடு கலந்து அபிஷேகம் செய்து முடித்து, புது வஸ்த்திரம் சாற்றி பொறுமையாக அலங்காரம் செய்தார் குரு.

ஆலயத்தில் பூத்திருந்த பூக்களைப் பறித்து சேகரித்து, கண்ணீருடன் சேர்த்து கோர்த்து மாலையாக கட்டிக்கொண்டு இருந்தாள் லலிதா.

குழந்தை அங்கும் இங்கும், தவழ்வதும், அழுவதுமாக இருந்தது.

அழும் குழந்தையை ஆச்சி தூக்கியதும் அமைதியாக இருந்தது. செட்டியாருக்கும், ஆச்சிக்கும் குழந்தை தங்களிடத்தில் அமைதியாக இருந்ததைக் கண்டு மகிழ்சியாக இருந்தார்கள்.

சமர்த்தாக இருக்கிறான். நாங்கள் எங்கள் ஊருக்கு தூக்கிகிட்டு போகிறோம் என செட்டியார் ஆலயத்தில் விளையாட்டாகச் சொன்னதும், நாலா பக்கத்திலிருந்தும் பல்லிகள் தன் குரல் எழுப்ப... அதைக் கண்ட குரு, லலிதா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கண்களால் பேசிக்கொண்டனர். செட்டியாரும், ஆச்சியும் நல்ல சகுனமாக கருதி ஆச்சரியமானார்கள். அபிஷேகம் மற்றும் பூஜைகள் முடிந்து பிரசாதம் கொடுத்துவிட்டு, இதோ வருகிறோம் என தங்கள் வீட்டிற்கு
போன குருவும் லலிதாவும் திரும்பி கோவிலுக்கு வரவே இல்லை.

நேரம் கடந்தும், அவர்கள் வராததால்...

கனேசன் குருக்களைத் தேடி அவர் வீட்டிற்கு போனார்.

செட்டியாரும் பின் தொடர்ந்து குழந்தையோடு போக, வீடு திறந்தபடி
இருந்தது. நடுக்கூடத்தில் உள்ள விட்டத்தில், ஒரே புடவையில் இருவரும்
தூக்கிட்டு தொங்கிக் கொண்டிருந்தார்கள்.

சாட்சிநாதர் சாட்சியாக பார்த்துக்கொண்டுதான் இருந்தார் நடப்பவை
அனைத்தையும்.