தொடர்கள்
கதை
ஆகாச வாணி... - கி. ரமணி

20210815195739336.jpg

செங்கோட்டை பாசஞ்சர் ஆடி அசைந்து நீராவிப் பெருமூச்சு விட்டுக்கொண்டு மேலக் கல்லூரை அடைந்து நின்று, சிறிது இளைப்பாறிய போது மணி மதியம் ஒன்று ஆகிவிட்டது.

வருஷம் 1964...

மெட்ராஸ் எழும்பூரிலிருந்து, நெல்லை வரை திருநெல்வேலி எக்ஸ்பிரஸாக மதிப்புடன் பவனி வந்து, பின் நெல்லையில் சில ரயில் பெட்டிகளையும், எஞ்சினையும் இழந்து, வேறு ஒரு ரிட்டையர் ஆகப்போகும் என்ஜின் பூட்டப்பட்டு, அந்தஸ்து குறைக்கப்பட்டு, செங்கோட்டை பாசஞ்ஜராக உரு மாறி, தெற்கு நோக்கி நிறைய புகையுடனும் சோம்பலுடனும் செல்லும் அந்தக் கால கரி எஞ்சின் ரயில்.

நெல்லையிலிருந்து 20 கிலோமீட்டர் கடக்க முக்கால் மணி நேரம் ஆகிவிட்டது.

மேலக்கல்லுரில் வண்டி இரண்டு நிமிஷம்தான் நிற்கும்.

வண்டியிலிருந்து இறங்கி, பின் அவசரமாக பெட்டிகளை இறக்க சாந்தி எத்தனிக்கும் போது, முருகு ஓடிவந்தான். மேலே சட்டையின்றி, முடிச்சுப்போட்ட நழுவும் காக்கி டிரௌசர் அணிந்த சட்டையில்லாத, பன்னிரண்டு வயதுப் பையன்.

“அம்மா, நெல்லையப்பன் சாமி வீடு தானே. ஜாமான் எல்லாம் எங்கிட்ட கொடுத்திடுங்க” என்று சொல்லி சாமான்களை எடுத்து கீழே வைத்தான்.
ரயில் பெட்டி படிக்கட்டில் நின்று கொண்டிருந்த ஒன்பது வயது சிறுவன் ராஜுவை தூக்கி இறக்கினான்.

“வெளியே நம்ம வில் வண்டி நிக்கு. பிள்ளைய கூட்டியாங்க.” ரெண்டு பெட்டியை எடுத்து தூக்கிக் கொண்டு முன்னே சென்றான்.

வண்டி பக்கத்தில் பெட்டிகளை வைத்துவிட்டு திரும்பிச் சென்று, மீதியிருந்த பெரிய அட்டைப் பெட்டியையும் எடுத்துக்கொண்டு வந்தான். அட்டைப்பெட்டி மேல் ஆங்கிலத்தில் ‘கிரண்டிக்’ என்று எழுதியிருந்தது.

“சங்கரன் வரவில்லையா” என்று கேட்டாள் சாந்தி.

“ரெண்டு நாளா ஜுரமா கிடக்காக. மலேரியா போலனு சொல்லுதாங்க.
உடம்பு செரியாக ஒரு வாரம் ஆகுங்காங்க. நா அவுக மவன் தான். முருகானந்தம்” என்றான் முருகு.

களையான கரிய முகம், தோண்டித் துறுவும் பார்வை. ஒல்லி உடல்.

அமர்ந்து, நிதானமாக வைக்கோலை அசை போட்டுக் கொண்டிருந்த அந்த இரண்டு பெரிய மயிலைக் காளைகளையும் வாலைச் சுற்றி எக்கி எழுப்பி, வண்டியின் நுகத் தடிக்குள் செலுத்தி, சற்று எம்பிப் பூட்டான் கயிறுகளை, காளைகள் கழுற்றில் லாவகமாக மாட்டினான்.

சாந்திக்கு ஆச்சரியமாக இருந்தது.

“தைரியமா இந்த மாடுகள வண்டியில பூட்டரே”...

“அதுங்க நம்ம பிரன்டுல்லா. ஒன்னும் செய்யாது.”

சாமான்களை வண்டியில் ஏற்றி வைத்தான் முருகு.

சாந்தி வண்டிக்குள் ஏறினாள்.

முருகு ஒரு எம்பு எம்பி ஏறி... “தம்பி வா” என்று ராஜூவைத் தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்டான். மாட்டின் கயிறுகளை சொடுக்கி, தார் குச்சியால் மாடுகளின் முதுகில் செல்லமாக தட்டி, த்த்த.. பா... என்று சொல்லி வண்டியைக் கிளப்பினான். தலையைச் சிலுப்பி, “சரி, போய்த் தொலைக்கலாம்” என்கிற மாதிரி மெதுவாக மாடுகள் கிளம்பின.

மெயின் ரோடு தாண்டி, பெரிய வாய்க்கால், நெல் வயல், அதில் கொக்குக்கூட்டம், கரும்புக்காடு, வாழைதோப்பு, அம்மன் கோவில், ஆலமரம், ஒன்றிரண்டு தாமரைகளுடன் நிறைய அல்லி மலர்களும், சேறும், அழகும் நிறைந்த தாமரைக்குளம்... ஆட்டுக்கூட்டம்,
ஒரு கிலோமீட்டர். அப்புறம்... இதோ வலது பக்கமாக திரும்பினால் இடது புறத்தில் ஆறாவது வீடு.

வீட்டு வாசலில் சாந்தியின் தந்தை நெல்லையப்பன் காத்துக் கொண்டிருந்தார். ரிட்டயர்டு மேஜிஸ்ட்ரேட். பென்ஷனுடன் நிறைய நிலபுலன்கள்.

சங்கரன் தான் அவருடைய நிலம் மற்றும் வீட்டு காரியம் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் இல்லாவிட்டால் ஒன்றுமே நடக்காது என்பார் நெல்லையப்பன். அது உண்மையும் கூட. சங்கரன் பொறுப்பான, கடும் உழைப்பாளி.

இன்று அவனுக்கு பதில், அவன் பிள்ளை.

சாமான்களை வீட்டுக்குள் எடுத்து வைத்தான் முருகு.

அட்டை பெட்டியை உள்ளே எடுத்து வைத்து...
“இது என்னா கனம் கனக்கு!” என்றான்.

“உள்ள புது ரேடியோ இருக்கு. எடுத்து வச்சப்பொறம் நாளைக்கு காட்டுறேன்” என்றான் ராஜு.

சாந்தியின் அம்மா, பெண்ணையும் பேரனயும் வரவேற்ற பின் ஒரு சொம்பில் காப்பி மற்றும் டம்ளர்கள் கொண்டு வந்து ஊஞ்சலில் வைத்தாள்.

“முருகு, காபி சாப்பிடுறியா?” என்றாள் சாந்தி.

வாசல் கதவு பக்கம் இரு கை தூக்கி ஸ்டைலாக நின்று கொண்டு,
“வேண்டாங்க... இந்த காபி எல்லாம் நான் குடிக்கறது இல்லை. பித்தம். யேன் வீட்டுல ஆத்தா வைக்கிற சுக்குக் கருப்பட்டி காப்பி மட்டும் தான் குடிப்பேன்” என்றான் முருகு.

“முருகு எதையும் கேக்க மாட்டான். கொடுத்தா வாங்கவும் மாட்டான். ரோஷமான பையன்” என்று சிரித்தார் நெல்லையப்பன்.

“நல்ல பையனா இருக்கியே. எத்தனாவது படிக்கிற..”

“அஞ்சாப்பு. அப்பொறம் நிறுத்திட்டேன். புடிக்கல. வீட்ல வேலை வேற நிறைய கிடக்குல்லா.”

“ஏம்பா பாவம்.? ஏன் படிப்பெல்லாம் நிறுத்திட்டான்?”

“சங்கரனுக்கு வேலைக்கு உதவியாக இருக்கணும்னு படிப்பை நிறுத்திட்டான். முருகு ரொம்ப மன முதிர்ச்சியான பையன். பேச்சு, வேலையெல்லாம் நாப்பது வயசு ஆளு மாதிரி. பொறுப்பு அதிகம்..” என்றார் நெல்லையப்பன்.

பின் “முருகு. நம்ம ராஜு ஒரு வாரம் இங்கன தான் இருப்பான். இவனோட கூட இருந்து கொஞ்சம் பாத்துக்கிடணும். சரியாப்பா?” என்றார்.

அடுத்த நாள் எட்டு மணிக்கு, டாண் என்று வீட்டுக்கு வந்துவிட்டான்.

சாந்தி “உள்ளே வாப்பா... வந்து ஊஞ்சலில் உட்காரு” என்றாள். கூடத்தில் தேக்கு மரத்தில் ஏகப்பட்ட வேலைப்பாடுகளுடன் வழவழ என்று செய்த ஊஞ்சல். பளபளப்பான சங்கிலிகள். ஊஞ்சலின் நாலு மூலைகளிலும் பித்தளைப் பூண் போடப்பட்டிருந்தது.

“இல்லீங்க. இங்கனயே இருந்துக்கிடுதேன். நமக்கு இந்த ஊஞ்சல் எல்லாம் சரியா வராது. நாம ஆடி இருக்கம்ல. ஆடினா தல சுத்தும். அதேன்” என்றான்.

பின் “அது என்னா புதுசா மேஜை மேல? ஆர்மோனிய பொட்டி கணக்கா?”
என்றான்.

“இது நேத்திக்கு அட்டைப்பெட்டியில் கொண்டு வந்தோம் இல்ல... அதுதான். அஞ்சு பேண்ட் கிரெண்டிக் ரேடியோ. ஜெர்மனி ரேடியோ. பாட்டு கேக்குறியா” என்றான் ராஜு.

ரெண்டடிக்கு, ஒரடி போல சைசில் மேடைக் கச்சேரியில் பாடத் தயாரான பாகவதர் போல ரேடியோ மேஜை மீது கம்பீரமாக அமர்ந்திருந்தது.

சுற்றிலும் கருங்காலி நிறத்தில் மரப் பெட்டி. முன்புறம் அரை வெள்ளை நிறத்தில் முகம்.

முகத்தின் வலது மூலையில் மேஜிக் ஐ. கீழே இரு பக்கமும் குமிழ்கள், அடியில் பட்டன்கள், கிரண்டிக் என்ற பொறிக்கப்பட்ட பொன் நிற எழுத்துக்கள்.

அக்காலத்தில் ஒரு வீட்டில் ரேடியோ இருப்பதே பெரிய விஷயம். மர்பி, பிலிப்ஸ் போன்ற நிறைய பிராண்ட்களில் சிறிய சைஸ் வால்வு ரேடியோக்கள் உண்டு. அவை வெகு ஜன பட்ஜெட்டுக்கு உட்பட்டு பல நடுத்தர வீடுகளின் கூடத்தில் அலங்காராமாய் இருந்து வீட்டுக்கு பெருமையும் அக்கம்பக்கத்து பொறாமையயும் சேர்க்கும். ரேடியோ சிலோன், விவித பாரதி கேட்பது, என்பது பெரிய புண்ணியத்தில் சேர்த்தி என்று எண்ணிய காலம்.

பெரிய கிரண்டிக் ரேடியோ அந்தக் கால உயர்ந்த சமூக அந்தஸ்தின் ஒரு சின்னம் என்று கூறலாம். இந்தக் காலத்தில் வீட்டு வாசலில் ஆடி காரை
நிறுத்தி வைப்பது போல்.

“இந்த ஊர்ல இது வரைக்கும் யார்கிட்டயும் இந்த ரேடியோ கிடையாதுனு
தாத்தா சொன்னாரு” என்றான் ராஜு.

ரேடியோவின் பின்பக்கத்திலிருந்து ஒயர் எடுத்து ஜன்னல் வழியாக வெளியே கொண்டுபோய் இரண்டு இன்ச் அகலத்தில் நீண்ட சல்லடை துணி போலிருந்த ஏரியலில் இணைத்த எலக்ட்ரீஷியன் சுப்பையா, பின் மெயின் சுவிட்சை போட்டான்.

ராஜு ஆவலுடன் ஓடிவந்து இடப்பக்கம் கிழே இருந்த குமிழைத் திருக ரேடியோவின் அடிப் பகுதியில் வெளிச்சம் மஞ்சளாகப் பரவியது.

கண்ணாடிப் பகுதிக்குள் நாலைந்து வரிகளில் சிறு சிறு எண்களாக ஒரிரண்டு ஆங்கில எழுத்துகளாக வெளிச்சத்தில் தெரிந்தன. ராஜூ வலப்பக்கம் அடியில் இருந்த இன்னொரு குமிழைத் திருக, ரேடியோக்குள்ளே கீழே சின்னக் குச்சி மாதிரி நின்றுகொண்டிருந்த ‘முள்’, கண்ணாடி எண் வரிசைகளுக்குள் பக்கவாட்டில் நகர்ந்தது.

தந்தக் கலரில் ஐந்து சதுர பட்டன்கள், எண் வரிசைக்கு கீழே ஒழுங்காக அடுத்தடுத்து அமைந்து இருந்தன. ஒன்று மாற்றி ஒரு பட்டனை அழுத்தினான். ஒன்றை அழுத்தும் போது ஏற்கனவே அழுத்தி இருந்த மாற்றோன்று டக் என்ற சத்தத்துடன் மேலே வந்தது. அந்த சப்தத்தில் ஒரு நேர்த்தி, ஒரு இனிமை, ஒரு பணக்காரத் தனம் இருந்ததாக முருகுக்கு தோன்றியது.

திடீரென்று வயலின் இசை ஒலித்தது.

“இது மீடியம் வேவ், இது எல்லாம் ஷார்ட் வேவ்” என்று பட்டன்களை முருகுக்கு அறிமுகம் செய்தான் ராஜு.

டக்கென்று இன்னொரு பட்டனை அழுத்தி, வலக் குமிழ் திருப்ப வேறுபாட்டு வந்தது. ‘பாலிருக்கும்’ என்று சுசீலாவின் தங்கக் கம்பிக் குரல்.

“ரேடியோ சிலோன்” என்றான் ராஜு.

“இந்த மாதிரி ஒவ்வொரு பட்டனாக அழுத்தி விவித பாரதி, மதாரஸ், திருச்சி, ஏன்... பிபிசி, வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா அப்படின்னு உலகம் முழுக்க கேட்கலாம்.”

ரேடியோவின் வலது மேல் பக்கத்தில் இருந்த ஒரு சிறிய பச்சை சாதனத்தை காண்பித்து “இதுதான் மேஜிக் ஐ” என்றான்.

“இதுக்குள்ள எதிர் எதிரா இருக்கிற ரெண்டு பச்சைப் பட்டையும் ஒன்ணு பக்கத்துல ஒன்ணு வந்தா ஸ்டேஷன் எல்லாம் நல்லா கேக்கும்.”
பட்டன்களை திருப்பி திருப்பி பியானோ வசிப்பது போல் அழுத்தி மாற்றிக் கொண்டிருந்தான்.

சாந்தி சத்தம் போட்டாள். “முதல் நாளே ரேடியோவை கெடுத்து குட்டிச்சுவராக்கிடாதே. பட்டனை எல்லாம் நிதானமா அழுத்தணும். இல்லாட்டினா கெட்டுவிடும்” என்றாள்.

பின் ராஜூவை நகர சொல்லி... முதல் பட்டனை, பிறந்த பூனைக்குட்டியைத் தொடுவதுபோல் மெதுவாகத் தொட்டு அழுத்தி வலப்புற ட்யூனிங் குமிழைத் திருப்பி, மீடியம் வேவில் மதராஸ் ஏ ஸ்டேஷன் வைத்தாள்.

கரகரப்பிரியா ராகத்தில் - ..சக்கனி ராஜா.. மார்க்கமுலுண்டக.. என்று தியாகராஜரை நிலைய வித்வான்கள் வாத்திய கோஷ்டியுடன் இழுத்து இழுத்துப் பெரும் பின்னணி கொர கொர சப்தத்துடன் சேர்ந்து இசைத்துக் கொண்டிருந்தார்கள்.

வலப்புறக் குமிழுக்குள் இருந்த சிறிய ஃபைன் ட்யூனிங் வட்டத்தை திருப்பினாள். மேஜிக் ஐயின் பச்சைப் பட்டைகள் சற்று மேலும் நெருங்கின.

கரகரப்பற்ற பிரியாவாக இனிமையாக கோஷ்டிப் பாட்டு இழைந்தது.

முருகு இதை எல்லாம் கொஞ்சம் அலட்சியமாக பார்த்துக் கொண்டிருந்தான். ரசித்ததாகத் தெரியவில்லை.

“நம்ம ஊர் திருவிழா மைக்ல, இதைவிட சத்தமா நல்ல நல்ல பாட்டு எல்லாம் வைப்பாக. கேக்க இவ்வளோ சிரமப்பட வேண்டிதில்லை” என்று சொல்லிப் பின்...

“அம்மா ராஜுவை கூட்டிக்கிட்டு ஆத்தங்கரை போயிட்டு வாரேன்” என்றான்.

“முருகு. நீ ரொம்ப பொறுப்பான பையன் என்பதால தான் ராஜூவை கூட அனுப்புறேன். ஜாக்கிரதை. ராஜுவை பத்திரமா பாத்துக்கோ. அவனுக்கு நீச்சல் தெரியாது” என்றாள்.

“நா பாத்துகிட்டுதேன். கவலைப்படாதீங்க” என்று ராஜுவுடன் கிளம்பினான்.

“கொஞ்சம் இரு. பைக் எடுத்துட்டு வாரேன்” என்றான் முருகு.

திண்ணைக்கு அடியில் இருந்து வட்ட வடிவில் வளைக்கப்பட்ட நாலு எம் எம் இரும்பு கம்பியால் செய்யப்பட்ட - ஒரு அடி விட்டம் உள்ள - வளையம் ஒன்றையும், கூடவே ஒரு இரண்டடி கம்பையும் கையில் எடுத்தான். கம்பின் ஒரு முனையில் ப வடிவில் வளைக்கப்பட்ட ஒரு சிறிய இரும்புத் தகடு கட்டப்பட்டிருந்தது.

“வா வண்டியை கிளப்பலாம்” என்றான் முருகு. வளயத்தை கையிலெடுத்து உருட்டி முன்னால் எறிந்தான். அது துள்ளி உருண்டு ஓடியது.

பின்னாலே கம்புடன் ஓடிச்சென்று கம்பு முனை இரும்புத் தகடால் சக்கரம் போல் உருளும் வளையத்தை லேசாக தொட்டபடி கூட ஓடினான். க்ரீரீ... என்று அதிக சப்தத் துடன் ஆரம்பித்துப் பின் சப்தம் குறைந்து கீ... என்று வண்டி ஸிங்க்ரோனைஸ் ஆனது.. ஓடும் வேகத்தை குறைத்து வேகமாக நடந்தான்.

வளையம், ஆட்டுக்குட்டி போல் அவன் போன இடமெல்லாம் இருப்புத் தகடின் உரசல் ஓசையுடன் கூட வந்தது.

அது தடுமாறி விழாமல் மெதுவாக சுழலும்படி கட்டுப்படுத்தி ஓட்டிக் கொண்டு போனான். தெருவோரத்தில் அழகாக திருப்பினான். ராஜுக்கு ஒரே ஆச்சரியம்.

“முருகு எப்படி நீ இதை எப்படி ஓட்டுறே. நானும் ஓட்டட்டுமா?”

“ம்ஹும் உன்னால் முடியாது. இதெல்லாம் ரொம்ப நாள் ஓட்டினப்புறம் தான் வரும். சரி, பைக் பின்னால் ஏறிக்கோ.”

“எப்படி ஏறுவது.”

“என் டவுசர பிடிச்சு என் பின்னாலேயே ஓடி வா அவ்வளவுதான்.”

ராஜு அப்படியே செய்தான். வேகம் ஏத்தி நாலாவது கியரில் சென்ற வண்டி ஆற்றங்கரை அருகில் கியர் மாற்றி வேகம் குறைந்து பின் நின்றது.

“இந்த வண்டி எங்க வாங்கினே? நானும் வாங்கப்போறேன்” என்றான் ராஜு.

“நீ எல்லாம் வேங்க முடியாது. ஏங்கய்யா கொல்லம் பட்டாரைல வெச்சு எனக்காக செஞ்சது.”

“நான் மெட்ராஸ் போய் வாங்குவேன்.”

“ம்ஹும். இது எங்கயும் கிடைக்காது.”

“பரவால்ல. அப்ப நான் எங்கப்பா ஸ்கூட்டர்ல பின்னாலே போயிக்கிறேன்.”

“ஸ்கூட்டரெல்லாம் இந்த வண்டி கணக்கா வருமாவே. இதுக்கு பெட்ரோல் வேண்டாம். மேடு, பள்ளம், சந்து எல்லாம் ஓட்டலாம். ஓட்டலைனா கைல எடுத்துக்கிடலாம்.”

ராஜு பதில் ஏதும் இல்லாமல், முருகு பேச்சை ஒத்துக்கொள்ள வேண்டி இருந்தது.

டவுசரை கழட்டி கோவணத்துடன் ஆற்றில் குதித்தான் முருகு. சிறிது தூரம் நடந்து கழுத்தளவு ஆழத்துக்கு சென்றான். பின் கைகளை முன்னே மாற்றி மாற்றி போட்டு லாவகமாக நீந்தினான். ராஜூவையும் அழைத்தான்.

ராஜு பயப்பட முருகு கரைக்கு வந்து, ராஜுவை அழைத்துக் கொண்டு தண்ணீரில் இறங்கினான்.

கருட வாகனம் போல் தன் இரு கைகளையும் நீட்டியவாறு ராஜுவை அதன் மேல் படுத்து, கையையும் காலையும் வேகமாக அசைக்க சொன்னான். அப்பப்போ நீட்டிய கைகளை எடுத்து விட்டு ராஜூ தானே மிதக்கிறானா என்று டெஸ்ட் செய்தான். ராஜூ முழுகினால் தூக்கி விட்டு, மீண்டும் கைகளை நீட்டி படுக்க வைத்தான். அரை மணியில் ராஜூவுக்கு கடப்பாரை நீச்சல் சுமாராக வந்துவிட்டது.

“அவ்வளவு தான் நீச்சல். இனிமேட்டு நீயாட்டு பழகிக்கிட வேண்டியதுதான்” என்றான் முருகு.

டிரவுசருடன் வீட்டுக்குள் ஓடிய ராஜு...
“அம்மா எனக்கு நீச்சல் வந்துடுத்து” என்றான்.

“ஏண்டா உன்னைத்தான் தண்ணீரில் இறங்க வேண்டாம்னு சொன்னேனே” என்று கத்தினாலும், சாந்திக்கு உள்ளூர மகிழ்ச்சியும் பெருமையும் ஏற்பட்டது.

“நான்தான் தண்ணில இறங்கச் சொன்னேன். நீச்ச இப்போ கத்துக்கிடாம எப்ப கத்துகிடறது?” என்றான் முருகு.

சந்தோஷத்துடன்....
“முருகு, நல்ல பையன்டா நீ” என்றாள்.

ராஜு ரேடியோக்கு போய், ஆன் செய்தான். மீடியும் வேவ் பேண்ட் சுவிட்சை அழுத்தி டியூனிங் குமிழை திருப்பினான். முள் கண்ணாடிக்கு உள்ளே நகர்ந்தது.

முருகு பக்கத்தில் வந்து, “இடது பக்கம் நகத்து. மெட்ராஸ் ஏ தானே. நேத்தைக்கு அங்க தான் வெச்சிரிந்தாங்க அம்மா” என்றான்.

யாரோ பேசுவது சுமாராக கேட்டது.

இன்னும் கொஞ்சம் இடது பக்கம் திருப்பு. அங் அப்படிதான். இப்போ உள்ற இருக்கர வட்டத்தை திருப்பு. ஆங்.. அவ்வ்ளோ தான்... இங்கன பாரு..மேஜிக் ஐ ல ரெண்டு பச்சை கோடும் இன்னும் கொஞ்சம் பக்கமா வந்திட்டுல்லா.... இப்ப நல்லாக் கேக்கு .

“ஆகாசவாணி. செய்திகள், வாசிப்பது சாம்பசிவன்” என்று சாம்பசிவன் ஜல தோஷ அடித் தொண்டையில், செய்திகள் படிக்க ஆரம்பித்துக் கொண்டிருந்தார்.

“முருகு! இந்த ரேடியோவைத் தொடாமலே எப்படி உன்னால சரியா ட்யூன் பண்ண முடிஞ்சுது...” என்றாள் சாந்தி.

“நியேத்து நீங்க வெக்கும் போது கவனிச்சு பாத்தம்லா.”

“நீ பெரிய ஆள் தாண்டா.”

உள்ளே சென்று டால்டா டப்பா மாதிரி ஒன்றை எடுத்து வந்தாள். அதிலிருந்து ஒரு வெள்ளை உருண்டையை ஸ்பூனில் எடுத்து “முருகு, இதுக்கு கல்கத்தா ரசகுல்லானு பேரு. ரொம்ப ஸ்பெஷல் ஸ்வீட். சாப்பிடு” என்றாள்.

“தித்திப்பா” என்றான் முருகு.

தலை ஆட்டினாள் சாந்தி.

“வேண்டாம். எனக்கு இதெல்லாம் பிடிக்காது. எனக்கு பிடித்த ஒரே தித்திப்பு, பாருங்க” என்று டிரௌசர் பாக்கெட்டில் கைவிட்டு ஒரு பொட்டலத்தை எடுத்தான்.

“இது ஐயனார் கடலை மிட்டாய். உலகத்திலேயே பெஸ்ட். எங்க ஐயா நேத்து வேங்கினாரு. சாப்படுறீகளா?” என்று நீட்டினான்.
ஒரு விள்ளல் எடுத்துக்கொண்டாள் சாந்தி.

“எனக்கு” என்ற ராஜுவின் கையில் மீதி பொட்டலத்தை திணித்தான் முருகு.

அடுத்த இரண்டு மூன்று நாட்கள் சாந்தியின் வேண்டுகோள்படி ராஜுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தான் முருகு. சின்ன வாடகை சைக்கிள். ஒரு மணிக்கு அரையாணா. சாந்தி கொடுத்த இரண்டு ஆணா
சரியாக இருந்தது. ராஜுக்கு ஓட்ட வந்துவிட்டது. ஒரு அடி கிடையாது.
ஒரு முறை சைக்கிளுடன் சரியப் போன ராஜூவை பிடிக்கப் போன போது, முருகுக்கு தான் காலில் பெரிய சிராப்பு.

“பெருசா பட்டிருக்கேப்பா... மருந்து போடவா” என்ற சாந்தியிடம்...

“வேண்டாம் . இதெல்லாம் ஒரு அடியே இல்லம்மா. தானே செரியாப் போயிடும்” என்று மறுத்துவிட்டான்.

ராஜூவைக் கையிலேயே பிடிக்க முடியவில்லை. நீச்சலாச்சு, சைக்கிள் ஆச்சு. சகலகலா வல்லவன் போல் உணர்ந்தான்.

ஊருக்குக் கிளம்ப வேண்டிய நாள் நெருங்கிக்கொண்டு இருந்தது.

அதற்கு முந்தின நாள்... ராஜு, பிரிவுக்காக ரொம்ப வருத்தப்பட்டான். இங்கிருந்த ஒரு வாரத்தில் முருகுவின் பேச்சால், அவன் கற்றுக்கொடுத்த விஷயங்களால், மெட்ராசில் உருப்படியாக பெரிசாக ஒன்றுமே இல்லையோ என்று ராஜுக்கு சந்தேகம் தோன்ற ஆரம்பித்து விட்டது.

மெட்ராசை பற்றிய எது சொன்னாலும், பதிலுக்கு இந்த ஊரில் இருக்கும் ஒரு விஷயத்தை கூறி, அது தான் சிறந்தது என்று நிரூபித்தும் விடுகிறான்.

மெட்ராசில் பீச் இருக்கிறது என்றால்....

“இந்த தாமிரபரணி போல வருமா. கடல் தண்ணிய குடிக்க முடியுமா?” என்கிறான்.

எல் ஐ சி உயரம் பற்றி சொன்னால்... தாமிரபரணி ஆத்துக்கு பின்னால் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையை காட்டுகிறான்.

‘எங்க மெட்ராஸில் சிவாஜி, எம்ஜிஆர் எல்லாம் இருக்காங்க’ என்றால்...

‘நம்ம ஊர் எட்டடி உயர மாடசாமியுடன், அவங்க சண்டை போட்டு ஜெயிக்க முடியுமா’ என்கிறான். தவிர ‘சிலையாய் இருக்கும் மாடசாமி, நள்ளிரவில் உயிர் வந்து குதிரையில் ஓங்கிய கத்தியுடன் நெதோம் ஊர்வலம் வருவார்’ என்றும் வேறு சொல்கிறான். எல்லா விதத்திலும் முருகு சொல்வது ராஜுவுக்கு சரியாகத் தான் பட்டது.

“இந்த ஊரு ஜாலியா இருந்துது முருகு. ஒனக்கு ரொம்ப தேங்க்ஸ். ஆனா
ஒண்ணு மட்டும் நான் செய்ய நீ விடவே இல்ல. நீ குடுக்க மாட்ட” என்றான்.

“என்னடா வேணும்?”

“உன்னோட பைக்கை ஓட்டணும்.”

“சரி வா. செஞ்சா போச்சு. ஆனா நீ ஜாக்கிரதையா ஓட்டணும்.”

“என்ன முருகு. அது உடைஞ்சுடுமா?”

“இல்லை. அத உடைக்க யாராலும் முடியாது.” சிரித்தான் முருகு.
“வண்டி என் உசுரு. அதான் சொல்லுதேன்.”

முருகு தன் இரும்பு வளயத்தை எடுத்து சுத்தி, வீசி ஓட்டி கம்பால் அரவணைத்து நிதானப்படுத்தினான்.

“கம்பைப்புடி” என்று சொல்ல... ராஜு பிடிக்க தன் கையை எடுத்தான். நிதானம் தவறிய வளையம், பக்கவாட்டில் சில ஹார்மானிக் ஆட்டங்களுடன் தடுமாறி விழுந்தது.

பல முயற்சிகளுக்குப்பின், ராஜு சுயமாக அந்த பைக்கை ஓட்டலானான்.
கீழத் தெரு வரை போறேன் என்று வேகமாக குச்சியால் தள்ளி மேல் கியரில் சென்றான்.

தெரு முனையில் போகும் போது வண்டி தன்னிச்சயாக புவியீர்ப்பில் கவரப்பட்டு சரிவில் நுழைந்து, பக்கத்து காலிமனைப் பள்ளத்தில் ராஜுவின் கம்பைத் தவிர்த்து உருண்டு சென்றது. நேராக பத்தடியில் இருந்த பாழும் கிணற்றுக்குள் டைவ் அடித்து.விழுந்தது.

ராஜு அரண்டு போய் விட்டான்...

“மன்னிச்சுக்கோ முருகு தெரியாம பண்ணிட்டேன்.”

“அதான் ஜாக்கிரதையா ஓட்டணும்னு சொன்னோம்ல.. பரவாயில்ல. கவலைப்படாதே. எங்கய்யா அப்புறம் கிணத்தில் இறங்கி எடுத்துக் கொடுக்கும்.. இல்லைனா புதுசா செஞ்சு கொடுப்பாக.”

முருகு பெருந்தன்மையுடன் மன்னித்து விட்டான்.

குற்ற உணர்ச்சியுடன் இருந்த ராஜூவின் தோளில் கைபோட்டு, வீட்டுக்கு அழைத்து சென்றான்.

“உங்க அம்மாகிட்ட இதையெல்லாம் சொல்லாத. உன்ன திட்டுவாக.”

அடுத்த நாள் கிளம்பும் அவசரத்தில்... சாந்தி சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். முருகு வந்தபோது புன்னகையுடன் வரவேற்றாள்.

“ராஜூக்கு உன்ன விட்டு ஊருக்கு போக மனசே இல்ல. எனக்கும்தான்” என்று சிரித்தாள்.

உள்ளே சென்று திரும்பி வரும்போது... கையில் இரண்டு புது சட்டையுடன் வந்தாள்.

“முருகு இது ராஜுக்கு வாங்கினது. டெர்லின் சட்டை. புதுசு. ஆனா ரொம்ப பெரிசா இருக்கு. உனக்கு ரொம்ப சரியா இருக்கும். இந்தா வாங்கிக்க...”

"வேணாம்மா. இந்த ஊரு வெக்கைக்கு சட்ட லாயக்கு இல்லை. வெறும் உடம்பு தேன் சரிப்படும். அடுத்த வருஷம் ராஜூவையே போட்டுகிட சொல்லுங்க.”

“என்னப்பா எது கொடுத்தாலும் வாங்க மாட்டேங்குற?”

“எனக்கு எதுவும் ரொம்ப பிடிக்காதும்மா. தவிர சிறுசிலிருந்தே, எங்க ஐயா சொல்லி இருக்காக, யாருகிட்டவும் எதுவும் வேங்க கூடாதுனு.”

“ஏன் முருகு... நாங்க கூட வேத்தாளா.
எங்கிட்ட ஏதாவது ஒன்னாச்சும் கேளு. எனக்கு கொடுக்கணும்னு ஆசையா இருக்கு. எவ்வளவு நல்ல பிள்ளை நீ. எனக்காக, என்கிட்ட ஏதாவது கேளு.”

சற்று யோசித்துவிட்டு தயக்கத்துடன்...
“சரிம்மா. ஒண்ணே ஒன்ணு கேக்குதேன். கோவிச்சுக்கிடமாட்டீயளே?”

“தாராளமா கேளுப்பா”....

“இந்த ரேடியோ பக்கத்துல உக்காந்துட்டு, பாண்டு சுவிட்ச் எல்லாம் அளுத்தி ஒரு பத்து நிமிஷம் எல்லா ஸ்டேஷனும் வச்சு பாக்கலாமா.? ஜாக்கிரதையா செய்வேன்.”

புன்னகையுடன் முருகுவை அணைத்துக்கொண்டாள் சாந்தி....