தொடர்கள்
தொடர்கள்
மிஸ்டர் ரீல்...! - ஜாசன்


20210817214547582.jpeg

எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை மிஸ்டர் ரீல் பார்க்க அவர் வீட்டுக்குள் நுழைந்தபோது, அவர் செல்பேசியில் “யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க” என்று ரிங்டோன் ஒலிக்க... மிஸ்டர் ரீல்... “உடனே சுச்சுவேஷன் தெரியாத சுச்சுவேஷன் ரிங்டோன்” என்று நினைத்து செல்பேசியை தடாலடியாக துண்டித்தார்.

ஆனால் எடப்பாடி... “நீங்க சொல்றது சரிதான், யாரையும் நம்பி அதிமுக இல்லை. பாட்டாளி மக்கள் கட்சி போனால், போகட்டும். எங்களுக்கு இப்ப ரொம்ப சந்தோஷம். கூட்டணி என்றால்... டெபாசிட் தொகை, தேர்தல் செலவு, போக்குவரத்து செலவு என்று எல்லாவற்றையும் எங்களிடமே வசூல் செய்து விடுவார்கள். தனித்துப் போட்டி என்றால்... இப்ப அவங்க கஜானாவை திறந்து தானே ஆகணும், பார்க்கலாம் என்ன பண்றாங்கன்னு” என்று சொல்ல... அப்போது மிஸ்டர் ரீல்... “அதானே, நீங்க சொல்றது சரியான பாயிண்ட்” என்று சொல்ல... அப்போது எடப்பாடி... “நான் எப்பவும் சரியா பேசுவேன்” என்றார்.

சரி... “இப்ப திடீர்னு அவங்க ஏன் தனியா போட்டி போடறாங்க” என்று மிஸ்டர் ரீல் கேட்க... அதற்கு... “எல்லாம் முதல்வர் ஸ்டாலின் ஏற்பாடுதான். எனக்கு எல்லாம் தெரியும். இருந்தாலும் நான் எதற்கு கருத்து சொல்லணும்” என்று கருத்து சொன்னார்.

அப்போது மிஸ்டர் ரீல்... “வரிசையா ரெய்டு நடக்குது” என்று ஆரம்பிக்க... அதற்கு எடப்பாடி... “இதெல்லாம் சகஜம் தானே. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியான பிறகு ரெய்டு நடக்கத்தானே செய்யும். நான் ஏழை விவசாயி என்றாலும், இந்த அரசியல் கூட எனக்கு தெரியாதா” என்று சொல்ல...

அப்போது மிஸ்டர் ரீல்... “நீங்கள் ஏழை விவசாயி என்பதால்தான் உங்கள் வீட்டில் ரெய்டு வரலையா” என்று கேட்க...

அதற்கு எடப்பாடி... “நானே முந்தாநாள் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு போன் போட்டு கேட்டேன், சொந்த வேலையா இரண்டு நாள் சேலம் போக இருக்கிறேன். நீங்க ரெய்டு வந்துட்டு கஷ்டப்பட வேணாம், என் வீட்டு சாவியெல்லாம் வாசலில் இருக்கிற போலீஸ்காரர்கிட்ட தந்துட்டு போறேன். நீங்க எப்ப வேணாலும் வந்து ஆராய்ச்சி பண்ணிக்கோங்க என்று சொன்னேன். அப்போது அந்த அதிகாரி, இல்ல சார்... உங்க பேர் லிஸ்ட்ல இல்லை. ஆனால், உங்கள் பினாமி பெயர் நிறைய இருக்கு. அங்கு தான் நாங்க ரெய்டு பண்ண போறோம்” என்று சொன்னார்கள். “காலைல பார்த்தா... வீரமணி வீட்டில் ரெய்டு” என்று டிவியில் ஃபிளாஷ் நீயுஸ் போச்சு என்றார்.

அப்போது மிஸ்டர் ரீல்... “அது என்ன 656 சதவீதம் அளவுக்கு அதிகமா சொத்து சேர்த்ததா அமைச்சர் மேல புள்ளிவிவரம் சொல்றாங்க” என்று கேட்க... அதற்கு எடப்பாடி... “அவங்க சொல்றத வச்சு தான் எனக்கே அவரு இவ்ளோ சம்பாதிச்சிருக்காரு என்ற விஷயமே தெரிஞ்சது” என்றார்.

சரி... “இந்த மாதிரி ரெய்டுக்கெல்லாம் என்ன காரணம்?” என்று மிஸ்டர் ரீல் கேட்க... அதற்கு எடப்பாடி... “அம்மா ஆட்சியில் சாமானியர்கள் அமைச்சர் ஆகலாம், எம்எல்ஏ ஆகலாம், முதல்வராகலாம். ஆனால், திமுக கட்சியில் இதெல்லாம் பரம்பரை சொத்து. அந்தக் கோபம் தான் இந்த ரெய்டு. இருந்தாலும் நான் எதுவும் கருத்து சொல்ல விரும்பவில்லை” என்றார்.

“தேர்தல் அறிக்கையில் சொன்ன மாதிரி, ஸ்டாலின் நீட்டுக்கு விலக்கு கேட்டு சட்டத்திருத்தம் கொண்டு வந்துட்டார், பார்த்தீர்களா” என்று மிஸ்டர் ரீல் கேட்க...

எடப்பாடி சிரித்தபடியே... “நாங்க ஏற்கனவே அனுப்பிய சட்டத்திருத்தம், டெல்லியில் தூங்குதே. அதுதான் இது தேதி மட்டும் மாத்தி இருக்காங்க” என்றார்.

சரி... “சட்டசபையில் ஓபிஎஸ், நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு என்று சொன்னாரே. அதுக்கு என்ன அர்த்தம்” என்று மிஸ்டர் ரீல் கேட்க...

அதற்கு எடப்பாடி... “என்னது மாலத்தீவு மேட்டரா... அதெல்லாம் எனக்கு தெரியாது. எங்க கட்சி ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பற்றியெல்லாம் நான் தப்பா பேச மாட்டேன்” என்றார்.

மிஸ்டர் ரீலுக்கு எதுவும் புரியாமல்... நம்ப தப்பா எதுவும் கேட்கலையே என யோசித்தபடியே பேச்சை மாற்ற... “தேமுதிக கூட தனித்துப்போட்டினு சொல்லிட்டாங்க” என்று சொல்ல...

ரொம்ப தேங்க்ஸ். “கேப்டன் திருமதி, எங்கள் கட்சிக்கு இவ்வளவு செல்வாக்கு இருக்கு” என்று அப்போது குறுக்கிட்ட மிஸ்டர் ரீல்... “கூடுதலா வார்டுகள் கேட்பார்களா” என்று கேட்க... அதை எடப்பாடி... “அப்படிக் கேட்டால் பரவாயில்லை. இவ்வளவு கோடி தாங்க என்பார்கள். கூடவே ராஜ்யசபா சீட் இலவச இணைப்பா கேட்பார்கள். இப்ப அதெல்லாம் இல்ல.. இல்ல” என்றார் சந்தோஷமாக.

“ஜி.கே. வாசன் கூட்டணியில் தான் இருக்கேன் என்று சொல்லி இருக்காரு” என்று மிஸ்டர் ரீல் சொல்ல... அதற்கு எடப்பாடி... “அவர் பாவம், அப்பாவி. இன்னும் எங்கள நம்பிக்கிட்டு இருக்காரு” என்று சொல்ல...

மிஸ்டர் ரீல், எடப்பாடி ரொம்ப விவரமான தலைவராக மாறிட்டார் போல என்று யோசித்தபடி புறப்பட்டார் .