தொடர்கள்
பொது
காற்றில் கலந்த  கவிச்சுடர்கள்... - மரியா சிவானந்தம்

புலமைப்பித்தன், பிரான்சிஸ் கிருபா...

20210817215910659.jpeg

தமிழ் மண்ணில் கவிதை, திரைப்பாடல், இலக்கியத்தில் சீரிய பங்காற்றிய இரு ஆளுமைகள், சமீபத்தில் மறைந்தனர். காலச் சக்கரத்தின் சுழற்சியில் ஒரு முதிர்ந்த, பழுத்துக் குலுங்கிய ஆலமரம் சரிந்தது என்றால்... தளிர் விட்டு செழிக்க வேண்டிய மரமும், கிளைகள் முறிந்து வேருடன் சாய்ந்துள்ளது. ஒருவர் 85 ஆண்டுகள் இலக்கியப்பணி ஆற்றிய பிதாமகர் புலமைப்பித்தன், பின்னவர் தமிழ் கவிதையில் புதிய பரிமாணங்களைப் படைத்த இளைஞர் பிரான்சிஸ் கிருபா அவர்கள்.
இரண்டு இழப்புகளும் நம்மை அதிரடித்தன. தமிழை நேசிக்கும் அனைவரும் கலங்கிப் போகிறோம் கையறு நிலையில். பல திரைப்படங்களில் தேன் தமிழ் பாடல்களை இயற்றி, பெரும் புகழ் பெற்றவர். இது கண்ணதாசன் எழுதிய பாடலோ என்று நாம் நினைத்த பல பாடல்களை இயற்றிய பெருமை புலமைப்பித்தனுக்கு உரியது.

“அழகே தமிழே அழகிய மொழியே, எனதுயிரே” என்னும் இனிய பாடல் நம்மை இன்றும் மயக்கத்தில் ஆழ்த்துகிறதன்றோ? புலமைப்பித்தனின் பாடல்கள் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரின் புகழை உச்சிக்கு எடுத்துச் சென்றன. அவர் 1968 ஆம் ஆண்டு எழுதிய முதல் பாடல், எம்.ஜி.ஆருக்கு எழுதியதே “குடியிருந்த கோயில்” படத்தில் எழுதிய “நான் யார், நான் யார், நீ யார்”. இப்பாடலுடன் துவங்கிய இந்தக் கோயம்புத்தூர்காரரின் நீண்ட கலைப் பயணத்தில், இவர் சிந்திய முத்துக்கள் ஏராளம். “ஓடி ஓடி உழைக்கணும்”, “பாடும் போது நான் தென்றல் காற்று”, “கல்யாணத் தேனிலா, காய்ச்சாத பால் நிலா”, “ஜாதி மல்லி பூச்சரமே”, “நீ ஒரு காதல் சங்கீதம்” போன்ற மறக்க இயலாத பாடல்களைத் தந்தார்.

“புஞ்சை உண்டு நஞ்சை உண்டு” என்னும் பொது உடமைக் கருத்தைக் கூறும் பாடல்களைக் கொடுத்த இந்தப் பொதுவுடமையாளர், எம்ஜிஆருடன் இணைந்து, கட்சியில் பொறுப்பில் இருந்ததும், பதவிகளை ஏற்றுக் கொண்டதும் சுவாரஸ்ய முரண்.

இவர் தமிழக சட்ட மேலவையின் துணைத் தலைவராகவும், அதிமுக அவைத் தலைவராகவும் பதவி வகித்தார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் “அரசவைக் கவிஞராகவும்” நியமிக்கப்பட்டார். பல பெருமைகளை எய்திய, பூரணமான சாதனையாளர்.

புலமைப்பித்தனின் பாடல்கள், எம்ஜிஆரின் புகழைப் போல நிலைத்து நிற்கும்.

2021081721594939.jpeg

பிரான்சிஸ் கிருபா - புதுக்கவிதை வரலாற்றில், பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட தகுந்த பெயர். பள்ளிப்படிப்பே முடித்த இந்த இளைஞரின் விரல்களில், தமிழ் புதுப் பிறப்பு பெற்றது.

காதலும், மனிதனும், கனவுகளும் முகிழும் ஆழமான எழுத்தாற்றல் கொண்ட பிரான்சிஸ், கவிதை உலகில் புதிய உயரங்களை அனாயசமாக தொட்டார். புதிய பாணியில், புதிய உக்திகளைக் கையாண்டு, குறுகிய காலத்தில் சிறந்த புகழைப் பெற்றார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பத்தினிப்பாறையைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் கிருபா. நவீன இலக்கியத்தில், எளிய தமிழில், தமிழ்ச் சமுதாயத்தின் எளிய மனிதர்களின், எளிய வாழ்வியலை தனது எழுத்துக்களில் வடித்து தனித்த இடத்தைப் பிடித்தார். ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் இவர் எழுத்துக்கள் இடம் பெற்றன. இளம் தலைமுறையினரின் இதயங்களில் இடம் பிடித்தார், தமிழ் பரப்பில் தடம் பதித்தார்.

மல்லிகைக் கிழமைகள், சம்மனசுக் காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் ஆகிய மிக முக்கியமான படைப்புகளுக்குச் சொந்தக்காரர். கவிதை மட்டுமன்றி... ‘வெண்ணிலா கபடிகுழு’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘ராட்டினம்’, ‘குரங்கு பொம்மை’ உள்ளிட்ட பத்து படங்களுக்குப் பாடல்களை எழுதியுள்ளார். மேலும், கர்ம வீரர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘காமராஜ்’ திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதினார். 2007 ஆம் ஆண்டு ‘கன்னி’ எனும் புதினத்தை எழுதி, ஆனந்த விகடனின் விருது பெற்றுள்ளார். 2008ஆம் ஆண்டுக்கான நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தர ராமசாமி விருதையும் இவர் பெற்றுள்ளார். மீரா விருது, சுஜாதா விருதுகளையும் பெற்றார்.

போராட்டமும், துன்பமும் நிறைந்த பிரான்சிசின் காலங்கள் அனைவரும் அறிந்தது. 2019 ஆம் ஆண்டு கோயம்பேடு வணிக தளத்தில், ஒரு எளிய மனிதனைக் காப்பற்ற முற்பட்டு, கொலைப்பழி சுமந்த பிரான்சிஸ்... நண்பர்கள், பத்திரிக்கையாளர்கள் உதவியால் மீட்டெடுக்கப்பட்டார். வறுமை, நோய்மை கொண்ட அந்த கவிஞனின் ஆயுள் இரண்டு நாட்களுக்கு முன் முடிந்தே போனது.

மனித உணர்ச்சிகளை, கனவுகளை, காகிதத்தில் கடத்திய பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகள், காலங்கள் கடந்து நிற்கும், தகைமை பெற்றன. அழகும், ஆழமும் கொண்ட அக்கவிஞனின் அடிமனதின் நாதங்கள் முடிவற்ற கீதங்களாக இங்கு நிலைபெறும்.

அந்த தங்கச் சுரங்கத்தில் ஒரு பொன் மணி இக்கவிதை...

ஒரு துண்டு பூமி
இரண்டு துண்டு வானம்
சிறு கீற்று நிலவு
சில துளிகள் சூரியன்
ஒரு பிடி நட்சத்திரம்
கால்படிக் கடல்
ஒரு கிண்ணம் பகல்
ஒரு கிண்ணிப்பெட்டி இருள்
மரக்கூந்தல் காற்று
நூலளவு பசும் ஓடை
குடையளவு மேகம்
ஒரு கொத்து மழை
குட்டியாய் ஒரு சாத்தான்
குழந்தை மாதிரி கடவுள்
உடல் நிறைய உயிர்
மனம் புதிய காதல்
குருதி நனைய உள்ளொளி
இறவாத முத்தம்
என் உலகளவு எனக்கன்பு...

அப்பேரன்பின் ஒளிப்பிரிகையில் இந்த பிரபஞ்சமே அழகு பெறுகிறது அன்றோ?

மேலும் ஒரு கவிதை...

அழகான கனவு அபூர்வமாய் சித்திக்கிறது
ஆயிரத்தில் ஒருவருக்கு.

சர்ப்பத்தின் நாவாக அச்சத்தைத் துருத்தி
நெளிந்து நீள்கின்றன கெட்ட கனவுகள்.

கலையும் தறுவாயில்தான்
கண்டு கொள்கிறேன் நல்ல கனவுகளை.

இரவுக்கு வெளியே
கனவுக்குக் காவலிருக்கும்
தேவதைகளும் உறங்குகிறார்கள்

அவர்கள் கனவுகள்
நாம் நுழைய முடியாத
நீர்க் குமிழியாகப் பூட்டியிருக்கின்றன.

வெளியிலிருந்து பார்த்தாலும்
தெளிவாய்த் தெரிகிறது கபடமற்ற கனவுகள்.

திரும்பத் திரும்ப வரும் கனவுகளில்
திருத்தங்களே இருப்பதில்லை.

இறுதிக் காட்சியாக விரிந்து
கண்ணைக் கொத்தும் இரக்கமற்ற கனவுகளில்
செத்துச் செத்து அலுத்துப்போனது

இறப்பதுபோல் எல்லோரும் காண்கிறார்கள்
ஏறக்குறைய இரண்டு கனவுகளேனும்.

பிறப்பதுபோல் வந்திருக்குமா
யாருக்கேனும் ஒன்று.?

(மெசியாவின் காயங்கள் - கனவுகள்)

துயர்கள் அற்ற பெரு பரப்பில். சென்று இளைப்பாறுங்கள் பிரான்சிஸ்,
உங்கள் கவிதைகள் எங்களுக்கு துணை நிற்கும்.

இரு பெரிய ஆளுமைகளுக்கும் எம் அஞ்சலி!!