ஜெர்மனியில் ஒரு கால்நடை ஆய்வகத்தில், கடந்த சில நாட்களுக்கு முன் 16 பசுமாடுகளை விஞ்ஞானிகள் தேர்வு செய்து, அவற்றை டம்மர்ஸ்டார்ஃபில் நகரிலுள்ள கால்நடை விலங்குகள் உயிரியல் நிறுவனத்துக்கு சொந்தமான பண்ணைக்கு அழைத்து வந்தனர். அங்கு இந்த பசுமாடுகள் சிறுநீர் கழிக்க, ‘மூலு’ என அழைக்கப்படும் நவீன வடிவிலான தனியறைகளில், சிறுநீர் கழிக்க அந்த 16 பசுமாடுகளுக்கும் பயிற்சி அளித்தனர்.
இந்த ‘மூலு’ என அழைக்கப்படும் தனியறை அமைப்பு, செயற்கை புல்தரை விரிப்பான்களுடன் சிறுநீரை வடிகட்டி, உறிஞ்சி சேகரிக்கும் வடிவமைப்பைக் கொண்டது. இந்த இடத்துக்கு பசுமாடு முறையாக வந்தால், அதற்குப் பிடித்தமான உணவுபொருள் (லஞ்சம்!) தருவதாகக் கூறியே, 16 பசுமாடுளுக்கும் விஞ்ஞானிகள் பயிற்சி கொடுத்தனர். இந்த பசுமாடுகளுக்கு குறிப்பிட்ட கட்டங்களில் இப்பயிற்சி தரப்பட்டது.
இந்தத் தனியறையில், செயற்கை புல்தரைக்கு வெளியே மாடுகள் சிறுநீர் கழித்தால், அந்த பசுக்களின்மீது 3 நொடிகளுக்கு தண்ணீர் ஸ்ப்ரே அடிக்கப்படும். அவை சரியான இடத்தில்
சிறுநீர் கழித்தால், அதற்கு பிடித்தமான உணவுபொருட்கள் சாப்பிட தரப்படும்! இவ்வாறு 3 கட்டங்களாக, 16 பசுமாடுகளுக்கும் பயிற்சி வழங்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் சிறுநீர் கழிக்க பசுமாடுகள் நடந்து செல்லும் பாதையின் நீளம் அதிகரிக்கப்பட்டது.
“மூன்று கட்டங்களின் முடிவில், 16-ல், 11 பசுமாடுகள் தங்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியை கச்சிதமாக நிறைவு செய்தன. அதாவது 15 முதல் 20 முறை சிறுநீர் கழிக்கும் தருணத்திலேயே, இந்த நவீன தனியறைக்கு மாடுகள் சுயமாக வந்து, சிறுநீர் கழிப்பதை வழக்கமாக்கிக் கொண்டது!” என்கிறார், ஆய்வு மேற்கொண்ட கால்நடை விஞ்ஞானிகள் குழுவை சேர்ந்த ஒருவர்.
மேலும், “பயிற்சி பெற்ற மாடுகளில் முக்கால்வாசி பசுக்கள், சிறுநீரை கழிக்க நவீன வடிவ தனியறையில் குறிப்பிட்ட பகுதிக்கு வந்து சென்றன. சிறார்களுடன் ஒப்பிடும் செயல்திறனை இளங்கன்றுகள் காண்பித்தன. அவை குழந்தைகளைவிட சரியான இடத்தில் சிறுநீர் கழிக்க கற்றுக்கொண்டன!” என்கிறது ஜெர்மன் கால்நடை விஞ்ஞானிகளின் ஆய்வு.
‘இத்தகைய வழிமுறைகளின்படி பசுமாடுகளின் சிறுநீர் சேகரிக்கப்பட்டால், 56 சதவிகித அளவுக்கு அம்மோனியா உமிழ்வை குறைக்க முடியும்! மேலும், அவை சுகாதாரமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்!” என்கின்றனர் கால்நடை விஞ்ஞானிகள் குழு.
Leave a comment
Upload