தமிழ்நாட்டில் நீட் தற்கொலைகளுக்கு யார் காரணம்?

வ.மதிவாணன், திருச்சி - மலைக்கோட்டை.
இந்த வருட நீட் தேர்வில் தமிழக மாநில பாடத்திட்டத்திலிருந்து 82% கேட்கப்பட்டிருந்தது. தமிழக மாணவர்கள் தங்களது பாடத்திட்டத்தை முழுமையாக 100% படித்திருந்தாலும் நீட் தேர்வில் 82% தான் பதிலளிக்க முடிந்திருக்கும். மதிப்பெண்களும் அவ்வளவு தான் எடுத்திருக்க முடியும். என்ன ஒரு பைத்தியக்காரத்தனமான நீட் தேர்வு பார்த்தீர்களா!!? இப்படி இருக்கும் நிலைமையில் மருத்துவம் படிக்க வேண்டும் என்று சிறு வயதிலிருந்தே கனவு கண்டு, அதற்காக வருடக்கணக்கில் உழைத்து படித்த எந்த தமிழக மாணவர்களும் மனம் உடைந்து தான் போவார்கள்.
குழந்தைகளின் வாழ்க்கையோடு விளையாடும் அரசியல் கட்சிகள் தான் காரணம்.
A.வேல்முருகன், தாம்பரம்.
சம்பந்தப்பட்ட 11, 12, வகுப்பு படிக்கும் குழந்தைகளிடம் கேளுங்கள் நீட் தேவையா? இல்லையா? என்று.. அவர்கள் தானே படிக்க போகிறார்கள்.! படிக்கும் மாணவர்களை அவர்களின் சிரமங்களை கணக்கில் கொள்ளாமல், மத்திய அரசு பிடிவாதமாக நீட் தேர்வை நடத்துவதால் மத்திய அரசே மாணாக்கர்களின் தற்கொலைக்கு காரணம்.
கோ.வரதராஜன், போரூர்.
நீட் தேர்வு முறையால் தனியார் மருத்துவ கல்லூரிகளின் மருத்துவ இடங்கள் கோடிகளில் விற்பது தடை பட்டிருக்கிறது என்று கம்பி கட்டும் கதைகள் எல்லாம் சொல்லி பெரும் உருட்டாக உருட்டி கொண்டிருக்கிறார்கள் நீட் தேர்வு ஆதரவாளர்கள். ஆனால், நம் சென்னையிலேயே இராமச்சந்திரா, செட்டிநாடு, எஸ்ஆர்எம் போன்ற பல தனியார் மருத்துவ கல்லூரிகளில் நீட் தேர்வில் 450 மதிப்பெண் எடுத்து அரசு கோட்டாவில் சேர்ந்தால் கூட ஒரு வருட கல்லூரி கட்டணம் 25 லட்ச ரூபாய். மொத்த படிப்புக்கும் ஆகும் செலவு ஒன்றேகால் கோடி.
தனியார் கல்லூரிகள் எப்போதும் போல் கொழித்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் நன்கு படிக்கும் ஏழை மாணவர்களுக்கு, நீட் தேர்வினால் மருத்துவ படிப்பு என்பதே கானல் நீரானது. மத்திய - மாநில அரசுகள் மட்டுமில்லாமல்... தார்மீக ரீதியில் நீட் தேர்வை ஆதரிக்கும், பிரச்சாரம் செய்யும் மனசாட்சி இல்லாதவர்களும் சேர்தது தான் இந்த தற்கொலைகளுக்கு காரணம். ஏழை மாணவ-மாணவிகளின் பாவத்தை இவர்கள் எல்லோரும் தங்கள் வாழ்நாளிலேயே அனுபவிப்பார்கள்.
R.சுந்தர்ராஜ், திருவண்ணாமலை.
ஆள்மாறாட்டம் போன்ற பல முறைக்கேடுகள்...
சினிமா கதைகளை விஞ்சும் அளவிற்கு நீட் தேர்வில் வட இந்தியாவில் நிகழ்ந்திருக்கின்றன. 35 லட்சம் ரூபாய்க்கு நீட் வினாத்தாள் விற்பனை. செல்போனில் வினாத்தாளை ஃபார்வேர்டு செய்து பதிலை பெறுவது. N95 முகக் கவசத்தில் கருவியை பொருத்தி பதிலை பெறுதல்... ஏழை, நடுத்தர மாணவர்களால் இவ்வாறான முறைகேடுகளை சிந்திக்கவும் முடியாது, செய்யவும் முடியாது. அதனால் தான் அனிதா முதல் தனுஷ் வரை நீட் தேர்வு முறையால் உயிரை மாய்க்கின்றனர். இறந்து போனவர்களில் பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கியவர்களும் அடங்கும். அவர்களுக்கு இல்லாத தகுதி வேறு யாருக்கு தகுதி இருக்கிறது?
மாணவர்கள் தற்கொலைக்கு நிச்சயமாக பணத்தாசை பிடித்த நீட் கோச்சிங் நிலையங்கள், அவர்களிடம் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி தங்கள் கல்லாவை நிரப்பிக்கொண்டிருக்கும் இந்த கேடுக்கெட்ட அரசியல்வாதிகளும் தான் முழுமுதற் காரணம்.
C.இராமகிருஷ்ணன், முகலிவாக்கம் - சென்னை.
ஒரு குறிப்பிட்ட கல்வியை தாண்டி தங்கள் வாழ்க்கை இல்லை என்ற ஒரு முடிவிற்கு பிள்ளைகளை தள்ளியது இன்றைய கல்வி முறைதானே... அதை மாற்றியமைத்து மாணவ - மாணவிகளின் தனித்திறமையை வெளிக் கொண்டு வரும் புதிய கல்வி முறை இங்கு வராத வரை, நீட் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தற்கொலைகள் நடக்கத்தான் செய்யும்.... நீட் இல்லாத போது 10, 12 வகுப்பு தவறியவர்களில் தற்கொலை செய்து கொண்டவர்கள் அதிகம் உண்டே!!! எனவே நமது கல்வி முறைதான் இந்த விபரீதங்களுக்கு காரணம்.
D.ஆண்டனி, வண்டலூர்.
முட்டாள்தனமான முடிவு. மருத்துவம் ஒரு சாதாரண படிப்பு. அதை போல 100 படிப்புகள் உள்ளன. டாக்டர் படிப்பு தான் வாழ்க்கை என தவறாக வளர்க்கின்றனர். இதற்கு அரசாங்கமோ அல்லது நீதிமன்றமோ பொறுப்பில்லை. சொல்லி வளர்க்காத பெற்றோர் ஆசிரியர் தவறு.
ச.ஹரிஹரன், ஆதம்பாக்கம்.
நாடு முழுவதும் 16 லட்சம் மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். நாடு முழுவதும் உள்ள மருத்துவ இடங்களுக்கு ஏற்ப தேர்ச்சி பெறும் மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேருகின்றனர். பாக்கி இருப்பவர்கள் எல்லோருமா தற்கொலை செய்து கொள்கிறார்கள்??! தற்கொலைக்கு பத்துலட்சம் கொடுத்து ஊக்கப்படுத்தும் வரை இந்த மாதிரி தற்கொலைகள் தொடரத்தான் செய்யும்.... எல்லா அரசியல்வாதிகளும் மக்களை, மாணவ - மாணவிகளை ஏமாற்றும் நாடகத்தைத்தான் செய்கிறார்கள்....
அயிஷ் அப்துல்லா, சீர்காழி.
நீட் தேர்வு சரியாக எழுதவில்லையோ..... என்ற மன உளைச்சலில் மாணவி தற்கொலை.
12 ஆம் வகுப்புவரை வராத மன உளைச்சல், நீட் எழுதியபின்பு ஏன் வந்தது? மாநில கல்வித் திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு அவர்களுக்கு சம்பந்தமில்லாத சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து கேள்விகள் கேட்பார்களாம். அதில் வெற்றி அடைந்தால் மட்டுமே டாக்டருக்கு படிக்க முடியுமாம். இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் தெரியுமா??!
அதே நேரத்தில்... சிபிஎஸ்இ படித்தாலும், கோச்சிங் கிளாஸில் 2 லட்சங்கள் வரை செலவு செய்து பயின்றால் பாஸ் பண்ணிவிடுவார்களாம்.
ஒன்று மட்டும் உறுதி...
அரசு பள்ளியில் படிப்பவர்களும், ஏழைகளும். டாக்டர் என்ற எண்ணத்தையே குழிதோண்டி புதைத்துவிட வேண்டியதுதான்.
காயத்ரி வெங்கடேசன், மடிப்பாக்கம்.
நீட் தேர்வு என்ற முறையை முதன்முதலில் கொண்டு வந்தது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் தான். அவர்கள் தான் இந்த தற்கொலைகளுக்கு காரணம்.
பத்மா முருகானந்தம், முகப்பேர்.
நாட்டில் எத்தனை பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளை பிளஸ் டூ முடித்த பின் இரண்டு வருடங்கள் வீட்டில் உட்கார வைத்து கோச்சிங் சென்டரில் தனியாக வருடத்திற்கு இரண்டு மூன்று லட்சம் செலவு செய்து படிக்க வசதி வாய்ப்பு இருக்கிறது??? தனியார் நீட் கோச்சிங் மையங்கள் மூலம் தங்களுக்கு கிடைக்கும் பல்லாயிரம் கோடி கமிஷன் பணத்துக்காகத்தான் பிஜேபி கும்பல் நீட் தேர்வை ஆதரித்து வருகிறது... இந்த கொடூர பிஜேபி தான், மாணவர்களின் தற்கொலைகளுக்கு காரணம்.
ப.ஷண்முகநாதன், சின்னமலை.
தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களுக்கு பத்துலட்சம் கொடுத்து ஊக்கப்படுத்தும் முதல்வர் ஸ்டாலின் இருக்கும் வரை தற்கொலை தொடரத்தான் செய்யும்....
ராஜலட்சுமி வைத்தியநாதன், திருவாரூர்.
மற்ற மாநில மாணவர்களுக்கு நீட் பலமுறை எழுதக்கூடிய ஒரு நுழைவு தேர்வு மட்டுமே.. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இது வாழ்வா சாவா தேர்வு போல் மாற்றி வைத்திருக்கிறார்கள் இந்த அரசியல்வாதிகள்.. இவர்கள் தான் இந்த நிலைமைக்கு காரணம்.
மா.சிவக்குமார், மடிப்பாக்கம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று பொய் வாக்குறுதிகளை கொடுத்து, மாணவர்களை ஏமாற்றிய திமுகதான் பொறுப்பு ஏற்க வேண்டும் இத்தகைய தொடர் தற்(கொலை)களுக்கு.. ஆம். மாணவர்கள் தற்கொலை கொலைக்கு ஒப்பானது!

Leave a comment
Upload