தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம்

அழகிரியின் அச்சம் நியாயமானது

20210817214349366.jpeg

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியும் நாகாலந்து ஆளுநராக இருந்த வி.என். ரவியை நியமித்துள்ளார் குடியரசுத் தலைவர்.

அவர் பதவி ஏற்பதற்கு முன்பே அவருக்கு எதிர்ப்பு குரல், தமிழ்நாட்டில் கிளம்பியிருக்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இந்த ஆட்சியை அச்சுறுத்த, ஆளுநர் மாற்றமா என்று கேட்டிருக்கிறார்.

ஆட்டுக்கு தாடி தேவையில்லை.. இதேபோல் மாநிலத்திற்கு ஆளுநர் தேவையில்லை என்றார் அண்ணா. ஆளுநர் என்பவர் மத்திய அரசின் ரப்பர் ஸ்டாம்ப் என்ற விமர்சனம் கூட எழுந்தது. பெரும்பாலான ஆளுநர்களின் நடவடிக்கை அப்படித்தான் இருந்தது.

கேகே ஷா ஆளுநராக இருந்தபோது, அவரை கருணாநிதி ஷா என்று வர்ணிப்பார்கள். அந்த அளவுக்கு அவர் கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்தார். ஆனால் மத்திய அரசு, கருணாநிதி ஆட்சியை கலைக்க அவரை சிபாரிசு செய்து அனுப்ப சொன்னதும்... உடனே அனுப்பி வைத்து ஆட்சியை கலைத்தார் கேகே ஷா.

சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது... ராஜீவ் காந்தியிடம், ஜெயலலிதா தந்த அழுத்தம் காரணமாக கருணாநிதி ஆட்சியை கலைக்க அப்போது ஆளுநராக இருந்த சுர்ஜித் சிங் பர்னாலாவிடம் அறிக்கை கேட்டபோது, அவர் அறிக்கை தர மறுத்துவிட்டார். ஆளுநர் அறிக்கை இல்லாமலே கருணாநிதி அரசு கலைக்கப்பட்டது.

ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதாவிற்கு பதவி பிரமாணம் செய்தார் ஆளுநர் பாத்திமா பீவி, இத்தனைக்கும் அவர் ஓய்வு பெற்ற நீதிபதி. ஜெயலலிதாவிற்கு பதவிப் பிரமாணம் செய்தது சர்ச்சையை கிளப்பியது. அதைத் தொடர்ந்து ஆளுநர் பாத்திமா பீபி ராஜினாமா செய்தார்.

ஒரு காலத்தில் ஆட்சிக் கலைப்பு, ஆளுநர் ஆட்சி என்பது தொடர்கதையாக இருந்தது. மத்திய அரசு தங்களை விரும்பாதவர்களை, ஆட்சி கலைப்பு என்ற அஸ்திரத்தைப் பயன்படுத்தி பழிவாங்கிய கதைகள் எல்லாம் உண்டு.

அரசியல் சட்டம் 356 பிரிவை தவறாக பயன்படுத்தக்கூடாது என்று கர்நாடக முதல்வராக இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட எஸ் ஆர் பொம்மை தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து ஆளுநர் ஆட்சி, 356 பிரிவின் கீழ் ஆட்சி கலைப்பு இரண்டுமே காணாமல் போனது.

அதே சமயம் மாநிலத்தின் எல்லா உத்தரவுகளையும் செயல்படுத்த ஆளுநர் கையெழுத்து தேவை. சட்டசபை கூட்ட, அமைச்சரவை நியமனம் நீக்கம் என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஆட்டுவிக்கும் இடத்தில் ஆளுநர் இருக்கிறார் என்பது உண்மை. அவரை மத்திய அரசு எப்படி வேண்டுமானாலும் இயக்கும் என்பதும் உண்மை. எனவே அழகிரியின் அச்சம் நியாயம்தான்.