தொடர்கள்
சிறு தொடர்கதை
மறு வாசனை... - 15 - அய்யாசாமி

20211019154032457.jpeg

வெளிரிய முகத்தோடு பயணியர் மாளிகையிலிருந்து வெளியேறிய கருப்பையாவும், அசோகனும் நேராக கருப்பையாவின் பண்ணை வீட்டிற்குச் சென்றனர்.

முப்பது வருடமுன்னே வாங்கிய கடன்களின் விவரம் இவருக்கு எப்படிய்யா தெரிந்தது என கேட்டார் கருப்பையா.

அந்த கிழப்பய இவர்கிட்டே போய் மனு ஏதாவது கொடுத்து இருப்பானோ? என தன் சந்தேகத்தை முன் வைத்தார் அசோகன்.

அவர் நடக்கவே தெம்பு இல்லாமல் இருக்காரு... அவரால் முடியாது என்றவர் அசோகனை ஆழ்ந்துப் பார்த்தார். இது உன் வேலையா என்றார் சந்தேகத்தோடு.

அய்யோ நான் அப்படி செய்வேனா?

நீயும் அரசியல்வாதிதானே, பெரிய யோக்கியன் மாதிரி பேசறே... கூடவே இருந்து குழி பறிக்கிறது எல்லாமே உங்களுக்கு கை வந்த கலைதானே. அதான் உன் மேலே எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு.

ஏனெனில் இந்தக் கடன், கடை உரிமை பற்றி உனக்கும் எனக்கும் மட்டும்தான் தெரியும். அந்தக் கடனைப் பற்றி ஆட்சியர் கேட்கிறார் என்றால், நீயே மனு போட சொல்லி இருப்பாய் என நினைக்கிறேன் என்றார் கருப்பையா.

சும்மா இருங்க! இந்த விஷயம் நமக்கு மட்டும்தான் தெரியுங்கிறீங்களே ஏன் அந்த சதாசிவத்திற்கு தெரியாதா?

அவர் செய்திருப்பாருனு சொல்றியா எனக் கேட்டார்.

பின்னே நான் ஏன் செய்யணும்? எனக் கேட்டார்.

மனு கொடுத்தால் போலீஸ் மூலமாக விசாரணை வரும். நாங்க உங்ககிட்டே பஞ்சாயத்திற்கு வருவோம், என நீ செய்திருக்கலாம் இல்லே.

இது நல்ல ஐடியாவாக இருக்கே... அப்படி செஞ்சிருக்கலாம் போல இருக்கே என்ற அசோகன், நான் ஒன்றும் செய்யலை. ஆனால், அவுக ஒரே சாதிக்காரங்க... வாய்ப்பு இருக்கில்லே என்று அவரைக் குழப்பினார் அசோகன்.

யோவ் என்னை மாதிரி அவரும்தான் பாக்கி வச்சு இருக்காரு என்றபோது செல்போனில் வந்தார் சதாசிவம்.

ஹலோ..
.....
பண்ணை வீட்டில்..
.......

ம்..

.....
உன்னிடமுமா?
....

ஆமாம்... என்னிடமும்தான்
....

நாங்கள் பயணியர் மாளிகை போயிருந்தோம்.

சரி.. சரி.. இங்கே வாங்க அசோகன் இங்கேதான் இருக்கார் என்றவர் முகத்தில் மேலும் பீதி அப்பியிருந்தது.

என்னாச்சு? என அசோகன் கேட்க...

சதாசிவம் இங்கே வருகிறார் என்றார்.

நான் சொன்னதை நீங்க மனசிலே வச்சுக்காதீங்க, இப்போ நாம ஒத்துமையாக இருக்கிறதுதான் முக்கியம் என்று அசோகன் தன் பங்கிற்கு பயத்தைக் கூட்டினார்.