பிரதமரை சந்திக்க மிஸ்டர் ரீல் போனபோது... பிரதமர் ஓடிவந்து அவர் கையைப் பிடித்து... “சாரி. தெரியாம பண்ணிட்டேன், இனிமே அப்படி பண்ண மாட்டேன்.. மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று கெஞ்ச... என்ன நடக்குது என்று தெரியாமல் மிஸ்டர் ரீல் முழிக்க... அப்போது அங்கு இருந்த அமித்ஷா... “இவர் தமிழ்நாட்டுக்காரர், இவர்கிட்ட ஏன் மன்னிப்பு கேட்கிறீர்கள்?” என்று சொல்ல...
அப்போது அங்கு வந்த அமைச்சர் நிர்மலா சீதாராமன்... “சார்.. இது பஞ்சாப் மாநிலத்தில் யார் யாரெல்லாம் செல்போன், லேண்ட்லைன் வைத்திருக்கிறார்களோ அவர்கள் எல்லாருடைய தொடர்பு எண்கள் இதோ என்று... அந்தக்கால டெலிபோன் டைரக்டரி சைசுக்கு இருபது புத்தகங்களை கீழே இறக்கி வைத்தார்.”
அதைப் பார்த்த பிரதமர்... “எல்லா மந்திரி, எம்பிகள் போன் போட்டு, இந்தப் புத்தகத்தில் இருக்கும் தொடர்புகளுக்கு பேசி... நான் தெரியாம பண்ணிட்டேன், மன்னித்துக் கொள்ளுங்கள் என்று மன்னிப்பு கேட்க சொல்லுங்கள். ஒரு நாளைக்கு ஆயிரம் பேரிடமாவது அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். அமைச்சர்கள், எம்பி-க்கள் என்று எல்லோருக்கும் இனிமேல் இது தான் முக்கிய வேலை” என்று சொல்ல... அப்போது மிஸ்டர் ரீல்... “எதுக்கு மன்னிப்பு? என்ன விஷயம்..?” என்று கேட்க...
அதுதான்... “இந்த வேளாண்மை சட்டம், நேற்றுதான் 555 தடவை பிரதமர் படித்துப் பார்த்தபோதுதான், பூரா சட்டமும் விவசாயிகளுக்கு எதிராக இருக்கிற விஷயம் தெரிந்தது. நல்லவேளை டிவியில் அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார். அவர் கேட்டால் மட்டும் போதுமா... அந்த மசோதாவை ஆதரித்து ஓட்டுப்போட்ட அமைச்சர்கள், எம்பிகள் அவங்களும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று அமித்ஷா சொல்ல...
உடனே மிஸ்டர் ரீல்... “அது என்ன பஞ்சாப்பில் மட்டும்” என்று கேட்க... அதற்கு பிரதமர்... “அவங்க தான் இந்தச் சட்டத்தை எதிர்க்கிறார்கள். மத்தவங்க எல்லாம் சும்மா போராட்டத்தை வேடிக்கை பார்த்து, கருத்து சொல்றாங்க. தேர்தல் வருது...” அதனால் தான் என்று சொல்ல...
அப்போது மிஸ்டர் ரீல்... அதற்கு “இந்தச் சட்டத்தை கொண்டு வராமலே இருந்திருக்கலாமே?” என்று கேட்க... அதற்கு அமித்ஷா... “அது எப்படி.. சட்டம், மசோதா வாபஸ், மன்னிப்பு என்பதுதான் எங்கள் திட்டம். ஆனா, பாவம் எதிர்க்கட்சிகள் தான் எப்படி அரசியல் செய்யப் போறாங்கன்னு தெரியல... கொஞ்சம் கஷ்டம்தான்” என்று சொல்ல...
அப்போது மிஸ்டர் ரீல்... “அதுதான் இந்துத்வா இருக்கே..” என்று சொல்ல... அதற்கு பிரதமர்... “அதெல்லாம் பழைய கதை. இப்போது பிரியங்கா, ஹனுமான் சாலிசா சொல்லிதான் பேசவே தொடங்குகிறார். கை சின்னத்துக்கு பதில், தேர், கோயில், வில்லம்பு, புல்லாங்குழல் என்று புது சின்னம் பற்றி சோனியா யோசிக்கிறார். இந்தத் தகவல் எல்லாம் உங்களுக்கு தெரியாதா?” என்று நக்கல் அடிக்க... அப்போது அமித்ஷா, “ராகுல் காந்தி இப்போது கந்த சஷ்டி கவசம் படிக்க ஆரம்பித்திருக்கிறார். அவருக்கு கந்த சஷ்டி கவசம் சொல்லித்தர தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி இரண்டு குருக்களை சிதம்பரத்திலிருந்து அனுப்பி வைத்திருக்கிறார். சோனியா காந்தி கூட சுந்தரகாண்டம் படிப்பதாக கேள்வி” என்று சொல்ல...
அப்போது அவங்க... “எதைப்பற்றி தான் பேசுவாங்க?” என்று மிஸ்டர் ரீல் கேட்க... அதற்கு அமித்ஷா... “பிரதமர் தான் மன்னிப்பு கேட்டார். அமித்ஷா மன்னிப்பு கேட்கவில்லை என்று அவர்களால் சொல்ல முடியாது. நாளை நான் மன்னிப்பு கேட்டு, அமிர்தசரஸ் பொற்கோவில் ஐம்பத்தி ஒரு முறை அங்கப்பிரதட்சணம் செய்ய இருக்கிறேன். விவசாயத்துறை அமைச்சர் அங்கு செருப்பு துடைக்க போகிறார். இப்படி ‘மன்னிப்பு’ பாரதிய ஜனதாவுக்கு பிடித்த வார்த்தை என்று நாங்கள் பிரச்சாரம் செய்யப் போகிறோம்” என்று சொல்ல...
அப்போது மிஸ்டர் ரீல்... “நீங்க இப்படி பண்ணி, பஞ்சாபில் சமாளிக்கலாம். உத்தரபிரதேசத்தில் உங்களுக்கு கஷ்டம் தானே?” என்று கேட்க... அதற்குப் பிரதமர்... “எங்களுக்கு அங்கு போட்டியே யாருமில்லை. அகிலேஷ் யாதவுக்கு, பிரியங்கா காந்திக்கு தான் போட்டி. மாயாவதிக்கு, அகிலேஷ் யாதவ் தான் போட்டி. இதுதான் கள நிலவரம். அங்கு எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. யோகியோடது யோக ஜாதகம்” என்று சொல்ல... மிஸ்டர் ரீல்... “எதிர்க்கட்சிகளுக்கு குரு பெயர்ச்சி சரி இல்லை போலிருக்கிறதே” என்று யோசித்தபடி புறப்பட்டார்.
Leave a comment
Upload