ஒடிசா மாநிலம், கட்டாக் பகுதியை சேர்ந்த மூதாட்டி மினாதி பட்நாயக் (63), தனக்கு சொந்தமான ₹1 கோடி மதிப்புள்ள 3 மாடி கட்டிடம், தங்க-வெள்ளி நகைகள் மற்றும் தனது சேமிப்பு பணத்தை ரிக்ஷா தொழிலாளி புதா சமலி குடும்பத்தினருக்கு தானமாக எழுதி கொடுத்துவிட்டார். இதனால் அவரது உறவினர்களிடையே பெரும் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து மூதாட்டி மினாதி பட்நாயக் கூறுகையில், ‘‘எனது கணவர் கிருஷ்ணகுமார் பட்நாயக், ஒரே மகள் கோமல்குமாரி பட்நாயக் ஆகிய இருவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன் இறந்துவிட்டனர். ஆதரவற்ற நிலையில் இருந்த என்னை எந்த உறவினர்களும் கவனித்து கொள்ளவில்லை. எனக்கு உதவியாக ரிக்ஷா தொழிலாளி புதா சமலி மற்றும் அவரது குடும்பத்தினர்தான் உறுதுணையாக இருந்து வந்துள்ளனர்.
எனது மகள் சிறுகுழந்தையாக இருந்த காலகட்டத்தில் இருந்தே, புதா சமலி குடும்பத்தினர் பல்வேறு வகைகளில் உதவியாக இருந்துள்ளனர். ஒவ்வொரு மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் புதா சமலி குடும்பத்தினர் என்னுடன் பங்கெடுத்துள்ளனர். எனக்கு பிறகு, எனது குடும்ப உறுப்பினர்களுக்கு சொத்துகளை கொடுப்பதை காட்டிலும், என்னையும் எனது குடும்பத்தையும் கடந்த 25 ஆண்டுகளாக பாதுகாத்து வரும் ரிக்ஷா தொழிலாளி புதா சமலி குடும்பத்துக்கு கொடுக்க முடிவு செய்தேன்.
அதன்படி ஒரு வழக்கறிஞரை ஏற்பாடு செய்து, எனது சொத்துக்கள் அனைத்தையும் புதா சமலி குடும்பத்துக்கு தானமாக எழுதி வைத்துவிட்டேன். இனிமேல் என்னுடன் எனது வீட்டிலேயே வசிப்பார்கள். அவர்கள் குடும்பத்துடனே எனது வாழ்நாள் இறுதிவரை வாழ ஆசைப்படுகிறேன்!’’ என மினாதி பட்நாயக் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதுபற்றி ரிக்ஷா தொழிலாளி புதா சமலி பேசுகையில், ‘‘கிருஷ்ணகுமார் பட்நாயக் குடும்பத்துடன் எனக்கு நீண்டகால உறவு உள்ளது. அதற்காக இவ்வளவு பெரிய சொத்து கிடைக்கும் என நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. எனது தாயை போல் மினாதி பட்நாயக்கை பாவித்து, அவரை கடைசிவரை நன்றியுடன் காப்பாற்றுவேன்!’’ என கண்கள் கலங்க கூறியுள்ளார்.
Leave a comment
Upload