தொடர்கள்
கதை
ஆதார சுருதி... – பா.அய்யாசாமி 

20211026210941740.jpeg

மேடம் இந்தப் பெண் ஒகே என்ற அரவிந்தனிடம்...

ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு சார், உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு சார் என்றார் இல்ல நிர்வாகியம்மாள்.

“அதெல்லாம் ஒன்றும் இல்லைங்க, எனக்கும் யாரும் இல்லை. ஒரே மகள் சுருதிதான், அவளும் திருமணமாகி விரைவில் சென்று விடுவாள். எனக்குனு ஒரு வாழ்க்கை, அதற்கு ஒரு அர்த்தம் வேண்டாமா, அதனால்தான் இந்த முடிவு இதுவும் ஒரு சுயநலம்தான்” என்றார் அரவிந்தன்.

உங்களுக்கு சுயநலமாக இருந்தாலும், இங்கே இருக்கிற ஒருவருக்கு உங்களால ஒரு வாழ்க்கை அமைகிறது என்றால் எங்களுக்கு சந்தோஷம்தானே சார் என்றவர், எப்போ வந்து அழைத்துக் கொண்டு போகிறீர்கள் என கேட்டதும்,

மகள் சுருதியின் திருமணம் முடிந்ததும் நான் வருகிறேன், இது வெளியில் யாருக்கும் தெரிய வேண்டாம் என் மகள் உட்பட என்று கேட்டுக் கொண்டு விடைப்பெற்றார்.

ஏம்பா, நீ ஸ்மார்ட்டாதானே இருக்கே, அப்படி என்ன வயசாயிட்டு உனக்கு? இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கோ என்றாள் சுருதி.

நான் உனக்கு கல்யாணத்திற்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டியிருக்கேன், நீ எனக்குப் பெண் பார்க்குறீயா? நல்ல வேடிக்கைதான் போ என்ற அரவிந்தன், செல்லமாக சுருதியை தோளில் சாய்த்து உச்சி் முகர்ந்தார். ‘அப்பா, என நெகிழ்ந்து அவளும் தழுவி கண்ணீர் வடித்தாள்’.

உறவுகளில் அப்பா மகள் இடையே உறவு அலாதியானது, மரியாதை கலந்த மகளின் கேலிப்பேச்சும், துணிவாக மனதில் பட்டதை சொல்வதும், சில சமயங்களில் அம்மா கூட யோசித்துப் பேசுவாள், ஆனால் மகள்கள் அப்படியல்ல.

மகளைப் பெற்ற தந்தையின் உணர்வுகளை முழுவதுமாக உணர்வதற்குள், அரவிந்த் தன்மனைவி விஜி மற்றும் பதின் வயது மகள் சுருதியை காலம் விபத்தில் பறித்து விட தனித்துவிடப் பட்டான். அம்மா விஜியை அப்படியே ஜாடையில் உரித்து வைத்திருப்பாள் சுருதி. பேசும் போது கூட அவள் அம்மாவை போலவே இருக்கும் என நினைத்தபோது, கண் கலங்கியது அரவிந்தனுக்கு.

பாவம்பா நீ, என்னை கவனித்து படிக்க வைத்து, வேலைக்கும் அனுப்பி, வீட்டு வேலையையும் பார்த்துகிட்டு, ஏன் இப்படி கஷ்டப்படுகிறாய்? நானும் கல்யாணமாகி போயிட்டேன் என்றால் நீ தனியா என்ன பண்ணுவே? அதனாலே நீயும் என் கூடவே வந்துதங்கிடுப்பா என்றாள் ஆசையாக.

இல்லம்மா என யோசித்தவரிடம்.. பெண் வீட்டில் தங்குவது அவமானமாக இருக்கும் என நினைக்கிறீயாப்பா என்ற சுருதியிடம்,

யம்மாடி, வாழ்க்கையில் அன்பும், அரவணைப்பும் எங்கே கிடைக்குதோ அங்கே போய் யாரும் தாராளமாக இருக்கலாம்மா, ஏனெனில் உண்மையான அன்பிற்கும், அரவனைப்பிற்கும் மானம் அவமானம் தெரியாது என்றுவிளக்கினார்.

அப்புறம் என்ன பிரச்சினை உனக்கு என் கூட இருப்பதில்? என்றாள்.

உன் கூட இருந்தால் அன்பும் அரவனைப்பும் கிடைக்கும், என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எனக்கென ஒரு வாழ்வு, ஒரு நோக்கம் இருக்கே.

சரிதான், அப்போ இங்கே கும்பகோணத்திலேயே ஒரு நல்ல பையனாகப் பாரு, நான் உன் கூடவே இருந்து உன்னை பார்த்துக்கிறேன் என்ற சுருதியிடம்...

அதெல்லாம் யாருக்கு எங்கே அமையணும் என எழுதியிருக்கோ அதுதான் நடக்கும், நம்ம கையிலே இல்லேமா, எனக்காக நீ உன் வாழ்க்கையை இங்கேயே சுருக்கிக் கொள்ளக்கூடாது. நல்லா படிச்சியிருக்கே, நல்ல வேலையிலேயும் இருக்கே, பல சாதனைகள் செய்து இன்னும் ஒரு படி மேலும் உயர்ந்து சிறகடித்து பறக்க வேண்டும், அதுதான் இந்த அப்பாவின் ஆசை.

உன்னை விட்டு ஒரு நாள் நான் போகத்தானே வேண்டும். அதனாலே என்னைப் பற்றிய கவலைகளை மறந்து உன் வாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொள் என அறிவுரை வழங்கினார் அரவிந்த்.

சில மாதங்கள் கடந்தது ‘அரவிந்தா, சுருதியோட கல்யாணத்தை முடித்து உன் கடமையை நிறைவேற்றிவிட்டாய், பெண்ணைப் பெத்தவனுக்கு மறுபிறப்பே கிடையாது என்பார்கள். ஆனால் உனக்கு பெரிய மனசுடா. இனி மனதை நிம்மதியாக வைத்துக்கொண்டு, உன் வாழ்க்கையை வாழ்ந்து பாருடா என கண்களில் நீர் வைத்துக் கொண்டு உரிமையுடன் பேசினான் அரவிந்தனின் நண்பன் பாலா.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவர்களின் நண்பர்களில் ஒருவன், அதெல்லாம் நீ ஒன்றும் கவலைப்படாதே, ஏற்கனவே அடுத்து பார்த்து வச்சுட்டான், சுருதியின் திருமணம் முடியட்டும் என காத்திருக்கிறான். இனி பாரு என்றான் பூடகமாக கண்ணடித்தபடி.. சீனு.

இவர்கள் பேசி சிரித்தது பலர் காதுகளில் செய்தியாக விழுந்து புறப்பட,

அடுத்தடுத்த நாட்களில் இது தேவைதான் என்றும்... இது இவருக்கு தேவையா? என்றும் விதண்டாவாதிகளின், விவாதப்பொருளாகிப் போனார் அரவிந்தன்.

அந்தச் செய்தி, சுருதி காதுகளுக்கும் போனது, மகிழ்ச்சியாக இருந்தாலும், அப்பா செய்தால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும் என நம்பினாள். அதை தன்னிடம் சொல்லாமல் இருந்தது ஏன் என மட்டும்தான் அவளுக்கு புரியவில்லை. இருந்தாலும் அடுத்த மாதம், அவர் அறுபதாவது பிறந்த நாளன்று ஊருக்கு போகும் போது பேசிக் கொள்ளலாம் எனஅமைதியானாள்.

தனது பிறந்த நாளான அடுத்த மாதம் 10 தேதியன்று வாருங்கள் அன்று என் அடுத்த வாழ்க்கைத்துணை பற்றிய அறிவிப்பு ஒன்று செய்யப் போகிறேன் என சுருதியையும் சொந்தங்களையும், நட்பு வட்டத்தையும் அழைத்திருந்தார் அரவிந்த்.

இந்த அறுபது வயதில் வாழ்க்கை துணையா? என்று ஆச்சரியம் அடைந்த மாப்பிள்ளையையும், ஏன்? எதற்கு? என கேள்விகளாய் கேட்ட சொந்தங்களுக்கும் நீங்கள் நினைக்கும்படியெல்லாம் இல்லை என எடுத்துச் சொல்லி தன் அப்பா மீதான நம்பிக்கையை அனைவருக்கும் வெளிப்படுத்தியிருந்தாள் சுருதி.

பிறந்தநாளன்று, இதோ இவள் தான் இனி என் வாழ்க்கைத்துணை என அரவிந்த் கை உயர்த்திக்காட்ட பதினைந்து வயதுப் பெண்ணை, தான் வாங்கி வந்த பாவாடை - சட்டையை அணிவித்து, கூடத்திற்கு அழைத்து வந்தாள் சுருதி,

திகைத்து நின்றவர்களை அமைதிப்படுத்திய அரவிந்த்... வாழ்க்கைத்துணை எனில் அது மனைவி மட்டுமே இல்லை. வாழ்க்கைத் துணையைவிட, என் வாழ்க்கைக்கு ஒரு துணை தேவை, அது என் மகள் சுருதிகளாக கூட இருக்கலாம்.

என் மகள் சுருதியையும் மனைவியையும் பிரிந்த கலங்கி கேள்விகுறியாய் நின்ற நான், வாழ்வை அர்த்தமுள்ளதாக வாழ நினைத்து ஆதரவற்ற, சிறுமிகளை தத்தெடுத்து சுருதி என அவர்ளுக்கு பெயரிட்டு வளர்த்து, படிக்கவைத்து அவர்களை உயர்த்துவது என முடிவெடுத்தேன்.

இந்த சுருதி மணமாகி சென்றதும், எனக்கென இன்னொரு மகளாய் இந்த சுருதி வந்திருக்கிறாள். அன்பிற்கும், அரவனைப்பிற்கும் ஏங்கும் என்னைப்போல பலரில் ஒருவர்தான் இந்த சுருதிகளும். இவர்களே என் வாழ்க்கையென்ற இசைக்கு ஆதாரசுருதிகள்.

அவர்களுக்கு தேவையான கல்வியையும், வாழ்க்கையையும் என்னால் அமைத்துக் கொடுக்க முடியும் அப்படி அமைத்துக் கொடுப்பதன் மூலம் இவர்களின் தலையெழுத்தையும், தலைமுறையையும் மாற்றியமைக்க முடியும் என்றார் தீர்க்கமாக... அரவிந்தன்.