தொடர்கள்
தொடர்கள்
மிடில் பெஞ்சு - 2 - இந்துமதி 

தாவணி கனவுகள்

20211026134652647.jpg

மார்கழி காலையில், தாவணி தேவதைகளாய் அக்காக்கள் குளித்துவிட்டு வாசலடைக்க கோலமிட்டு, அதில் சாணி பிள்ளையாரை வைக்கும்போது, இரவெல்லாம் வேலை பார்த்து வீடு திரும்பும் அண்ணன்மார்கள், கோலம் அழியாமல் சைக்கிளை தூக்கி பிடித்தபடி அக்காக்களையும், அவர்கள் கோலத்தையும் ரசித்தபடி கடந்து போவார்கள் என்று நா. முத்துக்குமார் எழுதி இருப்பார். நானும் கூட இப்படி அதிகாலை எழுந்து குளித்து கோவிலுக்கு போகும் அக்காக்களுடன் போயிருக்கிறேன். அவர்களின் கோலங்களுக்கு வைக்க பூசனி பூக்களை தேடி அலைந்திருக்கிறேன். பெண்கள் எப்போதும் அழகு தான் என்ற போதும், சில உடைகள் அவர்களை மேலும் நளினமாக காட்டும். அப்படி ஒரு உடை தான் தாவணி. மிக சிறிய வயதில், வயதுக்கு வந்தால் தான் தாவணி அணிய முடியும் என்பதால் சீக்கிரம் வயதிற்கு வர வேண்டும் என்றெல்லாம் சாமி கும்பிட்ட பிரகஸ்பதி நான். சடங்கான பெண்களுக்கு புடவை எடுத்துக் கொடுத்தாலும், கட்டாயம் ஒரு செட் பாவாடை தாவணி கொடுப்பார்கள். அதென்னமோ தாவணி அணிந்த உடன் இந்த பெண்கள், வெகு லட்சணமாய் ஆனது போல தோன்றுமெனக்கு. ஆண்கள், பெண்களை எப்போதுமே ரசிப்பார்கள் என்ற போதும் பருவத்தின் அழகோடு பெண் மிளிர்வது அவளுடைய கல்லூரி காலத்தில்தான்.

தொலைத்தொடர்புகள் மிகவும் வளர்ச்சி அடைந்துவிட்ட தற்போதுள்ள காலகட்டத்தில், உடை சார்ந்த நாகரீகங்கள் வெகு வேகமாய் பரவி விடுகிறது. நான் கல்லூரிக்கு சேரும் முன்பு, நகரங்களில் மட்டுமே சுடிதார் போன்ற உடைகள் பிரபலமாய் இருந்தன. அதிகம் வளர்ச்சி அடைந்திராத கிராமங்களில் கல்யாணத்திற்கு முன்பு வரை தாவணி, மணமானால் சேலை. இந்த உடைகலாச்சாரம்தான் கடைபிடிக்கபட்டது. மெல்ல மெல்ல சுடிதார்கள் தலையெடுக்க தொடங்கினாலும், சில பள்ளி கல்லூரிகளில் தாவணியோ, புடவையோ தான் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. நாளுக்கு நாள் நம் ஆசைகள் மாறுபடுமல்லாவா... சிறு வயதில் தாவணி மேல் இருந்த ஆசை, பள்ளி இறுதியில் மாறிவிட்டது. அப்போது சுடிதார் தான் வசதியான உடையாய் தெரிந்தது. எதிலிருந்தாவது நாம் தப்பிக்க நினைத்தால், அதை தான் நமக்கு கொடுத்து அழகு பார்க்கும் காலம், அப்படி என்னையும் தாவணி அணிய வைத்தது ஒரு கல்லூரி.

பொதிகை மலைக்கு மிக நெருக்கமாக அமைந்த ஊரில் உள்ள சிறந்த கலைக்கல்லூரி அது. சுற்று வட்டாரத்தில் உள்ள எளிய மக்களில் இருந்து அனைத்து தரப்பினரும் தங்கள் பிள்ளைகளை அங்கு தான் நம்பி சேர்ப்பார்கள். அறிவியல் சார்ந்த இளங்கலை படிப்புகள் அங்கே மட்டும் தான் இருந்தது. நான் பன்னிரெண்டாம் வகுப்பில் வேதியலை படிக்க சிரமப்பட்ட போது, ராஜன் சாரிடம் தான் சிறப்பு வகுப்புகளை எடுத்து கொண்டேன். அவர் அந்தக் கல்லூரியில் வேதியல் பிரிவின் தலைவர். நல்ல நிறத்தில் ஆஜானுபாகுவான தோற்றத்துடனுமும், குழந்தை சிரிப்புடனும் இருக்கும் ராஜன் சார் மேல் எனக்கு மிகுந்த மதிப்புண்டு. நான் பள்ளி இறுதியில் வேதியியலில் 90 சதவிகிதம் மதிப்பெண் வாங்கிய போது, சாருக்கு மிக பெருமையாய் இருந்தது. பொறியியல் சேர வேண்டிய கலந்தாய்வுக்கு இரண்டு மாதங்கள் இருந்த நிலையில், என் நெருங்கிய தோழியின் ஆசைக்காக நான் வேதியல் இளங்கலை சேரும் படிவத்தை நிரப்பி கல்லாரியில் கொடுத்திருந்தேன். ராஜன் சார் என்னை அழைத்து “உனக்கு உடனடியாக என்னால் இடம்தர இயலும். ஆனால், நீ பொறியியல் படிக்க போய்விடுவாய், அப்போது நியாயமாய் இந்தக் கல்லூரியில் படிக்க ஆசைபடும் இன்னொரு நபரின் இடத்தை பறித்ததாய் ஆகிவிடுமே என்ன செய்யலாம்?” என்றார்.

“அப்படி எதுவும் நடக்காது சார், இரண்டு மாத காலம் மட்டும் எனக்கு கல்லூரியில் படிக்க அனுமதி தாருங்கள். இடையில் யார் வந்து அந்த இடத்தைக் கேட்டாலும்.. நீங்கள் கொடுத்து விடுங்கள், நான் நின்றுகொள்கிறேன்” என்றேன். ராஜன் சார் எனக்கென்னவோ படிப்பின் மீது அதீத ஆர்வம் என்று நினைத்து, மெச்சி, மகிழ்ந்து உடனே கல்லூரியில் இளங்கலை வேதியியல் பிரிவில் இணைய சொன்னார். உண்மையில் நான் என் தோழிக்காக தான் அங்கு இணைந்தேன், அதுவே மகிழ்ச்சிக்கான நுழைவாயிலாய் அமைந்து போனது.

பறத்தல் நிச்சய பட்டுவிட்டால், கூடென்பது சுகமான ஆசுவாசத்திற்கான இடமாக தானே தெரியும். எனக்கு கூட அப்படி தான் தோன்றியது. நான் அந்தக் கல்லூரியில் நிரந்தரமாய் படிக்க போவதில்லை என்பதால் என் மிடில் பெஞ்ச் மனோபாவத்தை கைவிட்டு, கடைசி பெஞ்ச் ஆளாய் மாறி முழுவதுமாய் என் றெக்கையை விரித்து பறந்து திரிந்தேன் என்றே கூறலாம். மிகவும் அறுவையான வகுப்புகளை கவனிக்காமல் நோட்டில் படம் வரைவேன். தமிழ் மற்றும் ஆங்கிலம் வகுப்புகள் மட்டும் மிகவும் பிடிக்குமெனக்கு. செயல்முறை வகுப்புகள் வரும்போது, அதற்கான நோட்டை எடுத்துவராமல் இருந்து (ரெண்டு மாததிற்கு ரெண்டு நோட்டு போதாதா) வகுப்பை விட்டு வெளியில் வந்து, கேன்டீனில் ஒரு காப்பி வாங்கி, மரத்தடியில் அமர்ந்து வேடிக்கை பார்த்தபடியே ரசித்து குடித்தபடி அமர்ந்திருக்கிறேன். ஒரு நாள் இப்படி செயல்முறை வகுப்புக்கு போகாமல் நூலகத்திற்கு போனபோது, ராஜன் சாரிடம் மாட்டிக்கொண்டேன். அவர் பார்த்தவுடன் முகத்தை பாவம் போல வைத்தபடி “நோட்டை கொண்டுவர மறந்துட்டேன் சார்” என்று நான் சொன்ன போது... எனக்காக, ஆசிரியரிடம் பேசி லேபில் விட்டுவிட்டு போய்விட்டார் சார். அன்றிலிருந்து சாரின் நேரடி சிபாரிசு பெற்ற மாணவி என்பதால், எனக்கு பல சிறப்பு சலுகைகள் உண்டு. எதையெல்லாம் என்னால் செய்யவே முடியாது என்று நினைத்தேனோ அதையெல்லாம் செய்து பார்த்த அழகிய நாட்கள் அவை.

என்னுடைய மனதில் இருந்த கல்லூரிக்கான பிம்பம், மரங்கள் அடர்ந்த புராதான கட்டிடமாக இருக்கும், மர பெஞ்சுகள் நிறைந்த வகுப்பறைகளும், நிறைய பழைய நூல்கள் உள்ள நூலகம் அமைந்த ஒரு கல்லூரி தான். தமிழ் சினிமா நமக்கு காட்டிய கல்லூரிகளில் மாணவர்கள் படிக்கவே மாட்டார்கள், லூட்டி அடிப்பதும் பாட்டு பாடுவதும், வகுப்பெடுக்கும் ஆசிரியரை கேலி செய்வதும் தான் அங்கு படிக்கும் பையன்களின் தலையாய கடமை என்பது போல தான் காட்டி இருப்பார்கள். அதிலும் நடிகர் சார்லி மற்றும் சின்னிஜெயந்த் இருவரும் தன்னுடைய 40 வயது வரை நாயகனுக்கு, கல்லூரி தோழர்களாய் மட்டுமே வந்து போனவர்கள். பள்ளி காலத்திலேயே எனக்கு வாசிப்பு பழக்கம் தொடங்கிவிட்டதால் நான் படித்த சுஜாதா, லட்சுமி, சிவஷங்கரி, இந்துமதி போன்ற எழுத்தாளர்களின் கதைகளில் வரும் சென்னையை, அங்குள்ள கல்லூரிகள் இப்படி தான் இருக்கும் என்று மனதிற்குள் கற்பனை செய்ததுண்டு. இது போக தீவிர எம்ஜிஆர் ரசிகரான, இரண்டு முதுகலை பட்டங்கள் வாங்கி இருந்த என் அப்பா எனக்குள் வரைந்த கல்லூரியின் சித்திரம் முற்றிலும் வேறு மாதிரியானது.

70-களில் கல்லூரியில் படித்த அவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து கடைசி ஆண்டில் ஒரே ஒரு தேர்வு தான் என்பதால் கல்லூரி காலம் முழுவதும் சினிமாவை பார்ப்பது, நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, தன்னுடைய தலைவர் படம் வெளியிடப்படும் போது பரபரப்பாய் இயங்குவது, மேலும் ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சனால் கவரப்பட்டு, விதவிதமாய் பெல்பாட்டங்களும் உடைகளையும் தைத்து கொண்டு ஸ்டைல் செய்து கொள்வது என்று கழித்துவிட்டு, படிக்காமல் வைத்திருந்ததை எல்லாம் தேர்வுக்கு முன் தான் விழுந்து விழுந்து படிப்பார்களாம். தூக்கம் கூட இல்லாமல் படிப்போம் என்று அப்பா இதை சொல்லும் போதெல்லாம் லா சா ரா தன்னுடைய புத்தகத்தில் எழுதி இருந்த விஷயம் நினைவு வரும். அந்த நாட்களில் படிக்கும் பிள்ளைகளின் குடுமியோடு ஒரு கயிறை கட்டி ஆணியில் சேர்த்து கட்டி விடுவார்களாம். ஒரு வேளை அவர்கள் தூங்கி விழுந்தால் குடுமியோடு கட்டி இருக்கும் கயிறு சடக்கென்று இழுபடுவதில் விழித்துக்கொள்வார்களாம். இதை படிக்கும் போதே கற்பனை செய்து சிரித்திருக்கிறேன். கயிறு தயாராய் இருக்கிறது, சரி தான் குடுமிக்கு எங்கே போக...!

மலையாள திரைப்படமான பிரேமத்தில் நிவின்பாலி என்னை ஈர்த்தது போலவே... அவர் படிக்கும் கல்லூரி, அந்த வகுப்புறை, பசுமையான ஊரின் அழகு, வீட்டிற்கு அருகில் இருக்கும் பாலம் என்று பல விஷயங்களை நான் ரசித்து பார்த்திருக்கிறேன். கட்டை குத்திய உத்திரத்தில் மலர் என்று சாய் பல்லவியின் பெயரை எழுதிவிட்டு, அவரை பெருமையாய் பார்த்து சிரிக்கும் நிவின் பாலியை நிரம்ப பிடிக்குமெனக்கு. அப்படியே ஒரு தமிழ் பெண்ணை காதலிக்கிறான் நண்பன் என்றதும் கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே என்று பாடி கேலி செய்யும் அந்தத் தோழர்களையும். நாலு வருடங்கள் நான் படித்த பொறியியல் கல்லூரியை விட, இரண்டே மாதம் போய் வந்த இந்தக் கல்லூரி என் மனதிற்கு நெருக்கமான ஒன்று.

20211026134803737.jpg

அந்த நாட்களில்... காலையும், மாலையும் தோழியுடன் பேருந்தில் பயணிக்கையில் கல்லூரிக்கு வரும் பையன்களின் அட்டகாசம் நிறைந்திருக்கும். நாங்கள் வெளியில் வந்தால் எங்களை பின் தொடரும். என் தோழியின் தீவிர விசிறி ஒருவனும், அவன் தோழனும் எங்களின் ஒவ்வொரு செய்கைக்கும் உடனுக்குடன் ஏதாவது கிண்டல் செய்தபடிய வருவார்கள். சில நேரங்களில் அவர்களின் நகைச்சுவைக்கு இதழ்கடையோரம் ஒழித்து வைத்திருந்த புன்னகை, சட்டென்று உடைந்து அடக்க முடியாமல் சிரித்தநாட்களும் உண்டு. எனினும் அவர்களின் கற்பனா சக்தியை வியந்தும் இருக்கிறேன். தினமும் எனக்காக அவர்கள் வீட்டு தோட்டத்திலிருந்து ஏதாவது ஒரு பூவை கொண்டு வந்து தருவாள் என் தோழி. உடனே தலைவர் இந்த “பூவுக்கு ஒரு அரசன் பூவரசன்..” என்று பாடுவான். தோழி வீட்டில் எதாவது சண்டை போட்டுவிட்டு வந்து என்னுடன் அதை பகிர்ந்தபடியே வருவாள். எப்படி தான் இவர்களுக்கு கேட்குமோ... உடனே “ராசாத்தி என் உசுரு எண்ணுதில்லை...” ஆறுதல் படுத்துறாங்கலாம்...

நகரத்திலுள்ள கல்லூரியில் படிப்பதற்கும், இப்படிப்பட்ட ஊர்களில் உள்ள கல்லூரியில் படிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இங்குள்ள பையன்கள் சூது வாது தெரியாதவர்கள். பெரும்பாலான வீட்டில் அவர்களே முதல் முதல் கல்லூரிக்கு அடியெடுத்து வைத்தவர்களாய் இருப்பார்கள் என்பதால் மிகவும் பொறுப்புணர்ச்சி மிக்கவர்களாய் இருப்பார்கள். ஏதாவது ஒரு பெண்ணின் மீது ஈர்ப்பு ஏற்பட்டிருந்தாலும், எளிதில் அதை வெளியிட மாட்டார்கள். சம்பந்தப்பட்ட அந்தப் பெண்ணுக்கு தன் காதலை தெரியப்படுத்தவே பல வியூகங்களை, இவர்களின் நண்பர்கள் செய்ய வேண்டி இருக்கும். கிட்டத்தட்ட கோமாளி படத்து ஜெயம் ரவி போல, அந்த பெண்ணிற்கு தெரிந்தும் நேரடியாய் அதை பற்றி அவளிடம் பேசி இருக்க மாட்டார்கள். அவளுக்கு பிடிக்காத எதையும் செய்ய கூடாது என்பதில் மட்டும் மிக தெளிவாக இருப்பார்கள். அப்பாக்களின் தலைமுறை ஒரு தலை ராகமாய் போனது, எங்கள் தலைமுறையில் பல இதயம் முரளிகள் இருந்தார்கள் தான் என்ற போதும், காதலை சொல்லி வெற்றியடைந்தும் இருக்கிறார்கள். சில காதல்கள் வெளிப்படுத்தப்பட்டும் தோல்வியடைந்திருக்கின்றன. ஆனால், இன்றளவும் நினைத்து வாழ இனிப்பான நாட்களாய் அவைகள் அவர்களின் நினைவில் மிச்சமிருக்க, ஒரே காரணம்.. அவர்கள் கடைபிடித்த கண்ணியம் தான். பலவாறு யோசித்து வெளிப்படுத்திய காதல், தோல்வி அடைந்தாலும் 96 திரைப்படத்து ராம் கதாபாத்திரம் போல, தன் காதலியின் நல்வாழ்வை பற்றி மட்டும் யோசனை செய்யும் ஆண்கள் அவர்கள். ஒரு நாள் முழுவதும் தன் காதலியுடன் தனிமையில் இருக்கும் வாய்ப்பு அமைந்தும், அவளிடமிருந்து ஒரு இதழொற்றலையோ அணைப்பையோ எதிர்பார்க்காத அந்த அற்புதமான அகமுடைய ஆண்களை மனம் நெகிழ ஆராதிக்கிறேன்...!