சதாசிவம் இங்கே வருகிறார். வரட்டும் பேசிக்கிடலாம் என்று அசோகனிடம் சொன்னதும்...
அதுவரை சரக்கை எடுங்களேன், அடிப்போம். என்றார் அசோகன்.
இப்போ ரொம்ப முக்கியம். இத்தனை ரணகளத்திலேயும் உனக்கு மஜா கேக்குது. வயசாகிட்டு உனக்கு இன்னும் விளையாட்டு புத்தி மட்டும் மாறலை.
நீங்கள் இருவரும் என்ன ஓவரா பயப்படுறீங்க? கடன் தொகைக்கே பயந்தால், நாளை நாம் செய்த தப்புத்தண்டாக்கள், செட்டியாரை ஏமாற்றி இடத்தை கைப்பற்றியது, இதையெல்லாம் விசாரித்தால் நானும்தான் உங்க கூட இருப்பேன். அதற்குள் நான்தான் புகார் மனு கொடுத்தேன் என முடிவே செய்திட்டே இல்லே நீ என்றதும்தான், கருப்பையாவிற்கு மூவரும் இணைந்து செய்த அத்தனை குற்றமும் கண் முன்னே வர...
சும்மா இருய்யா நீ வேறே ஏம்பா பழசையெல்லாம் ஞாபகப்படுத்துகிறாய் என்றார் பதட்டமாய்.
பண்ணை வீட்டிற்கு வந்த சதாசிவம் என்ன கேட்டாரய்யா அவர்? என்றார் பரபரப்பாய்...
ராமநாத செட்டியாரிடம் வாங்கிய கடனை ஏன் திருப்பவில்லை எனக் கேட்டார்.
என்னிடமும் அதைத்தான் கேட்டார். தொகையைத் திருப்பிவிட்டு அவரிடம் வந்து சொல்லவேண்டும் என்கிறாரே? அவருக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்?
தெரியலையே என்றார் கருப்பையாவும்.
நீ எவ்வளவு பாக்கி வச்சே?
இரண்டு லட்சம் இருக்கும் என்ற கருப்பையா... நீ? எனக் கேட்டார்.
நான் மூன்று லட்சம் என்றார் சதாசிவம்.
என்ன செய்யலாம்? என கருப்பையா கேட்க...
நமக்கு இந்தத் தொகை ஒன்றும் இப்போது பெரியதல்ல. முப்பது வருடமுன்னே லட்சம் ரூபாய் என்பது நமக்கு ரொம்ப அதிகம்தான்.
ஆனால், நம்மிடம் அதை அவர் கேட்கலையே, வாங்கிய தொகையை செட்டில் செய்யுங்கள் எனத்தானே சொல்கிறார்.
பேசாமல் வாங்கிய தொகையை திருப்பிக் கொடுத்துவிட்டு, இவரிடம்
நல்ல பெயரை எடுத்துக்கொள்ளலாமே என நினைக்கிறேன் என்றார் கருப்பையா.
நீங்கள் இப்போது இருக்கும் இந்த நிலைக்கே காரணம் அவரின் பணம்தான். அதனை வட்டியோட கூட நீங்கள் திருப்பலாம். அத்தனை செழிப்பாக இருக்கீங்க என்ற அசோகனை ஒரு புழுவைப் பார்ப்பது போல் பார்த்தனர் இருவரும்.
என்ன பார்க்குறீங்க? உங்களுக்காக என்னவெல்லாம் நான் பண்ணியிருக்கேன், எல்லாத்தையும் மறந்துட்டிங்களா? என அசோகன் கேட்க...
எதையும் நீ சும்மா செய்யலையே! நீ எப்படி வளர்ந்தாய்? சாதரண கிராம மெம்பராக இருந்த நீ, தேர்தலிலே எப்படி நின்றாய்? உன் தேர்தல் செலவுகளை யார் செய்தா? என திருப்பிக் கேட்டனர் இருவரும்.
அதான் தோற்றுவிட்டேனேய்யா? என்றார்.
அதற்கு நாங்கள் என்ன செய்வோம்?
சரி, இப்போ இது முக்கியமில்லை... மாவட்டத்திற்கு தலைமையான ஆட்சியரை பகைத்துக்க கூடாது, மறுத்தால் பல சங்கடங்களை தொழில் ரீதியாக எதிர் கொள்ள நேரிடும். இந்தப் பிரச்சினையிலிருந்து நாம் உடனே வெளியே வரவேண்டும் என்றார் அசோகன்.
கருப்பையாவும், சதாசிவமும் அதையே சரி என்று சொன்னதும்...
என் கிட்டே கொடுங்க, நான் போய் உங்களுக்காக பேசி திருப்பிக் கொடுத்துவிட்டு வருகிறேன் என்ற அசோகனிடம்...
நீ இதுவரை செய்ததே போதும். இதை நாங்கள் தீர்த்துக் கொள்கிறோம்
என்றனர் இருவரும், அவரை நம்பாமல்.
அதானே... தப்பான காரியமெல்லாம் செய்வதற்கு மட்டும் நான் வேண்டும், மத்ததெல்லாம் நீங்களே பார்த்துப்பீங்க அப்படித்தானே என்றார் அசோகன்.
சரியான இம்சையா இந்தாளு. இதை விடவும் முடியலை, சேர்க்கவும் முடியலை என புலம்பிய சதாசிவம், சரி.. வாங்க என்றார்.
மூவரும் கோட்டையூரிலுள்ள ராமநாத செட்டியார் வீட்டிற்கு சென்று, அவரிடம் வாங்கிய தொகையை திருப்பித் தருவது என மூவரும் சேர்ந்து முடிவெடுத்திருந்தனர்.
வீட்டிலிருந்து வெளியே கிளம்பிய ஆட்சியரின் கார், அலுவலகத்தின் உள்ளே நுழைந்து போர்டிக்கோவில் நின்றதும் டாவாலி ஓடிவந்து கார் கதவைத் திறந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன் பார்த்த அந்த சன்யாசி எதிரே நின்றிருந்தார்.
“நடந்ததை இன்னும் நீ காணலை, நீ கண்டது உனக்கு நடந்தவை..”
“பாதியை நெருங்கிவிட்டாய், மீதியை நாடி வைத்து தெரிச்சுக்கோ..” உனக்காக காத்திருக்கு ஒரு உசிரு. அந்த உசிரை நீ அடையணும், அதுதான் அவன் எழுதிய எழுத்து” என்றார்.
அதனைக் கேட்ட உதவியாளர், விளக்கமாக ஆட்சியரிடம் சொல்லவும்... அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் எனக் கூறி தன் அலுவல்களில் மூழ்கினார்.
குடியுரிமை அங்காடிகளின் மீதான புகார்கள் ஏற்படும் பிரச்சினைகள், முதியோர் உதவித்தொகை சம்பந்தமான அனைத்து பேப்பர்களையும் முதலில் விசாரித்து கையெழுத்திட்டு, தீர்வையும் சொல்லி செயல்படுத்துமாறு அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் உத்திரவிட்டார்.
கீழடி பற்றி கேள்விப்பட்டு, அதன் தொன்மைகளை ஆர்வத்துடன் கேட்டவர்... கிடைத்த பொருள்களை, அந்த இடங்களை ஆய்வு செய்து, அதன் பணியாளர்கள் சம்பந்தமான அனைத்து கோரிக்கைக்கும் ஒப்புதல் வழங்கினார்.
சிவகங்கையின் பில்லூர் கிராமத்தில் அழுதாங்கி பிள்ளை எனும் இடத்தில் கிடைத்த நடுகல் பற்றி கேட்டறிந்து, அதனை பார்வையிட்டார். அது 17-ன் பிற்பகுதி அல்லது 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்த, வீரம் பேசும் நடுகல் அது. பெருங்கூட்டத்தை விலக்கி மாண்டு போன வீரரின் நினைவாக எடுக்கப்பட்ட கல் ஆகும் அந்த நினைவுக்கல்.
அதனை குலதெய்வமாக மக்கள் வழிபடுவதை அறிந்து தமிழினின் தொன்மையைக் கண்டும் கேட்டும் மகிழ்ந்தார், ஆட்சியர் விஷால்.
வெரி இன்ட்ரஸ்டிங் தமிழன்ஸ் என்றார் ஆட்சியர்.
நீங்களும் தான் சார், பழசை ரொம்ப விரும்புகிறீர்கள் என்றார் உதவியாளர்.
எஸ், ஓல்டு ஈஸ் ஆல்வேஸ் குட் என்றபோது, கோபிநாத் லைனில்...
தான் சென்னை வந்து சேர்ந்ததை சொல்லி, அவரின் உடல் நிலைப் பற்றி கேட்டறிந்தார்.
சன்யாசி காலையில் சொன்னதை கோபிநாத்திடம் தெரிவித்தபோது...
இது இனி ஆன்மீக அறிவியல் மற்றும் சோதிடமாக இனி தொடரும். உங்கள் உடல் நிலையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். மனதை இலகுவாக வைத்திருங்கள். எப்பொழுது வேண்டுமானாலும் என்னை அழையுங்கள் என கூறியதாக தன் உதவியாளரிடம் தெரிவித்தார் ஆட்சியர்.
நாடி என்று என்னோமோ சொன்னாரே, அதைப் பார்க்கணும்... எங்கே, எப்போ என திட்டமிடுங்கள் என்றார் உதவியாளரிடம்.
அதற்கு வைத்தீஸ்வரன் கோவில் போகவேண்டும் என்றதும்...
அது எங்கே இருக்கு என்றார்.
மயிலாடுதுறை மாவட்டம் என்றார் உதவியாளர்.
Leave a comment
Upload