தொடர்கள்
நொறுக்ஸ்
2 டோஸ் போட்டால், தள்ளுபடியில் மது! - மாலாஸ்ரீ

20211026233412831.jpg

கொரோனா பரவல் தொற்றினால், அனைத்து மாநிலங்களிலும் மக்களுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மத்தியப் பிரதேச மாநிலம், கொரோனா தடுப்பூசி போடுவதில் நூதன முறையில் செயல்பட்டு வருகிறது. அதாவது, வரும் டிசம்பர் 1-ம் தேதிக்குள் தகுதியான அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதையடுத்து, கடந்த 24-ம் தேதி மாண்ட்சூர் மாவட்ட கலால்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், ‘கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டவர்களுக்கு, 10 சதவிகித தள்ளுபடி விலையில் மதுபானங்கள் வழங்கப்படும். 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை, சம்பந்தப்பட்ட மதுபானக் கடைகளில் காட்டி, 10 சதவிகித தள்ளுபடி விலையில் மதுபானங்களை வாங்கி செல்லலாம். இது, உள்நாட்டு சரக்குகளுக்கு மட்டுமே பொருந்தும்’ என அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட கலால்துறை அதிகாரி அனில் சச்சான் கூறுகையில், ‘‘சீதாமாவு படக், பூனியாகேடி மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் செயல்படும் மதுபானக் கடைகளில், இத்திட்டத்தினால் அதிகளவு மது விற்பனை நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் கண்டிப்பாக 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வலியுறுத்தும் வகையில், 10 சதவிகித தள்ளுபடி விலையில் மதுபானங்களை விற்க முடிவு செய்துள்ளோம்.

சோதனை முறையில் அறிவிக்கப்பட்ட மதுபான தள்ளுபடி திட்டம் வெற்றியடைந்தால், மற்ற மாவட்டங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்!’’ என அனில் சச்சான் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இதுகுறித்து ஆளுங்கட்சி எம்எல்ஏ யஷ்பால்சிங் சிசோடியா, தனது டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில் ‘மாண்ட்சூர் மாவட்ட கலால் அதிகாரிகளின் மதுபான தள்ளுபடி அறிவிப்பால், மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மாவட்ட அதிகாரிகள் அறிவித்த சலுகை திட்டம், மாநில அரசு எடுத்த முடிவல்ல…’ எனத் தெரிவித்திருக்கிறார்.