தொடர்கள்
கதை
“புதிய அத்தியாயம்...” - வெ.சுப்பிரமணியன்

20211026211811681.jpeg

தன் ஒய்யார நடையழகாலும், பளபளப்பான கண்களாலும், அனைவரது உள்ளங்களையும் சுண்டியிழுத்து விடுவாள் ‘பொங்கடி’ என்ற அந்தப் பெண். பேரழகியான அவள், மக்களோடு சேர்ந்து ஒன்றாக வாழாமல், ஒதுங்கிவாழும் ‘சமூகத்தை’ சேர்ந்தக் ‘காட்டுவாசி’.

“உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்காய்யா? நேத்திக்கு காலையிலே சுத்தப்போன ஆம்பிளைக்கு, இன்னிக்கு பொழுதுசாயும் போதுதான் வீட்டு ஞாபகம் வந்துச்சோ? உனக்கெல்லாம் குடும்பம் எதுக்கு?” என்று தன் கணவன் ‘சீயம்’, வீட்டுப்படியில் கால்வைத்ததும் பொரிந்து தள்ளினாள் ‘பொங்கடி’.

“ஏண்டி ‘எருமை மாடே…’ வெளியிலே போயிட்டு வந்த ஆம்பிளை பசியோட இருப்பானே, அவனுக்கு வாய்க்கு ருசியா எதுனாச்சும் சாப்பிடக் குடுத்தோம்னு இல்லாம, இப்படி காட்டுகத்தா கத்தறியே. அப்படியே ‘செவுள்ள’ ஒண்ணு உட்டேன்னு வைச்சுக்க…” என்று மிரட்டினான்.

“உடுவ… உடுவ… எம்மேல கையை வைச்சுப்பாரு அப்பால தெரியும் சேதி. என் தங்கச்சி, சித்தி, பிள்ளைங்கன்னு எல்லா சொந்தமும் உன்னைய உண்டு இல்லேன்னு ஆக்கிடுங்க. நாங்க ஒண்ணும் ஊருக்குள்ளே பிறந்து வளர்ந்த ‘சாதாரண’ பொம்பளைங்க இல்லே. உன்னாட்டுமா காட்டுவாசிங்கதான்” என்று எகிறினாள் ‘பொங்கடி’.

“தெரியுண்டி… நீங்க எல்லாருமே ‘போக்கிரிக்’ கும்பல்தானே. உன்னை கட்டப்போய் உன் மொத்தக் குடும்பத்தையும் சேர்த்து காப்பாத்தணும்னு என் தலைவிதி” என்று நொந்து கொண்டான் ‘சீயம்’.

“ஆமாம்… ஐயா சம்பாதிச்சுப் போட்டுதான் நாங்க எல்லாரும் வாழறோம். ‘மானங்கெட்டவனே’, ஊரொலகத்திலே எந்த ஜாதிசனத்திலேயும் இல்லாம, அதிசயமா இந்தக் குடும்பத்திலேதான், பொம்பிள்ளைங்க, வெளியே போய் சம்பாதிச்சுக் கொண்டுவந்து, சோம்பேரியான உனக்கும் சேர்த்து ஆக்கிக்கொட்ட வேண்டியிருக்கு” என்று நாக்கை பிடுங்கிக்கிற மாதிரி ‘சீயமைப்’ பாட்டுவிட்டாள் பொங்கடியின் ‘சித்தி’.

“ஏய் கிழவி… என்னமோ ‘இவளுகதான்’ வேலைக்கு போவுறமாதிரி பேசறியே. கிராமத்திலே போய்ப்பாரு… எல்லா வீட்டுப் பொம்பளைங்களும் ‘நூறுநாள்’ வேலைக்குப் போய் நாலுகாசு சம்பாதிச்சுகிட்டு வருதுங்க. சில பொம்பளைங்க, புருஷனுக்கு ‘சரக்கு’ வாங்க காசு குடுக்குதுங்க. நான் என்ன அந்த ஆம்பிள்ளைங்க மாதிரி ‘சாராயம்’ குடிச்சுட்டு, தெருவிலேயா விழுந்து கிடக்கிறேன்?” என்று நியாயம் பேசினான் ‘சீயம்’

“ஓஹோ… ஐய்யாவுக்கு, ‘போதை’ போட்டுகிட்டு மட்டையாகலேங்கிற கவலைவேற இருக்கா? வேளாவேளைக்கு வீட்டிலே கொட்டிகிட்டு, எங்கனையாவது தலைக்கு அண்டைகுடுத்தபடியே கொறட்டைவிட்டு உறங்கிற உனக்கெல்லாம் ஏது சூடு சொரணை” என்று மானாவாரியாக ‘சீயமை’ ரவுண்டு கட்டினாள், அவன் மனைவி ‘பொங்கடி’.

அன்று அமாவாசை… வானம் வெறுமைப்பட்டு, இருட்டு எங்கும் மூடிக்கொண்டு, ஒருவித அச்சத்தை, அள்ளி வீசிக்கொண்டிருந்தது. நாள் பூராவும், காட்டுப்பக்கம் வேட்டைக்குப் போய், ஒரு சின்ன ‘காட்டுப்பன்றி’ கூட கிடைக்காத எரிச்சலாலும், உடம்பு அசதியாலும், மட்ட மல்லாக்காக படுத்துக்கிடந்தான் ‘சீயம்’.

என்னதான் கோபத்துடன் ‘பொங்கடி’ ‘காறித்துப்பினாலும்’ தனிமையில் அவளை நினைத்ததும் ‘சீயமுக்கு’ அவள்மீது ஈர்ப்பு வந்துவிடும். ‘பொங்கடியின்’ வசீகர வதனம், ஒரு பௌர்ணமி நிலவுபோல, அந்த அமாவாசையிலும், ‘சீயமின்’ எண்ணத்தில் வண்ணத்தை வார்த்தது. அவனது கண்களும், மனதும் ‘பொங்கடியை’ தேடியது.

வழக்கமாக படுத்துறங்கும் இடத்தில், பொங்கடியை காணாததால், மெல்ல எழுந்து, பிள்ளைகள் படுத்திருக்கும் இடத்தில் பார்த்தான், ‘சீயம்’.

சற்றுத் தொலைவில், யாருடனோ நின்று பேசிவிட்டு, திரும்பி வந்து கொண்டிருந்த‘பொங்கடியின்’ காலோசை கேட்கவும், அப்படியே இருட்டோடு இருட்டாக பதுங்கிக் கொண்டான் ‘சீயம்’.

“இந்த நடு ராத்திரி… யாரோட நின்னு பேசிட்டுவரா இவ?” என்று எண்ணிய சீயமின் மனதில் சந்தேகத்தீ பற்றிக்கொண்டது. “இப்பவே போய் எங்கேடி போனேன்னு கேட்டா… அவ உண்மையை சொல்லமாட்டா. நாமே யாருன்னு கண்டுபிடிப்போம்” என்று எண்ணியபடியே, ‘பொங்கடி’ வந்த திசையில் நடந்தான் ‘சீயம்’.

கொஞ்ச தூரம் போனதும், யாரோ ஒருவன் நிற்பது போல தோன்றியது. சீயமைக் கண்டதும், ‘அவன்’ ஓடிப்போனதை அந்த இருட்டில் அரைகுறையாகத்தான் பார்க்க முடிந்தது. ஓடியவனின் வேகத்தைப் பார்த்தால், நன்கு வளர்ந்த ‘இளம் வாலிபன்’ போலத்தான் இருந்தது.

“அப்படீன்னா, பொங்கடிக்கும், இவனுக்கும் எதாவது கள்ள உறவா...?” என்றெண்ணிய ‘சீயம்’, “சரி பொழுது விடியட்டும் கேட்டுடுவோம்” என்று எண்ணியபடியே வாசலருகே படுத்தவனுக்கு, வெகுநேரம் தூக்கம் வரவில்லை.

அடுத்தநாள் பொழுது புலர்ந்தது. அருகே ஓடிக்கொண்டிருந்த நீரோடையில், முகம் கழுவி, வாய் கொப்புளித்துவிட்டு, வீட்டுக்கு வந்தான் ‘சீயம்’.

இறந்துபோன முதல்-கணவன் மூலமாக, பொங்கடிக்குப் பிறந்த மகனான ‘குருளை’, ஏதோ கறி-சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ‘பொங்கடியின்’ தங்கையோ, ஒரு சில கறித்துண்டுகளை எடுத்துவந்து, “மாமா… அக்கா, உனக்கு குடுத்துட்டு வரச் சொல்லிச்சு” என்று சீயமின் முன்னால் வைத்துவிட்டு, திரும்பினாள்.

“உன் ‘அக்கா’ குடுத்தது இருக்கட்டும், இந்த மாமாவுக்கு நீ எப்போ விருந்து வைப்பே?” என்ற சீயமை முறைத்தபடியே வந்தாள் பொங்கடி.

“ஒழுங்கா என்னோட குடும்பம் நடத்தவே முடியலையாம். இதிலே என் தங்கச்சிவேற ‘விருந்து’ வைக்கணுமா உனக்கு? பொம்பளை சம்பாதிச்சு கொண்டுவரதுலே சாப்பிட்டு, கொழுத்துப்போய் உடம்பை வளர்க்கிற உனக்கு, நான்தான் ஒரு பெண்டாட்டி இருக்கேனே?” என்று எரிந்து விழுந்தாள் பொங்கடி.

“சும்மா நிறுத்துடி… திருட்டுக் கழுதை… உன் யோக்கீதையை வெளியே சொன்னேன்னா பொழப்பு நாறிப்போயிடும்” என்றான் சீயம்.

“அடப்பாவி மனுஷா… என்மேல இருந்த ‘காமவெறியாலே’ போன வருஷம், உடம்பு சரியில்லாம இருந்த என் புருஷனை, ‘வேட்டைக்குப் போகலாம் வாடான்னு’ காட்டுக்குள்ளே கூட்டிட்டுப்போய், நீதான் கொன்னேன்னு எனக்குத் தெரியாதா? அதுக்குப்புறவு… அம்பூட்டு சாதிசனத்துகிட்டேயும், ‘பொங்கடிதான் என்னையை கல்யாணம் கட்டிகிக்க சம்மதிச்சான்னு’பொய் சொன்னே. சரி… இந்த குடும்பத்துக்கு, வீட்டோட ஒரு ஆம்பிளை இருக்கட்டுமேன்னு, நானும் பேசாம இருந்தேன். என்னையப்போய் சந்தேகப்படிறியே… உருப்புடுவியா?” என்று புலம்பினாள் ‘பொங்கடி’.

“அதெல்லாம் பழைய கதை. இப்போ, உன் தங்கச்சியை எனக்கு கட்டிவைக்க முடியுமா… முடியாதா” என்று முரண்டு பிடித்தான் ‘சீயம்’.

“என்னோட ஒரு வருஷமா வாழ்ந்து குப்பை கொட்டிறியே, உன்னால என் வயித்திலே ஒரு புழு… பூச்சி உண்டாச்சாய்யா? அதுக்கு உனக்கு துப்பில்லே, நீ எல்லாம் ஒரு ஆம்பிள்ளை… தூஊஊ… என்று காறித் துப்பினாள் ‘பொங்கடி’.

“அதனாலதான் தினமும் ராத்திரி யாருக்கும் தெரியாம… ‘அவனை’ பார்க்கப் போயிட்டு வரியாடி? என்று வார்த்தைகளால் சுட்டான் ‘சீயம்’.

“என்னோட அக்காவை எதுனாச்சும் அசிங்கமா பேசினே… மாமான்னு கூட பார்க்கமாட்டேன்” என்றாள் பொங்கடியின் சகோதரி. கூடவே பொங்கடியின் சித்தி மற்றும் நான்கு பெண் குழந்தைகளும் சேர்ந்து கொண்டு ‘சீயமை’ அடிக்கத் தயாரானார்கள்.

“ஏண்டி… ஆம்பிள்ளையான என்னையே அடிக்க வரீங்களா? எல்லாத்துக்கும் நீதாண்டிகாரணம்” என்று ‘பொங்கடியைப்’ பார்த்து உறுமினான் ‘சீயம்’.

“பொங்கடி இங்கே வாம்மா…” என்று யாரோ வாசலில் நின்று அழைக்கவும், எட்டிப்பார்த்தான் சீயம். அங்கே ஒரு திடகாத்திரமான வாலிபன் நின்று கொண்டிருந்தான். பொங்கடியும், அவளது சகோதரியும், அந்த வாலிபனின் பின்னால் ஓடிப்போய் நின்று கொண்டார்கள்.

“வாடா… பொறம்போக்கு! நீ குடுக்கிற தைரியத்திலேதான் இந்தப்பன்னாடையெல்லாம் என்னை தூக்கியெறிஞ்சு பேசுதுங்களா? மவனே… இன்னிக்கு நீயா இல்லே நானான்னு பார்த்துடுவோம்டா” என்று கத்திக்கொண்டே, வெறித்தனமாக அந்த வாலிபன் மீது பாய்ந்தான் ‘சீயம்’.

அந்த இருவருக்குமான ஆக்ரோஷ சண்டையைப் பார்த்து பயந்துபோன ‘பொங்கடியின்’ மொத்த குடும்பமும், நடுநடுங்கின. தன் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி, அந்த வாலிபன், ‘சீயமின் தலையில்’ ஓங்கி அடித்ததில், ஓலத்துடன் மண்ணில் சாய்ந்தான் ‘சீயம்’.

“ஒரு வருடத்துக்கு முன்னால் கால் ஊனமாகியிருந்த, தன் நண்பனான, ‘பொங்கடியின் கணவனை’, காட்டுக்குள் வேட்டையாட அழைத்துக் கொண்டுபோய், அவனது தலையில் ‘தான்’அடித்துக் கொன்ற காட்சி”, சீயமின் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது.

சீயமைக் கொன்ற வாலிபனைப் பார்த்து, “உன்னோட பேரு என்னய்யா?” என்று கேட்ட பொங்கடியை, தன்னருகே இழுத்து, காதலுடன் முத்தமிட்டபடியே, என் பெயர் ‘ஆளி’ என்றான், அந்தக் காட்டுவாசி.

அந்த வாலிபனின் மேல் சாய்ந்தபடியே, “இனிமேட்டுக்கு நீதான் எனக்கும் என் தங்கச்சிக்கும் ஊட்டுக்காரன்” என்று சொல்லி வெட்கப்பட்டாள் ‘பொங்கடி’. அவளது தங்கையும் நாணத்தால் முகம் சிவந்தாள்.

பொங்கடியின் மகன் ‘குருளை’ ஓடிவந்து, “அம்மா… இனிமே எனக்கு அப்பா இல்லையாம்மா?” என்று சோகத்துடன் கேட்டான்.

“நம்ம ‘இனத்தோட’ வழக்கப்படி, இன்னியிலேயிருந்து ‘இவருதான்’ உனக்கும் உன் அக்காங்களுக்கும் அப்பா”, என்று ‘பொங்கடி’ சொல்லவும், ‘குருளை’ தன்னெதிரே இருந்த, ஆளியென்ற அந்தக் ‘காட்டுவாசியை’ பார்த்து ‘அப்பா’ என்று கூப்பிட்டபடியே ஓடிப்போய் கட்டிக்கொண்டான்.

ஆம்… உண்மைதான்… அந்தக் காட்டில், இன்னொரு ‘வலிமையான ஆண்சிங்கம்’ இந்த ‘ஆளியோடு’ சண்டையிட்டு வெற்றி கொள்ளும்வரை, ‘பொங்கடி’ என்ற பெண்சிங்கத்தின் கூட்டத்திற்கு ‘ஆளி’ என்ற இந்த ஆண்சிங்கம்தான் ‘குடும்பத் தலைவர்’.

‘பொங்கடியின்’ சிங்கக்-குடும்பம் பின்தொடர ‘கானகமே’ அதிரும்படியான கர்ஜனையுடன் முன்னால் நடந்தது ‘ஆளி’. அந்தக் காட்டுவாசிகளான சிங்கங்களின் வாழ்வில், மீண்டும் ஒரு “புதிய அத்தியாயம்” துவங்கியது.