தொடர்கள்
ஆன்மீகம்
கலிய நாயனார்!! - ஆரூர் சுந்தரசேகர்.

Kaliya Nayanar


சைவ சமயத்தில் சிறப்புற்று விளங்கிய அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான கலிய நாயனார், எட்டாம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலத்தவர். செல்வ வளமிக்க குடும்பத்தில் பிறந்த கலிய நாயனார், சிவபெருமான் மீது கொண்ட பக்தியால் தம்மிடம் இருந்த செல்வத்தை ஆலயத்திருப்பணிக்கு பயன்படுத்தி வந்தார். இவர் திருவொற்றியூர் திருக்கோயிலில் விளக்குகளை ஏற்றும் ஒப்பற்ற திருத்தொண்டினை இடைவிடாதுச் செய்து வந்தார். விளக்கெரிக்க எண்ணெய் இல்லாததால், தன்னையே அறுத்து கொண்டு தனது இரத்தத்தால் விளக்கு எரித்து ஒளி உண்டாக்கிய பெருமைமிகு தொண்டர் கலியநாயனார்.

இவர் “கலியனுக்கும் அடியேன்” என்று திருத்தொண்ட தொகையில் புகழப்படுகின்றார்.

திருவிளக்கிடும் திருத்தொண்டு:

தொண்டை நாட்டில் சிறப்பு மிக்க திருத்தலமான திருவொற்றியூரில், செக்கில் எண்ணெய் எடுத்து வாணிபம் புரியும் வணிகர் மரபிலே தோன்றியவர் கலிய நாயனார்.

செல்வ வளமிக்க குடும்பத்தில் பிறந்த இவர், சிவனின் மீது பக்தி கொண்டு சிவபெருமானுக்குத் திருத்தொண்டுகள் பல புரியும் அருள் நெறியில் நின்றார். தமது செல்வத்தைக் கோயில் திருப்பணிக்குப் பயன்படுத்தி வந்தார்.
இவர் சிவபெருமானுக்கு உரிமைத் தொண்டில் ஈடுபட்டுத் திருவொற்றியூர் திருக்கோயிலில் உள்ளும் புறமும் இரவும் பகலும் திருவிளக்கிடும் திருத்தொண்டினைச் செய்து வந்தார். எத்தகைய பணியிருந்தாலும், விளக்கேற்றும் பணியில் மட்டும் தொய்வு உண்டாகாமல் பார்த்துக்கொண்டார்.

சிவபெருமான் திருவிளையாடல்:

கலிய நாயனாரது உண்மைத் தொண்டின் பெருமையை புலப்படுத்தத் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், அவருக்கு வறுமையைத் தோற்றுவித்தார். வறுமையையும் ஒரு பெருமையாக எண்ணி கலிய நாயனார், அந்நிலையிலும் தமது மரபில் உள்ளார் தரும் எண்ணெயை வாங்கி விற்று, அதனால் கிடைத்த பொருளால் தாம் செய்யும் திருவிளக்குப் பணியை இடைவிடாது செய்தார். மீண்டும் வறுமையை சிவபெருமான் உண்டாக்கினார். பின் கூலிக்கு செக்கிழுக்க சென்று, அதில் வரும் சொற்ப வருமானத்தைக் கொண்டு விளக்கேற்றினார். சில காலத்துக்குப் பின்பு அக்கூலி வேலையும் இல்லாமற் போகவே, வீட்டில் உள்ள பொருள்களை விற்று விளக்கேற்றினார். பிறகு எஞ்சியிருந்த வீட்டையும் விற்றார். அவற்றில் கிடைத்த பணத்தைக் கொண்டு சில காலம் விளக்கேற்றினார். ஒரு கட்டத்தில் தன்னுடைய சொத்துக்கள் யாவையும் விற்றுவிட்டார், இப்போது விற்பதற்கு ஏதும் இல்லை, விளக்கேற்ற எண்ணெய் வாங்கவும் பணம் இல்லை. இதனால் தவித்து போன கலியநாயனார், முடிவில் தம் மனைவியாரை விற்பதற்கு நகரெங்கும் விலை கூறி வாங்குவாரில்லாமையால் மனம் தளர்ந்தார்.

Kaliya Nayanar


திருவிளக்கேற்றும் வேளையில் திருவொற்றியூர் திருக்கோயிலை அடைந்து, இனி என்னால் விளக்கேற்ற முடியாமல் போனால் என் உதிரத்தைக் கொண்டு விளக்கேற்றுவேன் என்று மகிழ்ச்சியுடன் திருவிளக்குகளை முறையோடு வரிசையாக வைத்தார். நீண்டதொரு அரிவாளை எடுத்து தன் கழுத்தை அறுத்து, உதிரத்தை விளக்கில் கொட்ட முயற்சித்தார். இத்தனை சோதனைகளிலும் விளக்கேற்றுவதை கைவிடாத கலிய நாயனாரது பக்தியைக்கண்டு உருகிய ஒற்றியூர்ப்பெருமானது அருட்கரம், நாயனாரது அரியும் கையைத் தடுத்து நிறுத்தியது. கோயில் முழுக்க ஒளிவெள்ளம் சூழ்ந்தது. கோயிலில் இருந்த விளக்குகள் அனைத்திலும் எண்ணெய் நிரம்பி, விளக்குகள் பிரகாசமாக எரிய துவங்கின. கலிய நாயனார் கழுத்தில் அரிந்த இடம் அகன்று முன்னிலும் உறுதி பெற்றது. நாயனாரும் அவரது மனைவியாரும் மெய்யுருகி நின்றனர். சிவபெருமான் அன்னை பார்வதியுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி காட்சி கொடுத்தார். கலிய நாயனார் தம் மனைவியோடு நிலத்தில் வீழ்ந்து எம்பெருமானை வணங்கினார். இறைவன் கலிய நாயனாருக்கு இழந்த வாழ்க்கையை மீட்டு கொடுத்து, இறுதியில் சிவபதம் புகுந்து சிறப்புற்றிருக்குமாறு சிவபெருமான் திருவருள் புரிந்தார்.

குரு பூஜை நாள்:

திருவிளக்குப் பணி செய்வதையே தன் வாழ்நாள் இலக்காகக் கொண்டு வாழ்ந்த கலியநாயனார், ஈசனின் திருவடி சேர்ந்த குருபூஜை தினம் திருவொற்றியூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில், ஆடி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவரது குருபூஜை தினத்தன்று மற்ற சிவன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது. நாமும் கலிய நாயனார் குருபூஜை தினத்தில் திருக்கோயில் திருவிளக்கு ஏற்றும் பணியைத் தொடங்குவோம்.

"திருச்சிற்றம்பலம்”

அடுத்த பதிவில் கழறிற்றறிவார் நாயனார்…