தொடர்கள்
வரலாறு
சென்னை 2000 ப்ளஸ் (பாகம் 14) - மூத்த பத்திரிகையாளர் ஆர். ரங்கராஜ்

20211026210723217.jpeg

திருவிடைச்சுரம் ஞானபுரீஸ்வரர் கோவிலில், திருஞானசம்பந்தர் 7-ஆம் நூற்றாண்டில் வழங்கிய பதிகம். திருவிடைச்சுரம் மிக பழமையான ஒரு ஊரு என்பதும், குறைந்தது 7-ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே இருந்திருக்கவேண்டும் என்று எடுத்து காட்டுகிறது.

மெக்கன்சி ஆவணங்கள் தெரிவிக்கும் செங்கல்பட்டு - திருவிடைச்சுரத்தில் நடைபெற்ற பல போர்கள் - வீரம், துரோகம், தியாகம் உள்ளடக்கிய பல அதிசயமிக்க நிகழ்வுகளைப் பற்றி சென்ற வாரம் பார்த்தோம். சென்னை பெருநகர் வரலாற்று கட்டுரை தொடரில் “திருவிடைச்சுரம் கோட்டை வரலாறு (டி.3098)” சுவடியில், கொடூரமான முறையில் தாசிகள் மொத்தமாக கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தோம். இந்த வாரம், திருவிடைச்சுரம் எவ்வளவு பழமையானது என்பதை 7-ஆம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர் இங்கே வந்து, திருவிடைச்சுரம் கோவிலில் உட்கார்ந்து, ஒரு பதிகத்தை இயற்றியுள்ளார் என்பதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

குறிஞ்சி எனும் பண்ணில் இந்தப் பாடல் இயற்றப்பட்டுள்ளது. கோவிலை பற்றியும், மூலவரை பற்றியும் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகிறார். பத்து இடங்களில் இடைச்சுர மேவிய இவர்வண்ணம் என்னே (இடைச்சுரத்தில் மேவிய இவர் வண்ணம்தான் என்னே). 7-ஆம் நூற்றாண்டிலியே இந்தக் கோவிலும் இந்த ஊரும் இருந்ததற்கான சான்றாக திருஞானசம்பந்தரின் இந்த பதிகம் அமைகிறது.

திருவிடைச்சுரம் ஒரு பாடல்பெற்ற ஸ்தலமாக கருதப்படுகிறது. 27-வது பாடல்பெற்ற ஸ்தலமாக இது அமைகிறது.

தல விளக்கம்: தொண்டை நாட்டுத் தலம். திருவடிசூலம் என வழங்கப்படுகிறது. கௌதமர், சனற்குமாரர் வழிபட்ட தலம் என்றும், அம்பிகை பசு வடிவில் தோன்றி பால் சொரிந்து வழிபட்ட திருத்தலம் என்றும் கூறப்படுகிறது.

சுவாமி: ஞானபுரீஸ்வரர், இடைச்சுரநாதர்
அம்பிகை: இமய மடக்கொடியம்மை

பண்: குறிஞ்சி

“வரிவளர் அவிர்ஒளி அரவுஅரைதாழ
வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக்
கரிவளர் தருகழல் கால்வலன் ஏந்திக்
கனல்எரியாடுவர் காடரங்காக
விரிவளர் தருபொழில் இளமயில்ஆல
வெண்ணிறத் தருவிகள் திண்ணென வீழும்
எரிவளர் இனமணி புனமணிசாரல்
இடைச்சுர மேவிய இவர் வணம் என்னே”.


தெளிவுரை: வரிகளை உடைய ஒளிமிக்க அரவு அரையில் விளங்க, சடைமுடியின்மேல் வளரும் பிறைச் சந்திரன் சூடி, யானையின் வடிவம் பொறித்த வீரக்கழல் வலக்காலில் ஒலிக்க, எரியும் கனலைக் கரத்தில் ஏந்தி சுடுகாட்டில் ஆடுகின்ற ஈசர், விரிந்த சோலையில் மயில்கள் அகவ, அருவிகள் திணெனும் ஓசையை எழுப்பி வீழ, ஒளி பொருந்திய மணிகள் திகழும் மலைச் சாரலில் விளங்கும் இடைசுரத்தில் மேவிய இவர் அழகிய திருமேணியின் வண்ணம் தான் என்னே!

குறிப்பு: சுவாமி மரகதலிங்கத் திருமேனியுடையவர் (பச்சை வண்ணம்).

அவிர் - பிரகாசம், ஒளிர்தல்

“ஆற்றையும் ஏற்றதோர் அவிர்சடை யுடையர்
அழகினை அருளுவர் குழகு அலது அறியார்
கூற்றுயிர் செகுப்பதோர் கொடுமையைஉடையர்
நடுஇருள் ஆடுவர் கொன்றையந்தாரார்?
சேற்றயன் மிளிர்வன கயல்இள வாளை
செருச்செய ஓர்ப்பன செம்முக மந்தி
ஏற்றையொடு உழிதரும் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வணம் என்னே”.


தெளிவுரை: ஈசன், கங்கையைச் சடைமுடியில் ஏற்ற அழகு அருள்புரியவர்; இளமை பொருந்திய குழகர்; கூற்றுவனை உதைத்துக் கொடுமை செய்தவர்; நன்ளிரவில் இருளில் ஆடுபவர்; கொன்றை மாலை சூடியவர். சேற்றில் கயல்களும், வாளை மீன்களும் முட்டிக்கொண்டு போர் செய்வதைப் போன்று உள்ள காட்சியை பெண் குரங்கும் ஆண் குரங்கும் கூர்ந்து நோக்கும் எழில்திகழ் சாரலில் இடைச்சுரத்தில் மேலிய இவர் வண்ணம்தான் என்னே!

மந்தி - பெண் குரங்கு. ஏற்றை - ஆண் குரங்கு.

“கானமும் சுடலையும் கற்படு நிலனும்
காதலர் தீதிலர் கனல் மழுவாளர்
வானமு நிலமையும் இருமையும் ஆனார்
வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார்
நானமும் புகையொளி விரையொடுகமழ
நளிர்பொழில் இளமஞ்ஞை மன்னிய பாங்கர்
ஏனமும் பிணையலும் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வணம் என்னே”.


தெளிவுரை: ஈசன், காடும், சுடலையும், மலைப்பகுதியும் விரும்பி உறையும் பெற்றியுடையவர்; எவ்விதமான தீதும் இல்லாதவர்; நெருப்புப் போன்ற மழுப்படை யுடையவர்; வானுலகமாகிய மறுமையும், நிலவுலக மாகிய இவ்வுலகமும், இம்மை, மறுமை ஆகிய இரு உலகமும் ஆகியவர்; யாவராலும் வணங்கப்படுபவர்: அன்பிற்கு இணங்குபவர். ஞானிகளால் வாழ்த்தப் படுபவர். கத்தூரி, அகில் முதலான நூறுமணம் கமழ் மென்மையான பூஞ்சோலையில் மயில்கள் சூழவும், மான்களும் பன்றிகளும் உடைய சாரலில், இடைச்சுரம்மேலிய இப்பெருமானின் வண்ணம்தான் என்னே!

நாளம் - கத்தூரி. ஏனம் - பன்றி. பிணவல் - பெண் விலங்குகள்.

“கடமணி மார்பினர் கடல்தனில் உறைவார்
காதலர் தீதிலர் கனல்மழு வாளர்
விடமணி மிடறினர் மிளிர்வதோர் அரவர்
வேறுமோர் சரிதையர் வேடமும் உடையர்
வடம்உலை அயலன கருங் குருந்து ஏறி
வாழையின் தீங்கனி வார்ந்துதேன் அட்டும்
இடமுலை அரிவையர் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வணம் என்னே”.


தெளிவுரை: ஈசன், மணி மார்பினர்; கடற்புறத்தில் உறைபவர்: அன்புடையவர்; தீது இல்லாதவர்: கனல் போன்ற மழுப்படையாளர்; விடத்தை மணி போன்று மிடற்றில் கொண்டவர்; ஒளி மிக்க நாக உடையவர்: நன்னெறியும் தவவேடமும் உடையவர்; ஆவின் அயலில் பொலியும் குருந்தையில் தேன் எடுக்கின்ற எழில் மகளிர் திகழும் சாரலில் இடைச்சுரம் மேவிய இப்பெருமான் வண்ணம் தான் என்னே!

“கார்கொண்ட கடிகமழ் விரிமலர்க் கொன்றைக்
கண்ணியர் வளர்மதி கதிர்விடக் கங்கை
நீர்கொண்ட சடையினர் விடைஉயர் கொடியர்
நிழல்திகழ் மழுவினர் அழல்திகழ் நிறத்தர்
சீர்கொண்ட மென்சிறை வண்டுபண் செய்யும்
செழும்புனல் அனையென செங்குலை வாழை
ஏர்கொண்ட பலவினோடு எழிலதிகழ்சாரல்
இடைச்சுர மேவிய இவர்வணம் என்னே”.


தெளிவுரை: ஈசன், கார்காலத்தில் கடிமணம் கமழ விரியும் கொன்றை மலரைச் சூடியவர்; ஒளிவிடும் சந்திரனும், கங்கை நீரும் கொண்ட சடையினர்; இடபக் கொடியுடையவர்; ஒளி திகழும் மழுப்படையவர்; நெருப்புப் போன்ற சிவந்த நிறமுடையவர்; சிறப்பான மெல்லிய சிறகுகளை யுடைய வண்டுகள்
பண்ணிசைக்க, நீர்வளத்துடன், வாழை. பலா மரங்களின் சுவை மிக்க கனிகள் திகழும் சாரலில் இடைச்கரம் மேவிய இப்பெருமாளின் வண்ணம் தான என்னே?

“தோடு அணி குழையினர் கண்ணவெண் ணீற்றர்
கடலையில் ஆடுவர் தோலுடையாகப்
பீடுஉயர் செய்ததோர் பெருமையை உடையர்
பேயுடன் ஆடுவர் பெரியவர் பெருமான்
கோடல்கள் ஒழுகுவ முழுகுவதும்பி
குரவமும் அரவமு(ம்) மன்ளியபாங்கர்
ஏடு அவிழ் புதுமலர் கடிகமழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வணம் என்னே”.


தெளிவுரை: ஈசன், தோடு அணிந்த காது உடையவர்; திருவெண்ணீறு தரித்தவர்; மயானத்தில் ஆடுபவர்; தோலை உடையாகக் கொண்டு, பெருமையை உயர்த்திய பெருமை உடையவர்; பேய்க்கணங்களுடன் ஆடுபவர் பெருமையுடையவர்களுக்கும் பெருமானாக விளங்குபவர்; கோட்டுப் பூக்கள் தேனைச் சொரிய வண்டுகள் அதில் முழுகித் திளைக்க புது மலர்களின் மணம் கமழும் சாரலில் இடைச்சுரம் மேவிய இப்பெருமானின் வண்ணம்தான் என்னே!

குழை - காது, தும்பி - வண்டு.

“கழல்மல்கு காலினர் வேலினர் நூலர்
கவர்தலை அரவொடு கண்டியும் பூண்பர்
அழல்மல்கும் எரியொடு மணிமழு வேந்தி
ஆடுவர் பாடுவர் ஆரணங்கு உடையர்
பொழில்மல்கு நீடிய அரவமு மரவ
மன்னிய கவட்டிடைப் புணர்குயில் ஆலும்
எழில்மல்கு சோலையில் வண்டிசை பாடும்
இடைச்சுர மேவிய இவர்வணம் என்னே”.


தெளிவுரை: ஈசன், வீரக் கயல் அணிந்த திருப்பாதம் உடையவர்; முப்பிரிநூல் அணிந்த திருமார்பினர்; ஐந்தலை நாகமும், உருத்திராக்க மணியும் பூண்டவர்; நெருப்பினைக் கரத்தில் ஏந்தியவர்; ஒளிரும் மழுப்படை ஏந்தியவர்; நடம் புரிபவர்; வேதம் ஓதுபவர்; தெய்வத்தன்மை மிக்க உமாதேவியை உடையவர்; பொழில்களும்
மராமரக் கிளைகளிலும் குயில்கள் கூவ, வண்டுகள் இசை பாட விளங்கும் இடைச்சுரம் மேவிய இப்பெருமானின் வண்ணம்தான் என்னே!

வேல் - சூலம்; நூலார் - பூணூல் தரித்தவர்; கண்டி - உருத்திராக்கம்.

“தேன்கமழ் கொன்றைஅம் திருமலர் புனைவார்
திகழ்தரு சடைமிசைத் திங்களும் சூடி
வீந்தவர் கடலைவெண் ணீறுமெய் பூசி
வேறுமோர் சரிதையர் வேடமும்உடையர்
சாந்தமும் அகிலொடு முகில்பொதிந்து அலம்பித்
தவழ்கன மணியொடு மிகுபளிங்குஇடறி
ஏந்துவெள் ளருவிகள் எழில்திகழ்சாரல்
இடைச்சுர மேவிய இவர்வணம் என்னே”.


தெளிவுரை: ஈசன், தேன் மணம் கமழும் அழகிய கொன்றை மலரைப் புனைபவர்; திகழ்ந்து விளங்கும் சடையின்மீது சந்திரனைச் சூடி, இறந்தவர்களின் சாம்பலைத் திருவெண்ணீறு எனக்கொண்டு பூசுபவர்; உலகத்தவர் பொதுவாகக் கருதும் தன்மையில் அல்லாது அவருக்கு எனத் தனியாக வேறு ஒழுக்க தெறியை உடையவர்; பல வடிவங்களைக் கொண்டு விளங்குபவர்; சந்தனம், அகில் ஆகிய மரங்களும் உயர்ந்த நவமணிகள் முதலானவைகளும் அருவியின் வெள்ளத்தில் அடித்துக் கொண்டு திகழும் சாரலில் இடைச்சுரம் மேவிய இப் பெருமாளின் வண்ணம் தான் என்னே!

சரிதை - ஒழுக்க நெறி.

“பலஇலம் இடுபலி கையில் ஒன்று ஏற்பர்
பலபுகழ் அல்லது பழியிலர் தாமும்
தலைஇலங்கு அவிர்ஒளி நெடுமுடி அரக்கன்
தடக்கைகள் அடர்த்ததோர் தன்மையை உடையர்
மலைஇலங்கு அருவிகள் மணமுழவு அதிர
மழைதவழ் இளமஞ்ஞை மல்கிய சாரல்
இலை இலவங்கமும் ஏலமும் கமழும்
இடைச்கர மேவிய இவர்வணம் என்னே”.


தெளிவுரை: ஈசனார், பல வீடுகளில் இடுகின்ற பிச்சையைக் கையில் ஏற்பவர்; பலவகைப்பட்ட புகழேயல்லாது எவ்வகையான பழிப்பும் இல்லாதவர்; தலையில் ஒளி உமிழும் மணி முடியை உடைய அரக்கனான இராவணனுடைய வலிமையான கைகள் நலியுமாறு செய்த தன்மையுடையவர். மலையிலிருந்து வேகமாக வீழும் அருவிகள் திருமண வாத்தியம் போன்று அதிருமாறு ஒலிக்க, மேகம் நோக்கி இனிமை கண்டு மயில்கள் தோகை விரிக்கும் சாரலில் ஏலம், இலவங்கம் ஆகிய வாசனைப் பொருள்களை வழங்கும் தருக்கள் திகழும் வண்ணம்தான் என்னே!

இலம் - இல்லம், வீடு. மஞ்ஞை - மயில்.

“பெருமைகள் தருக்கியோர் பேதுறுகின்ற
பெருங்கடல் வண்ணனும் பிரமனும் ஓரா
அருமையர் அடிநிழல் பரவிநின்று ஏத்தும்
அன்புடை அடியவர்க்கு அணியரும் ஆவர்
கருமைகொள் வடிவொடு சுனைவளர் குவளைக்
கயலினம் வயலின் வாளைகள் இரிய
எருமைகள் படிதர இளஅனம் ஆலும்
இடைச்சுர மேவிய இவர்வணம் என்னே”.


தெளிவுரை: ஈசனார், பெருமைகளை நினைத்துத்தருக்கிப் பேசி மயக்கத்தில் ஆழ்ந்த திருமாலும் பிரமனும் ஓர்ந்து காணமுடியாத பெருமையை உடையவர்: திருவடியைப் போற்றிப் பரவி நின்று வணங்குகின்ற அன்புடைய திருத்தொண்டர்களுக்கு மிகவும் அண்மையில் இருப்பவர். நீர்ச் சுனைகளில் நீல வண்ணக் குவளை மலர்கள் விளங்க, கயல்களும், வயல்களில் உள்ள வாளை மீன்களும் அச்சம் கொண்டு விலகிச் செல்லுமாறு எருமைகள் படிய, அன்னப் பறவைகள் அதிர்ந்து ஒலி எழுப்பும் இடைச் ஈரம் மேவிய இப்பெருமானின் இனிய வண்ணம்தான ன்னே!

பேதுறு - மயங்குதல். ஓரா அருமையர் - ஓர்ந்து காணமுடியாதவர்; இள அனம் - அன்னப் பறவை. ஆலும் - ஒலி எழுப்பும்.

“மடைச்சுர மறிவன வாளையும் கயலும்
மருவிய வயல்தனில் வருபுனல்காழிச்
சடைச்சுரத்து உறைவதோர் பிறையுடை அண்ணல்
சரிதைகள் பரவி நின்று உருகுசம்பந்தன்
புடைச்சுரத்து அருவரைப் பூக்கமழ் சாரல்
புணர் மடநடையவர் புடைஇடை ஆர்ந்த
இடைச்சுரம் ஏத்திய இசையொடு பாடல்
இவைசொல வல்லவர் பிணிஇலர்தாமே”.


தெளிவுரை: நீர்மடைகளில் வாளையும் கயலும் துள்ளி மகிழும் வளப்பம் உடைய வயல் வளம் மருவிய ப் காழிப் பதியின்கண், சடை முடியில், பிறையுடன் திகழும் அண்ணலாகிய ஈசனார் அருள் நிலைகளைப் பரவி நின்று உள்ளம் உருகும் ஞானசம்பந்தன், அருமையான மலைச்சாரலில், பூக்கள் கமழ அமர்ந்துள்ள இடைச் சுரத்தை ஏத்திய இத்திருப்பதிகத்தை இசையோடு சொல்ல வல்லவர்கள், பிணியற்றவராய விளங்கி மகிழ்ந்து இருப்பர்.

குறிப்பு: ஈசனார் பெருமை, தலத்தின் பெருமையாக விளங்கும் தன்மையுடையதைனக் குறிப்பிட்டு உணர்த்தல் அறிக.

இப்படியாக 7-ஆம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர் திருவிடைச்சுரத்தின் அழகையும், பெருமைகைளையும் இந்த பதிகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

(தொடரும்)

- ஆர் . ரங்கராஜ், தலைவர், சென்னை ௨௦௦௦ ப்ளஸ் அறக்கட்டளை
9841010821

rangaraaj2021@gmail.com